தோழர் ஸ்வதேஷ் (சம்பு ஜி) ஒரு ஒப்பற்ற புரட்சியாளர்!

$articleData->title

தோழர் ஸ்வதேஷ்

தோழர் சாரு மஜும்தார் தியாகியான இரண்டாவது நினைவுநாளில் நிறுவப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று உறுப்பினர் கொண்ட  மத்தியக் கமிட்டியின் கடைசி உறுப்பினரான தோழர் ஸ்வதேஷ் இன்று நம்முடன் இல்லை. அந்த மறுசீரமைக்கப்பட்ட மத்தியக் கமிட்டியில் அவருக்கு நெருக்கமான இரண்டு தோழர்களும் வெகு காலத்திற்கு முன்பே நம்மை விட்டுப் பிரிந்துவிட்டனர். தோழர் சாரு மஜும்தாருக்குப் பிறகு இரண்டாவது பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஜாகர் (சுப்ரதா தத்), 1975 நவம்பர் 29 அன்று போஜ்பூரில் தியாகியானார். தோழர் ஜாகர் தியாகியானதற்குப் பிறகு கட்சியை வழிநடத்திய தோழர் வினோத் மிஸ்ரா-வும் 1998 டிசம்பர் 18 அன்று அகால மரணமடைந்தார். 1974 ஜூலை 28 முதல் இந்த நீண்ட ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக, தனது தனித்துவமான ஞானம், தன்னலமற்ற அர்ப்பணிப்பு, பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றுடன் தோழர் சுவதேஷ் கட்சியை வழிநடத்தி வந்தார். இப்போது நமது பாதுகாவலரையும் அவரது நேரடி வழிகாட்டலையும் இழந்து விட்டோம்.


இந்த ஐம்பதாண்டுகளில் எவ்வளவோ மாறிவிட்டது. 1974-இல், தோழர் ஜாகர், விஎம், ரகு (இது, கட்சி இரகசியமாக செயல்பட்ட நாட்களில் தோழர் சுவதேஷ் அவர்களின் பெயர்) ஆகியோர் இயக்கத்திற்குள் நிலவிய பெருங்குழப்பம், ஒழுங்கற்ற நிலை என்கிற பின்னணியில் அரசின் கடுமையான ஒடுக்குமுறைக்கு மத்தியில் தங்களது பணியைத் தொடர்ந்தனர். "கட்சியை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; மக்களின் நலன்களையே கட்சியின் உன்னத நலனாக உயர்த்திப்பிடியுங்கள்; அரசின் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட பரந்த ஒற்றுமைக்கான அடித்தளத்தை உருவாக்குங்கள்" என்ற தோழர் சாரு மஜும்தாரின் இறுதி வார்த்தைகளே, புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறுசீரமைக்கப்பட்ட மையக் குழுவிற்கு வழிகாட்டுதலாக அமைந்தன. கடுமையான சவால்களுக்கு மத்தியில், இந்தச் சிறிய மையக் குழு இயக்கத்தை வளர்த்தெடுத்து, அதை ஒரு உறுதியான அகில இந்திய அடித்தளத்தில் நிலைநிறுத்தியது. 1974 முதல் 1980 வரையிலான வளர்ச்சியின் மிக முக்கிய காலகட்டத்தில் தோழர் சுவதேஷ் பீகார் கட்சி அமைப்பைக் கவனித்துக் கொண்டார்.

இங்கே நாம் போஜ்பூரின் எக்வாரி கிராமத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தோழர்கள் ஜக்தீஷ் மகதோ (மாஸ்டர் சாகேப்), ராம் நரேஷ் ராம், ரமேஷ்வர் யாதவ் ஆகிய மூவரையும் நினைவுகூர வேண்டும். அவர்களின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ், ஒரு துணிச்சலான போர்க்குணமிக்க நிலவுடைமை எதிர்ப்பு இயக்கம் ஷாஹாபாத் சமவெளிகளிலும் அதை ஒட்டிய மகத் பிராந்தியத்திலும் ஆழமாக வேரூன்றத் தொடங்கியது. பெருவாரியாக தலித் ஒடுக்கப்பட்ட ஏழைகளின் விழிப்புணர்வும் அறுதியிடலும் ஹரிஜனிஸ்தான் (ஹரிஜனதேசம்) கோரிக்கையையும் எழுப்பியது (அன்றிருந்த நிலவுடைமை பீகாரில் காந்தியின் 'ஹரிஜன்' என்ற சொல் தலித் எனும் அம்பேத்கரிய சொல்லை விட பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது). நக்சல்பாரியின் உணர்வு, எக்வாரியின் ஆற்றல் ஆகியவற்றின் ஒருங்கிணைவு மறுசீரமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)ஐ விரைவாக முன்னோக்கி உந்தித் தள்ளியது. புகழ்பெற்ற 'எக்வாரி மூவர்' முன்னோடிகளில், தோழர் ஜக்தீஷ் மாஸ்டர், ஒடுக்கப்பட்ட ஏழைகளின் எழுச்சி ஆரம்ப நிலையில் இருந்தபோதே 1972 டிசம்பர் 10 அன்று கொல்லப்பட்டார். தோழர் ரமேஷ்வர் 1975 ஜனவரி 14 அன்று சஹாரில் உள்ள சோனா டோலாவில் காவல்துறை மோதலில் தியாகியானார். தோழர் ராம் நரேஷ் ராம் 1980-இல் கட்சியின் பீகார் பிரிவின் செயலாளராகி, பின்னர் சஹார் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995 முதல் 2010 அக்டோபர் 26 அன்று அவரது மறைவு வரை பீகார் சட்டமன்றக் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார்.

1980-களில், சமூக கவுரவம், நில உரிமைகள், வாழ்வூதியம் ஆகியவற்றுக்காக பீகாரின் புரட்சிகர விவசாயிகள் இயக்கம் பெரும் விரிவாக்கத்தைக் கண்டது. நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் வெடித்தெழுந்தன. இந்திய மக்கள் முன்னணி உருவானதன் மூலம், பீகாரிலும் அதற்கு அப்பாலும் ஏற்பட்ட இந்த நிலவுடைமை எதிர்ப்பு விழிப்புணர்வின் எதிரொலி ஊக்கமளிக்கும் அகில இந்திய அதிர்வலையைப் பெற்றது. இந்திய மக்கள் முன்னணி பதாகையின் கீழ், பீகாரின் வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித்துகள், ஒடுக்கப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கினர். 1989 நவம்பர் மாத மக்களவைத் தேர்தலில், போஜ்பூரின் போராடும் ஏழைகள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி, விவசாயக் கூலித் தொழிலாளர் தலைவர் தோழர் ரமேஷ்வர் பிரசாத்தை ஆரா தொகுதியிலிருந்து மக்களவைக்கு அனுப்பி வரலாறு படைத்தனர். தோழர்கள் வினோத் மிஸ்ரா, ராம் நரேஷ் ராம் ஆகியோருடன் சேர்ந்து, தோழர் சுவதேஷ் புரட்சிகர விவசாயிகள் இயக்கத்தின் இந்தப் மாபெரும் அரசியல் அறுதியிடலின் முக்கிய சிற்பியாக இருந்தார்.

1990-களோ வேறொரு மாதிரி தொடங்கின. பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ஸும் 'ரத யாத்திரை' என்ற பெயரில் மூர்க்கத்தனமான இயக்கத்தை ஆரம்பித்து, அதன்மூலம், கலவரங்களைத் தூண்டிவிட்டு இரத்தக் களரிகளாக்கினர்; இறுதியில், அரசமைப்புச் சட்டத்தையும் உத்தரப்பிரதேச அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியையும் அப்பட்டமாக மீறி, 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை பட்டப்பகலில் இடித்துத் தள்ளின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இன் ஐந்தாவது மாநாடு கொல்கத்தாவில் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இது நடந்தது. பாபர் மசூதி இடிப்பின் பின் இருக்கும் முக்கிய நோக்கத்தை கட்சி உணரத் தவறவில்லை. இந்தியாவில் வளர்ந்து வரும் மதவாத பாசிச அச்சுறுத்தலை ஐந்தாவது மாநாடு உணர்ந்து கொண்டது. மேலும், கட்சி வெளிப்படையாக கட்சியாகவும் களத்தில் முன்நின்று போராடவும் தீர்மானித்தது. அதோடுகூடவே கட்சிக்கு புதிய அலுவலக ரீதியான கட்டமைப்பும் அமைப்பு ரீதியான கட்டமைப்பையும் கட்டியெழுப்பும் புதிய சவாலும் முன்வந்தது. டெல்லியில் கட்சியின் புதிய மத்திய அலுவலகத்தை அமைக்கும் பொறுப்பைத் தோழர் சுவதேஷ் அவர்கள் ஏற்றுக்கொண்டார். சாரு பவன் என்று தற்போது அழைக்கப்படும் அந்த அலுவலகத்தை 2012 ஜூலை 28 அன்று உருவானது.

1970-களின் கடுமையான பின்னடைவுக்குப் பிறகு, கட்சியை மீட்டுருவாக்கம் செய்து வழிநடத்தியதிலிருந்து, ஒரு துடிப்புமிக்க கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றியமைத்து பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் சவாலான தற்போதைய கட்டத்திற்கு அதைத் தயார்படுத்தியது வரையிலும் மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் மோடி காலத்தில் பாசிச மூர்க்கத்தனம் தீவிரமடைவதால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில், கட்சியின் தொடர்ச்சி மற்றும் தகவமைப்பு, ஒற்றுமை, நிலைத்தன்மை, ஒருங்கிணைப்பு, முதிர்ச்சி ஆகியவற்றின் வாழும் அடையாளமாக தோழர் சுவதேஷ் இருந்தார். கட்சியில் முழுநேர அமைப்பாளராக சேர்வதற்கு முன்பு, தோழர் சுவதேஷ் ராஞ்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷனில் ஊழியராக பணியாற்றினார். இயக்கம் பின்னடைவை சந்தித்த காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)க்கு அரசு உற்சாகத்துடன் இரங்கலுரை எழுதிக் கொண்டிருந்தபோது, குழப்பமடைந்த, மனமுடைந்த புரட்சியாளர்கள் சிலர் உண்மையிலேயே பின்வாங்கத் தொடங்கியிருந்த நிலையில், தோழர் சுவதேஷ் அவர்கள் ஒரு தொழில்முறை புரட்சியாளராக முன்னோக்கி அடியெடுத்து வைத்தார். இந்த பிடிவாதமான முடிவும் உடல், மன உறுதியும் அவரது முழு கம்யூனிஸ்ட் வாழ்க்கையையும் வரையறுத்தன. கடந்த சில ஆண்டுகளில் புற்றுநோயுடன் போராடியபோதும் அவர் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்தபோதும் ஜென் சி போராட்டங்களையும் அகில இந்திய மாணவர் கழக தோழர்களின் ஆற்றல்மிக்க துணிச்சலான பங்கையும் ஆர்வத்துடன் கவனித்து வந்தார். பேச முடிந்த கடைசி தருணம் வரை, கட்சி அமைப்பை வலுப்படுத்துவது, கட்சியின் பங்களிப்பை அதிகரிப்பது பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.

சென்று வாருங்கள் தோழர் சம்புஜி (இந்தியா முழுவதும் உள்ள தோழர்களிடையே தோழர் சுவதேஷ் அவர்களின் மிகவும் பரவலாக அறியப்பட்ட பெயர் சம்புஜி ஆகும்). வீரத்துடன் இளைப்பாறுங்கள்! உங்கள் அன்பிற்குரிய கட்சி, உங்களின் முடிக்கப்படாத இலட்சியப் பணியை நிறைவேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்.



10 November, 2026