இகக(மாலெ) விடுதலை மத்திய கமிட்டி கூட்டம் சென்னை, 29-31 மே 2026

$articleData->title

இகக(மாலெ) விடுதலை மத்திய கமிட்டி கூட்டம் சென்னை, 29-31 மே 2026

சில முக்கிய அரசியல் நிலைமைகள் குறித்து 


1. சட்டப் பேரவைத் தேர்தல்களும் அதற்குப் பிறகும்

ஏப்ரலில் தேர்தலைச் சந்தித்த மாநிலங்களின், தேர்தல்கள், தேர்தல் முடிவுகள், தேர்தலுக்குப் பிந்தைய மாநிலங்களின் நிலவரங்கள் குறித்து மத்தியக் கமிட்டி விவாதித்தது. மேற்குவங்கம், தமிழ்நாடு முடிவுகள் பெரிய ஆச்சரியங்களைக் கொண்டு வந்திருக்கிறது. கேரளம், அசாம் முடிவுகள் எதிர்பார்த்தபடியே இருந்தாலும் கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வியின் அளவும், அசாமில் காங்கிரஸ் அதன் கூட்டாளிகளின் படுதோல்வியும் நெருக்கமான படிப்பையும் ஆய்வையும் கோருகிறது. அசாமின் தொகுதி மறுவரையறை கட்டமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளின் உள்ளாற்றலுக்கு குழிபறித்துவிட்டது. கேரளத்தில் இகக(மா) புதிய சுற்று, அமைப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படையாகவே கணிசமான வெகுமக்கள் அதிருப்தி முன்வந்துள்ளது. தவெக, இளைஞர்கள் மற்றும் பெரும் பிரிவு பெண்களது பெருத்த உற்சாகத்துடன் வரவேற்கத்தக்க மாற்றமாக ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது. தவெகவின் திடீர் எழுச்சி புதிய வழக்கத்துக்கு மாறான அரசியல் நிகழ்வாகும். இப்போதைக்கு தவெகவுக்கென்று சொந்த பெரும்பான்மை இல்லை; அது காங்கிரஸ், விசிக, அய்யூஎம்எல், இகக, இகக(மா) கட்சிகளால், கடைசி இரண்டு கட்சிகளும் வெளியிலிருந்து, ஆதரிக்கப்படுகிறது. புதிய அரசாங்கத்தையும் குறிப்பாக தவெக கட்சி குறித்து, தமிழ்நாட்டிற்குள் அதன் பாத்திரம், மோடி அரசாங்கத்துடன், சங்கிப்படைகளின் பாசிச நிகழ்ச்சி நிரல், இந்த இரண்டு விஷயங்களிலும் அதன் மனப்போக்கு குறித்தும் நாம் நெருக்கமாக கவனித்து வரவேண்டும்.

மேற்குவங்க தேர்தல் முடிவுகளும் கூட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை அதன் தவறான ஆட்சியின் காரணமாக பெருமளவிலான வெகுமக்கள் நிராகரிப்பை பிரதிபலிக்கிறது; அதேசமயம், அரசாங்கம் வெளியேற்றப்பட்டதானது, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரால் குறிவைக்கப்பட்ட வாக்காளர் களையெடுப்பாலும் பெருமளவிலான மத்திய ஆயுதக் காவல்படைகளை பயன்படுத்தியும் வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான முறைகேடுகளைச் செய்தும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் உள்ள நிலைமைகளை, பங்களாதேஷ் ஊடுருவல் பூச்சாண்டியை எழுப்பவும், கூர்மையான இஸ்லாமிய எதிர்ப்பு துருவச் சேர்க்கையை ஏற்படுத்தவும் பாஜக முழு அளவில் பயன்படுத்திக் கொண்டது.

மேற்கு வங்கத்தில் பாஜக அதிகாரத்துக்கு வந்துள்ளது விரைவாக நிகழ்ந்துள்ளது. அரசியல் கட்சி என்ற வகையில் அது அதிகாரத்தைக் கைப்பற்ற கிடைத்த ஒவ்வொரு வழியையும் பயன்படுத்தியுள்ளது. இப்போது அது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது அரசாங்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மாநிலத்தில் ஸ்திரமான சமூக, அரசியல், கருத்தியல்/கலாச்சார மேலாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்ளவும் முயற்சிக்கும். இந்த நிகழ்ச்சி நிரல் என்பது பெங்காலி அடையாளத்தை விரைவான மதவாத வலதுசாரி சாய்வாக மாற்றி எழுதும் நிகழ்ச்சி நிரலே தவிர வேறல்ல. மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிகாரில் ஜனதாதளத்தை செய்தது போல திரிணாமுல் காங்கிரசையும் பாஜக உடைக்க முயலும்.

மேற்குவங்கத்தில் இருந்து உற்சாகமூட்டும் செய்தி, அங்காடிக்காரர்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கெதிராக கால்நடை பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்கெதிராக, லெனின் சிலை, மேற்கு வங்க முற்போக்கு மரபின் திருஉருக்கள் தகர்க்கப்படுவதற்கெதிராக பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது என்பதுதான். எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தன்னை மறு கண்டுபிடிப்பு செய்ய வேண்டியிருக்கும் நிலையில் ஒன்றுபட்ட இடது அணி, பாசிச தாக்குதலுக்கு எதிராக வெகுமக்களை அமைப்பாக்குவதில் முன்கை எடுக்கும் ஆற்றலும் பொறுப்புணர்வும் கொண்டிருக்கிறது.

நமது தேர்தல் செயல்பாடு பொருத்தவரை நமது வேர்க்கால் மட்ட இருத்தலை விரிவுபடுத்துவதிலும் ஆற்றலூட்டுவதிலும் மிகக் குறைவான வெற்றியையே பிரதிபலிக்கிறது. அசாமின் பெகாலி (தா/வ) தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் 25 ஆயிரத்துக்கும் சற்று கூடுதலான வாக்குகளையும் மேற்குவங்கத்தில் இகக(மா) ஆதரவுடன் எட்டு தொகுதிகளில் 45 ஆயிரத்துக்கும் கொஞ்சம் கூடுதலான வாக்குகளையும் பெற்றிருக்கிறோம். மற்றபடி அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாட்டில் நமது சுதந்திரமான வாக்குகள் மிகவும் குறைவாகவே உள்ளது; எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் மூன்றில் மட்டுமே 1000 க்கும் சற்று கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், இந்த மாநிலங்களிலெல்லாம் மாறியுள்ள அரசியல் சூழலானது நமது மாபெரும் செயல்துடிப்பைக் கோருகிறது; நமது வேலை, அமைப்பு வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. நமது குறைவான வாக்குகளினால் மனம்சோர்ந்து போவதற்கு மாறாக சவால்களை எதிர்கொண்டு சூழ்நிலையின் தேவைக்கு ஈடுகொடுத்து எழுந்தாக வேண்டும்.

2. புதிய சூழ்நிலைக்கான பதில்வினை

(பாஜக) மேற்கு வங்கத்தை கைப்பற்றியது, பாஜக எழுச்சியின் புதிய கட்டத்தையும் அதன் பாசிச மூர்க்கத்தின் தீவிரத்தையும் குறிக்கிறது. தென்னிந்திய மாநிலங்களைத் தவிர பஞ்சாப், இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர தற்போது பாஜக நாடு முழுவதையும் ஆட்சி செய்துவருகிறது. மாநிலங்களவையில் அதன் பலம் அடுத்த சில ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்காக உயரக்கூடும். அப்போது நிலுவையில் உள்ள தனது நிகழ்ச்சி நிரலான தொகுதி மறு வரையறை, ஒரே நேரத்தில் தேர்தல்,  இஸ்லாமியர்களையும், பிற விளிம்புநிலை பிரிவினரையும் குறிவைக்கும், குடிமக்களின் உரிமைகளை அதிதீவிரமாகக் கட்டுப்படுத்தும், மேலும் பல தீய சட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றும்.

ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த அமைப்பு வலைப்பின்னல் மீதும் அரசு அதிகாரத்தின் பல்வேறு நெம்புகோல்கள் மீதும் இறுக்கமான பிடியைக் கொண்டிருப்பதால் மோடி அரசாங்கமும், பாஜகவும் வெல்ல முடியாததுபோல் தோன்றலாம். ஆனால், பல்வேறு மக்கள் பிரிவினரது போராட்டங்களும் இந்தியா முழுவதும் மாபெரும் தீவிரத்துடன் வெடித்துக் கிளம்புகின்றன. கல்வி-தேர்வு-வேலை ஆளெடுப்புமுறைக்கு எதிராக மாணவர்-இளைஞர்களின் தொடரும் கிளர்ச்சிகள், அதிக ஊதியம் பாதுகாப்பான வாழ்வாதாரம், கண்ணியமான வேலைக்கான தொழிலாளரது கொந்தளிப்பு, நையாண்டி, கோபம், மாற்றத்துக்கான டிஜிட்டல் மேடையாக திடுமென எழுந்துள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இந்த மூன்றும் மேலே சொன்னவற்றை சுட்டிக்காட்டுகின்றன.

மேற்குவங்கத்தில் டிஎம்சி தோல்வியுற்றதும், தமிழ்நாட்டில் திமுக தோல்வி கண்டதும் இந்தியா கூட்டணியின் இரண்டு பெரிய உறுப்பினர்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளதைக் காட்டுகிறது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வி, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இடதுசாரிகள் ஆளவில்லை எனும் நிலமையை ஏற்படுத்தியுள்ளது. இடதுகள் ஆளும் மாநிலம் எதுவுமில்லை என்பதே இடதுசாரி முகாமின் அடிப்படையான பலவீனம் எதையும் சுட்டிக் காட்டவில்லை. கேரளத்தின் தோல்வியைச் சுட்டிக்காட்டி இடதுசாரிகள் பொருத்தமற்று போய்விட்டனர் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்திட வலதுசாரி பரப்புரை விரும்புகிறது. மோடி அரசாங்கம் வெல்ல முடியாதது போன்ற உணர்தலும், எதிர்க்கட்சி ஒற்றுமையின் சரிவும், சிதைவும்,  இடதுசாரி அரசியல் பொருத்தமற்றுப் போய்விட்டது அல்லது காலாவதியாகிவிட்டது போன்ற அவநம்பிக்கைவாத உளவியல் சூழலை உருவாக்குகிறது.

நாம் இந்த அவநம்பிக்கை உணர்தலை விட்டொழிக்க வேண்டும். மேலும், நமது வெகுமக்கள் முன்முயற்சியை விரிவுபடுத்தவும், கட்சி அமைப்பை வலுப்படுத்தவும் முழுக்கவனம் செலுத்திட வேண்டும். தற்போது, மேற்கு வங்கத்தில் இகக (மா) வுடனும், இடது முன்னணியுடனும் தமிழ்நாட்டிலும் செயலுக்கான ஒற்றுமைக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்; அதேசமயம், நமது செயல்தந்திர வழியின் எல்லைக் கோடுகள் மங்கிவிடாமல் இருக்கவும் அல்லது நமது அரசியல் சுதந்திரத்தை வலுவிழக்கச் செய்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். 

சில முக்கிய அரசியல் தீர்மானங்கள்


1.கட்டாய நிலக் கையகப்படுத்துதல்களும், கார்ப்பரேட் நில அபகரிப்புகளும்

மோடி அரசின் கீழ் நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கட்டாய நிலக் கையகப்படுத்துதல்களை, கார்ப்பரேட் நில அபகரிப்புகளை மத்திய கமிட்டி வன்மையாகக்  கண்டிக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் சக்திவாய்ந்த மக்கள் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட, நிலக் கையகப்படுத்தல் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்வது (Social Impact Assessment), கிராம சபையின் ஒப்புதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றம், நியாயமான இழப்பீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இன்ன பிற அனைத்து சட்டப்பூர்வப் பாதுகாப்புகளையும் மோடி ஆட்சி சீர்குலைத்து வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதாரத்தின் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

பீகாரில், ரியல் எஸ்டேட் துறையால் உந்தப்படும் வளர்ச்சி என்ற பெயரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை, துணை நகரங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்களுக்காக கையகப்படுத்திட முன்மொழியப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டுமானால், அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் திட்டங்களை எதிர்த்திட வேண்டும்.

ஒடிசாவின் சிஜிமாலி பிராந்தியத்திலுள்ள பழங்குடி சமூகம், வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள பாக்சைட் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. நிலம், காடுகள், இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க உதவும் வகையில் மக்களின் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை ஒடுக்க அரசு தனது அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. காவல்துறையின் வன்முறை,  கைதுகள், அச்சுறுத்தல்கள், ட்ரோன் மூலம் கண்காணிப்பு, பொய்யாக தயாரிக்கப்பட்ட ஒப்புதல்கள், வன உரிமைச் சட்டம், பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்ட பஞ்சாயத்து சட்டம், இதர அரசியலமைப்புப் பாதுகாப்புகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுதல் போன்றவை குறித்து வரும் அறிக்கைகள் பழங்குடி சமூகங்களின் உரிமைகள் மீதான கடுமையான தாக்குதலைக் குறிப்பதாக உள்ளன

2. முக்கியத் தேர்வுகளில் முறைகேடுகள், ஊழல், வினாத்தாள் கசிவுகள்

நீட், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் பொதுப் பணி தேர்வு மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளில் மீண்டும் மீண்டும் நடந்து வரும் முறைகேடுகள் ஊழல்கள், வினாத்தாள் கசிவுகள் குறித்து மத்தியக் கமிட்டி ஆழமான கவலையை வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவங்கள் கோடிக்கணக்கான மாணவர்களின் கனவுகளைச் சிதைத்துள்ளதுடன், நியாயமான வெளிப்படையான நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்யத் தவறிய அரசாங்கத்தின் தோல்வியையும் அம்பலப்படுத்தியுள்ளது. கல்வி பெருமளவில் தனியார்மயமாக்கப்பட்டும்,  கண்ணியமான வேலைக்கான வாய்ப்புகள் குறைந்தும் வரும் வேளையில், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகள், தேர்வு முடிவு சர்ச்சைகள், நிர்வாகக் குறைபாடுகள் ஆகியவை இளைஞர்களிடையே ஆழ்ந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளன. தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சகப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், என்டிஏ (தேசிய தேர்வு முகமை) அமைப்பைக் கலைக்க வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அவை கோருகிறது. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை இனிமேலும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. 

3. எஸ்ஐஆர் & அரசியலமைப்பு ரீதியான வாக்குரிமை அரிக்கப்படுவது

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறை குறித்து சிபிஐ(எம்எல்) இன் ஆழ்ந்த கவலையை மத்திய கமிட்டி மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த நடைமுறையானது வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலான உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது: குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், தலித்துகள், பெருமளவிலான முஸ்லிம்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டுள்ளது. ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்திக்கு மத்தியில் தனது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக நிறுவனங்களையும், தேர்தல் நடைமுறைகளையும் கையாளுவதையே பாஜக பெருமளவில் நம்பியிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக 'எஸ்ஐஆர்' மூலம் வாக்காளர் பட்டியல்களில் திட்டமிட்ட வகையில் முறைகேடு செய்யும் இந்த முறையானது முதலில் பீகாரிலும், இப்போது மூர்க்கத்தனமாக மேற்கு வங்கத்திலும் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதற்காக 'தர்க்கரீதியான முரண்பாடு' என்ற ஒரு புதிய வகைப்பாடு கண்டுபிடிக்கப்பட்ட விதம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உண்மையிலேயே முன்னுதாரணமற்ற ஒன்றாகும். உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இந்த 'எஸ்ஐஆர்' நடைமுறையை உறுதி செய்திருப்பது, கோடிக்கணக்கான இந்தியர்களின் அரசியலமைப்பு ரீதியான வாக்குரிமை அரிக்கப்படுவது குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

4. ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் ராணுவ ஆக்கிரமிப்பை மத்திய கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் போராடி வரும் ஈரானுக்கும் அதன் மக்களுக்கும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் போரின் விளைவாக ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பது,  பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமின்றி, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது: இது இந்தியாவைப் போன்ற நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பிற்கான விலையை இந்திய மக்களும் அதன் உழைக்கும் வர்க்கமுமே கொடுத்து வருகின்றனர். பாலஸ்தீனத்திற்கான இந்தியாவின் நீண்டகால ஆதரவு, ஈரானுடனான நமது வரலாற்று ரீதியான உறவு ஆகியவற்றுக்கு துரோகமிழைத்து அமெரிக்க-இஸ்ரேலின் போர்த்தந்திர நலன்களுடன் மீண்டும் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்ளும் மோடி அரசாங்கத்தின் அடிபணிந்து போகும் வெளியுறவுக் கொள்கை குறித்து இந்த அவை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஈரானின் இறையாளுமை மதிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச நீதி, நாடுகளின் இறையாளுமைக்கான மரியாதை,  இந்திய மக்களின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் இந்த அவை கோருகிறது.

5. இந்தியாவில் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அதிகரித்து வரும் பணவீக்கம், அதிகரித்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுடன் இந்திய மக்கள் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி சமீபத்தில் விடுத்துள்ள அழைப்பு ஆகியவற்றால் குறிக்கப்படும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து மத்தியக் கமிட்டி கடுமையான கவலையை வெளிப்படுத்துகிறது. ஈரானுக்கு எதிரான போரின் காரணமாக எண்ணெய் எரிவாயு விநியோகம் குறைந்ததைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பானது, கார்ப்பரேட் சார்பு, மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகள், பொறுப்பற்ற தனியார்மயமாக்கல், குறைந்து வரும் பொது முதலீடு ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள கட்டமைப்பு பலவீனங்களை மறைப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த நெருக்கடியின் சுமையானது விலைவாசி உயர்வு, பொதுச் செலவினக் குறைப்பு ஆகியவற்றின் மூலம் சாமானிய குடிமக்கள் மீது சுமத்தப்படுகிறது. கார்ப்பரேட்டுகளால் இயக்கப்படும் இந்தக் கொள்கைகளை முழுமையாக மாற்றியமைக்கவும்,  வலுவான பொது முதலீட்டை மேற்கொள்ளவும்,  வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தொழிலாளர்கள், விவசாயிகள், இந்திய பொதுமக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சிபிஐ(எம்எல்) கோருகிறது.

6. தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி

மனேசர், குருகிராம், நொய்டா மற்றும் பிற தொழில்துறை மையங்களில் உள்ள தொழிலாளர்கள், ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்க உரிமைகள் அழிக்கப்படுவதற்கும், கடுமையான சுரண்டல்களுக்கும் எதிராக மேற்கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிக்கு மத்தியக் கமிட்டி தனது தளராத ஆதரவை வெளிப்படுத்துகிறது. குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற வேலைச் சூழல், தொழிலாளர் உரிமைகள் மறுப்பு, அதிகரித்து வரும் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இந்தத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்

தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கம், ஆழமடைந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியையும் தொழிலாளர்களின் வருவாய்க்கும் கண்ணியமான வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும் இடையே உள்ள விரிவடைந்து வரும் இடைவெளியையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நீண்ட வேலை நேரம், கடுமையான விரிவடைந்து வரும் பணி சூழ்நிலைகள் இருந்தபோதிலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூட போதுமானதாக இல்லாத மிகக் குறைந்த ஊதியத்திலேயே தொடர்ந்து உயிர் பிழைத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு எதிராக ஏவப்பட்ட கைதுகள், அச்சுறுத்தல்கள், தடியடிகள், பொய்யான குற்றவியல் வழக்குகள், இதர ஒடுக்குமுறைகளை இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது. மனேசரில் 17 தொழிலாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து கமிட்டி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. ஏஐசிசிடியுவுடன் இதர தொழிற்சங்கங்களின் தலையீடு, சட்டப்பூர்வ முயற்சிகளைத் தொடர்ந்து நான்கு தொழிலாளர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொழிலாளர்கள் இன்னும் சிறையிலேயே உள்ளனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்களும் பல மாநிலங்களில் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது போடப்பட்ட அனைத்து புனையப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், தொழிலாளர்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவது அச்சுறுத்துவது, குற்றமயமாக்குவதை காவல்துறை நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

மேலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதத்திற்கு ரூ. 42,000-க்கு குறையாத சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியமானது வழக்கமான ஊதிய உயர்வுகளுடன் வழங்கப்பட வேண்டும் என்றும், தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். வாராந்திர விடுமுறையுடன் கூடிய 8 மணி நேர வேலை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், ஒடுக்குமுறைகளை நிறுத்த வேண்டும் எனக் கோருமாறும்,  தொழிலாளர் இயக்கத்துக்கு செயலூக்கமான ஆதரவை அளிக்குமாறும், அனைத்து ஜனநாயக அமைப்புகள்,  தொழிற்சங்கங்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள், குடிமக்களுக்கு மத்திய கமிட்டி அழைப்பு விடுக்கிறது.

7.மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் நிறுவனமயமாக்கப்படுவது

விலக்கி வைக்கும் சட்டங்கள், குறி வைக்கப்பட்ட அரசு நடவடிக்கைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள், பொருளாதாரப் புறக்கணிப்புகள், கட்டிடங்களை இடிக்கும் போக்குகள், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் வன்முறைகள், பாரபட்சமான நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் நிறுவனமயமாக்கப்பட்டு வருவது குறித்து மத்திய கமிட்டி தனது கடும் கவலையை வெளிப்படுத்துகிறது. இது மக்கள் தொகையின் ஒரு பகுதியினரை இரண்டாம் தரக் குடிமக்களாகக் குறைக்கும் ஒரு நிறவெறி ஒழுங்கை உருவாக்குகிறது. மதச்சார்பின்மை, சமத்துவம், சமக்குடியுரிமை ஆகிய அரசியலமைப்புக் கோட்பாடுகளைச் சீர்குலைக்கும், ஜனநாயக உரிமைகளுக்கு, சமூக இணக்கத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதோடு, சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்தும் இத்தகைய பெரும்பான்மைவாதக் கொள்கைகள் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்.

8. அரசு நிறுவனங்களின் சுதந்திரமும் நடுநிலைமையும் அரித்துப்போவது

இந்திய அரசின் கேந்திர முக்கியத்துவம் பெற்ற நிறுவனங்களான நீதித்துறை, அதிகார வர்க்கம், காவல்துறை. பாதுகாப்புப் படைகள், அமலாக்கத்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை போன்ற மத்திய முகமைகளின் சுதந்திரமும் நடுநிலைமையும் நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவது குறித்து மத்திய கமிட்டி தனது கடுமையான கவலையை வெளிப்படுத்துகிறது. சங்கப் பரிவாரம் மற்றும் பெருமுதலாளிகளின் மதவாத-கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரல் வரிசையில் இந்த நிறுவனங்கள் அதிகரித்த அளவில் தங்களை இணைத்துக் கொள்வதானது அரசியலமைப்பு வழியிலான ஆட்சி முறை, ஜனநாயக உரிமைகள்,  சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை முற்றிலும் பலவீனப்படுத்துகிறது.

9. நடந்து கொண்டிருக்கும் புல்டோசர் ஆட்சிக்கு எதிராக வெகுமக்கள் எதிர்ப்பைக் கட்டுவோம்

மோடி அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் 'புல்டோசர் ஆட்சி' மாதிரிக்கு எதிராக ஜனரஞ்சகமான போராட்டங்களை முன்னெடுக்குமாறு பரந்த மக்களுக்கு மத்தியக் கமிட்டி அழைப்பு விடுக்கிறது. இந்தியா முழுவதும் வீடுகளை இடிப்பதற்கும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுவதற்கும் புல்டோசர்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதானது ஏழைகள், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம், வீட்டுக்கான உரிமை, கண்ணியத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பல பத்தாண்டுகளாகப் பயணிகளுக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கி வந்த தெருவோர வியாபாரிகளை இலக்காகக் கொண்டு சமீப காலத்தில் நடத்தப்படும் பெருமளவிலான வெளியேற்ற நடவடிக்கைகள், நாடு முழுவதும் காணப்படும் பரந்த போக்கின் ஒரு பகுதியாகும். அஸ்ஸாம் தேர்தலில் இஸ்லாமிய அச்சத்துடன் கூடிய புல்டோசர் இடிப்புகளைப் பயன்படுத்தியே பாஜக களம் கண்டது. பீகாரிலும் கூட தர்பங்கா, பாட்னா, சமஸ்திபூர் மற்றும் இதர இடங்களில் புல்டோசர் இடிப்புகளால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். டெல்லியில் எவ்வித மறுவாழ்வு ஏற்பாடுகளும் இன்றி குடிசைவாசிகளை வெளியேற்றுவது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. இதுபோன்ற வெளியேற்ற நடவடிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே அறிவிப்பு வழங்குதல், வெளியேற்றத்திற்கு முன் மறுவாழ்வு அளித்தல் போன்ற நிலை நிறுத்தப்பட்ட சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை முற்றிலும் மீறியே எப்போதும் மேற்கொள்ளப்படுகின்றன.

புல்டோசர் ஆட்சி என்பது வீடுகள் மீதான வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அது சட்டத்தின் ஆட்சியை அரித்துப் போகச் செய்வதுமாகும். பல சந்தர்ப்பங்களில், புல்டோசரால் பாதிக்கப்படும் குடிசைவாசிகளிடையே பிரிவினையை உண்டு பண்ண இடிப்புகளுடன் மதவாதக் கதையாடல்களும் இணைந்து கொள்கின்றன.

மேற்கு வங்கம் முதல் பீகார், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் புல்டோசர் ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் தீரமிக்க மக்கள் எதிர்ப்புகளையும் இந்த அவை பதிவு செய்கிறது. கட்டாய இடிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், வெளியேற்றத்திற்கு முன் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்றும், வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,  அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

10. பாஜகவின் பழிவாங்கும் அரசியலும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசு நிறுவனங்களைத் தவறாக பயன்படுத்துவதும் 

எதிர்க்கட்சித் தலைவர்கள், கட்சிகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து நடத்தி வரும் பழிவாங்கும் அரசியலை, அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை மத்தியக் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. கேரள மேனாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையும், அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அரசியல் எதிரிகளை வாய் திறக்காமல் செய்வதை நோக்கமாகக் கொண்ட அச்சுறுத்தலின் ஆபத்தான போக்கைப் பிரதிபலிக்கின்றன. மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஆளும் அரசு விசாரணை முகமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, ஜனநாயகரீதியிலான எதிர்ப்பைப் பலவீனப்படுத்த அரசியல் பகைமைச் சூழலை ஊக்குவிக்கிறது. அரசு நிறுவனங்களை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், தன்னாட்சி பெற்ற நியமன முறைகள், நிர்வாக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் சிபிஐ(எம்எல்) கோருகிறது. இதன் மூலம், அதிகாரத்திற்கு நெருக்கமானவர்களும், ஊழலில் ஈடுபட்டவர்களும், குற்றங்களில் ஈடுபட்டவர்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

11. எஃப்சிஐ சிலோ ஒப்பந்தங்களை அதானி கைப்பற்றுவதும், உணவு பாதுகாப்பின் மீதான தாக்குதலும்

அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், லீப் இந்தியா ஃபுட் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) தானியக் கிடங்கு (சிலோ) ஒப்பந்தங்களை வழங்குவதற்காக, 'ஏகபோக எதிர்ப்பு' விதி நீக்கப்பட்டதை மத்தியக் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் எந்தவொரு தனி நிறுவனமும் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்காக, இந்திய உணவுக் கழகம் முதலில் ஓர் ஏகபோக எதிர்ப்பு விதியை முன்மொழிந்திருந்தது. இருப்பினும், நிதி ஆயோக்கும், பொருளாதார விவகாரங்களுக்கான துறையும் 2022 இல் இந்த விதியை நீக்குமாறு கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நடந்த ஏலத்தின் விளைவாக இந்த இரு நிறுவனங்களும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பான ₹20,000 கோடியில் சுமார் ₹16,500 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைக் கைப்பற்றியுள்ளன. இத்திட்டத்தின் மொத்த சேமிப்புத் திறனான 60 லட்சம் மெட்ரிக் டன்னில் 46.5 லட்சம் மெட்ரிக் டன்னை இந்த இரு நிறுவனங்களே தற்போது கட்டுப்படுத்துகின்றன. இது மொத்த திட்டமிடப்பட்ட திறனில் 77.5% ஆகும். 

விவசாயிகளுக்கு லாபகரமான விலையை ஆதரிப்பதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பு, விலை நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், உணவு தானியங்களைக் கொள்முதல் செய்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல் ஆகியவற்றுக்காக 1964 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட உணவுக் கழகச் சட்டத்தின் கீழ் ஜனவரி 1, 1965 இல் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) நிறுவப்பட்டது. இந்திய உணவுக்  கழகத்தின் தானியச் சேமிப்பு உள்கட்டமைப்பை இவ்வாறு பின்வாசல் வழியாகத் தனியார்மயமாக்குவதும்,  ஏகபோகமாக்குவதும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, இறையாளுமையின் மீதான நேரடித் தாக்குதலாகும். மேலும் இது 1964 ஆம் ஆண்டின் உணவுக் கழகச் சட்டத்தின் மூலம் எட்டப்பட்ட நோக்கங்களையும் ஆதாயங்களையும் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது.


22 June, 2026