வெற்றிடத்தை காற்று நிரப்பும்
மொழிப்போர், வளாக மாணவர் அரசியல் மூலம் வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது திராவிட அரசியல். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அரசியலில் திமுகவும் அதிமுகவும் கோலோச்சி வந்தன. திராவிட அரசியல் என்ற பின்னணியில் தோன்றிய இக்கட்சிகள் மாணவர், இளைஞர்களுக்கு அரசியல் வேண்டாம் என்றன. கட்சி அரசியலுக்கு மட்டுமே மாணவர் இளைஞர்களை பயன்படுத்திக் கொண்டன. ரசிகர் மன்றங்களாக வைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தன.
கல்வி, மருத்துவம் தொடங்கி அனைத்திலும் திமுக, அதிமுக ஆட்சிகள் செயல்படுத்திய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிர ஏற்றத்தாழ்வை உருவாக்கின. சமூகத்தில் புதிய பிளவுகளை ஏற்படுத்தின. மாறி மாறி மாநிலத்தில் அரியணை ஏறிய திமுக - அதிமுக கட்சிகள் இந்தப் பிரச்சனையை கவனிக்கத் தவறின. மாணவர்கள், இளைஞர்கள் மாற்று பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.
கருணாநிதி எதிர் ஜெயலலிதா’ என்ற இருதுருவ அரசியல் கட்டமைப்புக்குள் சிக்கி கிடந்தது திராவிட அரசியல். இதனால் அதிருப்தி அடைந்த இளைய சமுதாயம் இக்கட்சிகளிடமிருந்து விலகத் தொடங்கின. மதிமுக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகள் ஓரளவுக்கு மாணவர், இளைஞர்களை ஈர்த்தன. என்றாலும் அவற்றின் திராவிடபாணி அரசியல் இளைஞர்களுக்கு சலித்துப்போய் விட்டது. இன்றைய அரசியல் பொருளாதார சூழல், வேலையில்லாத் திண்டாட்டம், நிரந்தரமற்ற பணிநிலை, சரியும் கூலி, நிச்சயமற்ற வாழ்க்கை நெருக்கடி, பறிபோகும் வாழ்வாதாரம், ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் போன்றவை இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர் மீது கடும் அதிருப்தியை, எதிர்ப்புணர்ச்சியை உருவாக்கியிருந்தன.
தமிழகத்தில், இடதுசாரிகள் புகழ்மிக்க வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர். ஆனாலும் அண்மைய சில பத்தாண்டுகளில் இடதுசாரி சிந்தனையை மாணவர், இளைஞர் அரசியலாக மாற்றுவதில் பெரிய வெற்றிபெற முடியவில்லை. புரட்சிகர அரசியலால் உத்வேகம் பெற்ற 60கள், 80கள், 90 களின் மாணவர் அரசியல், புதிய காட்சிகளை அரங்கேற்றின. சர்வாதிகார எம்ஜிஆர் ஆட்சி மாணவர் போராட்டங்களின் முன் பணிந்து போக வேண்டியிருந்தது. கல்லூரிகளில் மாணவர் பேரவையை ஒழித்துக் கட்டியதில் எம்ஜிஆருக்கு முதன்மைப்பங்குண்டு. இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய கடமையை இடதுசாரிகள், முற்போக்கு சக்திகளால் நிறைவேற்ற முடியவில்லை.
அதிகரித்த அளவில் திராவிடக் கட்சிகள் சார்ந்த அரசியல், Gen Z இளம் தலைமுறையினரை முக்கியமானதொரு அரசியல் பங்கேற்பாளர்கள் என்ற வகையில் கவனத்தில் எடுத்துக் கொண்டு அணிதிரட்டாமல் இடதுசாரிகள்
தனிமைப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில், கூடங்குளம் எதிர்ப்பு, மீதேன், ஈதேன் திட்ட எதிர்ப்பு, நெடுவாசல் போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, டங்க்ஸ்டன் எதிர்ப்பு உள்ளிட்ட கார்ப்பரேட் எதிர்ப்புப்போராட்டங்கள், மக்கள் நல்வாழ்வு சார்ந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், பண்பாட்டு அடையாளமான மெரீனா சல்லிக்கட்டு எழுச்சி இவற்றில் மாணவர் இளைஞர் பல்லாயிரக்கணக்கில் முன்னணி அணிவரிசையில் கலந்து கொண்டனர். திமுக-அதிமுக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் களத்தில், கட்சி சாராத மக்கள் திரள் போராட்டங்களில் பேரார்வத்துடன் இளைஞர்-மாணவர் கலந்து கொண்டனர். அண்மையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த தூய்மைப்பணியாளர் போராட்டத்திலும் ஆர்வம் காட்டினர். திராவிட கட்சிகளிடமிருந்து விலகிய மாணவர் இளைஞர்களின் ஒரு இடைக்கால தேடுதலாக இவை இருந்ததை புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட சூழலில் தவெகவில் வந்து முடிந்துள்ளது.
விஜய்க்குப் பின்னால் இளைஞர்கள்
தவெக பின்னால், இளைஞர்கள் அணிதிரண்டது வெறும் சினிமா ரசிக மனப்பான்மையால் மட்டுமல்ல. Gen Z தலைமுறை இளைஞர்கள், பொதுவான மரபார்ந்த அரசியல் செயல்பாட்டில் இயங்கவில்லையே தவிர, அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. ஆனால், அரசியலை அவர்கள் அணுகும் வழிமுறை வேறுபட்டுள்ளது. உச்சகட்ட ஊடக தொழில்நுட்பம், நிச்சயமற்ற தன்மை, முற்றிலும் புதிய பண்பாட்டு வேட்கை கொண்ட புதிய தலைமுறையின் சிந்தனைக்கும் செயலுக்கும் டிஜிட்டல் உலகம் பெரும் போராட்டக் களமாக மாறியது. எனவே தான், தவெக திட்டமிட்டு கட்டமைத்த டிஜிட்டல் பரப்புரை அவர்களை முழுமையாக சென்றடைந்து, வாக்குகளாக மாற்றியது
கடந்த மூன்றாண்டுகளில், விஜய் அரசியலுக்கு வந்தபிறகு, திமுக, அதிமுக போன்ற கட்சிகளைச் சாராத 20கள், 30கள் வயதுகளில் இருக்கும் கணிசமான இளைஞர்கள் விஜய்க்கு ஆதரவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 'தேர்தல் அரசியலில்' இறங்கினர். ஆள் மாற்றம் - ஆட்சி மாற்றம், வாரிசு அரசியல் - ஆட்சியாளர் கொள்ளை, ஊழல் - இலஞ்ச ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு என்ற அரசியல் பேசினார்கள். விஜய் கட்டமைத்த மொத்த அரசியல் பரப்புரையும், 'இன்றைய, நேற்றைய ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது' என்பதாகவே இருந்தது. தவெக அரசியல், பொருளாதாரம் அடிப்படை மாற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை! மற்றொரு கார்ப்பரேட் ஆதரவு கட்சியாகவே தெரிகிறது. ஆனாலும் இளைஞர், மாணவர்கள் “வரவேற்கத் தக்க மாற்றமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சமூகநீதி பேசிய திமுக ஆட்சியில், தலித்துகள் மீது நீடித்த ஒடுக்குமுறை, அமலாக்கப்படும் கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ திட்டங்கள், போராட்டங்கள் மீதான அரச அடக்குமுறைகள் பற்றி இளைய தலைமுறையினர் தீவிரமாக விவாதித்தனர்; பிறகு அது விஜய் ஆதரவு அரசியல் ஆக உருவாகியது. தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றதுடன், நாதக, விசிக, பாஜக, திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகள் சார்ந்த இளைஞர்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டது.
தலைநகர் தில்லியில், வட இந்தியாவில் RSS மாணவர் அமைப்பு ABVP இந்துத்துவ அரசியல் - கருத்தியல் அடிப்படையில் மாணவர்களை திட்டமிட்டு அரசியல்படுத்தி வருகின்றது. அதேபோல், AISA, SFI, AISF, உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி மாணவர் சங்கங்களும் மாணவர்களிடையே அரசியல், கருத்தியல் அணிதிரட்டும் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
திமுக, அதிமுக கட்சிகளுக்குள் மாணவர், இளைஞர் பயிற்சி முகாம்கள் நடைபெற்றதே தவிர, கல்லூரி வளாகங்களில் கொள்கை சார்ந்த அரசியல் விவாதங்கள் நடைபெறவில்லை. விளைவாக, மாணவர்கள் படிப்படியாக அரசியலில் இருந்து அந்நியப்பட்டவர்கள் ஆயினர்.
கல்லூரி கலை கலாச்சார நிகழ்ச்சிகள், பண்டிகைத் திருவிழா நிகழ்ச்சிகளில் கேளிக்கைகளும், பிற்போக்கு கருத்துகளும் மேலோங்கி, முற்போக்கு பண்பாட்டு விழுமியங்கள், அரசியல், கருத்தியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.
மாணவர் அரசியல் எழட்டும்!
தமிழ்நாட்டின் மாணவர்-இளைஞர் ஜனநாயக போராட்ட மரபின் தொடர்ச்சியாக, உண்மையான புரட்சிகர எழுச்சிக்கு வருங்காலத் தலைமுறையினரை, இளைஞர், மாணவர்களை, தயார்படுத்த வேண்டும். சமூக மாற்றத்திற்கான நமது புரட்சிகர அரசியலை அவர்கள் மத்தியில் பெரிய அளவில் நெருங்கி கொண்டு செல்லவேண்டும். இடதுசாரி பாதையிலான மாணவர் இளைஞர் அரசியலுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். இந்தப் பணிகளை செய்துமுடிக்க வேண்டியது புரட்சிகர இளைஞர், மாணவர் முன்னோடிகளின் வரலாற்றுக் கடமையாகும். இளைஞர்கள் எப்போதும் துடிப்பானவர்கள், மாற்றத்தை விரும்புகிறவர்கள். அவர்கள், மாற்றத்தின் தூதுவர்கள். அவர்களை திரட்டும்பணியில், முதன்மையானது, பகுத்தறிவு சமூக உணர்வு, புரட்சிகர விழிப்புணர்வு. முன்முயற்சி மிக்க செயல்துடிப்பு. இவற்றைக் கொண்டு ஸென் ஸி தலைமுறையை கட்டி எழுப்புவதில்தான் வெற்றிக்கான இறுதித் திறவுகோல் உள்ளது.
