WORKING CLASS

குமரியில் வீட்டுமனை கோரி மறியல்

ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆராச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் 1650 பேருக்கு பட்டா கேட்டு இகக(மாலெ) பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள பின்னணியில், பிப்ரவரி 3 அன்று மறியல் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு முன்னதாக ஜனவரி 31 அன்று ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இகக(மாலெ) அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து நடத்திய கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு தோழர்கள் சந்திரிகா, மேரிஸ்டெல்லா, சுசீலா, யூஜிலா, கலா, மார்க்கரெட் மேரி, ஹெலன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பிப்ரவரி 3 மறியல் போராட்டத்தில் பெருந்திரளில் அணி திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்கள் பெறும் பிப்ரவரி 3 அன்று அறிவிக்கப்பட்ட மறியல் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. பெரும் எண்ணிக்கையில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி பல பகுதிகளிலிருந்து பெண்கள் வந்து குவிந்தனர். போராட்டத்தை தடுத்து நிறுத்த வந்து சேர்கிற பெண்களை காவல் துறையினர் கைது செய்யத் துவங்கினர். ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் உட்பட வேறு சிலரையும் கைது செய்ததால் தகராறாக மாறி குழப்பம் நிலவியது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ஆக்கிமிப்பாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடேசன், இடம் முறைப்படி பட்டா பெறப்பட்டு விற்கப்பட்டு, பல கை மாறியிருப்பதாக தெரிவித்து அரசியல் ஆதாயத்துக்காக தோழர் அந்தோணிமுத்து நாடகமாடுகிறார் எனப் பேட்டியளித்தார். ஆக்கிரமிப்பு கும்பல், சில பெண்களை தயார் செய்து தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நிலம் பெற்றுத் தருவதாக அந்தோணிமுத்து வாக்குறுதி கொடுத்ததாக பொய் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தொடர்கிற பெண்கள் 04.02.2014 அன்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று புகார் மீது கண்காணிப்பாளர் அவர் அலுவலகத்திலேயே நேரடி விசாரணை நடத்தி உண்மையை அறிந்திட வேண்டுமென மனு கொடுத்தனர். மறுபுறம் அச்சுறுத்தும் முகமாக தோழர் அந்தோணிமுத்துவின் மகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவர் வீட்டின் மீது கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். தோழர் அந்தோணிமுத்து மீது இதுவரை 32 பொய் வழக்குகள் பதியப்பட்டு அவர் 20 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடே, ஜனவரி 30 அன்று 800 பெண்கள் கலந்து கொண்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடும் நடத்தப்பட்டது. தோழர் மேரி ஸ்டெல்லா மாவட்ட தலைவராகவும் தோழர் சுசீலா மாவட்டப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து உரையாற்றினர்.

...Full Text

தொழிலாளர் துணை ஆணையர் முற்றுகை. கசக்குதா……? கசக்குதா….? தொழிலாளின்னா கசக்குதா….?

திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் 70 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் உற்பத்தியை நடத்த முயற்சி செய்தது. நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர் அலுவலகத்தில் முறைப்படி முறையிட்டும் எந்தப் பயனும் இல்லாததால் பிப்ரவரி 24 அன்று, புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையில் திருபெரும்புதூர் தொழிலாளர் அலுவலகத்துக்குச் சென்ற ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் தொழிலாளர் துணை ஆணையரை முற்றுகையிட்டனர். நிர்வாகம் வெளியாட்களை வைத்து உற்பத்தி நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தொழிலாளர் துணை ஆணையர் உடனடியாக நிர்வாகத்தை வரவழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொழிலாளர் அலுவலகத்தை விட்டுச் செல்லப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தனர். கசக்குதா......? கசக்குதா....? தொழிலாளின்னா கசக்குதா....? இனிக்குதா....? இனிக்குதா....? முதலாளின்னா இனிக்குதா....? அவன் கொடுக்கும் காசு இனிக்குதா.....? என்ற தொழிலாளர்களின் முழக்கம், தொழிலாளர் அலுவலகம் இருந்த வளாகம் முழுவதும் ஒலித்தது. வளாகத்தில் இருந்த வெவ்வேறு அரசு அலுவலகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அந்த முழக்கங்களும் அந்த முழக்கங்களில் எதிரொலித்த தொழிலாளர்களின் உணர்வும், போர்க்குணமும் செய்திகள் பல கொண்டு சேர்த்தன. காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு நிர்வாகம் வந்து ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி உற்பத்தி நடக்கவில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவித்த பிறகு, போராட்டம் முடிவுக்கு வந்தது.

...Full Text

மக்கள் கோரிக்கைகள் மீது பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் மக்களின் அமைதி வளம் வளமை கோரி, பிப்ரவரி 9 அன்று, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளருமான தோழர் பாரதி மற்றும் கட்சியின் சென்னை மாநகரக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர் பழனிவேல் ஆகியோர் நடத்திய காலவரையற்ற பட்டினிப் போராட்டம் அய்ந்து நாட்கள் கழித்து, பிப்ரவரி 13 அன்று முடித்துக் கொள்ளப்பட்டது. பட்டினிப் போராட்டம் துவங்கிய முதல் நாள் மாலை அய்ந்து மணிக்கு மேல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணம் சொல்லி, பட்டினிப் போராட்டத்தை பொது இடத்தில் தொடர காவல்துறை அனுமதி மறுத்ததால், சென்னை மாநகர கட்சி தோழர் ஒருவர் வீட்டில் பட்டினிப் போராட்டம் தொடர்ந்தது. போராட்டப் பந்தலில் இருந்த தோழர்கள் அனைவரும் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் பாரதி மற்றும் பழனிவேல் தலைமையில் கட்சி அலுவலகத்துக்கு வந்ததே ஒரு பேரணியானது. மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை அரசு தரப்பில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி உறுதி தந்தால் ஒழிய காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல பகுதி மக்கள், பிற கட்சிகளின் தலைவர்கள், உள்ளூர் மட்ட அமைப்புகள் என பலரும் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை சந்திப்பது அதிகரித்தது. பட்டினிப் போராட்டம் நடந்த ஒவ்வொரு நாளும் அலுவலகம் இருக்கிற பகுதியில் ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு இணையான சூழல் இருந்தது. பிப்ரவரி 12 அன்று (4ஆவது நாள்) உழைப்போர் உரிமை இயக்கத் தோழர்களும், அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நல சங்க தோழர்களும் தாசில்தார் அலுவலகத்தை காலை 11 மணிக்கு முற்றுûயிட்டனர். பட்டினிப் போராட்டத்தில் இருப்பவர்களை வட்டாட்சியர் சந்திப்பார் என்று உறுதியளிக்கப்பட்டதன் பேரில் முற்றுகை போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அன்று மாலை வட்டாட்சியர் முதல்வரின் காணொளிக் காட்சி மூலம் புதிய தாலுக்கா திறக்கும் நிகழ்ச்சியில் உள்ளார் என்ற தகவல் வந்தது. ஷிப்ட் முடிந்து வந்த தொழிலாளர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் அம்பத்தூரில் பேரணி நடத்தி பல்லாயிரம் மக்கள் திரளும் இடங்களில் திடீரென ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இரண்டரை மணிநேரம், அம்பத்தூர் பகுதியில் எங்கெல்லாம் பேரணி நடத்த பொதுவாக காவல்துறை மறுப்பு தெரிவிக்குமோ, அங்கெல்லாம் சென்றது; எங்கெல்லாம் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுமோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அன்று இரவு 8 மணியளவில் வட்டாட்சியர் போராட்டப் பந்தலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை அனுப்பிவிட்டு அதன் நகலை போராட்டத்தில் இருந்தவர்களுக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார். பிப்ரவரி 13 அன்று (5ஆவது நாள்) கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏசியன் பெயின்ட்ஸ், புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். 5 நாட்களாக நடக்கும் போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், போராட்டப் பந்தலுக்கு நேரடியாக வந்து அரசின் பதிலை சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அந்தஸ்துள்ள ஆர்டிஒவை அன்று மாலைக்குள் அனுப்புவதாக தெரிவித்தார். மாலை 4.40 மணிக்கு பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை ஆர்டிஒ சந்தித்தார். அரசுக்கு போராட்டக் கோரிக்கைகளை அனுப்புவதாகவும் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியும் எழுத்து மூலம் தெரிவித்தார். வரதராஜபுரத்தில் புதிதாக திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார். அன்று மாலை 5.40 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட்டினிப் போராட்டம் நடந்த இடத்தில் இருந்து பொதுக் கூட்ட மேடைக்கு தோழர்கள் பேரணியாகச் சென்றனர். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, அவருடைய உரையை முடித்த பிறகு, பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் பாரதி, பழனிவேல் ஆகியோருக்கு பழச்சாறு அளித்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

...Full Text

இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடம் இல்லையா? – எஸ்.குமாரசாமி

முசாபர்நகர். மதச்சார்பற்றவர் என, இகக, இககமா தோழர்களின் தரச் சான்றிதழ் பெற்ற முலாயம் கட்சி ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில்தான், முசாபர்நகர் நடந்தது. முலாயமின் மதச்சார்பின்மை, அவரது சிறுபான்மையினர் சார்பு நிலை அவரை ‘மவுலானா’ முலாயம் என்று அழைக்கும் நிலைக்குச் சென்றது என்றார்கள். முசாபர்நகர், முலாயம் சாயத்தை வெளுக்க வைத்துவிட்டது. இந்திய பாணி மதச்சார்பின்மை எப்போது வேண்டுமானாலும் மதவெறியின் பக்கம் சாயும் என்பதை மீண்டும் ஒருமுறை அக்கறையுள்ள இடதுசாரிகளுக்கு கவனப்படுத்துகிறது. முசாபர்நகர், பாக்பத், சாம்லி, மீரத் மாவட்டங்களில், இந்த முறை சங்பரிவார் கூட்டம், ஜாட் ஜாதியினரை இசுலாமிய வேட்டையில் ஈடுபடுத்துவதில் வெற்றி பெற்றது. பல பத்தாண்டுகளாக, வட இந்தியாவில் சங்பரிவார் மதவெறி அரசியல் தலைவிரித்தாடி வரும் போதும், ஜாட் சாதியினருக்கும் இசுலாமியருக்கும் மோதல்கள் நடந்ததில்லை. இசுலாமியர்கள் ‘காதல் புனிதப் போர்’ தொடுக்கிறார்கள் எனத் திட்டமிட்டு சங்பரிவார் துவக்கிய பிரச்சாரம், 2013ல்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் படுகொலையில் முடிந்தது. மறுபுறம் பாஜகவின் வாக்கு வங்கி நிறைந்தது. ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் ஜாட் வாக்குகள் பாஜகவுக்குக் குவிந்தன. கலவரம் நடந்திராவிடில், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கும். இசுலாமிய வேட்டை. வாக்கு அறுவடை. செப்டம்பர் அக்டோபரில், சொந்த மண்ணில் இசுலாமியர்கள் 40 ஆயிரம் பேர் வரை அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நிவாரண முகாம்களில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? இசுலாமியர்களிடம் நீங்கள் திரும்பவும் சொந்த ஊருக்குப் போக மாட்டேன் என உறுதிமொழி தந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் தருகிறேன் என்றார் முலாயம். இசுலாமிய சொத்துக்கள், வாழிடம், வாழ்ந்த கலாச்சாரம் எல்லாமே பறிபோகும். சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்குச் செய்ததை, சங்பரிவார் இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. இந்த வேட்டைக்கு, துணை போய் காவல் நிற்பவர்கள், முலாயம் வகையறாக்கள். இந்த வரிசையில், சங்பரிவாருடன், வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் சேர வேண்டும் எனத் தமிழ்நாட்டில் முயற்சிகள் நடக்கின்றன. செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 20 வரை முகாம்களில் இருந்தவர்களில் குழந்தைகள் உட்பட 34 பேர் இறந்ததாக முலாயம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் குப்தா, குளிரால் யாரும் சாவார்களா, சைபீரியாவில் மக்கள் வாழவில்லையா என்று கேட்டு, ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரெஞ்சு மகாராணி மேரி ஆன்டனெட்டை நமக்கு நினைவுபடுத்துகிறார். முசாபர்நகருக்கு முன்னோடி நிச்சயம் குஜராத்தான். 2002ல் நரேந்திரமோடி தலைமையில் குஜராத்தில் ஆயிரங்களில் இசுலாமியர்கள் கொல்லப்பட்ட பிறகு, 1,68,000 இசுலாமியர்கள் வாழுமிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நிவாரண முகாம்கள் மனிதர் வாழத் தகுதியற்றவையாக இருந்தன. சாகடித்தாய், பின்னர் தப்பிப் பிழைத்திருப்பவர்களைச் செத்து இருக்கலாமே என நினைக்க வைக்கிறாயே, என்ன அநியாயம் என நாடே கேள்வி எழுப்பியது. மோடி பதில் சொன்னார். எங்கே எப்போது என்ன பதில் சொன்னார் தெரியுமா? குஜராத்தில், மெசானாவின் கோவில் நகரமான டெக்கார்ஜியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியபோது, செப்டம்பர் 9, 2002 அன்று நரேந்திரமோடி, நிவாரண முகாம்கள் குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்றார். இப்போது முலாயம், முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை, கேள்வி கேட்கும் மாற்றுக் கட்சியினரே உள்ளனர் என்கிறார். உச்சநீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகும், முகாம்களில் தங்கி இருந்தவர்களை வெளியேற்றி, அந்த இடங்களைப் புல்டோசர்களால் தரைமட்டமாக்குகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீது, அவர்களுக்கு நிவாரணமோ மறு வாழ்க்கையோ அளிக்காத முலாயம் கட்சி அரசாங்கம், வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு போட்டது. பாப்ரி மசூதி இடிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த மத்திய காங்கிரஸ் அரசுதான், அன்று மசூதி இடிப்புக்குத் துணை போனது. இன்றும், பாதிக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், நிவாரணம், மறுவாழ்க்கை மறுப்பு நிகழும் போதும், மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு மவுனம் சாதிப்பதன் மூலம் மதவாத சக்திகளை ஊக்குவிக்கிறது. ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இசுலாமிய மக்கள் மீளாத்துயரில் சிக்கி இருக்கும்போது, உத்தர பிரதேச அமைச்சர்களின் தலைமையில், சமாஜ்வாதி கட்சி, பாஜக, அஜித் சிங்கின் ஆர்எல்டி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், துருக்கி, கிரீஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, அய்க்கிய அரபு குடியரசு போன்ற நாடுகளுக்கு கல்வி ‘சுற்றுலா’ செல்கிறார்கள். முலாயம் மற்றும் அகிலேஷின் சொந்த மாவட்டமான எட்டாவாவில், செஃபாய் மஹோத்சவ் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், மாதுரி தீட்சித் ஆடிப்பாடிச் சென்றுள்ளனர். உத்தரபிரதேசத்தில் நிலவரம் கலவரமாக இருக்கும்போது டெல்லி தலைநகர் மண்டலத்தில் என்ன வாழ்கிறது? ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், காஷ்மீரில் இராணுவம் இருக்கலாமா வேண்டாமா என்பதில் காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றார். தேச விரோத மக்கள் விரோத தேச பக்தர்கள் கூப்பாடு போட, பிரசாந்த் பூஷன் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி எனவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராணுவ விவகாரங்களில் ராணுவமே பார்த்துக் கொள்ளும் எனவும் சொல்லிப் பின்வாங்க நேர்ந்தது. அதற்குப் பிறகும், ஆம் ஆத்மி கட்சியின் கவுசாம்பி அலுவலகம் இந்து ரக்ஷா தள் என்ற சங்பரிவார் அமைப்பால் சூறையாடப்பட்டது. தமிழகத்தின் நிலைமை என்ன? பொய் வழக்குகள். சிறையிலடைப்பு. சமூக பொருளாதார வாழ்வில் தொடர் புறக்கணிப்பு. ஓரஞ்சார விளிம்புகளுக்கு விரட்டப்படுதல். சென்னையில் ஏழை இசுலாமிய சிறுவன் தமீம் அன்சாரிக்கு நேர்ந்த கதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனப் பொருத்திப் பார்க்க உதவும். மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த முகம்மது ஹனிபா மற்றும் ஷபீனா பேகத்தினுடைய மகன் தமீம் அன்சாரி. முகம்மது ஹனிபா ஆட்டோ ஓட்டி வாழ்ந்து மடிந்தவர். ஷபீனா பேகம் ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவுவதோடு கிடைத்த வீட்டு வேலைகளைச் செய்பவர். ஒற்றையறை வாடகை வீட்டில் மாற்றுத் திறனாளியான ஒரு சகோதரியும் தமீம் அன்சாரிக்கு இருக்கிறார். தமீம் அன்சாரிக்கு வயது 16. தமீம் அன்சாரி ஒரு பாவம் அல்ல, இரு பாவங்கள் செய்துள்ளார். முதல் பாவம் அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தது. இரண்டாவது பாவம் அவர் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது. கோவில் உண்டி திருட்டு சம்பந்தமாக இவரை நீலாங்கரை காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்றார்கள். காவல் ஆய்வாளர் புஷ்பராஜூக்கு சிறுவன் அன்சாரி எல்லை தாண்டிய பயங்கரவாதியாகக் காட்சியளித்துள்ளான். அவர் சொல்லும் குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி அன்சாரியின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் எனவும் அப்போது குண்டு வெடித்தது எனவும் சொல்லப்படுகிறது. ஆபத்தான நிலையில் அந்த சிறுவன் சோழிங்கநல்லூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், கவனக் குறைவாக நடந்து கொண்டார் என்று சுலபமாகச் சொல்லி தப்பிக்க விடக்கூடாது. சிறுவனை இவர் சிறுவர் நீதி வாரியம் முன்பு ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் அன்சாரியின் வாயில் துப்பாக்கியை வைத்தது குற்றம். ஒப்புதல் வாக்கு மூலத்தை மிரட்டிப் பெறப் பார்த்தது குற்றம். துப்பாக்கியால் சுட்டது குற்றம். பெண்கள் விசயத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கூருணர்வால் தருண்தேஜ்பால் இன்னமும் சிறையில் இருக்கிறார். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் ஏழை இசுலாமிய சிறுவனை சுட்டதற்காக சிறையிலடைக்கப்பட வேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். தலைப்பில் உள்ள கேள்வியை, அதாவது, இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியை எப்படி அணுகுவது? இசுலாமியர்க்கு இந்தியாவில் இடம் இல்லை என்பவர்கள்தான், பழங்குடியின மக்களுக்கு வனங்கள் சொந்தம் இல்லை, தலித்துகளுக்கு கவுரவம் சமத்துவம் மீது உரிமை இல்லை, விவசாயிகளுக்கு விவசாய நிலங்களின்மீது உரிமை இல்லை, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வேலை பணிப்பாதுகாப்பு சங்க உரிமை இல்லை என்கிறார்கள். சுரண்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள், சாதி மொழி இன மத எல்லைகள் தாண்டி, பண மூட்டைகளுக்கு, ஊழல் பெருச்சாளிகளுக்கு, மதவெறியர்களுக்கு, ஆதிக்க சக்திகளுக்கு இந்தியா இல்லை தமிழ்நாடு இல்லை என, உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். தனித்தனி சிறுபான்மைகள், கரம் கோர்த்தால் பெரும்பான்மை. அடையாள அடிப்படையிலான இயக்கங்கள், தனிப்பிரச்னைகள் மீதான இயக்கங்கள், அனைத்தும் தழுவிய விதத்திலான விடாப்பிடியான இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து களம் கண்டால், காலம் மாறும்.

...Full Text

தைரியமாகச் சொல், இது குடியரசுதானா….?

தாலிக்குத் தங்கம், புரட்சித்தலைவியின் புரட்சிகரமான திட்டம் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புள்ளி விவரங்களும் சொல்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார்: ‘40 பவுன் நகை போச்சு. பொழப்புக்குன்னு இருந்த ஆட்டோ போச்சு. இப்பத்தான் காசுக்கு வேற வழியில்லாததால தொழிலுக்கு (மீன்பிடி) போறாக... இப்ப வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கிறாக...’ அவர் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பெண், ‘எங்க வீட்டுலயுந்தான் 30 பவுன் நகை போச்சு... வீடு போச்சு’ என்றார். தமிழ்நாட்டில் பல பெண்கள் இதேபோன்ற கதை சொல்வார்கள். இப்படி டாஸ்மாக் கடைக்கு வந்து சேர்ந்த தங்கத்துக்கும் ஜெயலலிதா புள்ளிவிவரங்கள் தர வேண்டும். ‘எங்களுக்கு இலவசங்கள் எதுவும் வேண்டாம், இந்த சாராயக் கடைகளை ஒழித்தால் போதும்’ என்று இன்னொரு பெண் சொன்னார். இலவசத்துக்கும் சாராயக் கடைக்கும் என்ன முடிச்சு போடுகிறீர்கள் என்று கேட்டபோது, ‘சாராயக் கடையில் வரும் வருமானத்தில்தான் இலவசங்கள் தருவதாக முதலமைச்சர் சொல்கிறார், அதனால் அது வேண்டாம்’ என்றார். இலவசங்கள் வேண்டாம் என்று சொல்ல தமிழக மக்களுக்கு விதவிதமான வாழ்வாதார காரணங்கள் இருக்கின்றன. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2011 - 2012ல் 1,64,552 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,63,228 பேர் பயன்பெற்றனர். 2011 - 2012ல் டாஸ்மாக் விற்பனை ரூ.18081 கோடியே 16 லட்சம். இந்த நிதியாண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை வெறும் ரூ.620 கோடி. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2012 - 2013 நிதியாண்டில் 1,66,687 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,19,684 பேர் பயன்பெற்றனர். இதே நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21680 கோடியே 67 லட்சம். தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.701 கோடியில் ரூ.589 கோடிதான் செலவிடப்பட்டது. தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு 2013 - 2014க்கும் ரூ.701 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டின் டாஸ்மாக் வருமான விவரம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தெரியவரும். ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு தாலிக்கு தங்கமாக தருவதற்கும் தங்கத்துக்கு சாராயமாக தருவதற்கும் இடையில் சில பத்தாயிரம் கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது. ‘பொன்மனச் செம்மல், இதயதெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்’ என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி யில் 1983ல் அரசு சாராயம் கொள்முதல் செய்ய டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. 2003 நவம்பரில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சாராய விற்பனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. 2003 - 2004ல் ரூ.3,639 கோடியே 92 லட்சமாக இருந்த டாஸ்மாக் விற்பனை 2012 - 2013ல் ரூ.21,680 கோடியே 67 லட்சமாக வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 700% வளர்ச்சி. 2003 முதல் 2012 வரை ஒவ்வோர் ஆண்டும் ரூ.1200 கோடி முதல் ரூ.3100 கோடி வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இடையில் எந்த கட்டத்திலும் விற்பனையில் பின்னடைவே இல்லை. மொத்தமுள்ள 6,837 கடைகளில், 4,631 கடைகளில் மட்டுமே அரசு அனுமதியு டன் பார்கள் இயங்குகின்றன. உரிமம் இன்றி செயல்படும் இந்த பார்களை முறைப்படுத்தினால் அரசுக்கு இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும். காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோட - திரு மேனி செழித்த தமிழ்நாடு! பாரதிக்குத்தான் எவ்வளவு பெருமிதம். இந்த எல்லா ஆறுகளும் இன்று வற்றிவிட்டாலும் வற்றாத ஜீவநதியான டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை கட்டிக்காக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் 11 அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 6 பீர் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு ஒயின் உற்பத்தி நிறுவனம் இருப்பதாக தமிழக அரசு விவரங்கள் தருகிறது. இந்த நிறுவனங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சாராயம் விற்கின்றன. அரசின் நாகரிக வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசு இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் ‘கொள்முதல்’ செய்கிறது. இவை, சசிகலாவின் மிடாஸ் உட்பட அஇஅதிமுக மற்றும் திமுக பிரமுகர்களால் நடத்தப்படுபவை. இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் வாங்க மக்கள் பணம்தான் தரப்படுகிறது. தமிழ்க் குடிமக்கள் அதை வாங்கிக் குடித்து மீண்டும் அரசுக்கு பணம் சேர்க்கிறார்கள். ஆக, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் வருவதாகச் சொல்வது பொருந்தாதது. பொய்யானது. விலையில்லா பொருட்கள் திட்டங்களுக்கும் டாஸ்மாக் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை. அரசு மீண்டும் சாராயம் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு ஆகும் பெரும் செலவு போக ஊழியர் ஊதியம் தர வேண்டும். நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும். கூடுதல் இருப்பு வாங்கி வைத்து பழையவற்றை விற்கும் நடைமுறையும் இருப்பு தேங்கியிருப்பதும் டாஸ்மாக் கடைகளில் சாதாரணமான நிகழ்வுகளே. இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.2,465 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் தமிழக அரசு சாராய உற்பத்தி நிறுவனங்களின் சந்தை முகவராக செயல்படுகிறது. 2011 ஜ÷லை, 2012 செப்டம்பர் என இரண்டு முறை சாராய விலை ஏற்றப்பட்டதும் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கேட்டதால்தான். மது வகை, அவற்றை விற்கும் நிறுவனங்கள் பட்டியல், நிறுவனங்கள் வாரியாக விற்கப்படும் அளவு என பல விவரங்கள் சொல்லும் டாஸ்மாக் இணையதளத்தில் கொள்முதல் விலை பற்றிய விவரம் மட்டும் இல்லை. தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் கடைகள், தங்கள் சொந்த ஊழியர்கள், தங்கள் சொந்த விற்பனை என செய்ய வேண்டிய வேலைகளை அரசே செய்து தருகிறது. லாபம் பார்ப்பது தனி யார் நிறுவனங்கள்தானே தவிர அரசு அல்ல. மொத்த இயக்கப்போக்கிலும் அரசுக்கு நிற்பது வெகு சொற்பமே. உதாரணமாக, ரூ.18,081 கோடி விற்பனை நடந்த ஆண்டில், அரசுக்கு ரூ.1,400 கோடி லாபம் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார். (இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஏழைத் தமிழா....?) பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் கொள் முதல் விலை கேட்டுப் போராடுகிறார்கள். பிறகு போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள். போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காரணம் ஆளும் கட்சிக்காரர்களின் மிரட்டல் என்கிறார்கள். கோமாரி நோயால் பாதிக்கப்படக் கூடிய ஆடு மாடுகளை தமிழ்நாட்டின் வறிய பெண்களுக்கு விலையில்லாமல் வழங்குவதை வெண்மைப் புரட்சி என்று ஜெயலலிதா சொல்கிறார். பால் தேவைக்கு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் வழங்கும் பால் போதாமல் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்குகிறார்கள். 2013 டிசம்பரில் கொள்முதல் விலையை உயர்த்தியதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் விலை ஏறியது. ஏற்கனவே, அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களுக்கு தரப்பட்ட முதல் பரிசான, பால் விலை உயர்வையே இன்னும் சமாளிக்க முடியாமல் திண்டாடும்போது, இன்னும் ஓர் விலைஉயர்வு திண்டாட வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாராய உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் அரசு சாராயம் வாங்கும்போது, ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்யும் ஒன்றரை கோடி லிட்டர் பாலையும் வாங்கிவிட முடியாது? அப்படி வாங்கினால்தானே அதை வெண்மைப் புரட்சி என்று சொல்ல முடியும்? அய்ஸ்க்ரீம் வாங்க முப்பது ரூபாய் செலவழிப்பவர்கள் அரிசி வாங்க செலவழிக்கக் கூடாதா என்று சிதம்பரம் கேட்டதைப் போல், சாராயம் வாங்க ரூ.90 செலவழிப்பவர்கள், பால் வாங்க ரூ.20 செலவழிக்கக் கூடாதா என்று ஜெயலலிதா கேட்டாலும் வியப்படைய ஏதுமில்லை. இருவரும் நவதாராளவாதக் கொள்கைளுக்குச் சொந்தக்காரர்களே. எப்படியாயினும், தமிழ் நாட்டில் இன்றைய நிலைமைகளில் சாராயப் புரட்சி தவிர வேறேதும் நடப்பதாக தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டம், ஜெயலலிதா சொல்கிற வெண்மைப் புரட்சி ஆகியவற்றை டாஸ்மாக் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிப்படுகிற படுபாதகமான நிலைமைகள் தான் ஜெயலலிதா அரசாங்கம் நிறைவேற்றுவதாகச் சொல்லப்படுகிற மற்ற ‘மக்கள்நலத்’ திட்டங்களுக்கும் பொருந்தும். பேருந்துக் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அவர் தந்திருக்கிற தொடர்ச்சியான அதிர்ச்சிகளின் தாக்கத்தால் வேதனை மேலிட்ட தமிழக மக்களுக்கு, சாராயம் அதிர்ச்சி நிவாரணி ஆகாது. அஇஅதிமுக ஆட்சியாளர்களின் இந்த விஷ விளையாட்டில், அரசுக்கும் ‘தமிழ்க்குடி’ மக்களுக்கும் இடையில் இசகுபிசகாகச் சிக்கிக் கொண்டவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள். செங் கொடி சங்கங்களில் இருக்கிறார்கள். காலமுறை ஊதியம் இல்லை, வார விடுமுறை இல்லை, 8 மணிநேர வேலை இல்லை, மிகைநேரப் பணிக்கு மிகை ஊதியம் இல்லை, அனைத்துக்கும் மேல் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லவே இல்லை, அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் தொல்லை, மிரட்டல் என அவர்கள் துன்பப்பட்டியல் முடிவின்றி நீள்கிறது. 2003ல் 36,000 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். இப்போது அவர்கள் எண்ணிக்கை 29,000 என குறைந்து உள்ளது. விற்பனையும் கடைகளின் எண்ணிக் கையும் அதிகரித்ததற்கு ஏற்ப ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சமீபத்தில் குன்னூரில் தங்கள் மாநில மாநாட்டை நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடத்தில் ஏற்படுகிற மனஉளைச்சலால் இதுவரை தமிழகம் முழுவதும் 4,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகச் சொல்லியுள்ளனர். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிறீர்களே, அந்த வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் அந்த 29,000 ஊழியர் குடும்பம் நிலை என்ன என்று ஜெயலலிதா அக்கறை கொண்ட வர் போல் கேட்கலாம். அந்த 6,837 கடைகளையும் அரசின் மலிவு விலை உணவகங்களாக மாற்றி அவர்களுக்கு அங்கேயே கவுரவமான வேலை தரலாம். பிப்ரவரி 7 அன்று காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டியது. பிப்ரவரி 8 அன்று வண்டலூரில் மோடி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. ஆளும் வர்க்கக் கட்சிகளின் பெரிய கூட்டங்கள் நடக்கும்போது டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடக்கிறது. மதுவிலக்கு வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் இன்னும் ஒரு படி மேலேபோய், டாஸ்மாக் கடைக்கு போன கையோடு அருகில் இருக்கிற தலித் கிராமத்துக்குச் சென்று தாக்குதலும் நடத்திவிடுவார்கள். இதுபோன்ற கூட்டங்கள் தவிர பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டுகிறது. சாதாரண நாட்களிலும் இலக்கு எட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தொய்வின்றி நடக்கும் ஒரே விற்பனை டாஸ்மாக் விற்பனை. கரும்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் கொள்முதல் விலை கேட்டு விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவதுபோல், தங்கள் நிறுவன சாராயத்தை அரசு வாங்கவில்லை என்று சிலர் நீதிமன்றக் கதவுகளை தட்டுவது வரை டாஸ்மாக் விற்பனை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ‘குடி’யரசு தழைத்தோங்குகிறது. தோளில் இருந்து சரிகிற சிவப்புத்துண்டை சரிசெய்துகொண்டே அந்தத் தோழர் சொன்னார்: ‘டாஸ்மாக் கடை இல்லை என்றால் நமது ஆண்கள் சாராயம் குடிக்க கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் செல்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்’. ‘தமிழ்க்குடிமக்கள்’, பிற மாநிலங்களை நம்பியிருக்காமல் சொந்தக் காலில் நிற்க வைப்பதுதான் எவ்வளவு பெருமைமிகு செயல்! ‘தமிழ்க்குடிமக்கள்’ மீது, அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அக்கறையை எப்படித்தான் மெச்சுவது! சிக்கன் ஒரு துண்டு கூட எடுத்துவிட்டார் என்பதற்காக தனது நண்பனையே அடித்துக் கொன்றார் ஒரு ‘குடி’மகன். குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை மனைவி, தந்தையை மகன், அண்ணனை தம்பி, மகனை தாய் அல்லது தந்தை கொலை செய்த செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன ஜெயலலிதா, உணர்ச்சிப்பெருக்கில் கொலைகள் நடப்பதை தடுக்க முடியாது என்று சொன்னார். மேலே குறிப்பிடப்பட்ட கொலைகளுக்கு முழுக்கமுழுக்க தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் ஏற்படுத்திய உணர்ச்சிப்பெருக்குதான் காரணம். எனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா என்கிற முதலமைச்சர் தனது ஆட்சியில் இருக்கும் மக்களாகிய குடும்பத்துக்கு சாராயம் கொடுத்துத்தான் சீரழிப்பாரா? தனக்குத் தேவையான சீனப் பொருட்களுக்கு மிகக் கூடுதல் விலை கொடுக்க நேர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சீனத்தை, கிழக்கிந்திய கம்பெனி உற்பத்தி செய்த அபினியால் அடித்தது. சீனத்துக்குள் அபினியை விற்று சீன மக்களை அபினி மயக்கத்தில் தள்ளியது. போதைக்கு அடிமையாகி, தங்களிடம் இருந்த வெள்ளியை, தங்கத்தை விற்று, அடகு வைத்து, கடன்பட்டு, முற்றிலும் திசை மறந்தவர்களாக அவர்களை மாற்றியது. இந்தியாவில் இருந்த தனது படைகள் கொண்டு, சீன கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து தனது வர்த்தகத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் சீன மக்கள் நிரந்தரமாக அபினி மயக்கத்திலேயே இருந்துவிடவில்லை. பிறிதொரு நாள், கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தார்கள். ஜெயலலிதாவும் தமிழக மக்களை நீண்ட காலத்துக்கு டாஸ்மாக் மயக்கத்தில் ஆழ்த்தி வைக்க முடியாது. வாக்களித்த மக்களுக்கு விஷமளித்து, அவர்கள் துன்பத்தில் சாவதை வேடிக்கைப் பார்க்கும் அஇஅதிமுகவுக்கு தக்க பாடம் தர காலம் நெருங்குகிறது.

...Full Text

முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இந்நாள் கொள்கை பரப்புச் செயலாளர்கள்

ஜெயலலிதா அரசியல் அரிச்சுவடி அறியாதவரல்ல இன்று தமிழக முதல்வராக, அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கிற ஜெயலலிதா, 04.06.1982ல் அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜனவரி 1983ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, பல சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த அவரால், மூன்று முறை முதல்வராகவும் முடிந்தது. ஆக, ஜெயலலிதா அரசியலில் ஒரு நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். மாநில அரசியல், அகில இந்திய அரசியல் ஆகிய இரண்டைப் பற்றியும், ஜெயலலிதா என்ற அரசியல்வாதிக்கு, அவரது அரசியல் கட்சிக்கு நிச்சயமாய் ஒரு பார்வை இருக்கிறது. ஒரு கட்டத்தில், தமிழக அரசியலில், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அஇஅதிமுக ஜெயலலிதா, ஜானகி பிரிவுகள் என இரண்டாக உடைந்தது. ஜானகி தலைமையிலான ஆட்சி கலைந்த பிறகு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில், கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி என்ற நான்கு பேர் முதல்வர் வேட்பாளர்களாகக் களத்தில் இருந்தனர். ஜெயலலிதா 2014ல் ஒரு கணக்கு போடுகிறார். காங்கிரஸ் நிச்சயம் தோற்றுப் போகும். இந்தியா முழுவதிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் தானே காங்கிரஸின் முதன்மை எதிர்க்கட்சி என்ற பிம்பத்தைக் கட்டி அமைப்பதில் மிகவும் தெளிவாக உள்ளார். காங்கிரஸ் வீழ்ச்சி பாஜகவின் எழுச்சியாக நேரடியாக மாறுமா என்ற சந்தேகம் அவருக்கும் உள்ளது. 2014 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவை நாடலாம். இது ஒரு சாத்தியப்பாடு. மற்றுமொரு சாத்தியப்பாடு, காங்கிரஸ் - பாஜக அல்லாத கட்சிகள் கணிசமான இடங்கள் பெறுவது. அப்போது, அந்தக் கட்சிகளில் ஏதாவது ஒன்றிலிருந்து பிரதமர் வரவும், அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே ஜெயலலிதா, தாமே பிரதமராக வாய்ப்பு உள்ளது எனத் திட்டவட்டமாக அடித்துச் சொல்லாமல், அடுத்து அமைய உள்ள மத்திய அரசில் தமக்குப் பெரும் செல்வாக்கு இருக்கும் என்பதையே சொல்கிறார். பாவம் சிபிஅய் தோழர்கள். சிபிஅய் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் தோழர் ஏ.பி.பரதன் இப்போதைய செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு, தோழர் ஏ.பி. பரதன், தங்களது கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்புக்கள் இயற்கையாகவே உருவாகும் என்றார். மறுநாள் சிபிஎம் முறை வந்தது. தோழர்கள் பிரகாஷ்காரத் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். இரண்டு பேருமே தேர்தல்களை கூட்டாகச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்கள். (தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசவில்லையாம்! தொகுதிப் பங்கீடு பற்றி சிபிஅய் சிபிஎம்மால் ஜெயலலிதாவிடம் பேச முடியும் என சிபிஅய் சிபிஎம்மே நினைக்க முடியாது. ஏற்கனவே து.ராஜாவுக்கு ஒன்று டி.கே.ரங்கராஜனுக்கு ஒன்று என நாடாளுமன்ற மேலவை இடங்கள் தரப்பட்டுவிட்டன. அதையும் கவனத்தில் கொண்டே ஜெயலலிதா முடிவு செய்வார்). இந்த அறிவிப்பு வெளியிடப் படும்போது, ஜெயலலிதா சொன்னார்: “ஒரு விஷயத்தை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அடுத்த பிரதமர் யார் என்று விவாதிப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. யார் பிரதமர் என்று எந்த ஒரு அரசியல் கட்சி விவாதிப்பதும் பொருளற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே அது குறித்து விவாதிக்க முடியும்.” பாவம், அம்மாவின் விவரம் இல்லாத விசுவாசிபோல் பேசியதற்கு, சிபிஅய் தேசிய செயலாளர் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தார் ஜெயலலிதா. தோழர் பாண்டியன், மோதிரக் கையால் குட்டுப்பட்டது பாக்கியம் என்று சொல்லவும் கூடும். ஏனெனில் அவர், யாருடைய ஆதரவில் ஜெயலலிதா பிரதமர் ஆனாலும், அது நாட்டிற்கு நல்லது என்று சொன்னவர் அல்லவா! அஇஅதிமுக சிபிஎம் அறிவிப்பு நடந்த நேரத்தில் வேறொரு சுவையான விசயம் நடந்தது. ஒரு கேள்விக்கு மிகமிகப் பொருளுள்ள ஒரு பதிலை (!) ஜெயலலிதா தந்ததை, தீக்கதிர் 03.02.2014 அன்று முதல் பக்கத்தில் பிரசுரம் செய்திருந்தது. உங்களுக்கும் நரேந்திர மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது என ஒரு நிருபர் கேட்க, ஜெயலலிதா, “இந்தச் செய்தியாளர் சந்திப்பு, கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கானது. இதில் வேறு கேள்வி எதற்கும் பதில் இல்லை. மற்ற பிரச்சனைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனப் பதில் சொன்னார். தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு பற்றித்தான் பேச்சு என்றும், தேர்தலுக்குப் பின் என்ன என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் என்றும் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில், பளிச் எனச் சொல்கிறார். மோடி, மதவெறி பற்றி எல்லாம் அவர் எதுவும் பேசவில்லை. அவர் தெளிவாக உள்ளார். அவர் எந்தக் காயை ஆடவும் எந்தக் காயை வெட்டவும் தயாராக இருப்பதைத் தெளிவாக்குகிறார். மோடி தொடர்பாக இதுவரை எந்த எதிர்மறைக் கருத்தையும் அவர் சொல்லாமல் இருக்கிறார். சிபிஅய், சிபிஎம் தோழர்கள் ஜெயலலிதாவிற்கு வாக்கு கேட்கும்போது, மறைமுகமாக, அதில் மோடிக்கும் வாக்கு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்பதை, உணர வேண்டும். சிபிஎம், ஜெயலலிதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்று சொல்வது, மிகையான பொருத்தமற்ற விமர்சனமா? தோழர் மாவோ, விவரங்களிலிருந்து உண்மையைக் கண்டறியச் சொல்கிறார். (SEEK TRUTH FROM FACTS). அஇஅதிமுக தனக்கு இரண்டு தளங்கள் இருப்பதாக நாடகமாடுகிறது. (1) வறியவர் ஆதரவு (2) மாநில உரிமைகளிலிருந்து மத்திய அரசு எதிர்ப்பு. ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலிலேயே, தோழர் ராமகிருஷ்ணன், அஇஅதிமுக நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களுக்காக அதற்கு வாக்களிக்கக் கோரியதன் மூலம், அஇஅதிமுகவின் வறியவர் ஆதரவு நிலைக்கு வக்காலத்து வாங்கினார். மாநில உரிமைப் போராளி மத்திய அரசு எதிர்ப்பாளி என்ற பிம்பத்தை அஇஅதிமுகவிற்கு உருவாக்குவதில், சிபிஎம் எவ்வளவு கண்ணும் கருத்துமாய் உள்ளது என்பதை தீக்கதிரில் வெளிவந்துள்ள சிபிஎம் சட்டமன்றத் தலைவர் தோழர் சவுந்தர் ராஜன், துணைத் தலைவர் பாலபாரதி பேசிய விஷயங்களிலிருந்து காணலாம். “மனித வளக்குறியீடுகள், மாநில வளர்ச்சிக் குறியீடுகள் ஆகியவை ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் மிகச்சிறந்த வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது என்று ஆளுநர் அறிக்கை விவரமாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த மாநிலத்தை விவசாயத் துறையில், தொழில் துறையில், கல்வித் துறையில், மகளிர் மற்றும் சமூக நலத்துறையில் எப்படி ஊக்குவிக்கலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக வளர்ச்சி அடைந்த மாநிலமா, நன்றாக செயல்படுகிற மாநிலமா தண்டித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதைப் போல நிதிக் குழுவும் மத்திய அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது என்ற காரணத்திற்காக நமக்கு நிதிப் பங்கீட்டை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது ஆளுநர் உரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் தலைகீழாகப் பார்க்கிற பார்வையாகும். வளர்ச்சி குன்றிய அல்லது போதுமான வளர்ச்சியை எட்டாத மாநிலங்களுக்கு கூடுதலான சலுகையை தரவேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வளர்ச்சி அடைகிற மாநிலங்களை ஊக்குவிப்பது என்பதும் அவசியமாகும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இது நடைபெறவில்லை, குறிப்பாக நம் தமிழகம் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றும்; மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்கிற அரசை அமைப்பதில் அதிமுகவுடன் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்படும்.” இவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் தோழர் அ.சவுந்தரராஜன் கூறிய விசயங்களாகும். பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிற மாநிலமாக இருக்கிறதேயன்றி, மதவெறி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் மோடியின் குஜராத் அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் கே.பாலபாரதி கூறினார். தோழர் அ.சவுந்தரராஜன், தொழிலாளர்களின் வேலையைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, மூன்று நாட்கள் தொழிலாளர் துறை இரவு பகலாக வேலை செய்ததை தான் அருகில் இருந்து பார்த்ததாகச் சொல்கிறார். சிறப்பாக தொழிலாளர்துறை செயல்பட்டு அந்தத் தொழிலாளர்களின் வேலை பாதுகாக்கப்பட்டது என்றும் பல தொழிற்சாலைகள் இங்கே வருகின்றன என்றும் சொன்னார். அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேசை தட்டுவதில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் படைப்பவர்கள் என்றால், அம்மா அம்மா பெரியம்மா நீங்கதாம்மா எல்லாம்மா என்ற பக்திப் பாடலுக்கு சவுந்தர்ராஜனும் பாலபாரதியும் எப்படி மெய்மறந்து பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்! ஆனாலும் சவுந்தர்ராஜன் அவர்களே, தமிழகத் தொழிலாளர்களால் வெறுக்கப்படும் தொழிலாளர் துறையை, உங்களால் எப்படிப் போற்றிப் புகழ முடிந்தது என உண்மையிலேயே புரியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள், தமது கட்சிக்கு வெளியிலிருந்து அதுவும் இடதுசாரி முகாமிலிருந்தே தமக்கு நற்சான்றிதழ்கள் வருகின்றன என்று ஜெயலலிதா காட்டிக்கொள்ளும் விதத்தில், நமது தோழர்கள் அவரது கொள்கை பரப்புச் செயலாளர்களாக எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதைப் புலப்படுத்தும். தேர்தல் உடன்பாடுகளும் சிபிஅய், சிபிஎம் கட்சிகளின் சந்தர்ப்பவாதத் தவறுகளின் வரலாறும் 1967ல் திமுக அண்ணாதுரை தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோதே, வலதுசாரி சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து சிபிஎம் அக்கூட்டணியில் இடம் பெற்றது. சிபிஅய் தனித்துப் போட்டியிட்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி போட்டியிட்ட 20 இடங்களில் 6 இடங்களிலும் சிபிஎம் போட்டியிட்ட 11 இடங்களில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறி அஇஅதிமுக உருவாக்கினார். கேப்பிடலிசம் சோசலிசம் எல்லாவற்றையும் புட்டியில் போட்டுக் குலுக்கி எடுத்து அற்புதமான அண்ணாயிசம் கண்டுபிடித்தார். அந்த நேரத்திலேயே சிபிஅய்யின் பாலதண்டாயுதம் ஊழலை லஞ்சத்தை எதிர்க்கும் எம்ஜிஆர் மீது ஒரு துரும்பு ஒரு கீறல் பட்டாலும், ஒரு திமுக மந்திரி கூட தமிழ் நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்ற எச்சரிக்கையைப் பிரகடனம் செய்தார். எம்ஜிஆர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தியபோது, அவரிடம் கொள்கையும் திட்டமும் தெளிவாக இல்லை எனச் சொல்லி தோழர் பி.சங்கரய்யாவை வேட்பாளராக நிறுத்திய சிபிஎம், எம்ஜிஆர் தோழர் பி.இராமமூர்த்தியை சந்தித்த பிறகு, தனது வேட்பாளரை விலக்கிக் கொண்டு, அஇஅதிமுகவை ஆதரித்தது. அவமானகரமான அபத்தக் களஞ்சியமான அண்ணாயிசத்தைச் சீர்செய்ய, தீக்கதிரில் 5 அல்லது 6 தொடர் கட்டுரைகள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். அப்போதே, கேப்பிடலிசத்தையும் சோசலிசத்தையும் இணைப்பவரின் ஆலோசகர் வேலையை வலியச் செய்தனர். நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் 1977ல் வந்தது. அஇஅதிமுக சிபிஅய், இ.காங்கிரஸ் ஓர் அணி. திமுக, ஜனதா, சிபிஎம் வேறு அணியில் நின்றார்கள். அதிமுக 18, இ.காங்கிரஸ் 15 சிபிஅய் 3ல் வென்றன. ஜனதாவிற்கு 3ம் திமுகவிற்கு ஓரிடமும் கிடைத்தன. திமுக மீதான ஊழலை விசாரிக்க சர்க்காரியா ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், சிபிஎம் திமுகவுடன் தேர்தலைச் சந்தித்தது. 1977லேயே சட்டமன்றத் தேர்தல்கள் வந்தன. சிபிஎம், பல்ட்டி அடித்து அஇஅதிமுக அணிக்குச் சென்றது. அதற்குப் பின்வரும் காரணம் சொன்னது. “மக்களவைத் தேர்தல் என்பது சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடந்த போட்டி. ஆனால் சட்டமன்றத் தேர்தல் அப்படியான பிரச்சனையை முன் வைத்து நடக்கவில்லை. திமுக ஆட்சி செய்த தவறுகளை 1969 ஆம் ஆண்டிலிருந்தே மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டி வருகிறது. தவிரவும், திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட மார்க்சிஸ்ட்கள் உடந்தையாக இருக்க முடியாது.” நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஊழல் பிரச்னை கிடையாது! சட்டமன்றத் தேர்தலுக்கு ஜனநாயகம் பிரச்சனை கிடையாது! ஆஹா பிரமாதம். 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இ.காங்கிரஸ் கூட்டணி வென்றது. அஇஅதிமுக ஜனதா சிபிஎம் கூட்டணி அமைத்தன. சட்ட மன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான 14 கட்சி கூட்டணியில், சிபிஅய், சிபிஎம் இடம் பெற்றன. அக்டோபர் 31, 1984ல் இந்திரா கொல்லப்பட்டார். 1984 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. சட்டமன்றத் தேர்தலும் கூடவே நடந்தது. சிபிஅய், சிபிஎம், திமுக, ஜனதா கூட்டணியில் இருந்தன. இரண்டிலும் அஇஅதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. 24.12.1987ல் எம்ஜிஆர் இறந்த பிறகு அஇ அதிமுக, ஜெயலலிதா ஜானகி அணிகளாகப் பிரிந்தது. நான்கு முதல்வர் வேட்பாளர்களோடு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சிபிஅய் ஜெயலலிதாவுடனும் சிபிஎம் திமுக ஜனதாவுடனும் சேர்ந்தன. கருணாநிதி முதல்வரானார். 1989 நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, சிபிஅய், சிபிஎம் ஓரணியில் நின்றன. அஇஅதிமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி நாகப்பட்டினம் தவிர அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. அகில இந்திய அளவில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி 141 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 192 இடங்களையும் பாஜக 88 இடங்களையும் கைப்பற்றின. தேசிய முன்னணி ஆட்சி அமைக்க, ஒரு பக்கம் சிபிஅய் சிபிஎம்மும், மறு பக்கம் பாஜகவும் ஆதரவு தந்தனர். ராஜீவ் காந்தி மே 91ல் இறந்தார். ஜூன் 91 நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுக சிபிஅய், சிபிஎம் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமையில் நரசிம்மராவ் பிரதமராக, சிறுபான்மை அரசு, மத்தியில் 21.06.1991ல் வந்தது. 1996ல் திமுக, சிபிஅய், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவானது. சிபிஎம், மதிமுக தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றது. தோழர் சுர்ஜித் தமது கூட்டணி வென்றால் வைகோ தான் முதல்வர் என அறிவித்தார். வைகோ, சுர்ஜித்தில் பெரியாரை காண்பதாக உருகினார். தொங்கு நாடாளுமன்றம் வந்தது. பாஜக 154, காங்கிரஸ் 140 இடங்கள். 16.05.1996 முதல் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமரானார். 01.06.1996ல் தேவகவுடா, அய்க்கிய முன்னணி பிரதமரானார். அய்மு, இடது முன்னணி ஒருங்கிணைப்பு ஏற்பட்டது. சிபிஅய்யின் இந்திரஜித் குப்தா சதுரானன் மிஸ்ரா மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். சிபிஎம் வெளியில் இருந்து ஆதரிப்பது தாண்டி, ஒருங்கிணைப்பின் மூலம் நேரடியாக அல்லாத விதத்தில் ஆட்சியில் அங்கம் வகித்தது. 21 ஏப்ரல் 1997ல் குஜ்ரால் பிரதமராகி, பிறகு அந்த ஆட்சியும் அற்பாயுசில் கவிழ்ந்தது. 1998 பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, மதிமுக, பாமக, பாஜக கூட்டணி உருவானது. திமுக, தமாகாவுடன் சிபிஅய் கூட்டணி சேர்ந்தது. சிபிஎம் வடசென்னையில் மதுரையில் தனித்துப் போட்டியிட்டு, மற்ற இடங்களில் திமுக கூட்டணியை ஆதரித்தது. பாஜக 179 காங்கிரஸ் 142 இடங்கள் பெற, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்து 13 மாதங்கள் ஓடியது. 99ல் அஇஅதிமுக ஆதரவை வாபஸ் வாங்க, மீண்டும் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைக்க, அதில் சிபிஅய், சிபிஎம் சேர்ந்தனர். திமுக, பாஜக, மதிமுக, ராஜீவ் காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தனர். மூன்றாவது அணியாக தமாக விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் களம் இறங்கினர். தமிழ்நாட்டில் பாஜக, திமுக கூட்டணி 24 இடங்கள் வென்றன. 182 இடங்கள் வென்று, பாஜக “இந்தியா ஒளி வீசும்” ஆட்சி நடத்தியது. 2004ல் பாஜக, அஇஅதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிபிஅய், சிபிஎம் இடம் பெற்று எல்லா இடங்களையும் வென்றனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஅய், சிபிஎம் கூட்டணி வென்று கருணாநிதி முதல்வரானார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் 39ல் 27 இடங்களையும், புதுச்சேரி தொகுதியையும் வென்றனர். அஇஅதிமுக, மதிமுக பாமக, சிபிஅய், சிபிஎம் மூன்றாம் அணியாய் நின்றனர். அஇஅதிமுக 9 இடங்கள், மதிமுக, இகக, இககமா தலா 1 இடமும் வெற்றி பெற்றன. பாமக ஓரிடம் கூட வெற்றி பெறவில்லை. படிக்கும் போதே மூச்சு வாங்குகிறதா? சிபிஅய், சிபிஎம் கட்சிகள் நோகாமல், இந்தத் தாவல்களை, பல்ட்டிகளை, பாய்ச்சல்களை நடத்திவிட்டனர். இந்தப் பின்னணியில் சிபிஅய், சிபிஎம் ஜெயலலிதாவோடு 2014 தேர்தலுக்குக் கூட்டு சேர்வதைக் காண வேண்டும். புரட்சி, சமூக மாற்றம் என்பவற்றிற்கும் சிபிஅய் சிபிஎம் தேர்தல் தந்திரங்களுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தெளிவு. தேர்தல் அல்லாத நேரங்களில் மற்றும் அதன் தொடர்ச்சியாக தேர்தல்களில், புரட்சிகர இடதுசாரி கட்சியின் நிலைப்பாடு எப்படி அமைய வேண்டும் என இகக (மாலெ) 9ஆவது காங்கிரஸ் ஆவணம் பின்வருமாறு சொல்கிறது. ‘நாம், சங்பரிவாரின் மதவெறி அரசியலில் இருந்து மட்டுமின்றி, கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காக பசியுடன் காத்திருக்கிற பெரும்தொழில் குழும உலகில் இருந்தும் இன்று மோடி தமது சக்தியை பெறுகிறார் எனப் புரிந்துகொள்ளும்போது, மோடி மாதிரிக்கெதிரான போராட்டத்தை வெறுமனே மதவெறி எதிர் மதச்சார்பின்மை வழிகளில் தொடர முடியாது என்பதை அங்கீகரித்தாக வேண்டும்; மாறாக அது உழைக்கும் மக்களின் பெரும்தொழில் குழும எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான தொடர் போராட்டங்களிலிருந்து பலம் பெற வேண்டும். மோடி முத்திரை அரசியலோடு பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ள மதவாத பயங்கரம், பெரும் தொழில்குழும மூலதனம், அரசு ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை திறம்பட இணைப்பதன் மூலம்தான் மோடி மாதிரியை எதிர்கொள்ள முடியும். மக்களின் ஓர் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் சக்திவாய்ந்த தலையீடும் மட்டுமே, நாடு ஒட்டுமொத்தமாக பெரும்தொழில் குழும - பாசிச கையகப்படுத்தல் ஆபத்துக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்ற முடியும்’. ‘பெரும்தொழில்குழும-பாசிச தாக்குதலை எதிர்ப்பது, காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்கொள்வது என்ற மய்ய அரசியல் கடமை, வெவ்வேறு மாநிலங்களில் நிலவுகிற வேறு வேறு வகைப்பட்ட அரசியல் சூழல்கள் மற்றும் நிலைமைகளைச் சார்ந்து எழுகிற அந்தந்த மாநிலங்களுக்கு குறிப்பான அரசியல் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளோடு இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பாஜக/தேஜமு அல்லது காங்கிரஸ்/அய்முகூ ஆகியவற்றால் நடத்தப்படுகின்றன. ஆக இந்த இரண்டு கூட்டணிகளுமே தேசிய அளவில் நமது பிரதான இலக்குகளாகும். இந்த இரண்டு கூட்டணிகளோடும் நேரடியாகத் தொடர்பில்லாத கட்சிகளால் நடத்தப்படுகிற மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தமிழ் நாட்டின் அஇஅதிமுக போன்ற அரசாங்கங்கள் சமஅளவுக்கு மோசமான மக்கள்விரோத, ஜனநாயக விரோத வரலாறு உடையவர்கள். ஆகவே நாம் இவர்களையும் ஊக்கத்துடன் எதிர்த்திட வேண்டும்’. தமிழ்நாட்டில் மோடியின் திருப்பணியை ஜெயலலிதாவே மேற்கொள்வதால் கம்யூனிஸ்ட்களின் முதன்மையான கடமை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஆகும். அதற்காக, போராடுகிற இடதுசாரி ஜனநாயக தேசபக்த சக்திகளிடம், உழைக்கும் மக்களிடம் துணிந்தும், உரிமையோடும், ஆதரவு கேட்கவேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலின் செங்கொடியின் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்வதன் மூலம் வருங்கால தமிழகத்திற்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.

...Full Text

ஜெயலலிதாவின் அரசியல் காய் நகர்த்துதலே ஏழு பேர் விடுதலை

உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு முடிவுகள் 18.02.2014. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 19.02.2014. ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும், அம்முடிவை மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தந்து அனுப்புவதாகவும், எது எப்படி இருப்பினும், மூன்று நாட்கள் முடிந்த பிறகு, அவர்களைத் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றும் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். 20.02.02014. தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவில், உச்சநீதிமன்றம் ஸ்டேட்டஸ் குவோ அனுசரிக்குமாறு, இடைக்கால உத்தரவிட்டது. அதாவது, விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் என்ன சொன்னார்கள்?. ராகுல் காந்தி, தமிழக அரசாங்கத்தின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், முன்னாள் பிரதமருக்கே இந்நிலை என்றால் சாமான்ய மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்றும் கோபம் மற்றும் விரக்தியின் கலவையை வெளிப்படுத்தினார். பாஜகவின் அருண் ஜெட்லி ராகுல் காந்தி சொன்னது போலவே பேசினார். காங்கிரஸ் பாஜக இருவருக்கும் மாற்று என்று சொல்லிக் கொள்ளும் ஆம்ஆத்மி யின் அர்விந்த் கெஜ்ரிவாலும், ஏழு பேர் விடுதலை தவறு என்றே சொன்னார். ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் நடக்கக் கூடாதது நடந்து விட்டதாகவும், ஏழு பேர் விடுதலை அஇஅதிமுக, திமுக போட்டி அரசியலின் மோசமான விளைவு என்றும், ஏதோ உயர்ந்த பீடத்திலிருந்து உபதேசம் செய்வதுபோல் பேசின. தி இந்து ஆங்கில நாளேடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏழுபேர் விடுதலை ஒரு தொடர்பு அகற்றுதலை (டிஸ்கனக்ட்) கொண்டு வந்துள்ளதாகத் தலையங்கம் தீட்டியது. திராவிட இயக்கம் துவக்க காலங்களில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று தி இந்து நாளேட்டை விவரித்ததற்குப் பொருத்தமாகவே எழுதியது. தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டன. எந்த ஓர் உண்மையான தமிழனும் தமிழச்சியும் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வார்கள் என்பதாகவே பொதுக் கருத்து கட்டமைக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக, தமிழ்நாடு ஆம்ஆத்மியின் கிறிஸ்டினா சாமி, ஆம்ஆத்மியின் புதிய கூட்டாளியாக மாறத் தயாராகும் உதயகுமார் ஆகியோரெல்லாம் ஏழு பேர் விடுதலையை வரவேற்றனர். தமிழ்நாட்டில் ஒரு நிலை, இந்தியாவில் ஒரு நிலை என எடுப்பதில் சங்கடமோ கூச்சமோ அவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபலமான தமிழ் தேசியவாதிகளுக்கு அம்மா போற்றி பாட, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி இருவருமேஇரட்டை வேடம் போடுபவர்கள்தான் 2000த்திலேயே, தூக்கு தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனையை அரசியலமைப்புச் சட்டப்படி பரிசீலிக்க, கருணாநிதி அரசுக்கு வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதி அரசு, நளினிக்கு மட்டுமே ஆயுள் தண்டனை எனக் குறைக்கப் பரிந்துரை செய்தது. 23.10.2008ல் நமது எம்ஜிஆர் நாளேட்டில், ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா நளினியைச் சந்தித்தபோது, ஜெயலலிதா பின்வரும் பொருளில் அறிக்கை வெளியிட்டார்: நளினியை பிரியங்கா பார்த்தது சரியா? இது பிரியங்கா சோனியாவின் சொந்தப் பிரச்சனையா? இது அவர்களுடைய குடும்பப் பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டின் பிரச்சனை. இது முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பானது. இது இந்த நாட்டின் இறையாளுமைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை கருணாநிதி மரண தண்டனையில் இருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வருகிற போதொல்லாம் விடுதலை புலிகளுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாக நடக்கின்றன. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன். 2008ல் ஜெயலலிதா சென்னது இருக்கட்டும். 2014ல் நளினி தன் 90 வயது தந்தை சங்கர நாராயணனைப் பார்க்க ஒரு மாதம் பரோலில் (சிறையிலிருந்து விடுப்பில்) செல்ல அனுமதி கேட்டபோது ஜெயலலலிதா அரசு என்ன சொன்னது? நளினியின் தந்தை இருக்கும் பகுதி மலைப்பகுதி. நளினியை தேர்தல் காலத்தில், அவர்கள் தந்தை இருக்கும் விக்கிரமசிங்கபுரத்துக்கு அனுப்பினால், பல தலைவர்கள் அவரைப் பார்க்கச் செல்வார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும். ஆகவே பரோல் கூடாது. (நளினியின் தந்தையும் அவர் வருவதை ஏற்கவில்லை என்றும்கூட சொல்லப்பட்டது). அக்டோபர் 2008ல் மட்டுமல்லாமல் ஜனவரி 2014லிலும் ஜெயலலிதா நளினியின் விடுதலைக்கெதிராக மட்டுமின்றி பரோலுக்கும் எதிராக இருந்தார். இப்போது 19.02.2014ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் கூடவே நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய அறிவிப்பு வெளியிடுகிறார். ஜெயலலிதாவின் 19.02.2014 முடிவில், கருணை, தமிழ் உணர்வு, ஜனநாயக அக்கறை என்ற எதுவும் இருப்பதாக, எவர் சொன்னாலும் அவர் ஒன்று ஏமாறுகிறார் அல்லது ஏமாற்றுகிறார். எம்ஜிஆர் ஒரு திரைப்பாடலுக்கு ஏமாறாதே ஏமாற்றாதே என வாயசைத்தது இப்போது நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தினால், நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. நடந்தது என்ன? தீர்ப்பு என்ன சொல்கிறது? வேறெங்கும் போகாமல் இணையதளத்தில் காணப்படும் 18.02.2014 தேதியிட்ட மாற்றப்பட்ட வழக்கு (குற்ற) எண்கள் 1, 2, 3/2012ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு விவரங்களிலிருந்தே நடந்தவற்றைக் கண்டறியலாம். • வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 72, 161 பிரிவுகள்படி முறையே குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர், மூவரின் கருணை மனுக்களைப் பரிசீலிப்பதில் தேவையற்ற அளவுக்கதிகமான கால தாமதம் செய்திருந்தனரா என்பது தொடர்பானதாகும். அப்படிச் செய்திருந்தால் அது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் வாழும் உரிமை தொடர்பான பிரிவு 21க்குப் புறம்பானதா? • 12.08.2011 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் மூவரை தூக்கிலிட உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்ற வாதத்துடன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்கக் கோரப்பட்டது. • 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். விசாரணை நீதிமன்றம் 28.01.1998ல் மரண தண்டனை வழங்கியது. மூவரும் 1991லிருந்து சிறையில் உள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் 08.10.99 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. • 17.10.1999 அன்று ஆளுநர் முன் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமலே 27.10.1999 அன்று கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இப்படி செய்தது தவறு என 25.11.1999 தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்கச் சொன்னது. 25.04.2000ல் ஆளுநர் மீண்டும் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். கருணை மனு குடியரசுத் தலைவருக்கு 26.04.2000 அன்று அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் கருணை மனுவை 12.08.2011ல் நிராகரித்தார். மூவருக்கும் இத்தகவல் 29.08.2011 அன்று தரப்பட்டது. • கருணை மனுவின் மீது முடிவு எடுக்காமல் காரணம் இன்றி தாமதப்படுத்துவது சித்தரவதை என்றும், அப்படிச் செய்வது உயிர் இருக்கும் கடைசி வினாடிவரை உள்ள உயிர் வாழும் உரிமையை மீறுவதாகும் என்றும், உச்ச நீதிமன்றம் சத்ருகன் சவுகான் வழக்கில் 21.01.2014 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. • மூவர் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் கூலம் வைஷ்ணாவதி கருணை மனு கோப்பு 5 வருடங்கள் ஒரு மாதம் ஏதோ ஒரு மேசை அறையில் தங்கியிருந்தது எனவும், பின்னர் குறிப்பு எழுதப்பட்டது எனவும், அதன் பின்னர் 5 வருடங்கள் 8 மாத தாமதத்திற்கு விளக்கம் ஏதுமில்லை எனவும் சொன்னார். • 11 ஆண்டுகளுக்கு மேலான தாமதத்திற்கு ஏற்கக்கூடிய காரணம் ஏதும் இல்லாததால், உயிர் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. அதனால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. தீர்ப்பின் கடைசிப் பத்தி இந்த ஆயுள் தண்டனையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவுகள் 432, 433ஏவுக்கு உட்பட்டது எனச் சொன்னது. திரும்பவும் 2011க்குச் செல்வோம் மூவர் தூக்கு 12.08.2011ல் உறுதியான பிறகு, முதலில் ஜெயலலிதா தமது அரசு செய்ய எதுவும் இல்லை என்றார். களத்தில் கழகங்கள் எதுவும் இல்லாமலே தமிழகம் கொந்தளித்தது. பற்றியெரிந்தது. செங்கொடி எரிந்து சாம்பலானதும் நடந்தது. அப்போது ஜெயலலிதா மூவர் தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத் தீர்மானம் கொண்டு வந்தார். மூவர் தூக்கு தண்டணை ரத்து கோரிக்கை தமிழக மக்களால் வலுப்பெற்றதேயொழிய, ஜெயலலிதாவாலோ கருணாநிதியாலோ அல்ல. சென்னை உயர்நீதிமன்றம் 20287, 20288 20289/2011 எண்ணிட்ட ரிட் மனுக்களில் தூக்குத் தண்டனைக்கு தடை விதித்தது. பின்னர் தான், வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாறி அங்கே 18.02.2014 தீர்ப்பும் அதன் பின்பு 19.02.2014ல் தமிழக அரசின் எழுவர் விடுதலை அறிவிப்பும் வந்தன. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, இன்றளவில் முழுமையாக சட்டப்பூர்வமானதாகும். இதில் மறு பரிசீலனை சாத்தியமேயில்லை எனச் சொல்ல முடியும். ஆக விவாதம் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பானது. (அதிலும் கூட, 433ஏ பிரிவுப்படி ஆயுள் தண்டனை ரத்து, 14 வருடங்கள் சிறையில் இருந்தவர்கள் விசயத்தில் மட்டுமே சாத்தியம்) விவாதம் சட்டம் சார்ந்தது மட்டுமா? பிரச்சனை தமிழர் விவகாரமாக சுருங்குமா?அல்லது ஜனநாயக கரிசனமாக மாறுமா? மூவர் தண்டனை குறைப்பில் சிஆர்பிசி 435படி மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என முதல்வர் சட்டமன்றத்தில் சொன்னதே சரியல்ல என்ற வலுவான கருத்து உள்ளது. மூவர் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இபிகோபடிதான் உறுதி செய்தது, ஆகவே, 435அய் நாடியிருக்க வேண்டாம் எனவும், நாடியதால்தான் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் இந்தக் கருத்து சட்டரீதியாக நீள்கிறது. மாநில அரசுக்கு ஆயுள் தண்டனையை குறைப்பதற்கான சுதந்திரமான அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 மற்றும் சிஆர்பிசி 432ன் கீழ் உள்ளது என்பதும் கூட வலுவான கருத்தாகவே இருக்கின்றது. இங்கேதான் சட்டப் பிரிவுகள், நீதிமன்றங்கள் தாண்டி மக்கள் மன்றம் ஜெயலலிதா அரசை ஆயுள் தண்டனையை நீக்க நிர்ப்பந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குற்றவியல் சட்டப்பிரிவு 432, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161படி தண்டனை குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. 20.02.2014 தேதிய உச்சநீதிமன்ற ஸ்டேட்டஸ் குவோ உத்தரவும் ஆயுள் தண்டனையை ரத்து செய்யும் அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக அதிகாரம் பயன்படுத்தப்பட்ட முறை பற்றியே கேள்வியும் கவலையும் வெளிப்படுத்தப்பட்டன. தடை விரைந்து நீங்க, சட்டமும் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் அதனதன், அவரவர் வேலைகளை பார்த்துக் கொள்ளட்டும். நாம் மக்களின் கருத்து ரீதியான மற்றும் களரீதியான அணிதிரட்டல் பற்றி யோசிப்போம். ஜெயலலிதாவின் தண்டனைக் குறைப்பு அறிவிப்பு, திமுக காங்கிரஸ், திமுக தேமுதிக காங்கிரஸ் கூட்டணிகளை சிக்கலாக்கியுள்ளது என்பதுதான் இம்முறை தனிக்கவனம் பெறும் அரசியல் காய் நகர்த்துதல் ஆகும். மற்றபடி அவர் முடிவில், நாடாளுமன்ற தேர்தலோடு தமிழர் நலன் மீதான கரிசனத்தைத் தொடர்புப்படுத்தப் பார்க்கிறார் என்பது, சுலபமாகப் புலப்படும் ஒரு விசயமே. நாட்டின் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை ரத்தா என்ற கேள்வி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டப்பிரிவுகள்படி இந்தியாவில் எந்த ஒருவரையும் கொலை செய்த எவருடைய ஆயுள் தண்டனையும் ரத்து செய்யப்பட முடியும் என்றால், ராஜீவ் காந்தி வழக்கில் மட்டும் வேறு அணுகுமுறை கோருவது, சிலர் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் சமமானவர்கள் (மேலானவர்கள்) என்று சொல்வதாகாதா? பிரச்சனையை வெறுமனே தமிழர் விவகாரமாகக் குறுக்குவது ஆபத்தானதாகும். பிரச்சனை உலகளாவியது. நாடு தழுவியது. விடாப்பிடியான முழு நிறைவான ஜனநாயகம் தொடர் பானது. அப்சல் குருவிற்கு உச்சநீதிமன்றம் அநியாயம் இழைத்தது. இப்போது மரண தண்டனைக் குறைப்பு, மரண தண்டனைக்கு உள்ளானோர் குடும்பத்திற்கு பார்க்கும் உரிமை போன்றவை பற்றி எல்லாம் ஏதேதோ சொன்னாலும், ஜனநாயகத்தின் முன்னால் மக்கள் மன்றத்தின் முன்னால் உச்சநீதிமன்றத்திற்கு பாவ மன்னிப்போ பரிகாரமோ கிடையாது. (சட்டப்படி அல்லாமல், தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை என்றார்கள்). கடுமையான அரசு, கடுமையான சட்டங்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள், நவீன முதலாளித்துவ அரசுகளின் ஆயுதங்களாகும். தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். எதிர்ப்புப் போராட்ட அரசியல் கைதிகளின் ஆயுள் தண்டனை 14 ஆண்டுகளுக்கு மிகாமல் குறைக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் குரல். மணிப்பூர், காஷ்மீர், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட் சிறைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் பசுமை வேட்டை மூலமும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் மனித உரிமைப் பிரச்சனைகள் ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்களே. இந்தியாவில் தமிழகத்தில் இஸ்லாமிய அரசியல் கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களது தண்டைனை நீக்கத்தையும் நாம் கோருவோம். தமிழர், காஷ்மீரி, மாவோயிஸ்ட், இஸ்லாமியர் அடையாளங்கள் தாண்டி, ஒடுக்குமுறை, சித்தரவதை, அதீத தண்டனைகளை எதிர்த்திடுவோம். செத்த பின்பு சொர்க்கம் என்றால் இப்பிறவி என்னாச்சு என்ற கேள்வி பொருள் நிறைந்தது. ஆனால் ஜெயலலிதாவோ நல்ல காலம் இப்போது வராது பிறகு ஒருகாலம்தான் வரும் என்று பல விசயங்களில் பல நேரங்களில் சொல்லி வருகிறார். 2023ல் ஒரு வழியாக நல்ல காலம் வரும் என்றும் அதற்கு முன் 40க்கு 40 தந்தால் நல்ல காலம் என்றும் தராவிட்டால் டெல்டா பாலைவனம் ஆகும் என்றும் ஜெயலலிதா சொன்னதை நாம் மறக்க முடியாது. 2011ல் 100 நாட்கள் ஆட்சி நிறைவு மற்றும் நிதிநிலை அறிக்கை தாக்கல் நேரத்தில் ஜெயலலிதா பாடினார்: வருந்தாதே ஏழை மனமே வருங்காலம் நல்ல காலம் மனம்போல இன்பம் நேரும் திருநாளும் வந்து சேரும் எழுவர் விடுதலையிலிருந்து தமிழக மக்களின் அமைதி, வளம், முன்னேற்றம் வரை நல்ல காலமும் இன்பமும் திருநாளும் தாமாக வராது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் மூலமே அவை சாத்தியமாகும்.

...Full Text

Grim Reality of ‘Make in India’

(Even as the Modi Government woos MNCs to ‘Make in India’, promising them ‘low cost manufacture’ and further weakening labour law implementation, several recent struggles and reports from across India highlight the grim conditions in which workers in fact ‘Make

...Full Text

Historic Strike by West Bengal Tea Garden Workers

On 11-12 November, tea garden workers in West Bengal registered a militant protest demanding minimum wages and other workers’ rights. They held a 48-hours strike in the entire tea sector of North Bengal, and a 12-hour general strike in three

...Full Text

Working Women’s Workshop in West Bengal

Close on the heels of the working women's workshop held successfully in Hooghly on 9 November, a state level workshop was held jointly by AICCTU and AIPWA on Nov. 16 in Kolkata. This workshop was also aimed at concretizing women workers' specific

...Full Text

Conditions of Women Workers in the Tailoring Industry of Tamilnadu

An AICCTU team investigated the conditions of women workers in the tailoring industry in Ambattur and Karur. The team comprised State secretaries Comrades Mohan and Munusami in Ambattur, and State Council members Comrades Ramachandran, Chandrasekar, Paulraj, Ponnuthurai, Bhuvana along with

...Full Text

பத்திரிகை செய்தி : திருவரங்கம் இடைத்தேர்தலில் இகக மாவுக்கு ஆதரவளிக்க இகக மாலெ முடிவு

திருவரங்கம் இடைத்தேர்தலில் இகக மா தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இகக மாலெயிடம் ஆதரவு கேட்டுள்ளது. இகக மாலெயின் மாநில நிலைக் குழு இந்தத் தேர்தலில் இககமாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா ஆளான பின்னணியில் அறிவிக்கப்பட்டுள்ள திருவரங்கம் இடைத்தேர்தலில் இடதுசாரி குரலை ஒலிக்க இகக மாவுக்கு ஆதரவளிக்க இகக மாலெ முடிவு செய்துள்ளது. இகக மாலெ தனியாகவும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்தும் அஇஅதிமுக, பாஜக கட்சிகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளது. ஒரு புறம் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் அமலாக்கத்துக்கு தமிழ்நாட்டை பரிசோதனைக் கூடமாக மாற்றுகிற அஇஅதிமுக அரசு, மறுபுறம் பாஜகவை எதிர்ப்பதுபோல காட்டிக் கொள்ளப் பார்க்கிறது. ஒரு புறம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனைக்குள்ளாக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிழந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்திக்கிறார்; மறுபுறம், தமிழக பாஜக திருவரங்கம் இடைத்தேர்தலுக்கு பாஜக வேட்பாளரை அறிவிக்கிறது. பாஜகவுக்கும் அஇஅதிமுகவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறதே தவிர, அது நட்பு முரண்பாடே தவிர, இரண்டு கட்சிகளுக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளில், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகளில் வேறுபாடு ஏதும் இல்லை. பாஜகவுக்கு ஒத்திசைவாகவே தமிழ்நாட்டில் நவதாராளவாதக் கொள்கைகள் தொய்வின்றி அமலாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆவின் பால் ஊழல் அம்பலமானது முதல் அடுத்தடுத்த ஊழல்கள் பற்றிய செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. தாது மணல் கொள்ளையில் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இப்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நல நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருக்கிற அதே வேளையில் மக்கள் விரோத நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இன்றி தொடர்கின்றன. ஆலைமூடல், வேலைப் பறிப்பு, பால், மின்சாரம் விலைஉயர்வு, ஒடுக்குமுறை நடவடிக்கைகள், கருத்துரிமைப் பறிப்பு, பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு, நூறு நாள் வேலைத் திட்ட முடக்கம் என அனைத்து விதங்களிலும் மக்கள் விரோத நடவடிக்கைகளை அஇஅதிமுக அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அஇஅதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டவும், ஊழல் செய்த கட்சியை மக்கள் தீர்ப்பால் தண்டிக்கும் விதமும் தேர்தலில் அஇஅதிமுகவை தோற்கடிக்க வேண்டும். அஇஅதிமுகவுக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லாத திமுக மற்றும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும். இந்தக் கட்சிகளுக்கு மாற்றான, இடதுசாரி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். பாலசுந்தரம் மாநிலச் செயலாளர்

...Full Text