மேக்கேதாட்டு அணை கட்டும் அச்சுறுத்தல் தமிழக விவசாயிகளை மீண்டும் வீதிக்கு கொண்டு வந்துள்ளது. தஞ்சையில், இடதுசாரி கட்சிகள் உடனடியாக கண்டனக் குரலெழுப்பி தமிழ்நாட்டின் கோரிக்கையை வலுவாக எழுப்பின.
தமிழ்நாட்டின் நீர் தேவையான 1664 டிஎம்சியில், 261 டிஎம்சி (15%) அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவை நம்பி உள்ளது. பாரம்பரியமாகவே நீர் பற்றாக்குறை மாநிலமாகவே இருந்து வருகிறது. எனவே நமது சொந்த நீர் ஆதாரத்தை வலுப்படுத்துவது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு, 90 விழுக்காடு மேற்பரப்பு நீரையும் 80 விழுக்காடு நிலத்தடி நீரையும் பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 41,127 கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் இருந்ததையும் 18.26 லட்சம் ஆழ்குழாய் கிணறுகள் இருப்பதும் 2239 கால்வாய் வழி பாசனம் இருப்பதும் மேற்கண்ட நிலைமைக்கு புள்ளி விவரங்கள் அடிப்படையிலான பதிலாகும்.
பல பத்தாண்டு கால நீதி மன்ற வழக்குகள், இருதரப்பு பேச்சுவார்த்தைகள், பலமுறை போராட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரம் கோர்த்து நின்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்குப் பிறகு காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு என்பது வரலாறு. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் இருந்து கூடுதலாக 177 டி.எம்.சி நீர் தமிழகத்திற்கு கிடைத்தாலும் பற்றாக்குறை நீடிக்கவே செய்கிறது. இப்போது மேக்கேதாட்டு பூமி பூஜை, அதையும் பறித்து விடுமோ என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை ஆண்ட கட்சிகள் கார்ப்பரேட்மய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றின. நகர்ப்புர மயமாதலே மாநிலத்தின் வளர்ச்சி எனவும் பெருமை பேசிக் கொண்டனர். இயற்கைக்கு மாறாக நகர்மயமாதலை உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடித்தனர். இதனால் கிராமத்தின் விவசாயத்தையும் விவசாயிகளையும் புறக்கணிப்பதோடு விவசாயத்திற்கான நீர் மேலாண்மைத் திட்டங்களையும் கிடப்பில் போட்டனர். எந்தவொரு நீராதாரக் கொள்கைகளை வகுப்பதோ, திட்டமிடுவதோ இல்லாமல் தமிழகத்தை 60 ஆண்டுகளாக வஞ்சித்துள்ளனர்.
மழைநீர் சேமிப்பு மேலாண்மை
மழைக் காலங்களில் நீரைத் தேக்கி வைக்க திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இதனால் ஆண்டிற்கு 140-200 டி.எம்.சி நீர் வீணாகக்
கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் கண்மாய், குளங்கள், ஏரிகள் அனைத்தும் தூர் வாரப்படாமல் இருக்கின்றன். மேலும் ஆற்று மணல் குவாரிகள் ஆறுகளை சாகடித்து விட்டன. பல லட்சம் கோடி, வணிகக் கொள்ளை நடக்க அரசே வழிவகை செய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசு, 30 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை அதிகப்படுத்தப் போவதாக அதன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. தீராத காவிரிப் பிரச்சினை, மணற்கொள்ளை, மழைநீர் மற்றும் வெள்ளக் காலங்களில் நீரைச் சேமிக்காத அலட்சியம், நீர்த் தேக்கங்கள் மண் மற்றும் கழிவுகளால் மாசடைந்திருப்பதை அலட்சியப்படுத்தும் நிர்வாகச் சீர்கேடு, இவற்றால் தற்போது பயன்பாட்டிலுள்ள விளை நிலங்களுக்கே நீர் பற்றாக்குறை உள்ளது. விரிவாக்கப்படும் விளைநிலங்களுக்கு குறைந்தபட்சம் 150 டிஎம்சி தண்ணீர் வேண்டும். எங்கிருந்து நீர் ஆதாரத்தை உருவாக்கப் போகிறது தவெக அரசு?
தண்ணீரைக் காணாத திட்டங்கள்?
1.தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு ஆகிய மூன்று ஆறுகளின் இணைப்பு;
2.காவிரி - வைகை- குண்டாறு இணைப்பு.
பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக 130 கி.மீ ஓடி புன்னக்காயல் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர், விவசாயத் தேவைகளை நிறைவு செய்வது தாமிரபரணி ஆறுதான். மழைக் காலங்களில் 40% மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இது கிட்டதட்ட 15 டி.எம்.சி- ( 1 டி.எம்.சி என்பது 11 ஆயிரம் கன அடி நீராகும்) 20 டி.எம்.சி யாகும். தாமிரபரணியால் நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 16,107 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் தாமிரபரணியே உயிராதாரமாய் உள்ளது. இது வடக்கு கோடை மேலழகியான் தொடங்கி, ஸ்ரீவைகுண்டம் தென்கால் வரை பதினோரு சிறிய அணைக்கட்டுகள், கால்வாய்கள் வழியாக வங்கக் கடலுக்குள் செல்கிறது. தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம். எட்டு அடி உயரமே உள்ள இந்த அணையில் 6 - 7 அடி வரை சேறும் சகதியும் தேங்கியிருக்கிறது. சிறிய மழை விழுந்தால் கூட, உபரி நீர் முழுவதும் வெளியேறிவிடும். இதன் கீழ் உள்ள 53 குளங்களின் நிலையும் இதே கதிதான். இந்த அணையையும் இதற்குட்பட்ட குளங்களையும் தூர் வாரி, வீணாகச் செல்லும் மழை நீரைத் தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும். ஆனால், ஆண்டுதோறும் 20 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது.
ஆத்தூர் அருகே தடுப்பணை அமைத்தால் குடிநீர் திட்டங்களுக்கு அங்கிருந்தே தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்ற விவசாயிகளின் ஆலோசனையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
வீணாகச் செல்லும் கடல் நீரை திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக நாட்டிற்கே முன்னோடியாக ரூ 369 கோடியில் தீட்டப்பட்ட தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு ஆகிய மூன்று ஆறுகளின் நதிநீர் இணைப்புத் திட்டமும் ஆட்சியாளர்களின் கவனிப்பின்றி கிடக்கிறது. 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் வெள்ளத்தின் போது மட்டுமே வீணாக கடலுக்குள் சென்ற நீரின் அளவு கிட்டத்தட்ட 120 டி.எம்.சியாகும். விவசாயிகளின் நெஞ்சே பதை பதைக்கிறது. அவ்வளவு தண்ணீரையும் கடலுக்கு அனுப்பி விடுவதால் முன் கார், கார், பிசானம் என ஆண்டுக்கு மூன்று போகம் விவசாயம் செய்த நெல்லையும், தூத்துக்குடியும் இன்று ஒரு போக விவசாயத்திற்கே திண்டாடுகிறது. போதாக் குறைக்கு ஆற்றிலேயே வளர்ந்து மிதக்கும் அமலைச் செடிகள் வேறு தண்ணீரை வீணாக்கி வருகின்றன. ஆற்றை சுத்தமாக்கி கழிவு நீர் கலக்காமல், அணையையும் தூர் வாரி ஆழப்படுத்தினாலே தண்ணீரை தேக்க முடியும்.
காவிரி-வைகை-குண்டாறு
காவிரி- வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி உபரி நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் தடுத்து திருச்சிராப்பள்ளி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலம் இப்பகுதிகள் நீர் வளமும், நில வளமும் பெறும். காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக ரூ 6,941 கோடி மதிப்பில் கால்வாய்கள் தோண்ட பிப்ரவரி 2021ல் அன்றைய ஆட்சியாளர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றே இத்திட்டத்திற்கு கர்நாடகா அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்தத் திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும்.
இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும். மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள், 44,547 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு புதிய பாசனக் கால்வாய்கள் வெட்டி, வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.
இத்திட்டத்தினால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரூ 14,400 கோடியில் 262 கி.மீ தொலைவிற்குட்பட்ட இத் திட்டத்தின் மூலம், 6,300 மில்லியன் கன அடி தண்ணீர் கடலுக்குச் செல்லாமல் உற்பத்திக்காகத் திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிக்கும்; குடிநீர் பஞ்சமும் வெகுவாகக் குறையும்.
காவிரி துணை வடிநிலத்திலுள்ள உள் கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல், நவீனப்படுத்தும் திட்டம், ரூ 3,384 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் பாசனப் பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் உறுதி செய்யப்படும்.
காவிரி நீருக்காக நாம் போரிடும் அதே நேரத்தில் காவிரியில் ஏற்படும் வெள்ள நீர் வெறுமனே கடலில் வடிந்து நூற்றுக்கணக்கான டி.எம்.சி நீர் வீணடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவு 130.33 லட்சம் ஹெக்டர் ஆகும். 1047 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதி பருவகால ஏற்ற இறக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படக் கூடியது. வேளாண்துறையில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு ஒரு கீழ்நிலை ஆற்று மாநிலம் என்பதால் அது தண்ணீரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மழைப்பொழிவு, அதன் பரவல் முறையை மட்டுமே முழுமையாகச் சார்ந்துள்ளது. பருவமழை அதன் நீர் வளங்களை நிரப்புவதற்குப் பெய்கிறது. அதன் மூலம் பருவமழை தோல்விகள், கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீவிர வறட்சிக்கும் வழி வகுக்கின்றன. நமது மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழை மறைவுப்பகுதி என்பதால், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கிடைப்பதுபோல் பருவமழை நமக்கு கிடைப்பதில்லை. மழைப் பொழிவில் ஏற்படும் இடஞ்சார்ந்த, காலஞ் சார்ந்த மாறுபாடுகள், பங்கீடு முறை மாநிலத்தின் பயிர் சாகுபடிக்கு மேலும் பல சிக்கல்களைச் ஏற்படுத்துகிறது. கிடப்பிலுள்ள தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு திட்டத்தையும், காவிரி - வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தையும் ஆட்சியாளர்கள் விரைந்து செயல்படுத்திட வேண்டும். உணர்ந்து செயல்படுத்தினால் விவசாயம் வளரும், விவசாயிகள் வாழ்வில் ஒளி பிறக்கும்.
