புனாவிலும் ஜென் ஸீ எழுச்சி

$articleData->title

புனாவிலும் ஜென் ஸீ எழுச்சி

சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில், நீட் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில், அங்கு உண்ணாநிலை மேற்கொண்டிருந்த சோனம் வாங்சுக்கின் மீதே பெரும்பாலானோரின் கவனம் இருந்து கொண்டிருந்தபோது,  அங்கே பட்டினிப் போராட்டம் நடத்திய ஒரு இளம் பெண், உடல்நலம் குன்றிய மற்றொரு போராட்ட மாணவருக்காக நீதிகோரி அமைதியான, ஆனால் மிகுந்த தன்னம்பிக்கையுடன்  அளித்த பேட்டி என் கவனத்தை ஈர்த்தது. அவரது தெளிவும் உறுதியும் தர்க்கரீதியான கருத்தும் ஊக்கமளிப்பதாக இருந்தன; அவர் விரைவிலேயே போராட்டத்தின் மிக முக்கியமான முகமாக மாறினார். அவர்தான் நேஹா போரா—முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர், அகில இந்திய மாணவர் கழகம் -அய்சா (AISA) அமைப்பின் தேசியத் தலைவர். ஜந்தர் மந்தர் போராட்டங்கள் முழுவதிலும் கடுமையாக உடலை வருத்திக் கொண்டு பட்டினியாக இருந்த அவரிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அறிவுபூர்வமாக அவர் அளித்த பதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.  ஜந்தர் மந்தர் போராட்டத்தின் வெற்றி அவரை திசை திருப்பிடவில்லை. இது ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான  புரட்சியின் துவக்கம் என்று நேகா திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அதோடு நின்று விடாமல் ‘ஜென் ஸீ எழுச்சி’ (Gen Z Rising)யை  நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான தன் பயணத்தையும்கூட அவர் அறிவித்தார். அவர் புனாவிற்கு வரும் நாளை குறித்து வைத்துக்கொண்டு, அந்த நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது.

நான் நிகழ்விடத்தை அடைந்தபோது, 50க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். மூன்று, நான்கு வாகனங்கள். தடுப்புகள் அமைத்திருந்தார்கள். வழக்கத்திற்கு மாறாக அளவுக்கதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபோது தங்கள் சித்தாந்தத்தோடு ஒத்துப்போகாத மாற்றுச் சிந்தனை கொண்டவர்களைக் கண்டு இந்த அரசாங்கம் அச்சப்படுவது தெரிந்தது.  அங்கு திரண்டிருந்த இளைஞர்களையும் போலீஸையும் கண்டு பதற்றமடைந்த, நான் வந்த ஆட்டோவின் ஓட்டுநர் என்ன இங்கு ஏதாவது போராட்டம் நடக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்.

இன்றைய அமைப்பு முறையில் தாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கவும்  அதற்கெதிராகப் போராடவும் திரண்டிருந்த இளைஞர்கள் நேஹாவை எதிர் நோக்கிக் காத்திருந்தனர். புகழ்பெற்ற கல்லூரியைச் சேர்ந்த ஓர் இளம் சட்ட மாணவி மோசமான இன்றைய கல்வி நிலை குறித்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகாரத்திலிருப்பவர்களின் அக்கறையின்மை குறித்த தன் குமுறலை வெளிப்படுத்தினார். வீடியோ எடிட்டர் ஒருவர் நேஹாவின் பேச்சைக் கேட்பதற்காகவே ஜெய்ப்பூரிலிருந்து புனாவிற்கு வந்திருந்தார். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றிருந்த அவர், அங்கு காவல் துறையின் கொடூரத்தையும் சந்தித்திருந்தார். ஜந்தர் மந்தர் போராட்டமானது வெறுமனே ஒரு அமைச்சரின் பதவி விலகலுக்கானது மட்டுமானது கிடையாது, அது அரசாங்கத்தின் பொறுப்புடைமையைக் கோரும் இளைஞர்களின் இயக்கம் என ஒரு இளம் சமூகவியல் மாணவர் உணர்ச்சிபூர்வமாக பேசிக் கொண்டிருந்தார். உண்மைப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிற மக்கள் கூடியிருந்த அந்த இடம் ஒரு ‘குட்டி ஜந்தர் மந்தர்’ போல காட்சியளித்தது.

எம்.பி.எஸ்.சி (MPSC) வினாத்தாள் கசிவு, பழங்குடியின மாணவர்களின் விடுதிப் போராட்டம், பழங்குடியினருக்கான பணியிடங்களில் போலியாகப் பழங்குடியினர் அல்லாதோரை நியமித்தல், பெசா (PESA) வேலைவாய்ப்பு உரிமைகள் மற்றும் உறைவிடப் பள்ளிகளில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகளுக்குத் தடை ஆகிய மகாராஷ்டிரப் பிரச்சினைகள் பற்றிய செயற்பாட்டாளர்களின் உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் கூடியிருந்த இளைஞர்களிடையே, சாவித்ரிபாய் பூலே மற்றும் பாத்திமா ஷேக்கின் பங்களிப்பை நினைவுகூர்ந்து நேஹா உரையாற்றினார்.   ‘அவர்கள் நடத்திய போராட்டங்களால்தான் இன்று பெண்கள் கல்வி கற்க, வேலைக்குச் செல்ல முடிகிறது.  இருப்பினும், இன்றைக்கு இந்த பாசிச அரசாங்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இடத்தில் மனுதர்மத்தை வைக்க எண்ணுகிறது. இந்த அரசு சிறுபான்மையினரின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. அவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஆய்வு மாணவர்க்கான கல்வி உதவித் தொகைகளை மறுக்கிறது. சிறுபான்மை சமூகத்திலிருந்து வரும் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகையை 2022ல் நிறுத்திவிட்டது. மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை மூடிவிட்டது. அதன் மூலம் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கிடைத்து வந்த கல்வி உதவித் தொகைக்கு மூடுவிழா நடத்திவிட்டது. இந்த அரசு, இஸ்லாமியர், தலித்கள், பழங்குடியினர் கல்வி கற்பதை விரும்பவில்லை. புனாவும் வினாத் தாள் கசிவு மையமாக மாறியுள்ளது’ என்று நேஹா கூறினார்.

அவர் மேலும், ‘இளைஞர்களாகிய நாம் பூலே மற்றும் அம்பேத்கரின் கனவை நினைவாக்க வேண்டும். பாசிஸ்டுகளின்  ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும். ஜந்தர் மந்தர் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், தேசிய தேர்வு முகமை (NTA) கலைக்கப்பட வேண்டும். அந்தக்  குழுக்களில்தான் வினாத்தாள் கசிவுக்குக் காரணமான மாஃபியாக்களுடன் தொடர்புடையவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்; அவர்களில் பலர் பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை (BJYM) சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தொடர் வினாத்தாள் கசிவுகளுக்கு தேசிய தேர்வு முகமை NTA பொறுப்பேற்க வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP), தனியார்மயமாக்கலை ஊக்குவித்து, கல்வி நிறுவனங்களைக் கடன் வாங்கக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம்,  கல்விக் கட்டணத்தை அதிகரித்தும் பெரும் அபராதங்கள் விதித்தும் கல்வி உதவித்தொகையைக் குறைத்தும் இந்தக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கொள்ளையடிக்கின்றன. எனவே, தேசிய தேர்வு முகமையும் புதிய கல்விக் கொள்கையும் தரமான கல்வியைத் மாணவர்களுக்குத் தருவதற்காக அல்ல, தனியார் நிறுவனங்கள் கல்லா கட்டுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்.

போராடும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் நேஹாவிடம் கேட்டார். அதற்கு நேஹா, 2024ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் பாதுகாப்புக்காக கண்ணீர் வடித்தார். பெண்கள் அதிகாரம் பற்றியும் பேசினார். ஆனால், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்பதற்காக அவருடைய கவலைகளை  தீவிரமாக யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அவருக்கு பெண்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர் அமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்ய வேண்டும். மாறாக, அவர் ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் அமைச்சராக்கப்படுகிறார்கள். தற்போதைய கல்வி அமைச்சர் உட்பட அவரது கட்சியைச் சேர்ந்த பலர், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதையும்  மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பிரிஜ் பூஷன் சிங்கையும் நியாயப்படுத்தியவர்கள். இந்த ஆட்சியானது, பாலியல் வன்புணர்வுகளை அரசியல் ரீதியாகவே ஆதரிக்கும் ஒரு சித்தாந்தத்தைக் கொண்டது. எனவே, இந்த ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்படாமல், பெண்கள் நீதியை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

மலை உச்சியில் நம்பிக்கையுடன் நிற்கும் சிறுமியின் ஓவியத்தை 12 வயது சிறுமி நேஹாவிற்குப் பரிசளித்தார். அந்த ஓவியம், அதிகார வர்க்கத்திற்கு எதிரான நேஹாவின் தளராத போராட்டத்தையும் நம்பிக்கையூட்டும் இளைய தலைமுறையினரின் போராட்ட உணர்வையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

                                                                                                                                           

  -சிந்து

 

15 September, 2026