மாறிவரும் தமிழ்நாட்டு அரசியல் சூழல் - நமது பார்வை

[சிபிஐ (எம்-எல்) விடுதலை - தமிழ்நாடு மாநில நிலைக்குழுவின் அரசியல் தீர்மானம்] 10 மே 2026

$articleData->title

[சிபிஐ (எம்-எல்) விடுதலை - தமிழ்நாடு மாநில நிலைக்குழுவின் அரசியல் தீர்மானம்] 10 மே 2026

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ன் முடிவுகள் பிஜேபியையும் அதன் கூட்டணியையும் திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது என்பது ஒரு அழுத்தமான செய்தி. அதை மறந்துவிட்டு மற்ற விசயங்களைப் பேச முடியாது. 2021 தேர்தலில் பிஜேபி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2026 தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதிதான் அதற்கு கிடைத்துள்ளது.  வாக்களித்தோர் எண்ணிக்கை சதவீதம் அதிகமான இத்தேர்தலில், பிஜேபியின் வாக்கு சதவீதம், கேரளம் போலல்லாமல், தமிழ்நாட்டில் சற்று குறைந்துள்ளது. வட தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு அதிமுக வெற்றி பெற்றதற்கு பாமகவின் வாக்கு வங்கியால் அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் ஒரு முக்கிய காரணமாகும். மாறாக, அதிமுகவின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட மேற்கு தமிழ்நாட்டில் (கொங்கு மண்டலத்தில்) அதிமுக உடைந்து விட்டிருப்பதைக் காணமுடிகிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற, முற்போக்கு கூட்டணி  73 இடங்கள் மட்டுமே பெற்று பெருந்தோல்வியுற்று இருக்கிறது. அதேவேளை வெற்றி பெற்ற தவெகவிட திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3.5 சதவீதம்தான் குறைவாக இருக்கிறது. திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிமுகவுக்கு மாறுவதற்குப் பதிலாக தவெகவுக்கு சென்றிருக்கிறது என்பது உண்மைதான். சுமார் 14 சதவீத திமுக கூட்டணியின் வாக்குகள் தவெகவுக்கு சென்றுள்ளன. அதேபோல, சுமார் 15 சதவீத அதிமுக வாக்குகளும், இதர கட்சிகளின் வாக்குகளும், குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் 4 சதவீத வாக்குகளும் தவெகவுக்கு சென்றதனால், தவெக 35 சதவீத வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக, அதே நேரத்தில் பெரும்பான்மை இல்லாத கட்சியாகவே வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் என்பது வெறும் வாக்கு சதவீதங்கள், எண் கணிதம் மட்டுமே தொடர்புடையது அல்ல. அது மக்கள் மனங்கள், வாழ்நிலை யதார்த்தங்கள், எதிர்பார்ப்புகள், தேடுதல்கள், விருப்பங்கள், உணர்வுகள் தொடர்புடையது. அப்படிப் பார்க்கும்போது, திமுக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்தது. கார்ப்பரேட் முதலாளிகளின் பொருளாதாரம் வளர்ந்தது. கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ந்தார்கள். அதோடு கூடவே, வேலையில்லாத் திண்டாட்டம் வளர்ந்தது. கல்வி எட்டாக்கனியாவது அதிகரித்தது. வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், சாதியாதிக்க, ஆணவக் கொலைகள் முன்னெப்போதும் விட அதிகரித்தன. தூய்மைப் பணியாளர்கள்,  சத்துணவுத் தொழிலாளர்கள், அங்கன்வாடித் தொழிலாளர்கள் முதல் பகுதிநேர ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள் வரை தமது பணி நிரந்தரத்திற்காகவும் ஊதிய உயர்விற்காகவும் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. காவல்துறையின் அடக்குமுறையையும் எதிர்கொண்டார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பக் கொண்டு வருவதாக அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. உயர்மட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் அரசு நிர்வாகம் என்பது அனைவரும் பேசும் பொருளாகி இருந்தது. அது முன்னெப்போதையும்விட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் திமுக எதிர்ப்பு மனநிலைலையை உருவாக்கி விட்டிருந்தது. தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றத் தயாராக இல்லை. மக்கள் மத்தியில் நிலவியதோர் ஆட்சி மாற்றத்திற்கான தேடுதலும், ஏற்கனவே திமுக ஆட்சிக்கு எதிராக கனன்று கொண்டிருந்த அதிருப்திகளும் திமுக ஆட்சி செய்யத் தவறியவையும் சேர்ந்து திமுக கூட்டணி தோல்வியடைய காரணமாகி விட்டது. ஏழைகள் அழுத கண்ணீர் அரியணையை அரித்தது. எளிய உழைக்கும் மக்களின், குறிப்பாக தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களின் போராட்டங்கள் அத்தகைய முடிவின் துவக்கமாய் அமைந்தன.

விஜய்யின் வளர்ச்சி, தவெகவின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் முடிவு என குருமூர்த்தி உள்ளிட்ட வலதுசாரி வட்டாரங்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். விஜய்யின், தவெகவின் தேர்தல் வெற்றியை அப்படி கருத முடியாது. ஏனென்றால், திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்றுள்ள வாக்குகளும் சரி, விஜய் தனது கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கரை உயர்த்திப் பிடித்ததும் சரி, தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார நிலைமைகளும் சரி அதை சுட்டிக்காட்டவில்லை. இன்னும் வேறுசிலர் இது ஒரு திராவிட கட்சிகள் அல்லாத, திராவிடத்துக்குப் பிந்தைய அரசியலின் கட்டம் தமிழ்நாட்டில் துவங்கி இருக்கிறது என்கிறார்கள். “திராவிடத்துக்குப் பிந்தைய” என்பது “திராவிடத்துக்கு எதிரான” என்று பொருளாகாது என்கிறார்கள். தவெகவின் வளர்ச்சியை திராவிடத்திற்குப் பிந்தைய அரசியலின் துவக்கம் என்பது, அத்தகைய அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் என்ன, எப்படி இருக்கும் என்பது விவாதத்திற்கு உட்பட்டது. “திராவிட” என்கிற பெயர் தாங்கியுள்ள கட்சிகளின் வாக்கு சதவீதமும் விஜய்யின் முழுமை பெறாத வெற்றியும் அத்தகைய ஒரு திராவிட அரசியலுக்குப் பிந்தைய கட்டம் துவங்கி இருப்பதாகக் காட்டவில்லை. அதுவும், இது திராவிட இயக்கத்தின் முடிவு என வலதுசாரிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் பின்னணியில், நாம் அதுகுறித்து இன்னும் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. திராவிட இயக்கத்தோடு அம்பேத்கரிய இயக்கமும் கம்யூனிஸ்டுகளின் செங்கொடி இயக்கமும் சுயமரியாதை, சமூக நீதி மற்றும் சமத்துவ பாரம்பரியத்தில் தமது வேர்களைக் கொண்டுள்ளன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.  

சுமார் 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து மக்கள் களைத்துப் போயிருக்கிறார்கள். ஒரு மாற்றத்திற்கான வேட்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது என்பது உண்மை. அத்தகையதோர் மாற்றத்திற்கான வேட்கையை, தேடுதலை கைவசப்படுத்தி எழுந்திட பல கட்சிகளும் பல கட்டங்களில் பல விதங்களில் முயற்சித்து வருகின்றன. விஜயகாந்த் முயற்சி செய்தார். கமலஹாசன் முயற்சி செய்தார். சீமான் இன்னமும் முயற்சித்து வருகிறார். இவர்கள் அனைவரையும் விட பிஜேபி மாபெரும் முயற்சி செய்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. 

மாற்றத்திற்கான தேடுதல் என்பது அரசியல் மாற்றம் அல்ல, ஒரு ஆட்சி மாற்றம், ஆள்வோர் மாற்றம் என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. அதை இடதுசாரி பாதை அல்லது வலதுசாரி பாதையிலானதோர் அடிப்படை மாற்றத்திற்கான தேடுதலாக புரிந்து கொள்ள கூடாது. புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில், பொருளாதார வளர்ச்சி அதிகரித்தபோதும், அதற்கு அக்கம்பக்கமாகவே வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவருகிறது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த யாராவது வரமாட்டார்களா, ஏதாவது செய்ய மாட்டார்களா என்கிற தேடுதல் இருக்கிறது. அத்தகைய தேடுதலின் பின்னணியில்தான், விஜய்யின் வருகை, தவெகவின் வருகை மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் பெருமளவு வாக்களித்து இருக்கிறார்கள். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் 70 சதவீதமும், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 30 சதவீதமும் வாக்களித்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாநிலம் முழுவதுமுள்ள, சென்னை உள்ளிட்ட, பெரும்பாலான நகரப் பகுதிகளிலும், சென்னையின் சுற்றுப்புற மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள் சிலவற்றிலும் தவெக பெரும் வெற்றி பெற்றுள்ளது. தவெகவின் வெற்றி நடுத்தர மக்கள் வாக்களித்து பெற்ற வெற்றி மட்டுமல்ல, தலித் மற்றும் ஏழை மக்களும் பெருமளவு வாக்களித்து இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் முதல் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் வரை வாக்களித்து இருக்கிறார்கள்.

அதை தற்குறிகளின் வெற்றி என்றோ, அரசியலற்றோரின் வெற்றி என்றோ ஏளனம் செய்வது தவறு. அதனை நவதாராளவாத கொள்கைகள் மூர்க்கத்தனமாக அமுல்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், சமூக ஊடக உலகம் என ஒன்று உருவாகியிருக்கும் பின்னணியில், மாறிவரும் தேவைகள், மாறிவரும் கலாச்சார விழுமியங்கள், வேட்கைகள், தேடுதல்கள், எதிர்பார்ப்புகள் இட ஒதுக்கீடு தாண்டி மறுவரையறை செய்யப்பட வேண்டிய சமூக நீதி, பெண் தொழிலாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பின்னணியில் எழும் பாதுகாப்பு கோரிக்கைகள், இயல்பாகிவிட்ட, வழக்கமாகிவிட்ட ஊழலுக்கு எதிரான கோரிக்கைகள் எனும் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். வழமையான, பழமையான அரசியல் விழுமியங்களிலிருந்து புதிய அரசியல் விழுமியங்களுக்கான தேடுதலாகவும் அதை காண வேண்டும். அத்தகைய வேட்கையின் ஒரு பகுதிதான் ஊழலுக்கு எதிரான, போதைப் பொருட்களுக்கு எதிரான கோரிக்கைகளாக உருப்பெற்றிருக்கின்றன. தனியார்மயமாக்கத்தின் மற்றொரு விளைவான மின் கட்டண உயர்வுக்கு எதிரானதாக வடிவம் பெற்றிருக்கிறது. அதனால்தான் தான் ஆட்சியேற்ற உடனேயே முதலில் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப் பெண் படை, போதைப் பொருட்கள் தடுப்புப்படை என்பவற்றிற்காக கையெழுத்துப் போட்டிருக்கிறார் புதிய முதல்வர் விஜய். 

இவை அனைத்திற்கும் விஜய் சரியான பதிலா என்பது மற்றொரு முக்கியமான, புறந்தள்ளப்பட முடியாததோர் கேள்வி. சரியான பதிலா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய நாளில், திமுகவின் இடத்தை விஜய் கைப்பற்ற நினைக்கிறார். தான் மற்றுமொரு திராவிட கட்சிதான் என நிறுவப்பார்க்கிறார். பதவியேற்ற பின்னர்  பெரியார் திடல் சென்று பெரியாருக்கு மரியாதை செய்ததும் அதைத்தான் பூடகமாக விவரிக்கிறது.

தமிழ்நாட்டின் முற்போக்கு விழுமியங்களை, முற்போக்கு பாரம்பரியத்தை தகர்த்து அதனிடத்தில் வலதுசாரி அரசியலை வளர்ப்பதற்கானதோர் களத்தை உருவாக்குவதுதான் பிஜேபியின் தலையாய நோக்கம், அரசியல் தந்திரம். விஜய்-தவெக, திமுக-அதிமுக உட்பட தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்ற அரசியல் சக்திகள் அனைவரையும் தனது பாசிச நோக்கத்தை நிறைவேற்ற பயன்படுத்தும் பிஜேபியின் முயற்சி ஒருபோதும் ஓயாது. தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் ஆளுநரின் செயல்பாடு அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. விஜய் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக அதிமுக ஆட்சியை திமுக ஆதரிக்கலாம் என எழுந்த வதந்திகளும் அதைத்தான் சுட்டுகின்றன. விஜய்யின் அரசியல், தவெகவின் அரசியல் எந்தத் திசையில் பயணிக்கும் என்பதை இப்போதே முடிந்த முடிவாக சொல்லிவிட முடியாது. 

தவெகவின் அரசியல் இன்னும் முழுமையானதொரு வடிவம் பெறவேண்டி இருக்கிறது. தவெகவின் வாக்குறுதிகளை பார்க்கும் போது நலத் திட்டங்களை தொடர்வதில், அதிகப்படுத்துவதில் போட்டி போடுவது தெரிகிறது. ஆனால், விஜய்யின் ’கஜானா காலி’ எனும் வாதம், ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு, ’கால அவகாச’ கோரிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஒரு உண்மையான மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சி இப்போது துவங்குகிறது என்றார் முதல்வர் விஜய். ஆனால், அவர், பிஜேபி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு சக்தியாக எழுவாரா, அல்லது அதற்கு எதிர்த்திசையிலோ வேறு திசையிலோ பயணிப்பாரா என்பதை, தவெக ஒரு பாசிச எதிர்ப்பு, பிஜேபி எதிர்ப்பு கட்சியா அல்லது ஒரு பிஜேபி அல்லாத கட்சியா என்பதை, தமிழர், தமிழ்ப் பெருமிதம் பற்றி, கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசும் தவெக, அதற்காக ஒன்றிய அரசுக்கு எதிராக சமரசமற்ற விதத்தில் போராடுமா அல்லது வேறு பாதையை தேர்ந்தெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை, தொழில்துறை வளர்ச்சியை அதிகரித்திட தவெக முயற்சிக்கும். ஆனால், தொழிலாளர் உரிமைகள், நலன்கள் குறித்து என்ன அணுகுமுறை மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில், தவெக ஒரு மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் ஒரு கட்சி என்று நாம் சொல்லலாம். 

எது எப்படியானாலும், விஜய்யின் தவெக இன்று ஆளும் கட்சி. ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, அதற்கு எதிராகப் போராடுவது எதிர்க்கட்சிகளின் கடமை. நமது கடமையும் கூட. அதுதான் ஜனநாயகம். திமுக ஆட்சியிலிருந்தபோதும் கூட, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த போதும் கூட,  நாம் அதைத்தான் செய்தோம்.

மாறிய அரசியல் சூழலில், தமிழ்நாட்டு அரசியல் வியூகங்களில் ஏற்படும் மாற்றங்களையும் நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சூழலுக்குப் பொருத்தமான அரசியல் முடிவுகளை நாம் மேற்கொள்வோம். அது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாட்டை எதிர்க்கும் நமது அடிப்படைக் கடமையோடு, பிஜேபியின் இந்துத்துவ மதவெறி, கார்ப்பரேட் லாபவெறி, ஆதிக்க சாதிவெறி கொண்ட பாசிசத்தை, அதன் முதன்மை பிரதிநிதியான பிஜேபியை எதிர்க்கும் நமது அடிப்படைக் கடமையோடு பொருந்தியதாக இருக்கும். 

மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிராக, உழைக்கும் மக்களின் உரிமைகளை மறுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக, சாதி ஆதிக்கத்துக்கு எதிராக, மாநில உரிமைகளுக்காக, உண்மையான கூட்டாட்சிக்காக, சமூக நீதி, சமத்துவத்துக்காக தவெக ஆட்சி குரல் கொடுக்க வேண்டும். அப்படி  குரல் கொடுக்கவில்லையென்றால், தவெக ஆட்சிக்கு எதிரான முதல் குரல் சிபிஐஎம்எல் விடுதலையின் குரலாக இருக்கும் அதேவேளை, இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகளோடு இணைந்து போராடும்.


24 May, 2026