தமிழ்நாட்டில் மார்ச் 8

2015 மார்ச் 8 போல், ஒரு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை இதுவரை தமிழ்நாடு பார்த்திருக்கிறதா? மார்ச் 8க்கு முன் சில நாட்களும் அதையடுத்த சில நாட்களும் நடக்கின்ற பெண்கள் மீதான தாக்குதல்களும் பெண்கள் பிரச்சனைகளில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், இந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதில் தரக்கூடும்.

மார்ச் 8 அன்று வழக்கம்போல் எல்லா தலைவர்களும் வாழ்த்துச் சொன்னார்கள். ஊழல் வழக்கில் சிறை சென்று, பதவியிழந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் திகார் சிறையில் நூறு நாட்களுக்கும் மேல் கழித்த கனிமொழி, கவுரவக் கொலைகளை நியாயப்படுத்தும்விதம் பேசுகிற, செயல்படுகிற ராமதாஸ், பெண்கள் ஆண்களுக்குக் கீழானவர்கள் என்று சொல்லும் மனு தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை என தமிழக பெண்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. மார்ச் 8 பற்றி ராமதாஸ் ஒரு புதிய விளக்கமே தந்து, குடும்பத்து பெண்கள் படும் துன்பம் பற்றி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜெயா தொலைக்காட்சியில் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய பெண்கள் பெண்ணுரிமை பற்றி பேசினார்கள்.

நல்லது, நன்றி, மகிழ்ச்சி என்று சொல்ல முடியவில்லை.தனது மகள் யாரையோ காதலித்த குற்றத்துக்காக, அந்த 21 வயது பெண்ணை நடுவீதிக்குக் கொண்டு வந்து, அனைவரும் பார்க்க தந்தை அடித்து உதைத்த சம்பவம் நெஞ்சை அடைக்கும் அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் சம்பவம் நடந்தது பெங்களூருவில். ஆனால், அந்தத் தந்தை மதுரையைச் சேர்ந்த ஒரு காவல்துறை துணை ஆய்வாளர். அந்தப் பெண்ணுக்கு பாடம் கற்பிக்க அப்படிச் செய்தாராம். இந்த காவல்துறை அதிகாரி, அவரது காவல்நிலையத்துக்கு, பெண்கள் மீதான வன்முறை புகார் வந்தால், மனைவியை கணவனோ, அண்ணன் தங்கையையோ, தம்பி தமக்கையையோ தாக்கியதாக புகார் வந்தால் எப்படி அணுகுவார்?

அந்தப் பக்கமாக வந்த இரண்டு பெண்கள் அந்தப் பெண்ணை தற்காலிகமாக காப்பாற்றியிருக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட பெண் புகார் தரவில்லை. அப்பட்டமாக, அனைவரும் பார்க்க, சர்வ சாட்சியங்களும் நிரூபிக்கக் கூடிய, தண்டனைக்கு உரிய குற்றத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரி பாதுகாக்கப்பட்டுவிட்டார். சம்பவம் நடந்தது எங்கேயோ. புகாரும் தரப்படவில்லை.அவர் தமிழ்நாட்டில் நெஞ்சு நிமிர்த்தி காவல் நிலையத்துக்கு பணிக்கும் செல்வார்.இது போன்ற தந்தைகள் பெண்களுக்கு பாதுகாப்பு என்று ராமதாஸ் போன்றவர்கள் சொல்கிறார்கள். அந்த காவல்துறை அதிகாரியைக் கண்டித்து குறைந்தபட்சம் ஓர் அறிக்கை, குறைந்தபட்ச துறைரீதியான நடவடிக்கை என இருந்தால் தமிழ்நாட்டின் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஆனால், ஜெயலலிதா மவுன விரதத்தில் இருக்கிறார். அவர் ஆணையிட்டால்தான் முதலமைச்சர் பன்னீர் செல்வம் சுண்டுவிரலைக் கூட அசைப்பார். தாக்கக் கூடியவர்களிடமே தஞ்சம் புகவேண்டிய நிலைமையில் இருந்து தமிழ்நாட்டின் பெண்களை பாதுகாப்பது பற்றி ஜெயலலிதாவுக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ அக்கறை இல்லை.

சரிகா ஷாவை பலி கொடுத்த பிறகுதான், அதையடுத்து நடந்த போராட்டங்களால்தான் பாலியல் சீண்டலுக்கு எதிரான சட்டத்தை தமிழ்நாட்டு பெண்கள் பெற்றார்கள். அப்போதும் அஇஅதிமுக ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. ஜெயலலிதாதான் முதலமைச்சர். அன்று பாலியல் சீண்டலாக இருந்தது இன்று பல்வேறு பரிமாணங்கள் பெற்று வளர்ந்து திராவக வீச்சு வரை வந்துவிட்டது. பேருந்துக்காக காத்திருந்த மாணவியை தலையில் குட்டி கிண்டல்   செய்திருக்கிறார்கள். அவமானம் தாங்காமல் தன்னை எரித்துக் கொண்டுவிட்டார் அந்தச் சிறுமி. முந்தைய திமுக ஆட்சிகளில் நடந்த தவறுகளை எல்லாம் மாற்றி ஜெயலலிதா நல்லாட்சி நடத்தினார், இப்போதும் அவர் வழிகாட்டுதலில் நல்லாட்சி நடக்கிறது என்கிறார்கள்       அஇஅதிமுககாரர்கள். அவர்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒரு சாதாரணமான சட்டம் கூட அமலாகாமல் ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்போது அங்கு நல்லாட்சி நடப்பதாகச் சொல்லப்படுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தாலி பெண்ணுக்கு வேலியல்ல, அடிமைச் சங்கிலி என்று தமிழ்நாட்டில் என்றோ பெரியார் சொல்லி, பலரும் ஒப்புக்கொண்டு தாலியில்லாத திருமணங்களை தமிழ்நாடு பார்த்துவிட்டது. இன்று தாலி வேண்டாம் என்று சில பெண்கள் சொன்ன நிகழ்ச்சியின் முன்னோட்டத்தைக் கூட சகித்துக் கொள்ளாத நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. ஜெயலலிதா தலைமை   தாங்கும் அஇஅதிமுகவே குட்டி பாஜகதான், தமிழ் நாட்டுக்கு தனியாக பாஜக தேவையில்லை என்று கம்யூனிஸ்டுகள் சொல்லி வந்தது இப்போது நடைமுறையில் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்து இளைஞர் சேனா என்ற அமைப்பு திடீரென்று முளைத்து அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்யும் சூழலை உருவாக்கிவிட்டது. நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று பெருமையுடன் சொல்லி கைதாகியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது ஊடகச் சுதந்திரம் மட்டுமல்ல. பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையும்தான் பறிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 அன்று அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியிருக்க வேண்டும்.       நடக்கவில்லை.அந்த நிகழ்ச்சி நடப்பதை உறுதிப் படுத்த அரசு தரப்பில் இருந்து எந்த         நடவடிக்கையும் இல்லை. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட பிறகு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இப்போதும் சில சம்பிரதாய கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன. கருத்துச் சுதந்திரத்தைக் பாதுகாக்கும் அரசியல் சாசனக் கடமையில் இருந்து தமிழக அரசு மீண்டும் ஒரு முறை தவறியுள்ளது. அரசு, பிற்போக்கு சக்திகள்பால் மென்மையான அணுகுமுறையையே மேற்கொள்கிறது.

கொங்குநாட்டுப் பெண்களை கதைகள் எழுதி சிறுமைப்படுத்துகிறார்கள் என்று சத்தம் போடுகிற சிலர் அங்கே நிலவுகிற சுமங்கலித் திட்டத்தில் சிறுமிகள் கருகிப் போவதைப் பற்றி பேச மறுக்கிறார்கள். அந்த கொத்தடிமைத் திட்டத்தில் பிற மாவட்டச் சிறுமிகள் மட்டுமின்றி கொங்குநாட்டுச் சிறுமிகளும்தான் அல்லலுறுகிறார்கள். அங்கு கடுமையான உழைப்புச் சுரண்டலுடன் பணியிடத்தில் பாலியல் சீண்டல் முதல் பல்வேறு பிரச்சனைகளை அந்தச்   சிறுமிகள் எதிர்கொள்கிறார்கள். புதிய தலைமுறை அலுவலகத்தில் குண்டு வீசியவர்கள், எங்கள் பெண்களை சுரண்டுகிறார்கள் என்று சொல்லி அந்த நிறுவனங்கள் மீது சாதாரண     குற்றச்சாட்டாவது எழுப்பியிருக்கிறார்களா?

கொங்கு நாட்டு தன்மானச் சிங்கங்களுக்கு இன்னொரு கேள்வி. உறவுகளை   அவமதிக்கிறார்கள் என்று தார்மீகச் சீற்றம் காட்டிய நீங்கள்,  மேற்கு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை நடப்பது பற்றி ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது.ஆனந்தவிகடன், நக்கீரன் போன்ற ஜனரஞ்சகப் பத்திரிகைகள் அதுபற்றி விவரமான செய்திக் கட்டுரைகள் வெளியிட்டிருந்தன. நீங்கள் அந்த மருத்துவமனைகளுக்குச் சென்று எங்கள் பெண்களின் உடல்களை விற்பனை பொருட்கள் ஆக்காதீர்கள் என்று ஏன் கேட்கக் கூடாது? உங்கள் பார்வையில் கருமுட்டைதான் எவ்வளவு புனிதமானது? அதை விலை பேசுகிறார்களே, உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?

2011க்குப் பிறகான அஇஅதிமுக ஆட்சியில் மட்டும் 4,697 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் தகவல் தருகிறார். இதற்கு மது காரணம் என்கிறார். மது மட்டும் காரணம் அல்ல, ராமதாஸ் அவர்களே, இளவரசன் பிணமானதற்கு முன்னும் பின்னும் நீங்கள் நடத்திய அரசியலும் காரணம். தமிழக அரசின் குற்றமய அலட்சியமும், நீங்கள் வெளிப்படுத்திய சாதியாதிக்க, ஆணாதிக்கக் கருத்துக்களும் சேர்ந்துதான் தமிழகத்தின் காவல்துறை அதிகாரி ஒருவரை, ஒரு தந்தையாக தனது கடமையை செவ்வனே செய்ய தூண்டியுள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியாது. முகேஷ் சிங் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிறார் ராமதாஸ். ராமதாசும் அதே கருத்துக்களுக்குச் சொந்தக்காரர்தான்.

ஆணாதிக்க, சாதியாதிக்க, பிற்போக்கு, இருட்டடிப்பு சக்திகளுடன் சேர்ந்து கொண்டு அரசு என்னதான் ஆட்டம் போட்டாலும் சமூகத்தின் முன்னோக்கிய பயணத்தை பின்னோக்கித் திருப்புவது அவ்வளவு எளிதல்ல. பெண்களை வீட்டுக்குள் பூட்டும் கருத்துக்களை அவர்கள் வலிந்து திணித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளிக்கு பிணை வழங்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண்ணே நீதி மன்றத்தில் வாதாடியிருக்கிறார். இதுபோன்ற பெண்கள் நம்பிக்கை தருகிறார்கள்.களங்கம், அவமானம் என என்னதான் சொல்லப்பட்டாலும், பாலியல் வன்முறை ஒரு குற்றம், அதைச் செய்த குற்றவாளி தப்பித்துவிடக் கூடாது என்று துணிச்சலே உருவமாய் அந்தப் பெண் நீதிமன்றம் வந்திருக்கிறார். அவர்கள் அனைவரையும், பாதிக்கப்பட்ட பெண், பாரதி சொன்னது போல் முகத்தில் உமிழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மார்ச் 8ன் போராட்ட உணர்வை, தான் செய்தே தீர வேண்டிய விதத்தில், அந்தப் பெண் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதான் மார்ச் 8ன் போராட்ட உணர்வு என்று அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் இருக்கக் கூட வாய்ப்புள்ளது. ஆனால், நாடு முழுவதும் முற்போக்கு சக்திகள் நடத்துகிற போராட்டம், சமூகம் ஒட்டுமொத்தமாக எட்டியுள்ள வளர்ச்சியின் கட்டம் அந்தப் பெண்ணை பழையன கழிக்கச் செய்திருக்கிறது. ஓர் ஆவணப் படத்தை, ஒரு தொலைக்காட்சி விவாதத்தை தடுத்து நிறுத்தி விட்டால், ஜனநாயகம், சுதந்திரம், மாற்றம் விரும்பும், பெண்களின் முன்னேறுகிற போராட்டப் பயணத்தை தடுத்துவிட முடியாது. இந்து இளைஞர் சேனாவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாலியைச் சுமப்பதால் ஒரு பெண் அடிமையாக இருக்கிறாள் என்று புரிந்துகொள்வார்களானால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் விரோத நடவடிக்கைகளில் சற்றும் தளராமல் செயல்படுகிற அஇஅதிமுக அரசு, தமிழக மக்களின், பெண்களின் ஜனநாயக உரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை, அரசியல் சாசன உரிமைகளைப் பாதுகாக்கத் தவறினால், நீதிமன்றத்தில் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் தண்டிக்கப்படும்.

Back-to-previous-article
Top