பாசிசம்: சம காலப் புரிதலும் சவால்களும்

ஒவ்வொன்றும் ஒரு விதம்

பாசிசம் நாசிசம் என்ற சொற்கள் 1930 களில் 1940களில்தான் உலகிற்கு அறிமுகமாயின. மார்க்சிய – லெனினியம், மூர்க்கமாக முன்னேறும் ஏகாதிபத்தியத்தோடு தொடர்புப் படுத்தியே, அன்று பாசிசத்தை விவரித்தது. மார்க்சிய -லெனினியம், உயிரற்ற மூடுண்டு போன விஷயம் அல்ல; அது ஒரு வற்றாத ஜீவ ஊற்று. 1930 – 1940 காலத்தோடு, சமூக வாழ்வும் வரலாறும் உறைந்து நின்றுவிடவில்லை. ஜெர்மனி – ஹிட்லர், இத்தாலி – பெனிட்டோ முசோலினி ஜோடிகளுடன் ஆசியாவின் ஜப்பானும் பாசிஸ்ட்களாக அடையாளம் காணப்பட்டனர். அவையும் ஒரே சீரான தன்மைகள கொண்டவை அல்ல. அந்தக் காலத்திலேயே, ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிராங்கோ, போர்ச் சுகல்லில் அந்தோனியோ டி ஒலிவெய்ரோ சலேசார், ஹங்கேரியில் மிக்கோலஸ் ஹோர்சி, ருமேனியாவில் அயன் அன்டலோஸ்கு என்ற பாசிச சர்வாதிகாரிகளும் இருந்தனர். பின்னர், கீழை நாடுகளிலும், ஆசிய, தென்அமெரிக்க நாடுகளிலும் பாசிஸ்ட் ஆட்சிகள் இருந்துள்ளன. இந்தோனேஷியா சிலி ஆகிய நாடுகளை அடையாளப்படுத்த முடியும். அவசர நிலைப் பிரகடன கால இந்திரா ஆட்சி, சிறீலங்காவின் ராஜபக்சே ஆட்சி ஆகியவற்றையும் பாசிஸ்ட் ஆட்சிகளாகக் காட்டமுடியும். இப்போதைய சங் பரிவாரின் அங்கமான பாஜகவின் நரேந்திர மோடியின் ஆட்சியை, பெருந்தொழில்குழும மதவெறி (கார்ப்பரேட் கம்யூனல்) பாசிஸ்ட் ஆட்சி என அழைக்கலாம்.

வேறுபாடுகள் தாண்டிய அடிப்படையான ஒற்றுமை

சுவையான ஒரு முரணுடன் (துணைத் தலைப்புடன்) துவங்கலாம்.வேற்றுமைகளில் ஒற்றுமையை நிராகரிப்பது, பாசிஸ்ட்களின் பொதுப் பண்பு. பாசிஸ்ட்களும் கூட,         முதலாளித்துவ அமைப்புபற்றி அதில் உள்ள ஊழல் போன்ற விஷயங்கள் பற்றி காரசாரமாக விமர்சிப்பது, தேச மக்களின் வளமான வருங்காலம் பற்றிப் பேசுவது போன்றவற்றைச் செய்வார்கள். ஹிட்லரின் கட்சியின் பெயரில், ‘தேசிய’‘சோசலிஸ்ட்’ என்ற சொற்கள்      இருந்தன. ஆனபோதும், சாராம்சத்தில், பாசிச ஆட்சிகள் அனைத்துமே, தனிச் சொத்தின் பாதுகாவலர்களே. வருமானங்கள் மற்றும் செல்வங்களை, ஆகக் குறைவான சிலர் கைகளில் குவிக்கும், ஏகப்பெரும்பான்மை மக்களிடம் இருந்து பறிக்கும், சமூக அமைப்பிற்கு பொருளாதாரத்திற்கு, அரசியல்ரீதியாகத் தலைமை தாங்குவார்கள். அடிப்படை ஒற்றுமை, இந்த படுமோசமான, பாரதூரமான பொருளாதார மறுவிநியோகத்துடன் தொடர்புடையதாகும்.

நாட்டுப்பற்று தேசியம் தேச நலன் தேசப் பெருமிதம் தேசப் பாரம்பரியம் எனக் கொடி பிடிப்பார்கள். இன நிற மொழி சாதி மத அடிப்படைகளிலான ஆதிக்க வாதத்தை (சாவுனிசம் – டாமினேஷன்), ‘நாம் எதிர் அவர்கள்’ என்ற சமன்பாட்டைக் கட்டமைத்து, சமூகப் பதட் டத்தை சமூகப் பிளவுகளை உருவாக்குவார்கள்; அவற்றின் துணை கொண்டு, அவற்றின் மீது நின்று கொண்டு, ஒரு வலுக்கட்டாயமான ஒழுங்கை ஒற்றுமையைத் திணிப்பார்கள். துப்பாக்கி தடி கொண்டு என்று மட்டுமல்லாமல், சமூகத்தின் சிந்தனையின் மீது மேலாதிக்கத்தை தற்காலிகமாக வென்று நிறுவவும் செய்வார்கள்.

ஆனால், வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு வரலாற்றுக் கட்டங்களின் தன்மைகளை, கூறுகளைப் பெறுகிற பாசிசம், முதலாளித்துவ நெருக்கடி முற்றும் போது, நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியில, ஆளும் வர்க்கங்களின் ஆகப் பிற்போக்கான பிரிவினர் உந்தித் தள்ளும் அரசியல் பதில்வினையாகவே, எப்போதும் இருந்துள்ளது. பாசிசத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் தேர்தல்களுக்கும் தொடர் பில்லை எனக் கருதுவது, அரசியல்         அறியாமையே. (நாடாளுமன்ற ஜனநாயகமே, ஏகப் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வாக்குகளுடன், முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிற, முதலாளித்துவ சர்வாதிகாரம்தான்). 534 நாடாளுமன்ற இடங்களில் 282 இடங்களை வென்றும் கூட பாசிசம் ஆட்சிக்கு வரும்.

சமகால உலகில், அய்க்கிய அமெரிக்கா தலைமை தாங்கும் ஒரு ‘சர்வதேச அளவிலான பயங்கரவாத எதிர்ப்புப் போர்’ நீடிக்கும்  போது, வன்மையான அரசு கடுமையான சட்டங்கள் (ஏஅதஈ நபஅபஉ ஏஅதநஏ கஅரந) அடிப்படையிலேயே ‘ஜனநாயக ஆட்சிகள்’ நடை பெறும்; அங்கு பாசிசக் கூறுகளின் ‘அளவு’ மாற்றம், ஒரு கட்டத்தில், முழுமையான பாசிச அரசு என்ற ‘பண்பு’ மாற்றமாக மாறும். அளவு மாற்றம் பண்பு மாற்றமாகிறது என்பது சரியே என்றாலும், இந்தப் புதிய பிரும்மாண்டமான ‘அளவும்’, இந்தப் புதிய ‘பண்பும்’ கூட, சமூகம் இதுவரை சந்தித்திராத கொடூரங்களை அரங்கேற்றும் என்பதும், அவற்றை எதிர் கொள்ள, வழக்கத்திற்கு மாறான பதில்வினைகள் தேவை என்பதும், கவனத்தில் கொள்ளத்தக்கவையாகும். தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, சமூக ஊடகங்கள் பரந்து விரிந்துள்ள உலகில், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் பழகிப் போயுள்ள உலகில், ஒரு முழு முற்றூடான பாசிச ஆட்சி, அப்படியே நீடிப்பதும் மிகவும் கடினமாகும்.

முதலாளித்துவ நெருக்கடி

             கருவான முதலாளித்துவப் பொருளாதாரங்கள், மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் வேலை இன்மை, குறை வேலை வாய்ப்பு, வீணாக்கப்படும் உற்பத்தி ஆற்றல் ஆகியவற்றால் குறிக்கப்படும் நீண்ட கால தேக்கத்தைச் சந்திக்கின்றன. வளர்ச்சி விகிதம் என்பதில் ஒரு நீண்டகால சரிவுப் போக்கு தொடர்கிறது. வருமான மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு, மலைக்கும் மடுவுக்கும் இடையிலானதாக மாறிவிடுகிறது.

             தேக்கமும் ஏற்றத்தாழ்வும் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி ஒன்றை ஒன்று பலப்படுத்தவும் செய்கின்றன.

             வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கம், முதலாளித்துவப் பொருளாதாரத்தின், அசிங்கம் பிடித்த ரகசியங்களை வெளியே கொண்டு வந்துள்ளது. வருமான, செல்வ ஏற்றத் தாழ்வுகள் பாரதூரமாய் அதிகரிக்கின்றன என்ற விவரங்கள் இதற்கு முன்பும் கிடைத்தனதான் என்றபோதும், இப்போது 99% எதிர் 1% இயக்கத்திற்குப் பிறகு, அவை, போதுமான ஊடக, சமூக ஊடக கவனம் பெறுகின்றன.

சில விவரங்கள்

             எக்கனாமிக் பாலிசி இனிஷியேடிவ் – பொருளாதார கொள்கை முன்முயற்சி அமைப்பு 1979 முதல் 2013 வரை உற்பத்தித் திறன் உயர்வு 68.9% இருந்தும், தனியார் துறையின் 80% உற்பத்தித் தொழிலாளர்களின் வருமானம் 8% மட்டுமே உயர்ந்தது என்கிறது.

             அய்க்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி.இதில் வயது வந்தோர் 26 கோடி.அவர்களில் 1% என்பது 26 லட்சம். 0.1% 2.6 லட்சம். 0.01% 26,000 பேர் ஆகும்.

             13 கோடி பேரின் வருமானத்தை செல்வத்தை 400 பேர் வைத்துள்ளனர்.

             1950 முதல் 1970ல் சமூகத்தின் கடைநிலை 90% சம்பாதிப்பவர்கள், 1 டாலர் கூடுதலாகச் சம்பாதித்தபோது, மேல் நிலை 0.01%, அதாவது சுமார் 14,000 குடும்பங்கள் 162 டாலர்கள் சம்பாதித்தனர். அதாவது 162 மடங்கு ஏற்றத்தாழ்வு. இதே ஏற்றத்தாழ்வு 1990 – 2002 காலகட்டத்தில் 18,000 மடங்கானது.

அய்ரோப்பாவில் சில விளைவுகள்

ஏற்றத்தாழ்வுகள், ஒட்டுமொத்த தேக்கத்தை ஆழப்படுத்தி தீவிரமடைய           வைத்துள்ளன.ஸ்பெயின் கிரீஸ் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற அய்ரோப்பிய நாடுகளில் கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்கள், போர் எதிர்ப்பாளர்கள் பல லட்சங்களில் அணி திரள்கிறார்கள். அதே நேரம், கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஏன், நார்வே ஸ்வீடன் டென்மார்க் போன்ற நாடுகள் உட்பட, இசுலாமிய எதிர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு மனோ நிலை பரவி வருகிறது. அய்ரோப்பா நெடுக இசுலாமியப் பெண்கள் பொது வெளிகளில் பர்தா அணியக் கூடாது, மசூதிகளில் இருந்து வெளியில் கேட்குமாறு ஓதக் கூடாது என்ற நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. அதிகார பூர்வமாகி வருகின்றன. ஓரஞ்சாரம் விளிம்பு நிலை என்ற நிலை மாறி, பாசிஸ்ட்கள் நாஜிக்கள் என்ற அவப்பெயர்கள் தாண்டி, அவர்கள், அரசியல் மய்யத்திற்கு வந்துள்ளனர். ‘தேசிய வாதிகள், தேச பக்தர்கள்’ ஆகியுள்ளனர்.

முன்னாள் கிழக்கு ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில், கிறிஸ்துமஸ் பாடல்களை         பாடிக்கொண்டு, 17,000 பேர், ‘மேற்குலகம் இசுலாமியமயப்படுத்தப்படுவதற்கெதிரான அய்ரோப்பியர்கள்’ என்ற பதாகையின் கீழ் அணிதிரண்டனர். ‘அய்ரோப்பாவின் கிறிஸ்துவ கலாச்சாரம் மற்றும் மரபுகளின் வேர்கள் அரித்துப் போகவைக்கப்படுகின்றன; நாங்கள் நாஜிக்கள் அல்ல, தேச பக்தர்களே’ என்கிறார்கள். அய்ரோப்பாவிலேயே, வளர்ச்சியடைந்த ஒப்பீட்டுரீதியில் ஸ்திரமான பொருளாதாரம், ஜெர்மனியினுடையதாகும். நாஜிக்களின் வதை முகாம்கள் என்ற கொடூர வரலாற்றின் வடுக்கள் நிறைந்தது ஜெர்மனி. அந்த ஜெர்மனியின் பின் தங்கிய பகுதி, முன்னாள் கிழக்கு ஜெர்மனியாகும். இது முன்னாள் சோசலிச முகாமைச் சேர்ந்ததும் கூட. இங்குதான் விஷமெனப் பரவுகிறது மதவெறி. கூடவே‘தேசியம்’.

ஆனால், ஜெர்மானிய சமூகத்தில், ‘பொருளாதாரம்’, நாஜி அரசியலை விமர்சனம் செய்கிறது. ஜெர்மன் பெடரேஷன் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான உல்ரிச் கிரில்லோ, ‘ஒரு வளமான நாடு என்ற விதத்திலும், சக மனிதர்களிடம் கிறிஸ்துவ அன்பு காட்டும் விதத்திலும், நம் நாடு கூடுதல் அகதிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார். அய்ரோப்பாவின் முதன்மை நிலையில் உள்ள பொருளாதாரம், போட்டியில் நிற்க, வெளி நாடுகளிலிருந்து வரும் அகதிகள் அவசியம் என, முதலாளித்துவ நலன்கள் நிர்ப்பந்திக்கின்றன.

இந்தியாவில் பாசிசம்

             இந்திரா காந்தி அவசரநிலைப் பிரகடனம் செய்து ஒரு பாசிச ஆட்சியை நடத்தினார். விரைவில் ஒரு தேர்தல் நடத்தி தோற்றும் போனார். பாசிச ஆட்சி நீடிக்க முடியவில்லை.

             சங் பரிவாரின் பாசிச ஆட்சி  திடீரென ஓரிரவில் தோன்றியதல்ல. பாரதிய ஜனதாவும் சங் பரிவாரும், அரசியல் தீண்டாமையிலிருந்து, ஜனதா காலத்திலேயே வெளியே வந்து விட்டார்கள்.

             வாஜ்பாய் காலத்திலேயே, ஆகக் கூடுதல் கட்சிகள் கூட்டணியுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. வேறு வேறு கட்டங்களில், வேறுவேறு சூழல்களில், ஆகக் குறைவான சில அரசியல் இயக்கங்கள் தாண்டி, பாரதிய ஜனதா கட்சியோடு பல கட்சிகளும் உறவாடி உள்ளன.

             சர்ச்சிலுக்கு முன் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லைன், ஹிட்லர், ஜான் கேட்டால் முழம் கொடுத்தார். காங்கிரசின் துவக்க காலத்திலிருந்தே, அது மென்மையான இந்துத்துவா கட்சியாகும். இந்திரா பிரதமராக இருந்தபோதே, அவரது ஆலோசனையின் பேரில் மத்தியபிரதேசம், ஒடிஷா மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் வந்தன. ராஜீவ் காலத்தில்தான், ஷிலன்யாஸ் பூஜைக்கென, மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டன.நரசிம்மராவ் அரசு வேடிக்கை பார்த்தபோதுதான் மசூதி இடிக்கப்பட்டது.

             காங்கிரஸ் அரசுகள், மதவாதக் குற்றம் புரிந்த பால் தாக்கரே, நரேந்திர மோடி மீது எந்த குற்றவியல் நடவடிக்கைûயும் எடுக்கத் துணியவில்ûலை.

             1999 முதல் 2004 வரை வாஜ்பாய் பதவியில் இருந்த காலத்திலிருந்து, 2014 துவங்கி உள்ள மோடி பதவிக்காலம் நிச்சயம் மாறுபட்டது. இந்தக் கட்டம் தோன்றுவதும், காங்கிரசின் வரலாற்றுச் சரிவு ஒரு பண்பு மாற்றத்தை அடைவதும், ஒரு சேர நடந்துள்ளன.

             காங்கிரஸ், ஜனசங்கம்- பாஜக 1969 முதல் 2014 வரை நாடெங்கும் வென்றுள்ள சட்டமன்ற இடங்களிலிருந்து, சங் பரிவார் நாடெங்கும் பரவியுள்ளதையும் காங்கிரஸ் சரிந்துள்ளதையும், காண முடியும்.

             நேரடி, முழுமுற்றூடான, பாசிச ஆட்சி இல்லாதபோதே, இந்திய பாதுகாப்பு விதிகள் (ஈஐத), எஸ்மா, மிசா, தேசிய பாதுகாப்பு சட்டம், தடா, பொடா, சட்டவிரோத        நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், நாடெங்கும் உள்ள நகரங்களில் 15.08.1947ல் இருந்தே அனுமதியின்றி கூட்டம் பேரணி நடத்த முடியாது என்பவையும் தொடர்வதில், சுலபமாக பாசிசக் கூறுகளைக் காண முடியும்.

பசுமை வேட்டை, போலி மோதல் படு கொலைகள், ஊரடங்கு உத்தரவு, கலவரப்பகுதி பிரகடனம் எப்போதும் இருப்பவை. கருத்துச் சுதந்திரப் பறிப்பும், ஆணாதிக்க சாதிய தார்மீக காவல் கண்காணிப்பும் தொடர்கதை என்பதிலும் பாசிசக் கூறுகளைக் காண முடியும்.

             தமிழ்நாட்டில், தேவாரம் வெறியாட்டம், மதமாற்ற தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை, லட்சக்கணக்கான அரசு ஊழியர் ஆசிரியர் ஒரே நாளில் வேலை நீக்கம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பை அந்நிய நாட்டு எதிரி மீதான போர் போல் கருதி ஒடுக்கியதும், பாசிச வெளிப்பாடுகளே ஆகும்.

             இப்போதைய பெரும் தொழில் குழும மதவெறி பாசிச ஆட்சியில், முறைகள், அமைப்புக்கள், நிறுவனங்கள் (பெயரளவிலான வையாகவே இருந்தபோதும்) போன்றவை ஓரங்கட்டப்பட்டுவிட்டு, சர்வ வல்லமை வாய்ந்த ஆகத் திறன் வாய்ந்தவர் என மோடி என்ற தனிநபர் முன்நிறுத்தப்படுகிறார்.

             இனியும் பாஜக ஓரஞ்சாரக் கட்சி அல்ல. அது ஒரு பிரதான நீரோட்டக் கட்சி ஆகும். இங்கிலாந்தின் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்), அய்க்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி (ரிபப்ளிக்கன்), போன்றவை போல், பாஜகவும் பிரதான நீரோட்டக் கட்சி ஆவதில், வலதுசாரி திசையில் சமூகம் பயணம் செய்வது ஒரு முக்கியக் காரணமாகும்.

             பொருளாதாரக் கொள்கைகளில் தேசிய பிராந்திய பிரதான நீரோட்டக் கட்சிகளின் கருத்தொற்றுமை, சிபிஅய் சிபிஎம் சரிவு, மாவோயிஸ்ட் தேக்கம், சிபிஅய்எம்எல்லின் மெதுவான மந்தமான வளர்ச்சி போன்றவற்றையும் கூட, பாசிச ஆட்சியின் உதயத்தின் பின்புலமாகக் காண முடியும்.

எதிர்காலம்

இன்று, மூர்க்கமாக முரட்டுத்தனமாக முதலாளித்துவ லாபங்களைப் பெருக்கும்        நடவடிக்கைகளுக்கு பாஜக உதவுகிறது. அவசரச் சட்டங்கள் போடவும் தயங்கவில்லை. ஆகவே, ஆளும் வர்க்கங்கள் பாஜகவை விரும்புகின்றன.நாய் தான் தன் வாலை ஆட்ட முடியுமே தவிர, வால் நாயை ஆட்ட முடியாது. இந்தியப் பொருளாதாரம் வளரவில்லை என்றால், பாஜக ஆளும் வர்க்கங்களின் செல்லப் பிள்ளையாகத் தொடர முடியாது. பொதுவாக சாமான்ய மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களின் கீழ் மத்தியப் பிரிவினரின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை, மாறாக சரிகிறது என்ற நிலை நீடித்துத் தொடர்ந்தால், பாஜக ஆட்சி தொடர முடியாது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் தீர்வு பிறந்து, இந்தியப் பொருளாதாரம் பாய்ச்சலில் முன்னேற,  பேரதிசயங்கள் பொருளாதாரத்தில் நிகழ்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

மக்களின் வாழ்வுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கம், அடிப்படையான அனைத்தும் தழுவிய சமூக மாற்றத்திற்கான இயக்கம், இந்திய மக்களின் போர்க்குணமிக்க போராட்ட ஒற்றுமை என்பவற்றில் மட்டுமே பாசிசத்திற்கெதிரான முறிவு மருந்து உள்ளது.

Back-to-previous-article
Top