ஆதாரே, ஆதாரே என் செய நினைத்திட்டாய் தமிழக மக்களை?

ஆதார் – தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தையாகிவிடுமா? மக்களுக்கு இருக்கும் அற்பசொற்ப ஆதாரத்தையும் ஒழித்துக்கட்டும் அட்டையாக ஆகிவிடுமா?

மார்ச் 11, 2015. அம்பத்தூர் தாலுகா அலுவலகத்திலும் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திலும் ஆதார் அட்டை விண்ணப்பம் பெற, நிழற்படம் எடுக்க, சமர்ப்பித்த விண்ணப்பம் என்னவாயிற்று என்று கேட்க, ஆதார் அட்டை பெற்றுக் கொள்ள என ஆதார் அட்டை பெறுவதற்கான வெவ்வேறு கட்டங்களில் சிக்கிக் கொண்ட சாமான்ய மக்கள், அனைத்து விவரங்களையும் பெற, இருக்கும் ஒரே ஒரு வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். அம்பத்தூர் அலுவலகத்தில் நூறு பேருக்கு மேல் இருந்தார்கள்.கந்தர்வகோட்டையில் அய்ம்பது பேர் வரை வரிசையில் காத்திருந்தார்கள். ஒரே விவரத்தைப் பெற பல முறை வந்தவர்கள், நிழற்படம் எடுக்க இரண்டாவது முறையாக வந்தவர்கள் என விதவிதமான வேலைகளை முடித்து விட்டுச் செல்ல வந்திருந்தார்கள்.

இவர் எல்லோருமே தலை காய்ந்தவர்கள். அன்றைய பிழைப்பை, கூலியை விட்டுவிட்டு வந்திருந்தார்கள்.

அம்பத்தூரில் கட்சியின் சென்னை மாநகரக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், பசுபதி ஆகியோரும், கந்தர்வகோட்டையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பியும், அப்படிக் காத்துக் கிடந்தவர்களுடன் அவர்கள் ஏன் ஆதார் அட்டை வேண்டும் என கருதுகிறார்கள், ஆதார் தொடர்பான எந்த வேலையை முடிக்க வந்துள்ளார்கள் ஆகியவை பற்றி உரையாடினார்கள். அந்த உரையாடல்களில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.

நிர்மலா, வயது 40: மூன்றரை மணி நேரமாக வரிசையில் நிற்பதாகச் சொன்னார். நிழற்படம் போன்றவற்றுக்காக வந்திருந்தார். கேஸ் மான்யம் வேண்டும் என்றால் ஆதார் அட்டை வேண்டும் என்று சொன்னார்கள், அதற்காக வந்தேன் என்றார். முன்பு ஒரு முறை வந்திருந்தாராம். காலை 10 மணிக்கு வந்து வரிசையில் நின்றாராம். மாலை 5 மணி வரை அவரது முறை வரவில்லை. அன்று அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டார்களாம். எப்போது வந்தார் என்று சரியாக அவரால் சொல்ல முடியவில்லை.தோராயமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு என்றார். விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கென்று இங்கு சிலர் இருக்கிறார்கள், அவர்கள் பூர்த்தி செய்து தருகிறார்கள், அதற்கு பணம் வாங்குகிறார்கள் என்றார்.காலை 10 மணிக்கு வந்தேன், இப்போது ஒரு மணியாகி விட்டது, இன்னும் வரிசையில் நிற்கிறேன், இந்த முறையாவது வேலை முடிந்தால் நல்லது என்றார்.

கமலக்கண்ணன், வயது 25: தச்சர் தொழில். வேலையை விட்டுவிட்டு தாயுடன் (திருமிகு கஸ்தூரி) வந்திருக்கிறார். முன்தினமும் தாயுடன் வந்தாராம். அன்றும் வேலை போனது, சம்பளம் போனது என்றார். 2013ல் விண்ணப்பம் கொடுத்தாராம். முன்தினம் நிழற்படம் போன்ற வேலைகளுக்கு வந்திருந்தாராம். நேற்று வந்து காலை 9 மணி  முதல்         காத்திருந்தோம், விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தபோது, அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட சீட்டை காட்டினோம், தேடிப் பார்த்து விட்டு எங்கள் பெயர்கள் இல்லை என்றார்கள், இதைக் காலையிலேயே சொல்லியிருந்தால், நாங்கள் திரும்பிப் போயிருப்போம், அவர்கள் 2 மணிக்குத்தான் சொன்னார்கள் என்றார். இன்று ஏன் வந்தீர்கள், ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் என்று கேட்டபோது, இன்று காலையில் எனது மருமகள் வந்தார், அவர் பெயர் இருந்தது, அவர் நிழற்படம் எடுத்துவிட்டு வந்துவிட்டார், அப்படியானால் எங்கள் பெயரும் இருக்க வேண்டுமே, அதை தெரிந்து கொள்வதற்காக நிற்கிறோம் என்றார் திருமிகு கஸ்தூரி. அதை தெரிந்து கொள்ளக் கூடவா வரிசையில் நிற்க வேண்டும் என்று கேட்டபோது, ஆமாம், எது வென்றாலும் வரிசையில் வரச் சொல்கிறார்கள், இதற்காகத்தான் ஒரு மணி நேரமாக நிற்கிறோம் என்றார். ஆதார் அட்டை ஏன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அது இல்லை என்றால், ரேசன் பொருட்கள் எல்லாம் வராது என்கிறார்களே, அதற்காகத்தான் வாங்க வந்தோம் என்றார்.

ஆர்.மோகன்: 2013 ஆகஸ்டில் அவரது வாழும் பகுதியில் ஆதார் முகாம் அமைக்கப் பட்டபோது, அங்கு நிழற்படம் எடுப்பது, கைரேகை, கருவிழிப் படலம் பதிவு செய்வது போன்றவற்றை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து செய்து கொண்டார். 2013 அக்டோபரில் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆதார் அட்டை வந்தது. அவருக்கு மட்டும் வரவில்லை. ஆதார் மய்யத்தில் கேட்டபோது, இணையதள மய்யத்தில் கேட்டால் எடுத்துத் தருவார்கள் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. அங்கு அவருடைய எண்ணுக்கு ஆதார் அட்டை வரவில்லை. கணினி ஏதேதோ ஆகி விட்டது என்று அவர் சொன்னார். பல முறை முயற்சி செய்து பார்த்த பிறகு அவரது ஆதார் அட்டை நிராகரிக்கப்பட்டது என்று வந்தது.ஆதார் மய்யத்தில் அதைத் தெரிவித்தபோது, நிராகரிக்கப்பட்டது என்று வந்ததன் பிரின்ட் அவுட் எடுத்துக் கொண்டு சனிக்கிழமைகளில் வரச்சொல்லி சொல்லியிருக்கிறார்கள்.

பனாரசி பிரசாத், வயது 30: உத்தரபிரதே சத்தைச் சேர்ந்தவர். அம்பத்தூர் தொழிற்பேட் டையில் உள்ள ஓர் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் அவரும் அவரது மனைவி கமலா தேவியும் வேலை செய்கின்றனர். அவரது மனைவி அந்த நிறுவனத்தில் நிரந்தரத் தொழி லாளி. இவர் ஒப்பந்தத் தொழிலாளி. இருவருமாகச் சேர்ந்து மாதம் ரூ.9,000 ஊதியம் பெறுகி றார்கள். தமிழ்நாட்டு ரேசன் அட்டை வைத்திருக்கிறார்கள். நிறுவனத்தில் ஒரு மணி நேரம் அனுமதி பெற்றுக் கொண்டு வந்ததாகவும் ஆனால், அங்கு நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் சொன்னார்கள். இரண்டாவது முறையாக நிழற்படம், கருவிழிப் படலம், கைரேகை பதிவு செய்ய வந்திருக்கிறார்கள். முதல் முறை பதிவு செய்தது நிராகரிக்கப் பட்டுவிட்டதாகவும் நிராகரிக்கப்பட்டதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் சரியான காரணமோ பதிலோ சொல்லவில்லை என்றும் சொன்னார்கள். ஏன் ஆதார் அட்டை உங்களுக்கு தேவைப்படுகிறது என்று கேட்ட போது, எங்கு போனாலும் ஆதார் அட்டை கேட்கிறார்கள் என்று கமலா தேவி சொன்னார். எங்கு கேட்டார்கள் என்று கேட்டபோது, மகளிர் சுயஉதவிக் குழுக்களில் கடன் வாங்கும் போது வங்கியில் ஆதார் அட்டை கேட்கிறார்கள் என்றார். வரிசையில் நிற்க வேண்டியிருப்பதால் சாப்பிடக் கூடப் போகவில்லை என்று அவரது அரைகுறை தமிழில் சொன்னார். இப்போது நிழற்படம் எடுத்தால் இன்னும் நான்கு மாதங்கள் கழித்துத்தான் ஆதார் அட்டை வாங்க வரச் சொல்வார்கள், இன் னொரு முறை இதற்காக விடுமுறை, அனுமதி பெற்று அலைய வேண்டும் என்றார். குரலில் அயற்சியும் கையறு நிலையும் தெரிந்தது.

திருமிகு நாகலஷ்மி, வயது 56: இருதய நோயாளி. ஒரு சிறுநீரகம்தான் இயங்குகிறது. மூப்பின் காரணமான உடல் உபாதைகள் உள்ளன. மருத்துவமனையில் இருந்து நேராக தாலுகா அலுவலகத்துக்கு வந்துள்ளதாகச் சொன்னார். அவரது மகன் ராஜா ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். அவரும் அன்றைய பிழைப்பை விட்டுவிட்டு புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். அக்டோபர் 2014ல் புகைப்படம் எடுத்துள்ளார். நிழற்படம் எடுப்பதும் ஒரே நாளில் முடிந்து விடவில்லை, ஒரு முறை வந்தேன், நீண்ட வரிசையில் காத்திருந்து, எனது முறை வந்தபோது, எங்கள் வார்டுக்கான வேலை அன்று நடக்கவில்லை, இன்னொரு நாள் வர வேண்டும் என்றார்கள், இதை முதலிலேயே சொல்லியிருந்தால், நான் வீடு திரும்பியிருப்பேன், அன்று நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன் என்றார். பிறகு ஒரு நாள் வந்து நிழற்படம் எடுத்துள்ளார். அன்றும் நூறு பேருக்கும் மேல் வரிசையில் இருந்ததாகவும், அன்றும் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் சொன்னார். 15 நாட்கள் கழித்து வந்து அட்டை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள், 15 நாட்கள் கழித்துப் போனபோது, நெட் சென்டரில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள், எனக்கென்ன நெட் சென்டர் தெரியும், ஏன் இப்படி அலைகழிக்கிறார்கள் என்று குமுறினார். நெட் சென்டரில் எனக்கு எடுக்க முடியவில்லை, அதனால் இப்போது வந்திருக்கிறேன் என்றார். தனது மகன் நிழற்படம் எடுக்க வந்திருப்பதாகவும் தான் மருத்துவமனையில் இருந்து நேரே இங்கு வந்துள்ளதாகவும் இன்னும் உணவு உட்கொள்ளவில்லை என்றும் மிகவும் களைப்பாக இருப்பதாகவும் சொன்னார். இவ்வளவு சிரமப் பட்டு ஏன் இந்த ஆதார் அட்டை வாங்க வந்தீர்கள் என்று கேட்டபோது, அரசு மருத்துவ மனையில் ஆதார் அட்டை இருந்தால்தான் விலை கூடுதலான மருந்து தருவதாகவும், அந்த மருந்தை எடுத்துக் கொண்டால்தான் நோய் தீர்வதாகவும், ஆதார் அட்டை இல்லையென்றால் மலிவான மாத்திரைகள் கொடுப்பதாகவும் அந்த மாத்திரைகளால் வலி தீர்வதில்லை என்றும் சொன்னார். ஆதாரே, ஆதாரே என் செய நினைத்திட்டாய் தமிழக மக்களை?

அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் குடிநீர் இல்லை. வரிசையில் நிற்பவர்கள் குடிநீர் வேண்டும் என்றால் வெளியில் இருக்கும் தேநீர் கடையில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

கந்தர்வகோட்டை

ஆதார் அட்டை வாங்குவது பெரும் துன்பம் என்று விவரிக்கிறார்கள் இங்குள்ளவர்கள். கிராமத்தில் உள்ள அனைவரும் ஒரு நாள் மதிய உணவெல்லாம் எடுத்துக் கொண்டு மொத்தமாக தாலுகா அலுவலகம் வருவார்கள். பிழைப்புக்குப் போக முடியாது.காலையில் இருந்து மாலை வரை காத்திருப்பார்கள். மாலை அய்ந்து மணிக்குள் எவ்வளவு பேருக்கு நிழற்படம் எடுக்க முடிகிறதோ அவ்வளவு பேருக்கு எடுத்துவிட்டு மற்றவர்களை இன்னொரு நாள் வரச் சொல்வார்கள். இந்த அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்றால், நான்கு பேர் இருக்கிற குடும்பம், அப்படி வந்து போகிற நாளில் ரூ.100 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.அன்று எந்த வேலைக்கும் போகவும் முடியாது.பத்து நாட்களுக்கு முன் ஒரு 500 பேர் ஓர் ஊராட்சியில் இருந்து வந்து காத்துக் கிடந்தார்கள். அவர்களில் அனைவருக்கும் நிழற்படம் எடுக்க முடியவில்லை. பெரும்பாலனோர் திரும்பிச் சென்றனர். துவக்கத்தில் முறையில்லாமல் இந்த வேலை நடந்தது. எந்த அறிவிப்பும் யாருக்கும் செய்யாததால், பல ஊராட்சிகளில் இருந்தும் நிழற்படம் எடுக்க மக்கள் குவிந்துவிடுவார்கள்.பிறகு சிலருக்கு மட்டும் வேலை முடிந்து பலருக்கும் வேலை முடியாமல் திரும்பிச் செல்வார்கள். மாலெ கட்சி தலையிட்டு இதை முறைப்படுத்தியது. எந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் என்று முன்னரே தெரிவிக்க வேண்டும் என்றும் அதன்படி நிழற் படம் எடுக்கும் வேலை நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி அதன் பிறகு நிழற்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்றன.விண்ணப்பம் வாங்கிக் கொண்டு இந்த நாளில் நிழற்படம் எடுக்கப்படும் என்று அறிவித்து, நிழற்படம் எடுத்ததில் இருந்து நான்கு மாதங்கள் கழித்து அட்டை வழங்கப்படுகிறது.

இப்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பப் படிவங்கள் இல்லை. எப்போது வரும் என்று தெரியாது என்று அங்குள்ள ஊழியர்கள் சொல்கின்றனர். அன்றும் பலரும் நிழற்படம் எடுக்க வந்திருந்தனர். பார்வையற்ற தனது தாயுடன் வந்திருந்த பீம்ராஜ் என்பவர் நூறு நாள் வேலைத் திட்டக் கூலியைப் பெற வங்கிக் கணக்கு வேண்டும், வங்கிக் கணக்குத் துவங்க ஆதார் அட்டை கேட்கிறார்கள், அதனால் வந்திருக்கிறோம் என்றார்.

65 வயதான மூதாட்டி ஒருவர் வந்திருந்தார். ஏன் ஆதார் அட்டை வேண்டும் என்று கேட்டபோது, முதியோர் ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை        கேட்கிறார்கள், புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள் ஆதார் எண்ணை தர வேண்டும், ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்கள் மார்ச் 31க்குள் ஆதார் அட்டை எண்ணை வங்கியில் தர வேண்டும் என்று சொல்கிறார்கள், அதனால் வந்திருக்கிறேன் என்றார்.

அன்று ஆதார் அட்டை தொடர்பான வேலைகளுக்கு வந்திருந்த பலரும் நூறு நாள் வேலைத் திட்டக் கூலியை வங்கியில் பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது என்று சொன்னார்கள்.

நகரமோ, கிராமமோ, இந்த ஒரு சிலரின் கதை அனைவருக்கும் பொருந்தும் கதையாக இருக்கிறது. அரசின் நலத்திட்டங்கள் எதுவும் ஆதார் அட்டை இருந்தால்தான் கிடைக்கும் என்ற மனநிலையை மத்திய மாநில ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டார்கள். மருத்துவமனையும் மகளிர் குழு கடனும் ஏன் ஆதார் அட்டைக்கு காத்திருக்க வேண்டும்? ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால், அவர்களும் காத்திருக்கும் மக்களுக்கு சரியான பதில் சொல்ல முடிவ தில்லை.மக்களை அலைய விடுகிறார்கள். மக்கள் அல்லாடுகிறார்கள். குமுறுகிறார்கள்.எப்போதும் இப்படியே இருந்துவிடுவார்கள் என்றும் சொல்லிவிட முடியாது.

Back-to-previous-article
Top