ஹஷிம்புரா வழக்கில் விடுதலை: நீதியின் வரலாற்றில் தொடரும் கரும்புள்ளிகள்

தமிழ்நாடு உயர்நீதிமன்ற நீதிபதி மகராஜன், கீழ்வெண்மணியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் உட்பட விவசாயக் கூலித் தொழிலாளர்களை தலித்துகளை உயிரோடு குடிசைக்குள் வைத்து எரித்துக் கொன்ற கொடூரச் செயலை, மேல்சாதி நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர் செய்திருக்க  முடியும் எனத் தான் நம்பவில்லை என, அவரை விடுதலை செய்யும் தீர்ப்பில் எழுதினார்.

பீகாரின் பதானிதோலாவில், மேல்சாதி நிலப்பிரபுப் படையான ரன்வீர் சேனா, 60க்கும் மேற்பட்ட தலித்துகளை முஸ்லிம்களைக் கொன்றது. பீகார் உயர்நீதிமன்றம், கண் எதிரில் குழந்தைகள் மேலே வீசி எறியப்பட்டு கீழே வரும்போது குத்திக் கிழிக்கப்பட்டதை நேரில் பார்த்த ஏழை சாட்சிகளை நம்ப மறுத்தது. பதானி தோலாவில் படுகொலை செய்தவர்கள் விடுதலையானார்கள்.

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் 1987ல் ஓர் அநீதி இழைக்கப்பட்டது.  அப்போது உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆண்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான ராஜீவ் காந்தி ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் பல ஆயிரம் சீக்கியர்களை அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை, அந்தப்பக்கம் திரும்பிக் கொள்ள, படுகொலை செய்த அதே காங்கிரஸ்காரர்களின் தலைவர் ராஜீவ்காந்தி தலைமையிலான ஆட்சிதான், நடந்து கொண்டிருந்தது.

1987ல் மதவெறி வன்முறை இசுலாமியர்களுக்கு எதிராக மீரட்டில் மலியானாவில் ஹஷிம் புராவில் ஏவிவிடப்பட்ட போது, அரசு நிர்வாகமும், காவல்துறையும் மவுனம் சாதிக்கவில்லை; அந்தப் பக்கம் திரும்பிக் கொள்ளவில்லை. அவர்களே நேரடியாகத் தலைமை தாங்கி வன்முறையில் இறங்கினார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில், பிராவின்சியல் ஆர்ம்ட் கான்ஸ்டபுலரி என்ற துணை ராணுவப் படை செயல்பட்டுவருகிறது. மதவெறி சாதி வெறி ஆணாதிக்கம் அடி முதல் முடி வரை பரவியுள்ள ஒரு காவல்படையாகவே, அது எப்போதும் இருந்து வந்துள்ளது. பிஏசி என அழைக்கப்பட்ட அந்த துணை இராணுவம் அதன் வன்முறைகளின் உச்சகட்டத்தை 1987ல் எட்டியது.

அந்தப் படையின் 41ஆவது பிரிவு 28 ஆண்டுகளுக்கு முன்பு இசுலாமியர் குடியிருப்பு இருந்த ஹஷிம்புராவில் நுழைந்தது. துப்பாக்கி முனையில் சற்றேறக் குறைய 50 இசுலாமிய ஆண்களை டிரக்கில் ஏற்றிக் கடத்திச் சென்றது. அவர்களில் பலரை சுட்டுக் கொன்று காசியா பாத்தின் மேல் கங்கை கால்வாயில் வீசி எறிந்தது. எஞ்சியவர்களை சுட்டுக் கொன்று மகன் பூரில் உள்ள இன்டன் கால்வாயில் வீசி எறிந்தது. செத்ததாகக் கருதப்பட்டு விடப்பட்டதால் உயிர் பிழைத்த 5 பேர் ஊருக்கு உண்மையை எடுத்துச் சொன்னார்கள்.

ஆயுதப்படைகள் சிறப்பதிகாரங்கள் சட்டம், வட கிழக்கில் காஷ்மீரத்தில் படு கொலை செய்ய பாலியல் வன்முறையில் ஈடு பட உரிமம் தந்துள்ளது. (இவர்களுக்கு எதிராக அரசு அனுமதி பெறாமல் வழக்கு தொடர முடியாது). உத்தரப்பிரதேச மாநில பிஏசி துணை இராணுவத்திற்கு அப்படிப்பட்ட எந்தச் சட்டப் பாதுகாப்பும் கிடையாது.ஆனால்          உத்தரப்பிரதேசத்தின் பிஏசி, எவரும் லேசில் கை வைக்க முடியாத ஒரு புனிதப் பசு. அதனால் சில தினங்களில் முடிந்திருக்க வேண்டிய புலன் ஆய்வு/விசாரணை முடிய 7 வருடங்கள் தேவைப்பட்டது. 41ஆவது பிஏசி பட்டாலியனின் 60 பேர் மீது குற்றம் இருப்பதாகச் சொல்லி 1994ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட் டது.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களில் 19 பேர் மீது மட்டும் குற்றக் குறிப்பாணை (சார்ஜ் ஷீட்) பதிவு செய்யப்பட்டது. (மார்ச் 2015 தீர்ப்பு வரை இந்த 28 வருடங்களில் கடத்திக் கொலை செய்தவர்களில் மூன்று பேர் இறந்துவிட்டனர்). படுகொலையில் பிழைத்தவர்கள் மற்றும் பலியானவர்கள் குடும்பங்கள் தொடுத்த வழக்கால், குற்றவியல் வழக்கு டெல்லிக்கு 2002ல் மாற்றப்பட்டது. சிறப்பு பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனத்தில் அப்போதைய அரசு தாமதம் செய்தது. ஒரு வழியாக, அனுபவம் இல்லாத ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனம் செய்யப்பட்டு 2006ல் 19 பிஏசி படையினர் மீது கொலை வழக்கு பதிவானது.

இப்போது, கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் ஜின்டல், குற்றம் சுமத்தப்பட்ட எவரையும் தண்டிக்க போதுமான சாட்சியம் இல்லை எனச் சொல்லி குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளார். பிஏசியின் மஞ்சள் நிற வண்டியில் வந்த பிஏசி படையினர் 42 பேரைக் கடத்திச் சென்றதையோ, கடத்தப்பட்டவர்கள் சுடப்பட்டு கொல்லப்பட்டதையோ, தண்ணீரில் வீசி எறியப்பட்டதையோ நீதிபதி மறுக்கவில்லை. இவை தொடர்பாக சாட்சிகள் உண்மை சொன்னதாகவே தாம் நம்புவதாகச் சொன்னார். ஆனால் குறிப்பாக இவர்தான் சுட்டார் இந்த துப்பாக்கியால் சுட்டார் எனச் சொல்ல முடியவில்லை என்கிறார்! அப்படி எதுவும் வராமல் பார்த்துக் கொண்டுவிட்டார்கள்.

வழக்குகளில் தாமதம், படையினரைக் காப்பாற்றியது என்ற நடவடிக்கைகளால் மட்டுமே குற்றவாளிகள் தப்பித்துள்ளனர். 41ஆவது படை பிரிவில் அந்த சமயம் யார் பணியில் இருந்தனர் என்பதற்கு பிஏசியில் ஆவணங்கள் நிச்சயம் இருந்திருக்கும், சுட்டுக் கொல், வீசி எறி என்ற உத்தரவை மேலிருந்து யார் பிறப்பித்தார்கள் என்பது விசாரணையில் தெரிந்திருக்கும். ஆனால் தண்டிப்பதற்கான அரசியல் மன உறுதிதான் இல்லாமல் போனது.

இந்தியாவில் நீதி வழங்கும் முறை, வறிய வர்களுக்கு, ஒடுக்கப்பட்ட சாதியினர்க்கு      சிறுபான்மையினர்க்கு எதிரானதாகும். வெண்மணி, பாதே, பதானிதோலா படுகொலைகள், பெஸ்ட் பேக்கரி உள்ளிட்ட 2002 குஜராத் படு கொலைகள், நாடெங்கும் அறியப்பட்டவை. உலகெங்கும் மானுட மனசாட்சியை உலுக்கியவை. படுகொலை நடந்தது உண்மைதான். அது மிக மிக மிக மோசமானதுதான். ஆனால் சட்டப்படி குற்றவாளி எனத் தண்டிக்க நமது நீதி வழங்கும் முறை வழிவகை செய்யவில்லை! இந்தப் பட்டியலில் மார்ச் 2015 ஹாஷிம்புரா தீர்ப்பும் இப்போது சேர்ந்து கொள்கிறது.

மதச் சார்பற்ற சக்திகள் எனத் தம்மைத் தாமே அழைத்துக் கொண்டு இசுலாமியர்கள் வாக்குகளை அறுவடை செய்யப் பார்க்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி வரையிலான எந்த ஆட்சிகளும் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற பொருளுள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்காமல் பதவி உயர்வு வழங்கியுள்ளன. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ‘மதச்சார்பின்மை’ எப்படி இருக்கும் என்பதற்கு ஹஷிம்புரா ஒரு நல்ல சான்று.

சம்பவம் நடந்த நாள் 22.05.1987.தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் 21.03.2015.தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சொற்றொடர் பொதுவாக, உடனே நியாயம் கிடைத்தால் தான் நல்லது என்கிறது. ஹஷிம்புரா போன்ற வழக்குகள், நீதியை மறுப்பதற்காகவே தாமதப்படுத்தப்படுகின்றன.

19 பேரில் மூவர் இறந்துவிட, பணியில் தொடர்ந்த மீதி 16 பேர் 2000 ஜ÷னில்தான் முதல் முறையாக கைது செய்யப்பட்டனர். மாருதி தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிணை வழங்கப்படுகிறது. ஹஷிம்புராவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

23.05.1987 அன்று மீரட்டின் மலியானா கிராமத்தில் 72 இசுலாமியர்கள் பிஏசி         படையினராலும் அவர்கள் தலைமையிலான, மத வெறி தலைக்கேறிய கும்பலாலும்    துப்பாக்கியால் சுடப்பட்டும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். பிஏசியினர் பற்றி முதல் தகவல் அறிக்கையில் ஏதும் சொல்லப்படவில்லை. 28 வருடங்களில் 35 பேர் விசாரிக்கப்பட்டு 800 முறை விசாரணை தேதி தள்ளிவைக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக அடுத்த தேதி போடப்படவில்லை. முதன்மை முதல் தகவல் அறிக்கை காணாமல் போய்விட்டது.

நிஜ வாழ்க்கையில் சட்டத்தின் முன் அனைவரும் ஒருபோதும் சமமல்ல. இந்தியாவில் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என இசுலாமியர்களை நம்ப வைப்பதில், நீதித் துறை உள்ளிட்ட இந்திய அரசு, தொடர்ந்து தவறி வருகிறது.

Back-to-previous-article
Top