மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) பதிலாக விக்சித் பாரத் - கிராம் ஜி (VB-GRAM G) சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது, ஊரகப் பகுதிகளில் வேலை செய்வதற்கான உரிமைக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது; போதிய நிதி, வாழ்வாதாரத்திற்குப் போதுமான ஊதியம் மற்றும் வலுவான உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வேலை செய்யும் உரிமையை மீண்டும் நிலைநாட்டுவது அரசியலமைப்புச் சாசனத்தின் நோக்கங்களை முன்னெடுப்பதோடு, ஊரகப் பொருளாதார தேவையையும் வளர்ச்சியையும் ஆதரிக்கும்.
நெருக்கடியில் ஒரு உத்தரவாதம்
ஊரகப் பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் மட்டுமே வேலை என்ற வரையறுக்கப்பட்ட வரம்பையும், தொடர்ச்சியான நிதிப் பற்றாக்குறையையும் கொண்டிருந்தாலும், 'வேலை செய்யும் உரிமை' என்ற அடிப்படைக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட ஒரே சட்டம் MGNREGA மட்டுமே. டிசம்பர் 2025-இல், மத்திய அரசு MGNREGA-வை ரத்து செய்துவிட்டு, 'விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் (ஊரகம்)' (VB-GRAM G) சட்டத்தைக் கொண்டுவந்தது; இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சராசரியாக 3.44 கோடி குடும்பங்கள் MGNREGA-வின்கீழ் சுமார் 44 கோடி மனித-நாட்கள் (person-days) வேலை செய்துள்ளன (அட்டவணை 1). ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரியோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வேலைவாய்ப்பு 68% குறைந்துள்ளது. 'தொடக்கக்காலச் சிக்கல்கள்' (teething issues) எனக் கூறப்பட்டாலும், வேலை கோரும் உரிமையை (demand-driven) அடிப்படையாகக் கொண்ட MGNREGA கட்டமைப்பு தகர்க்கப்பட்டதும், புதிய சட்டம் மாநில அரசுகள் மீது சுமத்தும் விகிதாச்சாரமற்ற அளவுக்கு மீறிய நிதிச் சுமையுமே VB-GRAM G சட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியக் காரணங்களாக இருக்கக்கூடும்.
எனவே, இந்தச் சிறிய அளவிலான வேலை செய்யும் உரிமையைப் பறிப்பதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. வேலை செய்யும் உரிமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்துகள் தொடர்பான விவாதங்களை, அரசியலமைப்பு நிர்ணய சபையின் (Constituent Assembly) விவாதங்களிலிருந்தே காண முடிகிறது.
வேலை செய்யும் உரிமை அவசியம் என்பதைப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டாலும், அதனை அடிப்படை உரிமையாக (Fundamental Right) வைப்பதா அல்லது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் (Directive Principles of State Policy - DPSP) ஒரு பகுதியாக வைப்பதா என்பதில்தான் விவாதம் அமைந்திருந்தது. வழிகாட்டு நெறிமுறைகள் தாமாகவே உரிமைகளாக மாறிவிடாது; மாறாக, அரசுகள் சட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பதற்கான வழிகாட்டுதல்களாகவே அவை செயல்படுகின்றன. இதுவே கண்ணோட்டங்களில் ஏற்பட்ட வேறுபாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.
குடிமக்களுக்கு சமூக-பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசுக்கு அரசியலமைப்பு ரீதியான மற்றும் உறுதியான சட்டப்பூர்வ அதிகாரம் தேவை என்று வாதிட்ட பேராசிரியர் கே.டி. ஷா, வேலை செய்யும் உரிமையை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார். ஆனால், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்டோர், வேலை செய்யும் உரிமை என்பது ஓர் அத்தியாவசிய இலக்கு என்றாலும், வளங்கள் சூறையாடப்பட்ட புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அதை உடனடியாக அனைவருக்கும் நடைமுறைப்படுத்துவது நிதி மற்றும் நிறுவனரீதியாகச் சாத்தியமல்ல என்று கருதினர். எனவே, இவ்வுரிமையை அடிப்படை உரிமைகளில் வைக்காமல் வழிகாட்டு நெறிமுறைகளில் வைத்தது, மக்கள் நலக் கொள்கையைக் கைவிடுவதாக அர்த்தமாகாது; மாறாக, அது ஓர் இலட்சியத்தை நோக்கிய திட்டமிட்ட அரசியலமைப்புச் செயல்பாட்டையே பிரதிபலித்தது. அறிஞர்களான அஞ்சனி கபூர் மற்றும் மனு பகவான் ஆகியோர் தங்களது ‘Ambedkar and the anti-isolation of Fellowship’ என்ற கட்டுரையில் எழுதியிருப்பது போல, “அரசியலமைப்புச் சட்டம் நாட்டை உருவாக்குவதில்லை, மாறாக நாட்டை உருவாக்கத் தேவையான கருவிகளையே வழங்குகிறது.”
எனவேதான், வழிகாட்டு நெறிமுறைகளின் 41-ஆவது உறுப்பு (Article 41), “அரசு, தனது பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியின் எல்லைகளுக்கு உட்பட்டு, வேலை செய்யும் உரிமையை உறுதி செய்வதற்கான பயனுள்ள ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்...” என்று கூறுகிறது. மேலும் வலுவான முற்போக்குக் கூறுகளை உள்ளடக்கிய 39, 42 மற்றும் 43 ஆகிய உறுப்புகள், "போதுமான வாழ்வாதாரத்திற்கான உரிமை, ஆண்-பெண் இருபாலருக்கும் சம வேலைக்குச் சம ஊதியம், நியாயமான மற்றும் மனிதாபிமான வேலைச் சூழல்" மற்றும் "அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார ஊதியம் (living wage) மற்றும் கண்ணியமான வாழ்க்கைத்தரம்" ஆகியவற்றை உறுதி செய்ய அழைப்பு விடுக்கின்றன.
இலட்சியத்திலிருந்து சட்டப்பூர்வ உரிமைக்கு
'ஓல்கா டெல்லிஸ் எதிர் பம்பாய் மாநகராட்சி' (1985) வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வாழ்வாதாரத்திற்கான உரிமை என்பது வாழும் உரிமைக்கான (Right to life) அடிப்படை நிபந்தனை என்று கூறியதன் மூலம், வேலை செய்யும் உரிமைக்கு ஒரு நீதித்துறை உந்துதலை அளித்தது. சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களின் கூட்டு முயற்சியால், 2005-இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் வரம்புகள் குறைவாக இருந்தாலும், இந்தியா முழுவதும் வேலை செய்யும் உரிமையைச் சட்டப்பூர்வமாக அது முதல்முறையாகச் சாத்தியமாக்கியது. குறைந்தபட்சக் கூலியுடன் வேலைவாய்ப்பை வழங்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமையை அரசு உறுதி செய்ய வேண்டியிருந்தது.
2009-ஆம் ஆண்டில், MGNREGA ஊதியமானது 'குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948'-இலிருந்து துண்டிக்கப்பட்டது. காலப்போக்கில், MGNREGA ஊதியம் பணவீக்கத்திற்கு ஏற்பப் போதுமான அளவு உயரவில்லை என்பதோடு, பெரும்பாலான மாநிலங்களில் விவசாயப் பணிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாகவே தொடர்ந்தது. குறைவான ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை ஆகியவை குடும்பங்களின் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மதிப்பிடப்பட்ட மொத்த குடும்ப வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது.
சமீபத்திய விசாரணையின்போது, நிதி ஆதாரங்கள் மாறாமல் அப்படியே இருக்கும்பட்சத்தில், குறைந்தபட்ச ஊதிய வரம்பை நிர்ணயிப்பது வேலை வழங்கப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கருத்துத் தெரிவித்தது. வேலைவாய்ப்பு உத்தரவாதம் குறித்த மத்திய அரசின் அணுகுமுறையோடு ஒத்துப்போவதாகத் தோன்றும் இந்தக் கருத்து, குறைந்தது இரண்டு கோணங்களில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.
முதலாவதாக, 'சஞ்சித் ராய் எதிர் ராஜஸ்தான் மாநில அரசு' (1983) வழக்கின் தீர்ப்பை இது வலுவிழக்கச் செய்கிறது. அந்த வழக்கில், குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவாகக் கூலி வழங்குவது அரசியலமைப்பின் 23-ஆவது உறுப்பை மீறும் செயல் என்றும், அது 'கொத்தடிமை முறைக்கு' (forced labour) ஒப்பானது என்றும் உச்ச நீதிமன்றம் அவதானித்திருந்தது. இரண்டாவதாக, ஒரு மக்கள் நலத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் மாறாமலும், கட்டுப்படுத்தப்பட்டும் இருக்க வேண்டும் என்ற தவறான பொருளாதாரத் தர்க்கத்தின் அடிப்படையில் இக்கருத்து அமைந்துள்ளது.
உண்மையில், ஊரகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதிக ஊதியம் அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது; அவர்களின் சுதந்திரத்தை மேம்படுத்துகிறது; மற்றும் மனித மேம்பாட்டுத் தரங்களை முன்னேற்றுகிறது. இவை, பொருள்களுக்கும் சேவைகளுக்குமான பயனுள்ள தேவையையும் (effective demand) அதிகரித்து, நேர்மறையான பொருளாதாரப் பெருக்க விளைவை (multiplier effect) உருவாக்குவதன் மூலம் அதிகப் பொருளாதார உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. எனவே, வேலை உறுதித் திட்டத்தில் அதிக ஊதியத்துடன் அரசு செய்யும் கூடுதல் செலவினம், மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் இடையே ஒன்றுக்கொன்று வலுவூட்டும் ஒரு சுழற்சியை உருவாக்கும்.
வேலை செய்யும் உரிமையிலிருந்து பின்வாங்குதல்
VB-GRAM G சட்டத்திற்கான நிதியில் தன்னிச்சையான உச்சவரம்பை விதிப்பதன் மூலமும், அதைக் குறைந்தபட்ச ஊதியத்தோடு இணைக்காததன் மூலமும், வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்ற கருத்தியலே சட்ட அங்கீகாரத்தை இழக்கிறது. மாநில அரசுகள் ஏற்கனவே நிதி நெருக்கடிகளுடனும், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) கட்டமைப்பின்கீழ் குறைக்கப்பட்ட கடன் வரம்புகளுடனும் போராடி வருகின்றன. VB-GRAM G சட்டத்திற்கு நிதியளிப்பதில் ஏற்படும் கூடுதல் சுமை, மாநிலங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதைத் தடுக்கும். வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
VB-GRAM G சட்டத்தில், குறிப்பிட்ட பகுதிகளை இத்திட்டத்திலிருந்து நீக்கி அறிவிக்கை (denotify) செய்வதற்கான விதிகளும் உள்ளன. இது MGNREGA-வின் உலகளாவிய (universality) வேலை செய்யும் உரிமையைக் கட்டுப்படுத்துகிறது.
'நவ்தேஜ் சிங் ஜோஹர் எதிர் இந்திய ஒன்றியம்' வழக்கில் உச்ச நீதிமன்றம் 'பின்னடைவுத் தடைக் கோட்பாட்டை' (doctrine of non-retrogression) எவ்வாறு உறுதிப்படுத்தியது என்பதை வழக்கறிஞர் புர்பயன் சக்கரவர்த்தி சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கோட்பாடு என்னவென்றால், ஒரு அரசு ஒரு குறிப்பிட்ட அளவிலான முற்போக்கான சட்டவாக்கத்தையும், ஓர் உரிமையை நிலைநாட்டும் தன்மையையும் அடைந்த பிறகு, அதைத் திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியாது. இந்தப் 'பின்னடைவுத் தடை' என்பது அரசின் அதிகாரத்தின் மீதான ஒரு கட்டுப்பாடாகச் செயல்பட்டு, ஒருமுறை பெறப்பட்ட உரிமைகள் பின்னர் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. MGNREGA-வை ரத்து செய்துவிட்டு VB-GRAM G சட்டத்தைக் கொண்டுவருவது இந்தக் கோட்பாட்டை மீறுவதாகவே தோன்றுகிறது.
ஊரகப் பகுதிகளின் ஊதியம் பத்தாண்டுகளாகத் தேக்க நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், பெண்கள் அதிக அளவில் 'ஊதியம் பெறாத குடும்பத் தொழிலாளர்களாக' (unpaid family workers) ஆக்கப்படுகிறார்கள். இந்தச் சூழலில், வேலை செய்யும் உரிமையின் மீதான அர்ப்பணிப்பை உறுதிசெய்வதற்கான குறைந்தபட்சத் தேவைகள் இவைதான்: சட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியத்தை வாழ்வாதார ஊதியத்துடன் (living wages) இணைப்பது, குறித்த காலத்தில் ஊதியம் வழங்குவது, ஊழலைக் குறைப்பதில் உள்ளாட்சி அமைப்புகளைப் பங்காளிகளாக மாற்றிச் சமூகத் தணிக்கைகளில் (social audits) கவனம் செலுத்துவது மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வேலை செய்யும் உரிமை என்ற சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயே செயல்படுத்த முடியும். ஆனால், விக்சித் பாரத் - கிராம் ஜி (VB-GRAMG) சட்டம் துரதிர்ஷ்டவசமாக இவற்றில் பெரும்பாலானவை குறித்து மௌனம் சாதிக்கிறது. எனவே, வேலை செய்யும் உரிமையை மீண்டும் நிலைநாட்டுவது என்பது அரசியலமைப்பு நோக்கங்களை முன்னெடுக்கும் ஒரு சட்டப்பூர்வமான திருத்தமாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த பொருளாதார நடவடிக்கையாகவும் அமையும்.
இக்கட்டுரையை எழுதியவர்கள்:ராஜேந்திரன் நாராயணன் மற்றும் விஜய் ராம் எஸ் - தி இந்து.
தமிழாக்கம் : மதி
