ஜெயலலிதாவின் அரசியல் காய் நகர்த்துதலே ஏழு பேர் விடுதலை

உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு முடிவுகள்

18.02.2014. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

19.02.2014. ஜெயலலிதா அமைச்சரவையைக் கூட்டி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும், அம்முடிவை மத்திய அரசுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தந்து அனுப்புவதாகவும், எது எப்படி இருப்பினும், மூன்று நாட்கள் முடிந்த பிறகு, அவர்களைத் தமிழக அரசு விடுதலை செய்யும் என்றும் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

20.02.02014. தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவில், உச்சநீதிமன்றம் ஸ்டேட்டஸ் குவோ அனுசரிக்குமாறு, இடைக்கால உத்தரவிட்டது. அதாவது, விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் என்ன சொன்னார்கள்?.

ராகுல் காந்தி, தமிழக அரசாங்கத்தின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும், முன்னாள் பிரதமருக்கே இந்நிலை என்றால் சாமான்ய மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்றும் கோபம் மற்றும் விரக்தியின் கலவையை வெளிப்படுத்தினார். பாஜகவின் அருண் ஜெட்லி ராகுல் காந்தி சொன்னது போலவே பேசினார். காங்கிரஸ் பாஜக இருவருக்கும் மாற்று என்று சொல்லிக் கொள்ளும் ஆம்ஆத்மி யின் அர்விந்த் கெஜ்ரிவாலும், ஏழு பேர் விடுதலை தவறு என்றே சொன்னார்.

ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் நடக்கக் கூடாதது நடந்து விட்டதாகவும், ஏழு பேர் விடுதலை அஇஅதிமுக, திமுக போட்டி அரசியலின் மோசமான விளைவு என்றும், ஏதோ உயர்ந்த பீடத்திலிருந்து உபதேசம் செய்வதுபோல் பேசின. தி இந்து ஆங்கில நாளேடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏழுபேர் விடுதலை ஒரு தொடர்பு அகற்றுதலை (டிஸ்கனக்ட்) கொண்டு வந்துள்ளதாகத் தலையங்கம் தீட்டியது. திராவிட இயக்கம் துவக்க காலங்களில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று தி இந்து நாளேட்டை விவரித்ததற்குப் பொருத்தமாகவே எழுதியது.

தமிழ்நாட்டில், எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டன. எந்த ஓர் உண்மையான தமிழனும் தமிழச்சியும் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்வார்கள் என்பதாகவே பொதுக் கருத்து கட்டமைக்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக, தமிழ்நாடு ஆம்ஆத்மியின் கிறிஸ்டினா சாமி, ஆம்ஆத்மியின் புதிய கூட்டாளியாக மாறத் தயாராகும் உதயகுமார் ஆகியோரெல்லாம் ஏழு பேர் விடுதலையை வரவேற்றனர். தமிழ்நாட்டில் ஒரு நிலை, இந்தியாவில் ஒரு நிலை என எடுப்பதில் சங்கடமோ கூச்சமோ அவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபலமான தமிழ் தேசியவாதிகளுக்கு அம்மா போற்றி பாட, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஜெயலலிதா, கருணாநிதி இருவருமேஇரட்டை வேடம் போடுபவர்கள்தான்

2000த்திலேயே, தூக்கு தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனையை அரசியலமைப்புச் சட்டப்படி பரிசீலிக்க, கருணாநிதி அரசுக்கு வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதி அரசு, நளினிக்கு மட்டுமே ஆயுள் தண்டனை எனக் குறைக்கப் பரிந்துரை செய்தது. 23.10.2008ல் நமது எம்ஜிஆர் நாளேட்டில், ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா நளினியைச் சந்தித்தபோது, ஜெயலலிதா பின்வரும் பொருளில் அறிக்கை வெளியிட்டார்:

நளினியை பிரியங்கா பார்த்தது சரியா? இது பிரியங்கா சோனியாவின் சொந்தப் பிரச்சனையா? இது அவர்களுடைய குடும்பப் பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டின் பிரச்சனை. இது முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பானது. இது இந்த நாட்டின் இறையாளுமைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை கருணாநிதி மரண தண்டனையில் இருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வருகிற போதொல்லாம் விடுதலை புலிகளுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிரங்கமாக நடக்கின்றன. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன்.

2008ல் ஜெயலலிதா சென்னது இருக்கட்டும். 2014ல் நளினி தன் 90 வயது தந்தை சங்கர நாராயணனைப் பார்க்க ஒரு மாதம் பரோலில் (சிறையிலிருந்து விடுப்பில்) செல்ல அனுமதி கேட்டபோது ஜெயலலலிதா அரசு என்ன சொன்னது? நளினியின் தந்தை இருக்கும் பகுதி மலைப்பகுதி. நளினியை தேர்தல் காலத்தில், அவர்கள் தந்தை இருக்கும் விக்கிரமசிங்கபுரத்துக்கு அனுப்பினால், பல தலைவர்கள் அவரைப் பார்க்கச் செல்வார்கள்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும். ஆகவே பரோல் கூடாது. (நளினியின் தந்தையும் அவர் வருவதை ஏற்கவில்லை என்றும்கூட சொல்லப்பட்டது). அக்டோபர் 2008ல் மட்டுமல்லாமல் ஜனவரி 2014லிலும் ஜெயலலிதா நளினியின் விடுதலைக்கெதிராக மட்டுமின்றி பரோலுக்கும் எதிராக இருந்தார். இப்போது 19.02.2014ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் கூடவே நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய அறிவிப்பு வெளியிடுகிறார்.

ஜெயலலிதாவின் 19.02.2014 முடிவில், கருணை, தமிழ் உணர்வு, ஜனநாயக அக்கறை என்ற எதுவும் இருப்பதாக, எவர் சொன்னாலும் அவர் ஒன்று ஏமாறுகிறார் அல்லது ஏமாற்றுகிறார். எம்ஜிஆர் ஒரு திரைப்பாடலுக்கு ஏமாறாதே ஏமாற்றாதே என வாயசைத்தது இப்போது நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தினால், நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நடந்தது என்ன? தீர்ப்பு என்ன சொல்கிறது?

வேறெங்கும் போகாமல் இணையதளத்தில் காணப்படும் 18.02.2014 தேதியிட்ட மாற்றப்பட்ட வழக்கு (குற்ற) எண்கள் 1, 2, 3/2012ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு விவரங்களிலிருந்தே நடந்தவற்றைக் கண்டறியலாம்.

• வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 72, 161 பிரிவுகள்படி முறையே குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர், மூவரின் கருணை மனுக்களைப் பரிசீலிப்பதில் தேவையற்ற அளவுக்கதிகமான கால தாமதம் செய்திருந்தனரா என்பது தொடர்பானதாகும். அப்படிச் செய்திருந்தால் அது அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர் வாழும் உரிமை தொடர்பான பிரிவு 21க்குப் புறம்பானதா?

• 12.08.2011 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் மூவரை தூக்கிலிட உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்ற வாதத்துடன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்கக் கோரப்பட்டது.

• 1991ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். விசாரணை நீதிமன்றம் 28.01.1998ல் மரண தண்டனை வழங்கியது. மூவரும் 1991லிருந்து சிறையில் உள்ளனர். மரண தண்டனைக்கு எதிரான மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தால் 08.10.99 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

• 17.10.1999 அன்று ஆளுநர் முன் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநர் மாநில அரசை கலந்தாலோசிக்காமலே 27.10.1999 அன்று கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இப்படி செய்தது தவறு என 25.11.1999 தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்கச் சொன்னது. 25.04.2000ல் ஆளுநர் மீண்டும் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். கருணை மனு குடியரசுத் தலைவருக்கு 26.04.2000 அன்று அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் கருணை மனுவை 12.08.2011ல் நிராகரித்தார். மூவருக்கும் இத்தகவல் 29.08.2011 அன்று தரப்பட்டது.

• கருணை மனுவின் மீது முடிவு எடுக்காமல் காரணம் இன்றி தாமதப்படுத்துவது சித்தரவதை என்றும், அப்படிச் செய்வது உயிர் இருக்கும் கடைசி வினாடிவரை உள்ள உயிர் வாழும் உரிமையை மீறுவதாகும் என்றும், உச்ச நீதிமன்றம் சத்ருகன் சவுகான் வழக்கில் 21.01.2014 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.

• மூவர் வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் கூலம் வைஷ்ணாவதி கருணை மனு கோப்பு 5 வருடங்கள் ஒரு மாதம் ஏதோ ஒரு மேசை அறையில் தங்கியிருந்தது எனவும், பின்னர் குறிப்பு எழுதப்பட்டது எனவும், அதன் பின்னர் 5 வருடங்கள் 8 மாத தாமதத்திற்கு விளக்கம் ஏதுமில்லை எனவும் சொன்னார்.

• 11 ஆண்டுகளுக்கு மேலான தாமதத்திற்கு ஏற்கக்கூடிய காரணம் ஏதும் இல்லாததால், உயிர் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது. அதனால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. தீர்ப்பின் கடைசிப் பத்தி இந்த ஆயுள் தண்டனையும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவுகள் 432, 433ஏவுக்கு உட்பட்டது எனச் சொன்னது.

திரும்பவும் 2011க்குச் செல்வோம்

மூவர் தூக்கு 12.08.2011ல் உறுதியான பிறகு, முதலில் ஜெயலலிதா தமது அரசு செய்ய எதுவும் இல்லை என்றார். களத்தில் கழகங்கள் எதுவும் இல்லாமலே தமிழகம் கொந்தளித்தது. பற்றியெரிந்தது. செங்கொடி எரிந்து சாம்பலானதும் நடந்தது. அப்போது ஜெயலலிதா மூவர் தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத் தீர்மானம் கொண்டு வந்தார். மூவர் தூக்கு தண்டணை ரத்து கோரிக்கை தமிழக மக்களால் வலுப்பெற்றதேயொழிய, ஜெயலலிதாவாலோ கருணாநிதியாலோ அல்ல.

சென்னை உயர்நீதிமன்றம் 20287, 20288 20289/2011 எண்ணிட்ட ரிட் மனுக்களில் தூக்குத் தண்டனைக்கு தடை விதித்தது. பின்னர் தான், வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாறி அங்கே 18.02.2014 தீர்ப்பும் அதன் பின்பு 19.02.2014ல் தமிழக அரசின் எழுவர் விடுதலை அறிவிப்பும் வந்தன.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது, இன்றளவில் முழுமையாக சட்டப்பூர்வமானதாகும். இதில் மறு பரிசீலனை சாத்தியமேயில்லை எனச் சொல்ல முடியும். ஆக விவாதம் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய முடியுமா என்பது தொடர்பானது. (அதிலும் கூட, 433ஏ பிரிவுப்படி ஆயுள் தண்டனை ரத்து, 14 வருடங்கள் சிறையில் இருந்தவர்கள் விசயத்தில் மட்டுமே சாத்தியம்)

விவாதம் சட்டம் சார்ந்தது மட்டுமா?
பிரச்சனை தமிழர் விவகாரமாக சுருங்குமா?அல்லது ஜனநாயக கரிசனமாக மாறுமா?

மூவர் தண்டனை குறைப்பில் சிஆர்பிசி 435படி மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என முதல்வர் சட்டமன்றத்தில் சொன்னதே சரியல்ல என்ற வலுவான கருத்து உள்ளது. மூவர் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் இபிகோபடிதான் உறுதி செய்தது, ஆகவே, 435அய் நாடியிருக்க வேண்டாம் எனவும், நாடியதால்தான் மத்திய அரசு முடிவுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் இந்தக் கருத்து சட்டரீதியாக நீள்கிறது.

மாநில அரசுக்கு ஆயுள் தண்டனையை குறைப்பதற்கான சுதந்திரமான அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 மற்றும் சிஆர்பிசி 432ன் கீழ் உள்ளது என்பதும் கூட வலுவான கருத்தாகவே இருக்கின்றது. இங்கேதான் சட்டப் பிரிவுகள், நீதிமன்றங்கள் தாண்டி மக்கள் மன்றம் ஜெயலலிதா அரசை ஆயுள் தண்டனையை நீக்க நிர்ப்பந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

குற்றவியல் சட்டப்பிரிவு 432, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161படி தண்டனை குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. 20.02.2014 தேதிய உச்சநீதிமன்ற ஸ்டேட்டஸ் குவோ உத்தரவும் ஆயுள் தண்டனையை ரத்து செய்யும் அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. மாறாக அதிகாரம் பயன்படுத்தப்பட்ட முறை பற்றியே கேள்வியும் கவலையும் வெளிப்படுத்தப்பட்டன. தடை விரைந்து நீங்க, சட்டமும் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் அதனதன், அவரவர் வேலைகளை பார்த்துக் கொள்ளட்டும். நாம் மக்களின் கருத்து ரீதியான மற்றும் களரீதியான அணிதிரட்டல் பற்றி யோசிப்போம்.

ஜெயலலிதாவின் தண்டனைக் குறைப்பு அறிவிப்பு, திமுக காங்கிரஸ், திமுக தேமுதிக காங்கிரஸ் கூட்டணிகளை சிக்கலாக்கியுள்ளது என்பதுதான் இம்முறை தனிக்கவனம் பெறும் அரசியல் காய் நகர்த்துதல் ஆகும். மற்றபடி அவர் முடிவில், நாடாளுமன்ற தேர்தலோடு தமிழர் நலன் மீதான கரிசனத்தைத் தொடர்புப்படுத்தப் பார்க்கிறார் என்பது, சுலபமாகப் புலப்படும் ஒரு விசயமே.

நாட்டின் பிரதமர் படுகொலை தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை ரத்தா என்ற கேள்வி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டப்பிரிவுகள்படி இந்தியாவில் எந்த ஒருவரையும் கொலை செய்த எவருடைய ஆயுள் தண்டனையும் ரத்து செய்யப்பட முடியும் என்றால், ராஜீவ் காந்தி வழக்கில் மட்டும் வேறு அணுகுமுறை கோருவது, சிலர் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் சமமானவர்கள் (மேலானவர்கள்) என்று சொல்வதாகாதா?

பிரச்சனையை வெறுமனே தமிழர் விவகாரமாகக் குறுக்குவது ஆபத்தானதாகும். பிரச்சனை உலகளாவியது. நாடு தழுவியது. விடாப்பிடியான முழு நிறைவான ஜனநாயகம் தொடர் பானது. அப்சல் குருவிற்கு உச்சநீதிமன்றம் அநியாயம் இழைத்தது. இப்போது மரண தண்டனைக் குறைப்பு, மரண தண்டனைக்கு உள்ளானோர் குடும்பத்திற்கு பார்க்கும் உரிமை போன்றவை பற்றி எல்லாம் ஏதேதோ சொன்னாலும், ஜனநாயகத்தின் முன்னால் மக்கள் மன்றத்தின் முன்னால் உச்சநீதிமன்றத்திற்கு பாவ மன்னிப்போ பரிகாரமோ கிடையாது. (சட்டப்படி அல்லாமல், தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை என்றார்கள்).

கடுமையான அரசு, கடுமையான சட்டங்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள், நவீன முதலாளித்துவ அரசுகளின் ஆயுதங்களாகும். தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். எதிர்ப்புப் போராட்ட அரசியல் கைதிகளின் ஆயுள் தண்டனை 14 ஆண்டுகளுக்கு மிகாமல் குறைக்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்தின் குரல்.

மணிப்பூர், காஷ்மீர், சட்டிஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட் சிறைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் பசுமை வேட்டை மூலமும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் மனித உரிமைப் பிரச்சனைகள் ஜனநாயகத்தின் முன் உள்ள சவால்களே. இந்தியாவில் தமிழகத்தில் இஸ்லாமிய அரசியல் கைதிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இவர்களது தண்டைனை நீக்கத்தையும் நாம் கோருவோம். தமிழர், காஷ்மீரி, மாவோயிஸ்ட், இஸ்லாமியர் அடையாளங்கள் தாண்டி, ஒடுக்குமுறை, சித்தரவதை, அதீத தண்டனைகளை எதிர்த்திடுவோம்.

செத்த பின்பு சொர்க்கம் என்றால் இப்பிறவி என்னாச்சு என்ற கேள்வி பொருள் நிறைந்தது. ஆனால் ஜெயலலிதாவோ நல்ல காலம் இப்போது வராது பிறகு ஒருகாலம்தான் வரும் என்று பல விசயங்களில் பல நேரங்களில் சொல்லி வருகிறார். 2023ல் ஒரு வழியாக நல்ல காலம் வரும் என்றும் அதற்கு முன் 40க்கு 40 தந்தால் நல்ல காலம் என்றும் தராவிட்டால் டெல்டா பாலைவனம் ஆகும் என்றும் ஜெயலலிதா சொன்னதை நாம் மறக்க முடியாது.

2011ல் 100 நாட்கள் ஆட்சி நிறைவு மற்றும் நிதிநிலை அறிக்கை தாக்கல் நேரத்தில் ஜெயலலிதா பாடினார்:

வருந்தாதே ஏழை மனமே
வருங்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்

எழுவர் விடுதலையிலிருந்து தமிழக மக்களின் அமைதி, வளம், முன்னேற்றம் வரை நல்ல காலமும் இன்பமும் திருநாளும் தாமாக வராது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் மூலமே அவை சாத்தியமாகும்.

Back-to-previous-article
Top