பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக அரசின் முதன்மைப் பொறுப்பு!

தலையங்கம்

$articleData->title

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக அரசின் முதன்மைப் பொறுப்பு

பாலியல் வன்முறைகள் நடக்காத நாளே இல்லை என தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. மூன்று வயது குழந்தை முதல் எண்பது வயது பாட்டி வரை பாலியல் கொடூரர்களால் கொல்லப்படுகின்றனர். கோவை சூலூரில் சிறுமி படுகொலை.  தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் தவெகவை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, சித்தரவதை செய்துள்ளார்கள் தவெகவைச் சேர்ந்தவர்கள். அந்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் தவெக திருவைகுண்டம் எம்எல்ஏ சரவணன்.  இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை தவெகவில் இருந்து நீக்குகிறார்கள். சேலத்தில், பொள்ளாச்சி போல, பெண்களை மிரட்டி ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தவெகவைச் சேர்ந்தவர் என்கின்றன செய்திகள். காவல்துறையில் இருக்கும் பெண் காவலருக்கே பாலியல்  தொல்லை. கும்மிடிப் பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு முட்புதரில் வீசிக் கொலை. குழந்தையின் பெற்றோரை அடியாட்கள் சகிதம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மிரட்டுகிறாராம். அரசுக்கு, காவல்துறைக்கு கெட்ட பெயர் வராமல் இருக்க வழக்கம்போல் பாதிக்கப்பட்டவர்களை பலிகடா ஆக்குவதும் பொய்க்குற்றவாளிகள் கைதும் நடக்கின்றன. கும்மிடிப் பூண்டி குழந்தை கொலையில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்று உடனடியாக அறிவிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான சில வழக்குகளில் குற்றவாளிகள் தவெக உறுப்பினர்களாக, நிர்வாகிகளாக இருக்கிறார்கள். ஒரே நாளில் 5 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 34 நாள்களில் 207 பாலியல் குற்றச் செய்திகள் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒழுங்காக ஆட்சி நடத்தாததுதான் காரணம் என்று தேர்தலுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் பேசினார்.  இப்போது ‘இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, இதில் சமூக ஒழுங்கும் சம்பந்தப்பட்டிருக்கிறது, சமூக ஒழுங்கில் தனிமனித ஒழுக்கமும் சம்பந்தப்பட்டிருக்கிறது, தனி மனிதன் ஒழுங்காக இருந்தால்தான்  சமூகம் தன்னால் மாறும், கட்டுப்பாட்டுடன் பொறுப்பாக இருந்தாலே பல பிரச்சனைகளைக் கண்ட்ரோல் பண்ணலாம்’ என்று முதலமைச்சர் பேசுகிறார். அதிலும் ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப் படை துவக்க விழாவில் இவ்வாறு பேசி, தன் அரசின் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயற்சிக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை காப்பாற்ற, சிங்கப் பெண் அதிரடிப் படை எண்ணிற்கு தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் இல்லை என்று பதற்றத்துடன் கூறுகிறார். கவின் கொலையில் குற்றவாளியான பெண் போலீஸை கைது செய்ததைக் கண்டித்து கயத்தாரில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதில் சாதியாதிக்க வெறியைத் தூண்டுகிற வகையிலும் ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்தும் பேசியுள்ளனர். ஆணவக் கொலைத் தடுப்புச்சட்டத்தை விரைவில் கொண்டுவருவோம் என்று பேசிய அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் சமூக விரோதிகள். வேடிக்கை பார்க்கிறது காவல்துறை. அடுத்த இரண்டாவது நாள், அதே கயத்தாரில் சொந்த தங்கையை, அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை விரும்பினார் என்பதற்காக தாயின் துணையுடன் அண்ணனே ஆணவக் கொலை செய்கிறார். இந்த கொலையைக் கண்டித்து வலைத்தளத்தில் பதிவிட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவரைக் கைது செய்கிறது காவல்துறை. தேர்தலில், ‘நமது சகோதரிகளுக்கு பாதுகாப்பு’ ‘போதையில்லா தமிழகம்’ என்று தவெக வாக்கு கேட்டது. மக்கள் மாற்றம் வேண்டியே  விஜயை ஆட்சியில் அமர வைத்தனர்.  ‘தனி மனித ஒழுக்கம்’ என்று கூறி முதலமைச்சர் விஜய் தப்பித்துக் கொள்ள முடியாது. யார் மாற வேண்டும்? அரசு நிர்வாகம் மாறவேண்டும். காவல்துறை மாற வேண்டும். முதலமைச்சர் மாற்றிக் காட்ட வேண்டும். மவுனம் காக்கக் கூடாது. குற்றவாளிகள்  தவெகவினர்  என்றாலும் அவர்கள் மீது தலைவர் விஜயின் சிங்கப் பெண் படை சீறிப் பாயவேண்டும். ‘தப்பு செய்ய நினைக்ககூடாது. தப்பு செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது’ என்று பதவியேற்பு விழாவின் போது முதலமைச்சர் பேசியதை மக்கள் நம்புகின்றனர். மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவதே மக்களாட்சி. வேறு விடயங்களுக்கு “கால அவகாசம்” கேட்கலாம். ஆனால், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் “கால அவகாசம்” கேட்கமுடியாது. கொடூர குற்றவாளிகளிடமிருந்து அவர்களை பாதுகாப்பது தவெக அரசின் முதன்மையான, அவசரமான பொறுப்பு. கடமை. தப்பிக்க முடியாது. கூடாது.


22 June, 2026