ரீல்ஸ் போட்டு ஓட்டுகள் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னாலும்கூட வாக்களித்த மக்கள் என்னவோ ரியல் (உண்மையான) மாற்றம் வரவேண்டும் என்றும் எதிர்பார்த்துதான் வாக்களித்துள்ளார்கள். மாற்றம், கோட் சூட்டில் இருந்து துவங்கிவிட்டது. என் தாயை, தமிழை, தமிழர் அடையாளமான வேட்டி, சட்டையை மற்றவர்களுக்காகவெல்லாம் நான் மாற்ற முடியாது என்று ரீலில் (திரைப்படத்தில்) சொன்ன திரு.விஜய், ரியலில் தமிழ்நாட்டின் முதல்வராகவே பதவியேற்கும் போது (தமிழ்) தாயை மறந்து கோட் சூட்டில் பதவியேற்றார். திரு. விஜய் வேட்டி, சட்டை அணியாதவரே அல்ல. இது ஏதோ உடை தொடர்பானது, உணர்வு தொடர்பானது மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு அடையாள அரசியல் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (சிஇஓ) உடுத்தும் உடை அது. அடுத்து, அனைத்து தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளிலும் ஆரம்பத்தில் பாடப்பட்டு வந்த தமிழ்தாய் வாழ்த்து திரு. விஜய் முதல்வராகப் பதவியேற்கும் போது மூன்றாம் இடத்திற்குப் போய்விட்டது. சிறுப்பான்மையினரை, குறிப்பாக இஸ்லாமியரை ஒழித்துக்கட்டச் சொல்லும் வந்தேமாதரம் பாடல் (ஒன்றிய அரசு வழிகாட்டுதல் படி) முதலிடம் பிடித்தது. ஆனால், அந்தப் பாடல் உருவான மேற்கு வங்கத்தில் பாஜக அரசு முதன்முதலாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடப்படவேயில்லை. திரு. விஜய் பதவியேற்ற அன்றே, சைபர் கிரைம் போலீஸால், விஜய் அரசைப் பற்றி விமர்சித்து பேசியதாக சில வலைத் தள முகவரிகள் முடக்கப்பட்டு தடை செய்யப்பட்டன. வலைத் தளத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தபின்னர், அந்த வலைத் தளங்களை தமக்கு எதிராகப் பயன்படுத்திடக் கூடாது என்கிற அச்சமா?. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் சைபர் கிரைமின் இந்த உத்தரவிற்கு தடை விதித்துவிட்டது. மாணவர்களை அரசியல்படுத்தி ஆட்சியைப் பிடித்த திமுக, பின்னர் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலைக் கூட நடத்துவதற்கு முயற்சி எடுக்கவில்லை. அதுபோல தவெகவும் அத் தடத்தைப் பின்பற்றுகிறதோ?! பெரியார் நினைவிடம் சென்று காலில் செருப்பின்றி, கைகூப்பி வணங்கிவிட்டு வந்த, அதே வேகத்தில், பகுத்தறிவுக்கு முரணாக, தன்னுடைய ஆஸ்தான ஜோசியரை, தனக்கான அரசியல் ஆலோசகராக அரசுப் பணியில் நியமித்தார் விஜய். இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தவுடன் மறுநாளே அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றார். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின், சமூக நீதிக்கும் சாதியாதிக்கத்திற்கும் அடிப்படையான சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னதற்கு, திமுக சனாதனத்தை எதிர்த்ததால்தான் தோல்வியுற்றது என்று (சனாதனத்தை உயர்த்திப் பிடித்த பாஜக 27 தொகுதிகளில் 1ல் தான் வெற்றி பெற்றோம் என்பதை வசதியாக மறந்து(மறைத்து)விட்டு கூச்சல் போட்டவுடன், நாங்கள் இந்துக்கள் உட்பட எல்லா மதத்தினருக்குமானவர்கள் என்று சொல்லும் தவெக தலைவர்கள், இந்து சமய நடைமுறைக்கும் சனாதனத்திற்கும் சம்மந்தம் கிடையாது என்று ஓங்கிச் சொல்லத் தயங்குவது ஏனோ? இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும்போது, மத்திய அரசுக்கு மானே, தேனே என்று கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று சொன்ன விஜய், அடுத்து நம்ம ஆட்சிதான், களத்தில் இறங்குவோம் என்று சொன்ன விஜய், இப்போது 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், களத்தில் இறங்காமல் இவரும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒரு விவசாயியை அழைத்து தனது தேர்தல் அறிக்கையைத் தந்த விஜய், இப்போது பருத்தி விவசாயின் வயிற்றில் அடித்து, நூற்பாலை முதலாளிகள் லாபம் ஈட்ட வெளிநாட்டு பருத்திக்கான இறக்குமதி வரி 11 சதவீதத்தை குறைக்கச் சொல்லி மோடிக்கு கடிதம் எழுதுகிறார். விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் பரந்தூருக்கு முதல் பயணம் சென்றார். அந்த விவசாயிகளுடன், அந்த மக்களுடன் நான் நிற்பேன் என்றார். இப்போது, பரந்தூர் விமான நிலைய பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். பதவியேற்று ஏழு நாள்களுக்குப் பின்புதான் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திரு. கே.ஏ.செங்கோட்டயன் தவிர, விஜய் உட்பட அனைவரும் அரசாங்க நிர்வாக நடைமுறைக்குப் புதியவர்கள். நிதி நிலை பற்றி வெள்ளையறிக்கை வெளியிடுவேன், கஜானா காலி, 10 லட்சம் கோடி கடன் என்று பதவியேற்கும் போதே பேசிவிட்டார் விஜய். 717 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லிவிட்டது தவெக அரசு. மக்கள் நலன் காக்க அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளையும் மூடு! பணக்கார்களுக்கான மன மகிழ் மன்றங்களையும் மூடு! 23 ஆண்டுகளாகப் பணிபுரியும் 23,000 டாஸ்மாக் பணியார்களை தவெக தேர்தல் வாக்குறுதிப்படி பிற அரசு துறைகளில் நிரந்தரப் பணியில் அமர்த்து என்று தவெக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். மதுரை திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதுதானே வந்திருக்கிறோம் கால அவகாசம் வேண்டும் என்று சொல்லிவிட்டு, நாங்கள் உடனே அதைச் செய்துள்ளோம், இதைச் செய்துவிட்டோம் என்று விளம்பர அரசு நடத்தாமல், அக்கறையோடு, வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை நிறைவேற்ற தவெக அரசு முன் வருமா? மக்கள் எதிர்பார்த்த மாற்றம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
