இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடம் இல்லையா? – எஸ்.குமாரசாமி

முசாபர்நகர். மதச்சார்பற்றவர் என, இகக, இககமா தோழர்களின் தரச் சான்றிதழ் பெற்ற முலாயம் கட்சி ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில்தான், முசாபர்நகர் நடந்தது. முலாயமின் மதச்சார்பின்மை, அவரது சிறுபான்மையினர் சார்பு நிலை அவரை ‘மவுலானா’ முலாயம் என்று அழைக்கும் நிலைக்குச் சென்றது என்றார்கள்.

முசாபர்நகர், முலாயம் சாயத்தை வெளுக்க வைத்துவிட்டது. இந்திய பாணி மதச்சார்பின்மை எப்போது வேண்டுமானாலும் மதவெறியின் பக்கம் சாயும் என்பதை மீண்டும் ஒருமுறை அக்கறையுள்ள இடதுசாரிகளுக்கு கவனப்படுத்துகிறது.

முசாபர்நகர், பாக்பத், சாம்லி, மீரத் மாவட்டங்களில், இந்த முறை சங்பரிவார் கூட்டம், ஜாட் ஜாதியினரை இசுலாமிய வேட்டையில் ஈடுபடுத்துவதில் வெற்றி பெற்றது. பல பத்தாண்டுகளாக, வட இந்தியாவில் சங்பரிவார் மதவெறி அரசியல் தலைவிரித்தாடி வரும் போதும், ஜாட் சாதியினருக்கும் இசுலாமியருக்கும் மோதல்கள் நடந்ததில்லை. இசுலாமியர்கள் ‘காதல் புனிதப் போர்’ தொடுக்கிறார்கள் எனத் திட்டமிட்டு சங்பரிவார் துவக்கிய பிரச்சாரம், 2013ல்தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் படுகொலையில் முடிந்தது.

மறுபுறம் பாஜகவின் வாக்கு வங்கி நிறைந்தது. ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் ஜாட் வாக்குகள் பாஜகவுக்குக் குவிந்தன. கலவரம் நடந்திராவிடில், டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கும். இசுலாமிய வேட்டை. வாக்கு அறுவடை.

செப்டம்பர் அக்டோபரில், சொந்த மண்ணில் இசுலாமியர்கள் 40 ஆயிரம் பேர் வரை அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நிவாரண முகாம்களில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? இசுலாமியர்களிடம் நீங்கள் திரும்பவும் சொந்த ஊருக்குப் போக மாட்டேன் என உறுதிமொழி தந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் தருகிறேன் என்றார் முலாயம்.

இசுலாமிய சொத்துக்கள், வாழிடம், வாழ்ந்த கலாச்சாரம் எல்லாமே பறிபோகும். சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்குச் செய்ததை, சங்பரிவார் இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. இந்த வேட்டைக்கு, துணை போய் காவல் நிற்பவர்கள், முலாயம் வகையறாக்கள். இந்த வரிசையில், சங்பரிவாருடன், வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் சேர வேண்டும் எனத் தமிழ்நாட்டில் முயற்சிகள் நடக்கின்றன.

செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 20 வரை முகாம்களில் இருந்தவர்களில் குழந்தைகள் உட்பட 34 பேர் இறந்ததாக முலாயம் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் குப்தா, குளிரால் யாரும் சாவார்களா, சைபீரியாவில் மக்கள் வாழவில்லையா என்று கேட்டு, ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடுங்கள் என்று சொன்ன பிரெஞ்சு மகாராணி மேரி ஆன்டனெட்டை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

முசாபர்நகருக்கு முன்னோடி நிச்சயம் குஜராத்தான். 2002ல் நரேந்திரமோடி தலைமையில் குஜராத்தில் ஆயிரங்களில் இசுலாமியர்கள் கொல்லப்பட்ட பிறகு, 1,68,000 இசுலாமியர்கள் வாழுமிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நிவாரண முகாம்கள் மனிதர் வாழத் தகுதியற்றவையாக இருந்தன. சாகடித்தாய், பின்னர் தப்பிப் பிழைத்திருப்பவர்களைச் செத்து இருக்கலாமே என நினைக்க வைக்கிறாயே, என்ன அநியாயம் என நாடே கேள்வி எழுப்பியது.

மோடி பதில் சொன்னார். எங்கே எப்போது என்ன பதில் சொன்னார் தெரியுமா? குஜராத்தில், மெசானாவின் கோவில் நகரமான டெக்கார்ஜியில் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியபோது, செப்டம்பர் 9, 2002 அன்று நரேந்திரமோடி, நிவாரண முகாம்கள் குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்றார்.

இப்போது முலாயம், முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை, கேள்வி கேட்கும் மாற்றுக் கட்சியினரே உள்ளனர் என்கிறார். உச்சநீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகும், முகாம்களில் தங்கி இருந்தவர்களை வெளியேற்றி, அந்த இடங்களைப் புல்டோசர்களால் தரைமட்டமாக்குகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீது, அவர்களுக்கு நிவாரணமோ மறு வாழ்க்கையோ அளிக்காத முலாயம் கட்சி அரசாங்கம், வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு போட்டது.

பாப்ரி மசூதி இடிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த மத்திய காங்கிரஸ் அரசுதான், அன்று மசூதி இடிப்புக்குத் துணை போனது. இன்றும், பாதிக்கப்பட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், நிவாரணம், மறுவாழ்க்கை மறுப்பு நிகழும் போதும், மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு மவுனம் சாதிப்பதன் மூலம் மதவாத சக்திகளை ஊக்குவிக்கிறது.

ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இசுலாமிய மக்கள் மீளாத்துயரில் சிக்கி இருக்கும்போது, உத்தர பிரதேச அமைச்சர்களின் தலைமையில், சமாஜ்வாதி கட்சி, பாஜக, அஜித் சிங்கின் ஆர்எல்டி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், துருக்கி, கிரீஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, அய்க்கிய அரபு குடியரசு போன்ற நாடுகளுக்கு கல்வி ‘சுற்றுலா’ செல்கிறார்கள். முலாயம் மற்றும் அகிலேஷின் சொந்த மாவட்டமான எட்டாவாவில், செஃபாய் மஹோத்சவ் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், மாதுரி தீட்சித் ஆடிப்பாடிச் சென்றுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் நிலவரம் கலவரமாக இருக்கும்போது டெல்லி தலைநகர் மண்டலத்தில் என்ன வாழ்கிறது? ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், காஷ்மீரில் இராணுவம் இருக்கலாமா வேண்டாமா என்பதில் காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றார். தேச விரோத மக்கள் விரோத தேச பக்தர்கள் கூப்பாடு போட, பிரசாந்த் பூஷன் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி எனவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராணுவ விவகாரங்களில் ராணுவமே பார்த்துக் கொள்ளும் எனவும் சொல்லிப் பின்வாங்க நேர்ந்தது. அதற்குப் பிறகும், ஆம் ஆத்மி கட்சியின் கவுசாம்பி அலுவலகம் இந்து ரக்ஷா தள் என்ற சங்பரிவார் அமைப்பால் சூறையாடப்பட்டது.

தமிழகத்தின் நிலைமை என்ன? பொய் வழக்குகள். சிறையிலடைப்பு. சமூக பொருளாதார வாழ்வில் தொடர் புறக்கணிப்பு. ஓரஞ்சார விளிம்புகளுக்கு விரட்டப்படுதல். சென்னையில் ஏழை இசுலாமிய சிறுவன் தமீம் அன்சாரிக்கு நேர்ந்த கதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனப் பொருத்திப் பார்க்க உதவும்.

மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த முகம்மது ஹனிபா மற்றும் ஷபீனா பேகத்தினுடைய மகன் தமீம் அன்சாரி. முகம்மது ஹனிபா ஆட்டோ ஓட்டி வாழ்ந்து மடிந்தவர். ஷபீனா பேகம் ஓர் உணவகத்தில் பாத்திரம் கழுவுவதோடு கிடைத்த வீட்டு வேலைகளைச் செய்பவர். ஒற்றையறை வாடகை வீட்டில் மாற்றுத் திறனாளியான ஒரு சகோதரியும் தமீம் அன்சாரிக்கு இருக்கிறார். தமீம் அன்சாரிக்கு வயது 16. தமீம் அன்சாரி ஒரு பாவம் அல்ல, இரு பாவங்கள் செய்துள்ளார். முதல் பாவம் அவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தது. இரண்டாவது பாவம் அவர் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது.

கோவில் உண்டி திருட்டு சம்பந்தமாக இவரை நீலாங்கரை காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்றார்கள். காவல் ஆய்வாளர் புஷ்பராஜூக்கு சிறுவன் அன்சாரி எல்லை தாண்டிய பயங்கரவாதியாகக் காட்சியளித்துள்ளான். அவர் சொல்லும் குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி அன்சாரியின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மிரட்டினார் எனவும் அப்போது குண்டு வெடித்தது எனவும் சொல்லப்படுகிறது. ஆபத்தான நிலையில் அந்த சிறுவன் சோழிங்கநல்லூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

காவல் ஆய்வாளர் புஷ்பராஜ், கவனக் குறைவாக நடந்து கொண்டார் என்று சுலபமாகச் சொல்லி தப்பிக்க விடக்கூடாது. சிறுவனை இவர் சிறுவர் நீதி வாரியம் முன்பு ஆஜர்படுத்தியிருக்க வேண்டும். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் அன்சாரியின் வாயில் துப்பாக்கியை வைத்தது குற்றம். ஒப்புதல் வாக்கு மூலத்தை மிரட்டிப் பெறப் பார்த்தது குற்றம். துப்பாக்கியால் சுட்டது குற்றம்.
பெண்கள் விசயத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கூருணர்வால் தருண்தேஜ்பால் இன்னமும் சிறையில் இருக்கிறார். காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் ஏழை இசுலாமிய சிறுவனை சுட்டதற்காக சிறையிலடைக்கப்பட வேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

தலைப்பில் உள்ள கேள்வியை, அதாவது, இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியை எப்படி அணுகுவது? இசுலாமியர்க்கு இந்தியாவில் இடம் இல்லை என்பவர்கள்தான், பழங்குடியின மக்களுக்கு வனங்கள் சொந்தம் இல்லை, தலித்துகளுக்கு கவுரவம் சமத்துவம் மீது உரிமை இல்லை, விவசாயிகளுக்கு விவசாய நிலங்களின்மீது உரிமை இல்லை, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வேலை பணிப்பாதுகாப்பு சங்க உரிமை இல்லை என்கிறார்கள்.

சுரண்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள், சாதி மொழி இன மத எல்லைகள் தாண்டி, பண மூட்டைகளுக்கு, ஊழல் பெருச்சாளிகளுக்கு, மதவெறியர்களுக்கு, ஆதிக்க சக்திகளுக்கு இந்தியா இல்லை தமிழ்நாடு இல்லை என, உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். தனித்தனி சிறுபான்மைகள், கரம் கோர்த்தால் பெரும்பான்மை. அடையாள அடிப்படையிலான இயக்கங்கள், தனிப்பிரச்னைகள் மீதான இயக்கங்கள், அனைத்தும் தழுவிய விதத்திலான விடாப்பிடியான இடதுசாரி ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து களம் கண்டால், காலம் மாறும்.

Back-to-previous-article
Top