பத்திரிகை செய்தி : திருவரங்கம் இடைத்தேர்தலில் இகக மாவுக்கு ஆதரவளிக்க இகக மாலெ முடிவு

திருவரங்கம் இடைத்தேர்தலில் இகக மா தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இகக மாலெயிடம் ஆதரவு கேட்டுள்ளது. இகக மாலெயின் மாநில நிலைக் குழு இந்தத் தேர்தலில் இககமாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா ஆளான பின்னணியில் அறிவிக்கப்பட்டுள்ள திருவரங்கம் இடைத்தேர்தலில் இடதுசாரி குரலை ஒலிக்க இகக மாவுக்கு ஆதரவளிக்க இகக மாலெ முடிவு செய்துள்ளது. இகக மாலெ தனியாகவும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்தும் அஇஅதிமுக, பாஜக கட்சிகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது.

ஒரு புறம் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் அமலாக்கத்துக்கு தமிழ்நாட்டை பரிசோதனைக் கூடமாக மாற்றுகிற அஇஅதிமுக அரசு, மறுபுறம் பாஜகவை எதிர்ப்பதுபோல காட்டிக் கொள்ளப் பார்க்கிறது. ஒரு புறம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனைக்குள்ளாக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிழந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்கிறார்; மறுபுறம், தமிழக பாஜக திருவரங்கம் இடைத்தேர்தலுக்கு பாஜக வேட்பாளரை அறிவிக்கிறது. பாஜகவுக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே தவிர, அது நட்பு முரண்பாடே தவிர, இரண்டு கட்சிகளுக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளில், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகளில் வேறுபாடு ஏதும் இல்லை. பாஜகவுக்கு ஒத்திசைவாகவே தமிழ்நாட்டில் நவதாராளவாதக் கொள்கைகள் தொய்வின்றி அமலாக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஆவின் பால் ஊழல் அம்பலமானது முதல் அடுத்தடுத்த ஊழல்கள் பற்றிய செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. தாது மணல் கொள்ளையில் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இப்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நல நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருக்கிற அதே வேளையில் மக்கள் விரோத நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இன்றி தொடர்கின்றன.

ஆலைமூடல், வேலைப் பறிப்பு, பால், மின்சாரம் விலைஉயர்வு, ஒடுக்குமுறை நடவடிக்கைகள், கருத்துரிமைப் பறிப்பு, பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு, நூறு நாள் வேலைத் திட்ட முடக்கம் என அனைத்து விதங்களிலும் மக்கள் விரோத நடவடிக்கைகளை அஇஅதிமுக அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அஇஅதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டவும், ஊழல் செய்த கட்சியை மக்கள் தீர்ப்பால் தண்டிக்கும் விதமும் தேர்தலில் அஇஅதிமுகவை தோற்கடிக்க வேண்டும். அஇஅதிமுகவுக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லாத திமுக மற்றும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும். இந்தக் கட்சிகளுக்கு மாற்றான, இடதுசாரி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாலசுந்தரம்
மாநிலச் செயலாளர்

Back-to-previous-article
Top