சென்னையில் 2026 ஆகஸ்ட் 20 முதல் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தைத் துவங்கினார்கள். முதல் 2 நாள்கள் தூய்மைப் பணியாளர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்து மாலை அனுப்பியது.
3-வது நாள் போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் கலைந்து செல்லாமல், பேச்சுவார்த்தை நடத்த கோரி சென்னை கண்ணப்பன் திடலில் அமர்ந்து இரவும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெண்கள் இரவு வெளியே தங்குவது பிரச்சினையாகிவிடும் என்பதால், ‘நாளை 23.08.2026 அன்று மாநகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம்’ என அரசு தரப்பில் 4-வது மண்டல அலுவலர் திரு.ராஜ்குமார் இரவு 10.00 மணியளவில் நேரில் வந்து வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் இரவு வீடுகளுக்குச் சென்றனர். மறுநாள் 23.08.2026 அன்று சென்னை மாநகராட்சியில் உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் பாரதி தலைமையிலான போராட்டக் குழுவிற்கும், மாநகராட்சி ஆணையர் சமீரன் இ.ஆ.ப அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற 1½ மணி நேர பேச்சுவார்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 4-வது நாளான அன்று 4-வது மண்டல அலுவலகத்தினுள் அமர்ந்து தோழர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து திருமங்கலம் பெரியார் சமுதாயக்கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் இரவு விடுவித்தனர். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், போராட்டத்தின் 5-ஆம் நாளான 24.08.2026 அன்று தூய்மைப் பணியாளர்கள் சென்னை குறளகத்திலிருந்து கோட்டை நோக்கி முதல்வரைச் சந்திக்கச் சென்றார்கள். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து, ஏழு கிணறு (ம) மூலக்கடை சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், அரசு தொழிலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் கலைந்து செல்ல மாட்டோம் என உறுதியாக நின்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. தொழிலாளர் தரப்பில் தோழர் பாரதி உள்பட 13 பேரும், அரசு தரப்பில் அமைச்சர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அவர்களும் கலந்து கொண்டனர். அமைச்சர் ராஜ்மோகன் தொழிலாளர் கோரிக்கை தொடர்பாக, முதலமைச்சரிடம் கலந்து பேசி நல்ல பதில் அளிப்பதாகத் தெரிவித்தார். தொழிற்சங்கத் தரப்பில் நல்ல பதில் வரும் வரை அறவழியில் எமது போராட்டம் சென்னை மாநகராட்சி முன்பு தொடரும் எனத் தெரிவித்தோம். அன்று இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்த தோழர்கள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்கள். 6-வது நாளில் அமைச்சரிடம் தெரிவித்தபடி, அறவழியில் சென்னை மாநகராட்சி முன்பு கூடிய தோழர்களை காவல்துறையினர் பேச்சுவார்தையில் ஒப்புக் கொண்டதற்கு மாறாக, மாநகராட்சி வாயிலில் உள்ள இரும்புக் கதவை மூடி மாநகராட்சிக்குள் செல்வதைத் தடுத்தனர். பெண் தூய்மைப் பணியாளர்கள் தடையை தகர்த்து இரும்புக்கேட்டைத் தாண்டி முன்னேறி மாநகராட்சியின் உள்வாயிலின் கேட்டையும் தாண்டி மாநகராட்சி அலுவலகத்தின் முகப்பிற்குச் சென்று அமர்ந்து விட்டார்கள். சென்னை மாநகராட்சி வளாகம் இதுவரை கண்டிராத வகையில் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். “மாநகராட்சி வளாகத்திற்குள் நம் போராடும் உரிமையினை வருங்காலத்திலும் உறுதி செய்தால் ஒழிய” இங்கிருந்து செல்ல மாட்டோம். முடிந்தால் கைது செய்து பாருங்கள், காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது’ என மாநிலத் தலைவர் பாரதி எச்சரித்தார். உடனே காவல்துறை காவலர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தியது. தூய்மைப் பணியாளர்களும் தோழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். மாநகராட்சியின் இரவு விளக்குகளை அணைத்து அச்சுறுத்திப் பார்த்தார்கள். தொழிலாளர்கள் அங்கிருந்து நகரவில்லை. அதன் பின்பு, மாநகராட்சி ஆணையர் தோழர் பாரதியையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, காணொளிக் காட்சிகளை பார்க்கும் போது, அச்சமூட்டுவதாக உள்ளதே என்றார். அதற்குக் காரணம், தொழிலாளர்களின் இந்த அறச்சீற்றத்திற்குக் காரணம், அமைதியாக வந்தவர்களை உள்ளே விடாமல் கேட்டை மூடி வைத்து தாங்களும் காவல்துறையினரும் தடையை ஏற்படுத்தியதே எனப் பதில் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பு இரவு நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தையில், சென்னை மாநகராட்சிக்குள் அறவழியில் போராடும் தூய்மைப் பணியாளர்களின் உரிமை உறுதி செய்யப்பட்டால் தான் கலைந்து செல்வோம் என்றும் இத்தனைக்கும் காரணம் மாநகராட்சி ஆணையர் சமீரனும், காவல்துறையினரின் அடாவடித்தனமும் தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. உடனே போராட்டக் களத்திற்கு அமைச்சரே நேரில் வந்து பேசுவதாக தோழர் பாரதியிடம் கூறினார்கள். ஆனால், அமைச்சர் வராமல் அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவர் லயோலா மணி அவர்கள் வந்தார், தோழர்களை தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து “மாநகராட்சிக்குள் போராடும் உரிமை பாதுகாக்கப்படும்” என உறுதி அளித்தார். முதல்வரைச் சந்திக்க புரோட்டகால் படி முயற்சி எடுக்கப்படும் என்றார். அதன்பின், அன்றைய போராட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்த நாள் சென்னை மாநகராட்சி வளாகத்திற்குள் இரும்புத் தடுப்புகளை வைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திட இடம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், ‘இவர்கள் மாநகராட்சி தொழிலாளர் அல்ல, ஒப்பந்தத் தொழிலாளர்’ என ஆணையர் சொல்லிக் கொண்டிருப்பதைத் தகர்த்தெறிந்தார்கள். மாநகராட்சிக்குள் நுழைந்து போராடி, தங்கள் உரிமையினை நிலைநாட்டியுள்ளார்கள்.
25.08.2026 முதல் போராட்டம் நடத்த ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஒவ்வொரு வடிவத்தில் அறவழிப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, பணிக்கு எடுக்கப்படாமல் காலம் கடத்தி வந்த 12 தூய்மை பணியாளர்களை 27.08.2026 அன்று பணிக்கு எடுத்துக் கொண்டது சென்னை மாநகராட்சி. சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்து விவாதம் தவிர்க்கப்பட முடியாதது ஆகியுள்ளது. உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் தோழர் பாரதியிடம் தாம் பேசிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் தூய்மைப் பணியாளர் போராட்டம் பற்றி, கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பி வருகிறார்கள். கடந்த திமுக அரசு, தூய்மைப் பணியாளர் போராடிய போது அவர்களுடன் பேசவில்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் கூற, எதிர்க்கட்சித் தலைவர் நாங்கள் பேசினோம். அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா பேசினார்கள். தவெக அரசில் நகராட்சி நிர்வாகத்தை தன் கையில் வைத்துள்ள முதல்வர் ஏன் அவர்களைச் சந்திக்க மறுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்புகிறார்.
அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர் கோரிக்கைகள் நியாயமானவைதான் என்று சட்டமன்றத்தில் ஒப்புக் கொள்கிறார். ஆனால், அவற்றை நிறைவேற்றுவதற்கான பொருளுள்ள நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல், வெறுமனே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு மாயை உருவாக்கி பொதுமக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார். கடந்த ஆட்சியின் போது, தூய்மைப் பணியாளர்களை பனையூருக்கு அழைத்துப் பேசி, ஆதரவு தெரிவித்த விஜய் அவர்கள் தற்போது முதல்வர் ஆனதும் தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுத்துவருகிறார். புரோட்டகால் உள்ளது என்கிறார் அமைச்சர் ராஜ். பாட்டியைப் பார்த்து அவருக்கு கூலிங் கிளாஸ் எல்லாம் மாட்டி விட நேரமிருக்கும் முதல்வருக்கு நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளரை, உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர்களைச் சந்திக்க மட்டும் மனமில்லை ஏன்? என தொழிலாளர்கள் கேட்டனர்.
ஆகஸ்ட் 20 அன்று மாநகராட்சி முன்பிருந்து கோட்டை நோக்கி பேரணி சென்று கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்து பெரியார் சிலை முன்பிருந்து கோட்டை நோக்கிப் பேரணி, அம்பேத்கார் சிலை முன்பு நியாயம் கேட்டு போராட்டம், உள்ளிருப்புப் போராட்டம், சென்னை மாநகராட்சிக்குள் முழக்கப் போராட்டம், விசில் ஒலியெழுப்பிப் போராட்டம், துடைப்பத்துடன் போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், பறையொலி எழுப்பிப் போராட்டம், குப்பைகளுடன் தேவதைகள் போராட்டம் என பணிநிரந்தரம், உணவுப்படி, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, வார விடுப்பு, நாளொன்றுக்கு ரூ.832 சம்பளம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக அம்பேத்கரையும், பகத்சிங்கையும் கையில் ஏந்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில், தாங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராகப் போராடி, அதைத் திரும்பப் பெற வைத்த சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தற்போதும் தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏஐசிசிடியு - உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமையில் போராடி நிச்சயம் வென்றெடுப்போம் என சூளுரைத்து போராட்டத்தைத் தொடர்ந்த தூய்மைப் பணியாளர்கள் செப்டம்பர் 4ம் தேதி இனியும் பொறுப்பதற்கில்லை, போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என அணிதிரண்ட நிலையில், தவெக அரசின் 4 அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் போராட்டக் களத்திற்கே நேரடியாக வந்து தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து தோழர் எஸ்.குமாரசாமி, தோழர்கள் கு.பாரதி, சுரேஷ், மோகன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கு முன் நல்ல அறிவிப்பு வரும் என்றும் அமைச்சர்கள் உறுதியளித்ததன் அடிப்படையில் 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
