மேற்கு வங்காளத்தில் பாஜக இறுதியில் ஆட்சியை கைப்பற்றியது சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனநாயகத் தேர்தல் மூலம் அல்ல; மாறாக, முழு தேர்தல் செயல்முறையையும் திட்டமிட்டு, முறையாகச் சீர்குலைத்ததன் மூலமாகவே அது நடந்தது. தேர்தல் ஆணையம் ஆளும் ஆட்சியின் கீழ்ப்படிதலான கருவியாக மாற்றப்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரான முன்னெப்போதும் இல்லாத தாக்குதலுக்கு துணைநின்றது.
நான்கு மாதங்கள் நீடித்த “Special Intensive Revision” (SIR) நடவடிக்கையின் முடிவில் சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கச் செய்யப்பட்டனர். இதேவேளை, 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். அது ஒரு பாராளுமன்ற ஜனநாயகத் தேர்தலைவிட ராணுவ ஆக்கிரமிப்பை நினைவூட்டும் சூழலை உருவாக்கியது. குண்டு தாங்கும் போர்வாகனங்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் அணிவகுத்துச் சென்றன. பிரதான ஊடகங்களின் பெரும்பகுதி இந்த அதிகாரவாத ஆக்கிரமிப்புக்கு மக்களின் ஒப்புதலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் மிரட்டல், வெளிப்படைத்தன்மையை திட்டமிட்டு சீர்குலைத்தல் போன்ற நிகழ்வுகள் தேர்தல் முறையே பாஜகவுக்குச் சாதகமாக மாற்றியமைக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தின. இவை அனைத்தும் மம்தா பானர்ஜி ஆட்சிக்கெதிரான உண்மையான அதிருப்தி நிலவிய சூழலில் நடந்தன; அந்த அதிருப்தியை பாஜக தந்திரமாகப் பயன்படுத்தி தனது அதிகாரவாத திட்டத்தை திணித்தது.
ஆட்சியைப் பிடித்தவுடன், பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி திரிபுரா மாதிரியைப் பின்பற்றி அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்க அரசியலை ஒருங்கிணைந்த முறையில் தொடங்கியது. லெனின் மற்றும் சிதோ-கான்ஹு (பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு, ஜமீன்தாரி முறைக்கு எதிராக போராடிய புகழ்வாய்ந்த பழங்குடியின தலைவர்கள்) சிலைகள் சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக “புல்டோசர் பேரணிகள்” நடத்தப்பட்டன; முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்கள் இடிக்கப்பட்டன; ஏழைகள் வாழும் குடிசைப்பகுதிகள் குறிவைக்கப்பட்டன. பயமும் துன்புறுத்தலும் நிரம்பிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இந்த வெளிப்படையான அடக்குமுறையுடன் தீவிர சிந்தனைத் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டது. வங்காள மறுமலர்ச்சியின் மகத்தான ஆளுமைகள் — சுவாமி விவேகானந்தர், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், ரவீந்திரநாத் தாகூர், ராஜா ராம்மோகன் ராய் உள்ளிட்டோரின் — உலகமயமான, மனிதநேய, மதச்சார்பின்மை மரபுகளைப் பறித்து, அவற்றை குறுகிய பெரும்பான்மைவாதக் கட்டமைப்புக்குள் அடக்க முயன்றது சங்க் பரிவார். அதேவேளை, வங்காளப் பிரிவினையின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவரும் 1951ல் ஜனசங்கத்தை நிறுவியவருமான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் சமுதாயப் பிளவைத் தூண்டும் அரசியலை வெளிப்படையாகப் புகழ்ந்து, மத அடிப்படையிலான பிளவை நியாயப்படுத்தியது.
இந்த தீவிரமடைந்த ஃபாசிசத் தாக்குதலின் மத்தியில், வங்காளத்தின் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் சரணடையாமல் எதிர்த்து நிற்கத் தீர்மானித்தன. மிரட்டல்கள், வன்முறைகள், சேதப்படுத்தல்கள் ஆகியவற்றைக் கடந்து, CPI(ML) லிபரேஷன் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு, அனைத்து இடதுசாரி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் மனசாட்சியுள்ள குடிமக்களை ஒன்றிணைந்து எதிர்ப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தது.
அந்த அழைப்பை ஏற்று, மே 7ஆம் தேதி கொல்கத்தாவிலும் பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கொல்கத்தாவில் CPI(ML) லிபரேஷன், SUCI(C) மற்றும் பல ஜனநாயக சமூக செயற்பாட்டாளர்கள் தர்மதலாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லெனின் சிலை முன்பு திரண்டனர். அந்தச் சிலையே காவி சக்திகளின் குறிவைக்கப்பட்ட சின்னமாக இருந்தது. அந்தக் கூட்டம் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் இடதுசாரி ஒற்றுமையின் வலுவான வெளிப்பாடாக மாறியது.
இந்தப் போராட்டக் கூட்டத்தில் தோழர் தீபங்கர் பட்டாசார்யா, SUCI(C) மாநிலச் செயலாளர் தோழர் சந்திதாஸ் பட்டாசார்யா, பத்திரிகையாளர் அர்கா பதூரி, கலாச்சார செயற்பாட்டாளர் ஜோய்ராஜ் பட்டாசார்யா, CPI(ML) ரெட் ஸ்டார் இயக்கத்தின் தோழர் சங்கர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். அவர்கள் வங்காளத்தின் அதிகாரவாத ஆக்கிரமிப்பைக் கண்டித்து, ஃபாசிசம் மற்றும் மதவெறிக்கு எதிரான பரந்த ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென அழைப்பு விடுத்தனர்.
அடுத்த நாள், அதாவது மே 8ஆம் தேதி, இடதுமுன்னணி கட்சிகளும் CPI(ML) அமைப்பும் இணைந்து மிகப்பெரிய பேரணியை நடத்தின. காவி வன்முறைக்கு எதிராகவும், புல்டோசர் படையினரால் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட ஏழை சிறுபான்மை வணிகர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மே 9ஆம் தேதி — காவி அரசு பதவியேற்ற நாளில் — இந்த இயக்கம் மேலும் வேகமடைந்தது. 1905ஆம் ஆண்டு லார்ட் கர்சன் வங்காளத்தை மத அடிப்படையில் பிரிக்க முயன்றபோது, அதற்கு எதிராக ரவீந்திரநாத் தாகூர் தலைமையில் நடைபெற்ற வரலாற்றுப் பேரணியை நினைவுகூரும் வகையில், பாக்பஜாரிலிருந்து நகோடா மசூதி வரை குடிமக்கள் பேரணி நடத்தப்பட்டது. அந்த வரலாற்று மரபை மீட்டெடுத்த இந்தப் பேரணி, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மத அடிப்படையிலான பிளவுக்கு எதிரான எதிர்ப்பை வலியுறுத்தியது. அந்நேரத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சிறுபான்மையினரை தொடர்ந்து குறிவைத்து, வங்காளத்தின் கலப்பு பண்பாட்டை சிதைக்க முயன்று கொண்டிருந்தன.
புதிய ஆட்சி, அதிகாரவாதத்தின் இயல்பான மொழியான அடக்குமுறையால் பதிலளித்தது. அந்தப் பேரணி பாக்பஜாரிலேயே காவல்துறையால் தடுக்கப்பட்டது. இருந்தாலும், பங்கேற்பாளர்கள் தளரவில்லை. எதிர்ப்புப் பாடல்கள் தெருக்களை நிரப்பின; பொதுக்கூட்ட உரைகள் தைரியமாகத் தொடர்ந்தன; அரசின் மிரட்டலுக்கு முன் எதிர்ப்பின் மனஉறுதி தலைகுனிய மறுத்தது.
இந்தப் போராட்டங்கள் வங்காள மக்களிடையே பரவலான எதிரொலியை ஏற்படுத்தின. ஃபாசிச அரசியலின் எழுச்சி ஏற்படுத்தும் ஆபத்தை உணர்ந்த மனசாட்சியுள்ள குடிமக்கள், கலாச்சார செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றன. பல மாவட்டத் தலைமையகங்களிலும் ஒற்றுமைப் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. இது மதவெறி சார்ந்த அதிகாரவாதத்துக்கும், நிறுவன ஆதரவு பெற்ற ஃபாசிசத்துக்கும் எதிரான போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.
இன்றைய வங்காளப் போராட்டம் வெறும் தேர்தல் போட்டி அல்ல. அது ஜனநாயகத்தை அதிகாரவாதத்திலிருந்து காப்பாற்றும் போராட்டம்; பல்வகைமைச் சமூகத்தை மதவெறியிலிருந்து பாதுகாக்கும் போராட்டம்; வங்காளத்தின் விடுதலை மரபுகளை எதிர்வினை சக்திகளின் சுயநல அரசியலிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டம். வங்காளத்தின் தெருக்களில் எழுந்துள்ள இந்த எதிர்ப்பு, அந்த மாநிலத்தின் நீண்டகால காலனித்துவ எதிர்ப்பு வரலாறு, சமூகச் சீர்திருத்தப் பாரம்பரியம் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் சக்தியிலிருந்து ஊக்கம் பெறும் பரந்த ஜனநாயக எதிர்ப்புப் போராட்டத்தின் தொடக்கமாகும்.
