பெரியாரும் பெரியவாளும்

தலையங்கம்

$articleData->title

கோவை பெரியார் அறிவுலகம்.

கோவை பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. தவெக ஆட்சியில் முதல்வர் விஜயால் திறக்கப்பட்டது.  கோவை பெரியார் அறிவுலகத்தில் இருந்த  ஆயிரக்கணக்கான நூல்கள் போலியானவை என்பது வெளிவந்துள்ளது. மாநிலத்தில் உள்ள பிற நூலகங்களிலும் இந்த அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பக நூல்கள் உள்ளன என்றும் செய்திகள் வருகின்றன.  300 ரூபாய் புத்தகம் 1200 ரூபாய் விலை. பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. திமுக அரசு நூல் கொள்முதலில் பெரும் ஊழல் செய்துள்ளது என முதல்வர் உடனடியாக அறிவித்தார். பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நாங்கள் கொள்முதல் செய்யவில்லை, அட்டைப் பெட்டியில் இருந்ததை அடுக்கித்தான் வைத்தோம் என்றார்.


திமுக ஆட்சியில் நூல்கள் கொள்முதல் செய்வதற்காக தனிச் சட்டமே உருவாக்கப்பட்டு, திட்டக்குழு துணைத் தலைவர்  ஜெயரஞ்சன் தலைமையில்  அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வாசகர்கள் நூலகக்குழுவும் அமைக்கப்பட்டது. அறிவு வளர நூலகமே சிறந்த வழி எனக் கருதி முதல்முதலாக தமிழ்நாட்டில் 1948ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டம், 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இயங்கி வரும் 4,755 நூலகங்களுக்கான   அச்சு   நூல்கள் மற்றும்  மின்நூல்கள்    கொள்முதலில் குளறுபடி, முறைகேடு தவிர்க்க “வெளிப்படைத் தன்மையான  நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” உருவானது. இந்தக் கொள்கைக்குட்பட்டே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களுக்கும் ஆறு மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வதற்காக அரசாணை 2025 நவம்பர் 05 அன்று வெளியிடப்பட்டது.அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் தொலைக் காட்சிகளில் உலா வந்தார். நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்னர் ஒரு வாரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்போது பல கோடி ரூபாய் ஊழல் என்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டின் அறிவு மரபை அழிக்க எடுக்கப்பட்ட செயல்தான் இதுபோன்ற புத்தகக் கொள்முதல். இதுதான் மிகவும் ஆபத்தான ஒன்று. உண்மைக்குப் புறம்பாக பொய்யும் புரட்டுமாக, அங்கங்கே எடுத்துச் சேர்த்து ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் அந்த நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னே ஒரு திட்டமிட்ட சதி இருப்பதாகத் தெரிகிறது. ஓர் இனத்தின் அல்லது மொழியின் அடையாளத்தை அழித்திட அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் முதலில் கை வைப்பது அறிவை புகட்டும் நூல்கள் மீதுதான். நாசிச ஜெர்மனியில், இலங்கை யாழ்ப்பாணத்தில், கொல்கத்தாவில் எங்கும் பாசிஸ்டுகள் முதலில் நூலகத்தைதான் தீக்கிரையாக்கினார்கள். வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே சென்னை பாரதி புத்தகாலயத்தைச் சூறையாடியாடினர். அடுத்து அவர்கள் செய்வது வரலாற்றை திரித்து, உண்மையை மறைத்து கட்டுக் கதைகளை எழுதிப் பரப்புவது. 

தமிழ்நாட்டின் அறிவு மரபு அலாதியானது. பரந்து விரிந்தது. சங்க இலக்கியம் முதல் புத்திலக்கியம் வரையும் சித்தர் பாடல்கள் முதல் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அரிய பல பொக்கிஷங்களைத் தந்தது தமிழ் அறிவு மரபு.  அந்த அறிவு மரபை அழிக்கத் துணிந்துள்ளார்கள். பண்டைய தமிழ்நாட்டில் கடவுள் வழிபாடு இருந்ததற்கான அடையாளமே இல்லை எனக் காட்டும் கீழடி பற்றி அவதூறு பரப்ப அட்டையில் நந்தி படத்தைப் போட்டு பெரியார் நூலகத்தில் வைத்துள்ளார்கள் கெடுமதியாளர்கள்.பகுத்தறிவிற்கு, முற்போக்கு விழுமியங்களுக்குப் பெயர் பெற்ற பெரியார் மண்ணில், தமிழ்நாட்டில் சங்கிகள் தங்கள் பிற்போக்கு இந்து மதவெறி பாசிசச் திட்டங்களை அமல்படுத்த பல வழிகளிலும் முயற்சித்து வருகிறார்கள். திமுக ஆட்சியிலேயே நீதித்துறை, நிர்வாகத்துறை, காவல்துறை மூலமாக சங்கிகள் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டுதான் இருந்தார்கள். கோவையில் காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது, ‘காந்தியைக் கொன்ற கோட்சே என பேசக் கூடாது’ என்று தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு தடை போட்டது காவல்துறை. தான் சனாதனவாதி என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டு, எல்லைத்  தூணை தீபத்தூணாக்கி பொல்லாத வேலை செய்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், கோயிலில் பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலையில் புரள்வது புண்ணியம் என்றார். அவர் இப்போது, நூல் கொள்முதல் ஊழலுக்கு ஜி.ஓ.போட்டாலெல்லாம் உங்க பாவம் போகாது, பெரியார் அறிவுலகத்தில் எல்லா ரேக்கிலும் மகாபெரியவாவின் புத்தகங்களை அடுக்கணும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஒரு நீதிபதி, நடந்துள்ள ஊழலுக்கு காரணமானவர்களைத் தண்டிப்பது பற்றி பேச வேண்டுமேயொழிய, பாவ புண்ணியம் பற்றி பேசுவது சரியல்ல, அது ஜோஸியர் வேலை என்று சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சொன்னார். கடுப்பான நீதிபதி, கம்யூனிஸ்ட் விலை உயர்ந்த உடை உடுத்துகிறார், பென்ஸ் காரில், ரயிலில் ஏசி கோச்சில் போகிறார், இதுவா எளிமை என்று நீதிமன்றத்திலேயே பேசியுள்ளார். இவரின் முற்றும் துறந்த பெரியவாள்கள் மட்டும் நடந்து போகாமல், பல்லக்கிலும் டொயோட்டா காரிலும் போகலாமா? எச்சில் இலையில் புரளச் சொல்வது முட்டாள்தனம் அன்றோ? என எதிர்க் கேள்வி கேட்டால்?! கஷ்டப்பட்டு சம்பாதித்து தன் குடும்பத்தினரைப் பார்க்க எப்போதாவது விமானத்தில்  செல்லும் புலம் பெயர் தொழிலாளி  ஆடம்பர வாழ்க்கை வாழ்பவரா? எளிமை என்பது ஆடையிலோ பயணத்திலோ கிடையாது. அவரவர் எண்ணத்திலும் செயலிலும்தான் இருக்கிறது. பெரியார் பெயரில் உள்ள நூலகத்தில் மகா பெரியவா புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும் என்று சொல்லும் ஜிஆர்எஸ் எண்ணத்திலும் செயலிலும் பார்ப்பனியம், மனுநீதி கோலோச்சுவது தெளிவாகவே தெரிகிறது. 

  1924 ஏப்ரலில் வைக்கம் போராட்டத்தில் இறங்கினார் தந்தை பெரியார். 1925 நவம்பர் 17 அன்று திருவிதாங்கூர் மகாராணியின் உத்தரவின் பேரில் வைக்கம் மகாதேவர் கோயில் நான்கு சுற்றுப்புற வீதிகளும் அனைத்து தரப்பு மக்களுக்கும் திறந்து விடப்பட்டது. இதை பெரியார்தான் செய்தார். பெரியவாள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், நம்பூதிரிகளை மேல் சாதியினரை சனாதனப் படிநிலையில் உள்ள மற்ற சாதியினர் எவ்வளவு தூரத்தில் நின்று பார்க்க வேண்டும் என்று இருந்ததை உடைத்தது கம்யூனிஸ்ட்டுகளும் பெரியாரும்தான். 1925க்கு முன்பு இருந்ததுபோல் 2025க்குப் பின்னர் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் சாமிநாதன்கள்.


‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ இது தவெகவின் தாரக மந்திரம். பெரியார் தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவர். ஆனால், பெரியாரின் அறிவுப்புரட்சி நூல்களை எவரும் படித்ததாக தெரியவில்லை! இந்த மரபுக்கும் தவெகவுக்கும் தொடர்பில்லை என்பதை நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன. திராவிட அரசியல் கட்சியினருக்குமே இது பொருந்தும்.

நூல் மோசடிகள் மூலம் இன்றைய ஜென் சி களையும் எதிர்கால ஜென் சிகளையும் அறிவு மழுங்கச்செய்ய நினைக்கிறார்கள் போலும். இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் நீண்ட கால அறிவு மரபு, கல்வி மரபை அறிவியல் ரீதியாக மீட்டெடுக்க கல்வியாளர், மாணவர், பண்பாட்டு செயல்வீரர்கள், உழைக்கும் மக்கள் கொண்ட மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது.

இந்த நூல் மோசடி விசயத்தில் திமுக கடும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முன் வரவில்லை ஏன்? தவெகதான் ஆட்சியில் இருக்கிறது. பெரியார் நூலகம் விஜயால் திறக்கப்பட்டது. நாங்கள் கொள்முதல் செய்யவில்லை என்று சொல்லும் விஜய், நிர்வாகம் காவல்துறை எல்லாம் தன் கையில் இருக்கும்போது, இந்த நூல் மோசடி, ஊழலுக்குக் காரணமான அதிகாரிகள் மீது, உடந்தையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேகமாக எடுப்பதில் என்ன தயக்கம்?




24 November, 2026