தவெக அரசு பதவி ஏற்று 110 நாள்களைத் தாண்டி விட்டது. முதல்வர் விஜய் விதி 110-ன் கீழ் மும்முரமாக அறிவிப்புகளைச் செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை (புதிய) தமிழ் தாண்டவமாடுகிறது! சாமானியரும் சட்டமன்றத்திற்கு, நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் நோக்கம். ஆளுங்கட்சியில் பெரும்பாலானோர் புதியவர்கள். தப்பில்லை. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும்; பின்னால் இருக்கும் எங்களால் முதல்வர் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க எல்சிடி ஸ்கிரீன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அபத்தமாக பேசுகிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஓரிங் கண்டுபிடித்த!? மதுரை சின்னப்பிள்ளை வீட்டிற்கு வந்து அவரிடம் வாழ்த்துப் பெற்றார் என்றும், இல்லாத ஒரு டயர் கம்பெனி சுற்றுச் சூழலைப் பாதிப்பதால் இழுத்து மூட வேண்டும் என்று ஒருவரும், அதை மூட மாட்டோம் முறைப்படுத்துவோம் என்று தொழிலமைச்சரும் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் யாரோ எழுதிக் கொடுத்ததை கூச்சமே இல்லாமல் பேசுகிறார்கள். சட்டப்பேரவைக்கு வரும் சாமான்யர்கள், என்ன பேசுகிறார்கள் யாருக்காக பேசுகிறார்கள் என்பதே முக்கியம்.
தவெகவினர் அத்தனைபேரும் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, தங்கள் தலைவரின் புகழ் பாடுவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். “மாற்றம்” பற்றி பேசும் தவெக தலைவர்கள் மாற்றமின்றி ‘கடந்த கால ஆட்சிகளின் பாதையே எங்கள் பாதையும்’ என்று படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமின்றி, தவெக அமைச்சர்களே தங்கள் இஷ்டத்திற்கு தவறான, பொய்யான செய்திகளைச் சொல்வது மட்டுமின்றி, கேட்கப்படும் கேள்விகளுக்குத் தொடர்பில்லாத விசயங்களைப் பேசுகிறார்கள். ‘கரூர் கம்பெனி’, ‘கச்சத் தீவை திமுக தாரை வார்த்தது’, ‘காமராஜருக்கு மெரினாவில் இடம் கொடுக்க திமுக மறுத்துவிட்டது’ என்று சம்பந்தமில்லாத விசயத்தை இடைச் செருகல் செய்து, எதிர்க்கட்சிகளைச் சீண்டி விடுகிறார்கள். இது, சட்டமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் திசை திருப்பும் முயற்சி. கொள்கை விளக்கக் குறிப்புகளை முழுவதுமாகப் படித்து எதிர்க்கேள்விகள் எழுப்ப முடியாதபடி, தாமதமாக வழங்கப்படுகிறது. அரசின் கொள்கை விளக்கக் குறிப்புகள் கிடைப்பது தாமதமாகிறது என்ற மேனாள் முதல்வர் பழனிச்சாமியும் மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், சுட்டிக்காட்டிய பிறகும், குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக கொடுத்தால்தான் உறுப்பினர்கள் புரிந்துகொள்ள முடியும்..!” என்று சபாநாயகர் சொன்ன பிறகும் தவறுகள் தொடர்கின்றன. தவறுகளை திருத்திக் கொள்வதற்கு மாறாக, ‘மக்கள் எங்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்’ என்கிற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர்.
இந்த மூன்று மாத காலத்தில், ‘கார்ப்பரேட் நலனே தவெக நலன்’ என்கிற இலக்கில் மட்டும் அரசு தெளிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர், டாஸ்மாக் தொழிலாளர் ஊதியத்தை கொஞ்சம் உயர்த்திக் கேட்டால், கஜானா காலியாக உள்ளது என்று சொல்லும் திரு. விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாருக்கும் இலவசமாக கார் வழங்கவும், அதற்கான மாதச் செலவுக்கு ரூ.75,000ம் உதவியாளருக்கு மாதச் சம்பளம் ரூ.25,000ம் வழங்கத் தயாராக இருக்கிறார். ரூ.10 கோடி செலவில் முதல்வருக்கு புதிய அறை கட்டப்பட்டுள்ளது. கடை மடைக்கு தண்ணீர் போகாத மேட்டூர் அணையை முதல்வர் போய்த் திறப்பதற்கு மக்கள் பணம் ரூ. 5 கோடி காலி செய்யப்பட்டுள்ளது!? ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போகிறார்களாம். தாய் மாமன் மோதிரம் திட்டத்திற்கு ரூ.750 கோடியாம். இதற்கெல்லாம் கஜானாவில் காசு இருக்கிறது. ‘நீங்கள் தூய்மை தேவதைகள்’ என்று சொல்லும் அமைச்சர்கள், பணி நிரந்தரமில்லாமல் தேவதைகள் ஏன் தெருவில் நிற்க வேண்டுமென்ற ஜோதியின் கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள். முந்தைய அரசுகள், ஒட்டுமொத்தமாக தனியார்மயம் ஆக்கிவிட்டதால் உடனடியாக அதை எங்களால் மாற்ற முடியாது என்று முந்தைய அரசு மீது பழி போட்டு தப்பிக்கப் பார்க்கிறார் அமைச்சர் ஆதவ். அர்ஜுனாவின் இலக்கு தெளிவாக தெரிகிறது.
எல்லாவற்றிற்கும் முந்தைய அரசைக் காரணம் சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள், பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலத்தை முந்தைய அரசு கையகப்படுத்தியதால் அதை நாங்கள் விவசாயிகளிடமே திருப்பித் தந்து விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று சொல்லத் தயாராக இல்லை. மாறாக, விவசாயிகளைப் பாதிக்காத வேறு திட்டத்திற்குப் பயன்படுத்துவோம் என்கிறார் தொழிலமைச்சர். தாய் மாமன் தங்க மோதிரம், அண்ணனின் சீர் போன்ற பெண்ணடிமை பிற்போக்குத் திட்டங்களைச் செயல்படுத்த ‘பெரியாரை கொள்கைத் தலைவராக’ கொண்ட(!?) தவெக அரசு பெருமுயற்சி செய்கிறது. இதன் பின்னாலும் கார்ப்பரேட்டுகள் நலன் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை பிறந்த குழந்தைகளுக்கு 1,28,499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒரு கிராம் மோதிரத்திற்கு தங்கம் தவிர்த்து, செய் கூலி, சேதாரம், காப்பீடு எல்லாம் சேர்த்து வெறும் ஒரு ரூபாயில் செய்து தருவதாகச் சொல்லியுள்ள ஜாய் அலுகாஸ் நிறுவனத்திற்கு 70%மும் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு 30%மும் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொள்ளையடிக்க ரூ.750 கோடி மக்கள் வரிப் பணம் போகப் போகிறது.
சென்னை மாநகரப் பேருந்துகளில் தொழிலாளரை வேலைக்கமர்த்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. நிச்சயமாக உ.பி. நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்காது, தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் பணியமர்த்தும். பெண்களும் குழந்தைகளும்தான், தான் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்று சொல்லும் விஜய், அவர்கள் நலனுக்காக, குறிப்பாக குழந்தைகள் நலனுக்காக எதையும் மானியக் கோரிக்கையில் அறிவிக்கவில்லை. ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள், மூன்றாகக் குறைக்கப்பட்டு, அதுவும் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று ஆக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகள் சுரண்டுவதற்கு, ஒப்பந்தகாலம் முடிந்துவிட்ட பிறகும் சத்தமே இல்லாமல் ஒப்பந்த காலத்தை நீடித்துள்ளது விஜய் அரசு.
திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று பெருமையாக அறிவித்துள்ள விஜய், தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது, நீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர், இளைஞர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் சேர்த்து அறிவித்திருக்கலாமே? நூறு நாள்களில் மக்களுக்கு எங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்கும் தவெக அரசு, கார்ப்பரேட்கள் நலனுக்கான திட்டங்களை அமுலாக்குவதையும் உரிமைக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதிலும் முனைப்புடன் இருக்கிறது. மொத்தத்தில் இந்த வெற்றுப் பேச்சு வீரர்கள், ஆரியக் கூத்தாடினாலும் அவர்கள் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள்.
