குமரியில் வீட்டுமனை கோரி மறியல்

ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆராச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் 1650 பேருக்கு பட்டா கேட்டு இகக(மாலெ) பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள பின்னணியில், பிப்ரவரி 3 அன்று மறியல் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு முன்னதாக ஜனவரி 31 அன்று ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது.

இகக(மாலெ) அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து நடத்திய கூட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி கலந்து கொண்டார். கூட்டத்திற்கு தோழர்கள் சந்திரிகா, மேரிஸ்டெல்லா, சுசீலா, யூஜிலா, கலா, மார்க்கரெட் மேரி, ஹெலன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பிப்ரவரி 3 மறியல் போராட்டத்தில் பெருந்திரளில் அணி திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் மனுக்கள் பெறும் பிப்ரவரி 3 அன்று அறிவிக்கப்பட்ட மறியல் போராட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. பெரும் எண்ணிக்கையில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி பல பகுதிகளிலிருந்து பெண்கள் வந்து குவிந்தனர்.

போராட்டத்தை தடுத்து நிறுத்த வந்து சேர்கிற பெண்களை காவல் துறையினர் கைது செய்யத் துவங்கினர். ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் உட்பட வேறு சிலரையும் கைது செய்ததால் தகராறாக மாறி குழப்பம் நிலவியது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆக்கிமிப்பாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடேசன், இடம் முறைப்படி பட்டா பெறப்பட்டு விற்கப்பட்டு, பல கை மாறியிருப்பதாக தெரிவித்து அரசியல் ஆதாயத்துக்காக தோழர் அந்தோணிமுத்து நாடகமாடுகிறார் எனப் பேட்டியளித்தார்.

ஆக்கிரமிப்பு கும்பல், சில பெண்களை தயார் செய்து தங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நிலம் பெற்றுத் தருவதாக அந்தோணிமுத்து வாக்குறுதி கொடுத்ததாக பொய் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தொடர்கிற பெண்கள் 04.02.2014 அன்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று புகார் மீது கண்காணிப்பாளர் அவர் அலுவலகத்திலேயே நேரடி விசாரணை நடத்தி உண்மையை அறிந்திட வேண்டுமென மனு கொடுத்தனர்.

மறுபுறம் அச்சுறுத்தும் முகமாக தோழர் அந்தோணிமுத்துவின் மகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவர் வீட்டின் மீது கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். தோழர் அந்தோணிமுத்து மீது இதுவரை 32 பொய் வழக்குகள் பதியப்பட்டு அவர் 20 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடே, ஜனவரி 30 அன்று 800 பெண்கள் கலந்து கொண்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் இரண்டாவது மாவட்ட மாநாடும் நடத்தப்பட்டது. தோழர் மேரி ஸ்டெல்லா மாவட்ட தலைவராகவும் தோழர் சுசீலா மாவட்டப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து உரையாற்றினர்.

Back-to-previous-article
Top