அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மோடியின் காலத்தில் “பாஜக வெல்ல முடியாதது” என்கிற போலி பிம்பத்திற்கு மீண்டும் வலுசேர்த்துள்ளன. அந்தப் போலி பிம்பத்துடன் சேர்த்து, தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு அஞ்சலி என்றும், பிராந்தியக் கட்சிகளுக்கும் ஒட்டு மொத்த ‘இந்தியா’ கூட்டணிக்கும் கல்லறை என்றும், இடதுசாரிகளின் பழம்பெரும் பாரம்பரியத்திற்குப் புகழஞ்சலி (நினைவேந்தல்) என்றும் பல அஞ்சலிக் குறிப்புகள் நமக்கு இலவசப் பரிசாகத் தரப்படுகின்றன.
பாஜகவை வெல்லவே முடியாது என்கிற போலி பிம்பம், கடந்த 2024 பொதுத்தேர்தலில், தனிப்பெரும்பான்மைக்கு 33 இடங்கள் குறைவாக, 240 இடங்களுடன் நிறுத்திய போதே பாஜக கிட்டத்தட்ட (முற்றிலும் இல்லை என்றாலும்) அடித்து நொறுக்கப்பட்டது. ஜேடி(யு), தெலுங்கு தேசம் ஆகிய இரு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவால் மட்டுமே மோடி மூன்றாவது முறை ஆட்சி அமைக்க முடிந்தது. அந்தப் பகுதியளவு பின்னடைவிலிருந்து, இந்த ஆட்சியானது, “ஆட்சிக்கு எதிரான அதிர்வலைகளில்” இருந்து தேர்தல்களில் தன்னைக் காத்துக் கொள்ளுவதற்கும் சாதி, மத சமூக சிக்கலுக்குள் (Social Engineering) துல்லியமாக வேலை செய்தும் திட்டமிட்ட முறையற்ற சூழ்ச்சிகள் மூலம் தேர்தல்களில் தேவையான பெரும்பான்மையைப் பெற்றிடும் ‘கலையைக்’ கற்றுக் கொண்டு விட்டது. மகாராஷ்டிரா, ஹரியானா, தில்லி முதல் பீகார் வரையிலும், சமீபத்தில் அசாம், மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்குத் தேர்தல் இந்த உத்தி கையாளப்பட்டதைக் கண்டோம்.
2024 தேர்தலுக்குப் பிந்தைய சங் பரிவாரத்தின் இந்தத் தேர்தல் உத்திக்கு எதிரான ஒரு திறன்மிக்க எதிர் நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சிகளுக்கு எழுதப்படும் அஞ்சலிக் குறிப்புகளுக்கு வலுவான காரணங்களுடன் மறுப்பு தெரிவிக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, பிராந்திய கட்சிகளுக்கு எழுதப்படும் அஞ்சலிக் குறிப்புகளை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது உண்மைதான். ஆனால், அந்த இடத்தைப் பாஜகவோ அதிமுகவோ பிடித்துவிடவில்லை. மாறாக, புதிதாக எழுந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் நிரப்பியுள்ளது. பாஜக இப்போது 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சியில் இருக்கலாம்; ஆனால் அவற்றில் ஆறு மாநிலங்களில் அது பிராந்தியக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டுதான் ஆட்சியில் நீடிகிறது.
திமுக, திரிணாமுல் காங்கிரஸின் தோல்வி, பிராந்திய கட்சிகளின் முடிவின் துவக்கமாக முன் வைக்கப்படுகிறது என்றால், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) தோல்வியானது, இந்திய அரசியல் வரை படத்தில் இடதுசாரிகள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்டுவிட்டதற்கான அடையாளமாக மிகைப்படுத்தப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இடதுசாரிகள் அதிகாரத்தில் இருந்து வந்தார்கள் என்பது உண்மை. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகள் (1977-2011), திரிபுராவில் 25 ஆண்டுகள்(1993-2018), கேரளத்தில் பத்தாண்டுகள்(2016-2026). மேற்கு வங்கம், திரிபுரா போல் இல்லாமல் கேரளா எப்போதும் தனது அரசை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டது (2021 தேர்தல் மட்டும் விதிவிலக்கு). எனவே, கேரளாவில் இடதுசாரிகளின் இந்தத் தோல்வி என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தற்போது எந்த மாநிலத்திலும் இடதுசாரி அரசாங்கம் இல்லை என்பதை வைத்து, இடதுசாரிகள் பொருத்தமற்றுப் போய் விட்டார்கள் அல்லது ‘காலாவதி’ ஆகிவிட்டார்கள் என்று பேசுவது முற்றிலும் அபத்தமானது. காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது என்றால் கம்யூனிஸ்ட்டுகள்தான் முதலாவதாக வந்தார்கள். 1977 வரை இயக்கம் சார்ந்த எதிர் நீரோட்டமாக இடதுசாரிகள் இருந்தார்கள்.
தேர்தல் அடிப்படையில், ஒரு மாநிலத்தில் இடதுசாரிக் கட்சி அதிகாரத்தை இழந்தது குறித்து அதிகம் கவலைப்படாமல் இதுவரை கணிசமான அளவு அடித்தளத்துடன் செல்வாக்கு செலுத்தி வந்த மாநிலத்தில் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு பற்றியே கவலைப்பட வேண்டும்.
அந்த வகையில், சிபிஐ(எம்) தலைமையிலான இடது முன்னணி மேற்கு வங்கத்தில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. 2011 இல் பெற்ற 41 சதவீத வாக்குகளிலிருந்து, தற்போதைய சமீபத்திய தேர்தலில் வெறும் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2011 இல் இடதுசாரிகளின் தோல்வியானது, 34 ஆண்டுகால நீண்ட ஆட்சி மற்றும் தொழில்மயமாக்கல் என்ற பெயரில் மக்கள் விருப்பத்திற்கு மாறாக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் இடதுசாரிகளின் கிராமப்புற அடித்தளத்தில் பெரும் சிதைவும் அரிப்பும் ஏற்பட்ட பின்னணியில்தான் என்பது முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால், 2016 இல் வெறும் 10 சதவீத வாக்குகளுடன் 3 இடங்களை பெற்று இருந்த பாஜக, 2026 தேர்தலில் திடீரென எழுந்து 46 சதவீத வாக்குகளையும் 208 இடங்களையும் பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது சிபிஐ(எம்)க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இடதுசாரிகளுக்கும் பெரும் கவலையளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
மேற்கு வங்க அரசியலின் ஓரஞ்சாரமாக இருந்த பாஜக பத்தே ஆண்டுகளில் மையப் பகுதிக்கு வந்துள்ளது. வாக்காளர்பெயர் நீக்கம், தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் 2026 தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றி பெற்றது என்றாலும் கூட மிகவும் கவனிக்கப்பட வேண்டியது மேற்கு வங்கத்தில் இன வெறுப்பு, மதவெறி, பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட சங் பரிவாரின் நச்சுத்தன்மை வாய்ந்த தத்துவம் திட்டமிட்டு பரப்பப்பட்டதும் காரணமாகும். இது பற்றி இடதுசாரிகள் மட்டுமின்றி பகுத்தறிவும் முற்போக்குச் சிந்தனையும் கொண்ட ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட்டாக வேண்டும்.
கொல்கத்தாவில் பாஜக அதிகாரத்திற்கு வந்த முதல் மாதத்திலேயே மேற்கு வங்கத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் காட்சிகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, அது சங்பரிவாரம் தனது கொடூர நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதில் காட்டும் அதீத அவசரம் பற்றி நமக்குச் சொல்லும்.
கிராமப்புறப் பொருளாதாரத்தின் மீது கடுமையான அடியைக் கொடுக்கும் பசுவதைத் தடையிலிருந்து, மறு வாழ்வுக்கான மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி நடைபாதை வியாபாரிகளை, ரயில் நிலைய சிறு வியாபாரிகளை ஈவிரக்கமின்றி அப்புறப்படுத்துவது வரை; எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சி அலுவலகங்கள் மீது வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப்பது முதல் தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களை, கடைகளைத் தரைமட்டமாக்குவது வரை; ஆதரவற்ற மக்களை ‘பாதுகாப்பு மையங்கள்’ என்கிற சிறையில் மந்தைகள் போல் அடைத்து வைப்பது என அராஜகம் நீள்கிறது. மேற்கு வங்கத்தில் வந்திருப்பது ‘மாற்றம்’ அல்ல; அராஜகமும் வன்முறையும் நிறைந்த ஆட்சியாகும்.
வங்கத்தின் முற்போக்கு பாரம்பரியத்தை, பரந்த மனப்பான்மையை, பன்முகக் கலாச்சாரத்தை தலைகீழாக மாற்றும் முயற்சியே இது என்பது தெளிவாகத் தெரிகிறது.மேற்கு வங்கத்தின் புதிய வெற்றியாளர்களுக்கு இந்த அதிகாரம் என்பது தணியாத பழிவாங்கும் வெறியும்
ஆக்கிரமிப்பும் தானேயன்றி பொறுப்பிற்கோ அல்லது கடமையாற்றுவதற்கோ அல்ல; வங்கத்தை கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றி, நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் சேர்ந்து ‘நிரந்தர குடியேற்றம்’ ஏற்படுத்தியதன் மூலம், இந்தியாவில் காலனிய ஆட்சிக்கு கட்டியம் கூறியதென்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. வங்கத்தைப் பாஜக கைப்பற்றியிருப்பதும் அதையொத்ததுதான். இது வெறும் அரசியல் - கலாச்சார ஆக்கிரமிப்பை மட்டுமே குறிக்கவில்லை. இன்றைய ‘மேற்கிந்திய கம்பெனி’க்கு (பெரு முதலாளிகளுக்கு) புதிய ‘நிரந்தர குடியேற்றம்’ ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வாய்ப்பையும் குறிக்கிறது. சிறு வணிகங்கள் மீது, மக்களின் வாழ்வாதாரங்களின் மீது நடத்தப்படும் தாக்குல்கள், வாக்குரிமைகள் பறிப்பு, உரிமைகள் பறிப்பு அலைகளுக்கு மத்தியில், வளங்களைக் கையகப்படுத்தி, சொத்துக்களைக் குவித்து முன்னேறிவரும் கார்ப்பரேட்டுகளின் காலடியோசை கேட்பதில் சிரமம் எதுவுமில்லை.
சங்பரிவாரத்தைப் பொறுத்தவரை, மேற்கு வங்கம் அவர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த ‘கடைசி எல்லை’ ஆகும். வங்கத்தில் பாஜக பெற்ற இந்த வெற்றியின் மூலம் வங்கதேசத்தைச் சுற்றியுள்ள பாஜக ஆளும் மாநிலங்களான திரிபுரா, மேகாலயாவிலிருந்து அசாம், மேற்கு வங்கம் வரையிலான சங்கிலி இணைக்கப்பட்டுவிட்டது. மேலும், அது பீகார், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜகவின் முதலமைச்சர்களைக் கொண்டு வந்து ‘அங்க-பங்க-கலிங்க’ வளையத்தையும் இணைத்து விட்டார்கள். இதனால் துணிவு பெற்றுள்ள பாஜக, இனி தனது ‘ஒரே தேசம், ஒரே கட்சி’ என்கிற பயணத்தின் வேகத்தை அதிகரிக்கும்.
தொகுதி மறுவரையறை, ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ ஆகியவை, இந்திய தேர்தல் அமைப்பு முழுவதையும் பாஜகவின் கொடிய பிடிக்குள் இறுக்கிக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டதாகும். இருப்பினும், நாட்டின் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், சர்வதேச உறவுகள் ஆகியவற்றைப் பார்த்தால், மோடி அரசாங்கம் அதலபாதாளத்திற்குள் போய்விட்டது என்பது தெளிவாகத் தெரியும். மோடி ஆட்சிக்கு ஆதரவாக மிக நேர்த்தியாகப் பேசி வந்தவர்களாலும் கூட இனிமேலும் மறுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
இந்த பன்மடங்கான நெருக்கடிகளையும் இந்த அரசாங்கம் எப்படி சமாளிக்கிறது? அது புல்டோசர் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துகிறது. நியாயமான கூலிக்காகப் போராடும் தொழிலாளர்களைச் சிறையிலடைக்கிறது. தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்யக் கோரும் மாணவர்களை ‘பாகிஸ்தானியர்’ என்று முத்திரை குத்துகிறது.
இந்திய தலைமை நீதிபதியால் சமூக செயற்பாட்டாளர்கள் ‘கரப்பான் பூச்சிகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இதனால் கோபமுற்ற இந்திய இளைஞர்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ யை உருவாக்கித் திருப்பித் தாக்கும் போது, நிலை குலைந்து போன அரசு அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களை முடக்குகிறது.
இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட்டுகள்தான் சுதந்திரத்திற்காக, நீதிக்காக, மக்கள் உரிமைகளுக்காக துடிப்புடனும் அர்ப்பணிப்புடனும் இடைவிடாது குரல் கொடுத்து வருகின்றனர். முன்னெப்போதையும் விட இன்று, இந்திய ஜனநாயகத்திற்கு, சூழலுக்கேற்ப செயல்படவும் அடிமட்டத்திலிருந்தே இரண்டாவது விடுதலைப் போராட்டத்தைக் கட்டமைக்கவும் இந்தியக் கம்யூனிஸ்டுகள்தான் தேவைப்படுகின்றனர். இடதுசாரிகள் புத்துயிர் பெறுவதும் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்!
இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ‘நேசனல் ஹெரால்டு’ ஆங்கில நாளேட்டில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
