தமிழ்நாட்டில் விஜயின் வருகை

$articleData->title

தமிழ்நாட்டில் விஜயின் வருகை

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக இருந்துவந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளை முடிவுக்குக் கொண்டுவந்தார் விஜய். இரு கட்சிகளுக்கும் மாற்றாக நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் பாஜகவும்கூட எடுத்த மூன்றாவது அணி முயற்சிகள் தோல்வியடைந்த தமிழ்நாட்டில் ஒரு வெற்றிகரமான மூன்றாவது சக்தியாக விஜய் உருவெடுத்தார். விஜய் தனது சினிமாப் புகழினால் மட்டுமே இதைச் சாதிக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளிடம் மிகவும் அந்நியப்பட்டு, மூன்றாவதாக ஒரு மாற்றத்தை விரும்பிய தமிழ்நாட்டின் பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் ஆதரவும் வலுவாக இருந்தது,

விஜய் அரசு கடந்த ஐந்து மாதங்களாக ஆட்சியில் உள்ளது. இந்த ஐந்து மாதங்களில் அவர் மாநிலத்திற்கான தனது முழுமையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை வெளியிடவில்லை. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை அழுத்திக் கொண்டிருக்கும் (கீழே குறிப்பிடப்பட்டுள்ள) பல பிரச்சினைகளுக்கு எந்தவொரு புதுமையான தீர்வுடனும் வரவில்லை. மாறாக, பெரும்பான்மையானோரால் விமர்ச்சிக்கப்படும் அற்பமான கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

பெண்களின் ஆதரவை முழுமையாக உணர்ந்து கொண்டு, பெண்களை இலக்காகக் கொண்ட சில திட்டங்கள் மூலம் பெண் "வாக்கு வங்கியை" ஒருங்கிணைக்க முயன்றார். ஒன்று, தாய்மாரை மகிழ்விக்கும் வகையில், பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் இலவச தங்க மோதிரத் திட்டம். இரண்டாவது, அண்ணன் சீர், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணமகள்களுக்கு இலவசமாக 1 பவுன் தங்கம். இவை நிலப்பிரபுத்துவக் காலத்திய படுபிற்போக்கான ஒன்று. மிக முக்கியமாக, அரசு பேருந்துகளில் பெண்கள் மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய "வெற்றி பயணம் திட்டம்" விஜயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு புதுமையான, அரசியல் ஆதாயம் தரும் கவர்ச்சித் திட்டம்.  ஆனால், விஜய் அரசு, பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுமில்லை, அதோடு  அதிக பெண்கள் பயணம் செய்யும் வகையில் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தவுமில்லை. இதனால் பேருந்துகளில் அதிக நெரிசலை ஏற்படுத்துகிறது.

அரசியல் ரீதியாக, விஜய் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளார், அதன் மூலம் தமிழகத்தில் பரவலாக உள்ள பாரதிய ஜனதா எதிர்ப்புணர்வுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார், பாஜக எதிர்ப்புணர்வை முக்கிய எதிரியான திமுக ஏகபோகமாக்கிட அவர் விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தனது அரசாங்கம் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் என விஜய் வாக்குறுதியளித்துள்ளார். அதன் பொருள் என்ன என்பதை நாம் ஆராயலாம்..

10 ஆண்டுகளில் தமிழ்நாடு 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முடியுமா?

இப்போது தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் அளவு ரூ.35.29 லட்சம் கோடியாகும். பத்து ஆண்டுகளில், இதை ஆண்டுக்கு 5% பணவீக்கம் என வைத்துக் கொண்டாலும், ரூ.172.56 லட்சம் கோடியாக விஜய் உயர்த்த வேண்டும். இது 4.9 மடங்கு அதிகரிப்பாகும். இது தமிழ்நாட்டு பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 17.2% பெயரளவு வளர்ச்சி விகிதம் அல்லது பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு ஆண்டுக்கு 12.2% உண்மையான வளர்ச்சி விகித்தைக் கோருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் பெயரளவு வளர்ச்சி விகிதங்கள் : 2025-26 - 10.83%, 2024-25 - 11.19%, 2023-24 - 13.34%, 2022-23 - 14.47%, 2021-22 - 15.91%

தமிழ்நாட்டில்  கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு நிதியாண்டிலும் பெயரளவு வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 17%-ஐத் தொட்டதில்லை. தமிழகத்தில் பெயரளவு வளர்ச்சி விகிதம் 17%-ஐத் தொடவேண்டுமானால், என்னென்ன சவால்கள் உள்ளன? தமிழ்நாட்டுப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை ஒவ்வொன்றாகப் பார்க்குமுன், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் சாதக பக்கங்களையும், பலங்களையும் காணலாம்.

தமிழகப் பொருளாதாரத்தின் பலங்கள்

  • இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும். இருப்பினும், தமிழக விவசாயம் கவலைக்குரியதாகவே இருந்தது. 2023-24 இல்  -1.96% மற்றும் 2024-25 இல் -1.82% என்கிற எதிர்மறை வளர்ச்சிக்குப் பிறகு, தமிழ்நாடு விவசாய வளர்ச்சி 2025-26 இல் 9% வளர்ச்சியைப் பதிவு செய்து மீண்டெழுந்தது.

  • தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் (நடப்பு விலைகளில்) இப்போது ரூ.4.08 லட்சமாகும், இது ரூ.4.33 லட்சம் தனிநபர் வருமானம் கொண்ட கர்நாடகத்திற்கு அடுத்தபடியாகத்தான் உள்ளது.

  • தமிழ்நாடு பன்முக தொழிற்துறை பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.

  • தமிழ்நாடு நன்கு வளர்ச்சியடைந்த ஆட்டோமொபைல் (தானியங்கி வாகன) துறையைக் கொண்டுள்ளது. இந்தத் துறையில் தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடு பாய்ந்து வருகிறது. 1998 ஆம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார்ஸ் முதலீட்டிற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு ஹூண்டாய், நிசான், ரெனோ மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவற்றின் முதலீடுகள் வந்தன, இதனால் தமிழ்நாடு ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.

  • தமிழ்நாடு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பையும் 7000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளையும், 1076 கி.மீ நீளமுள்ள இரண்டாவது நீளமான கடற்கரையையும் சென்னை, தூத்துக்குடி என இரண்டு முக்கிய துறைமுகங்களையும் கொண்டுள்ளது .

  • சமூக ரீதியாகவும் தமிழ்நாடு ஒப்பீட்டளவில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இங்கு 80% மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். கிட்டத்தட்ட 50% மாணவர்கள் கல்லூரிக்குச் செல்கின்றனர்.

  • இந்தியாவின் உற்பத்தியில் ஈடுபடும் பெண்களில் 40%க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால், இங்கு ஒரே விதமான வேலைக்கு ஆண்களைவிட பெண்கள் குறைவான கூலியே பெறுகிறார்கள். இது தற்காலிகத் தொழிலாளர் மத்தியில் கூர்மையானது - கிராமப்புறத்தில் ஆண் தற்காலிக தொழிலாளி 2003 இல் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.437 வாங்கினார். அதே நேரத்தில் கிராமப்புற பெண் தொழிலாளி ரூ.259 தான் சம்பாதிக்கிறார். நகர்ப்புறங்களில், ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.488ம், பெண்கள் ஒரு நாளைக்கு ரூ.325ம் பெறுகிறார்கள். வழக்கமான வேலைகளில் ஒரு ஆண் 1 ரூபாய் ஊதியம் பெறும் அதே வேளை பெண் 75 பைசாதான் பெறுகிறார் என 1.7.2023 தேதிய தி இந்துவில் வந்த அறிக்கை கூறுகிறது. (ஆண்களுக்கு சராசரியாக ரூ.17,476 என்றால் பெண்களுக்கு ரூ.12,969தான்). மற்ற மாநிலங்களைவிட அதிகமாக தமிழ்நாட்டில்  உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கு 43%. ஆனால் இது சர்வதேச தரத்தைவிடக் குறைவானதாகும். அதுமட்டுமின்றி, அமைப்பாக்கப்பட்ட துறையில்கூட, பெண்களுக்கிடையே சாதியரீதியான ஊதிய வேறுபாடு தீவிரமாக உள்ளது. தலித் அல்லாத பெண்கள் ரூ.13,905 மாதச் சம்பளம் பெறும்போது தலித் பெண்கள் ரூ.8,446 தான் பெறுகிறார்கள்.

  • தமிழ்நாட்டில் பன்முகத் தன்மை கொண்ட தொழில்கள் உள்ளன. ஜவுளி, ஆட்டோமொபைல் தொழில்கள் அதிகளவில் இருக்கும் அதே வேளை, எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி, பாதுகாப்பு, பொறியியல் தொழில்களும் உள்ளன. புதிய தொழில்களான செமிகண்டக்டர்கள், லைஃப் சயின்சஸ், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மற்றும் மின்சார வாகனம் போன்றவையும் கணிசமாக உள்ளன.  

  • தமிழ்நாடு வளர்ச்சி விகித்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு 11% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. மொத்த எண்ணிக்கையில் 15% .  தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும், இதன் ஜிஎஸ்டிபி ரூ.35 லட்சம் கோடிக்கு சற்று கூடுதலாகும். 2025-26 நிதியாண்டில், தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஏறக்குறைய ரூ. 35.68 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளியில் மூன்றில் ஒரு பங்கையும் மின்சார வாகனங்களில் சுமார் 40% ஐயும் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு அதிகமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில், தமிழ்நாடு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்துள்ளது.

  • புதிய தலைமுறைத் தொழில்களிலும் தமிழ்நாடு நுழைகிறது. ஒரு செயற்கை நுண்ணறிவுப் பூங்காவை அமைத்துள்ளது. நவீன எலக்ட்ரானிக்ஸில், ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. வல்லம் வடகால் விண்வெளிப் பூங்காவும், மணலூர் மற்றும் கிருஷ்ணகிரியில் மின்சார வாகனப் பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. டாடா பவர் சோலார், விக்ரம் சோலார் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் வொர்க்ஸ் குழுமம் (JSW) ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டைப் பெற்றுள்ளது.  10 தரவு மையங்கள், கப்பல் கட்டுதல், மேம்படுத்தப்பட்ட ஜவுளித் தொழிலும் உள்ளன. தமிழ்நாட்டின் கடன்-ஜிஎஸ்டிபி விகிதம் 23% ஆகும். ஆனாலும் இது நிலையானது.

  • ஒப்பீட்டளவில் வலுவான பொருளாதாரத்தைப் பெற்றிருந்தும், சாதக அம்சங்கள் இருந்தபோதும் அவற்றை எவ்வாறு மேலும் ஒருங்கிணைப்பது என்பது குறித்து விஜய்க்கு எந்தவொரு உறுதியான திட்டமும் இல்லை.


தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் எதிர்மறை அம்சங்கள்

  • விஜய் அரசாங்கம் பரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது முக்கியமான முடிவாகும். ஒரு பெரிய விமான நிலையத்தை மட்டும் வைத்துக் கொண்டு 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை சாதிக்க முடியுமா? 

  • தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் ஒரு விசித்திரமான முரண்பாடு வெளிப்படுகிறது: ஒப்பீட்டளவில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் போது, மாநில    வருவாய் குறைவாகவே உள்ளது. கடன் தொடர்ந்து உயர்ந்துள்ளது, அதிக வட்டிச்   சுமையால், வளர்ச்சி சுருங்குகிறது. வருவாயைப் பெருக்க மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை விஜய் அமைத்துள்ளார்.
  • சொந்த வருவாய் உருவாக்கம் 2006 இல் 10% இலிருந்து 2026 இல் 6.2% ஆகக் குறைந்துள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாயில், அதன் சொந்த மூலங்களிலிருந்து-மாநில வரிகள், கட்டணங்கள் மற்றும் பிற உள் வருமானம்- வரும் விகிதம்  கடந்த 20 ஆண்டு காலத்தில் குறைந்துள்ளது. தனது நிதித் தேவைக்கு மாநிலத்தின் சொந்த வருவாயைவிட மத்திய அரசின் மானியம் மற்றும் கடன்களை நம்பிக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
  • நிதிக் கட்டுப்பாடுகளால் தமிழ்நாடு நலத் திட்டங்களுக்காக அதிகம் செலவிடுவதில்லை. 2026-2027 தமிழக பட்ஜெட்டின்படி நிதியாண்டு 2009 லிருந்து மாநிலத்தின் மூலதனச் செலவும் குறைந்துள்ளது. 2024-25 நிதியாண்டிற்கு, மூலதனச் செலவு ரூ.47,681 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே ஆண்டிற்கான தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு சுமார் ரூ.31.55 லட்சம் கோடி என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மூலதனச் செலவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 1.5% ஆக இருக்கும். தமிழ்நாட்டின் வருவாய் செலவினமும் 2005ஆம் ஆண்டு முதல் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. அனைத்து சேவைகளுக்கான வருவாய் செலவினம் குறைந்துவிட்டது. வருவாய் செலவினத்தில் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி அல்லாத செலவினங்கள் இரண்டும் அடங்கும்.  சம்பளம், வட்டி கட்டுதல் போன்ற வளர்ச்சி அல்லாத செலவினங்கள் பெரும் பங்கை எடுத்துக்கொள்வதால் வளர்ச்சிக்கான செலவினங்கள் குறைகிறது.
  • மாநில பட்ஜெட்டில் பெரும்பகுதி மாநிலத்தின் மொத்த செலவினத்தில் 85% முதல் 90% வரை வருவாய் செலவினத்திற்குப் போகிறது. மூலதன முதலீட்டிற்கு மிகக் குறைந்த அளவே கிடைக்கிறது. உறுதியாகக் கொடுக்கப்பட வேண்டிய பொறுப்புகளான வட்டிகள், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள்/மானியங்கள் போன்றவற்றை ஒருபோதும் குறைக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தமிழ்நாட்டில் மூலதனச் செலவு மற்றும் வருவாய் செலவினத்தின் வளர்ச்சிக் கூறு இரண்டும் குறைந்துவிட்டன. வருவாய் செலவினத்தின் வளர்ச்சிக் கூறுகளில் சமூகத்திற்கான சேவைகளான கல்வி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், நீர் வழங்கல்,  தூய்மைப் பணி, வீட்டுவசதி மற்றும் பல்வேறு தரப்பட்ட நலத் திட்டங்களும் விவசாயம், நீர்ப்பாசனம், கிராமப்புற வளர்ச்சி, தொழில் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான செயல்பாடுகளை உள்ளடக்கிய பொருளாதார சேவைகளும் அடங்கும். இந்த சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இரண்டாவது முக்கிய பொருளாதாரத்தைக் கொண்ட தமிழ்நாடு வளர்ச்சியில் பெரும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.
  • மீண்டும் சுருக்கமாகக் கூறின், தமிழ்நாட்டில் பரந்த அளவில் நல்வாழ்வுக்கான செலவினங்கள் தேக்கமடைந்துள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மணமகள்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப் புடவை ஆகியவற்றை வழங்குவதால் இதை ஈடுசெய்ய முடியாது.
  • தமிழ்நாட்டில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீடுகள் (நடப்பு ஆண்டு மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகள்)
      1. 2026-27 -- ரூ.40,000 கோடி
      1. 2025-26 -- ரூ.39,000 கோடி
      1. 2024-25 -- ரூ.38,096 கோடி
  • கடந்த மூன்று பட்ஜெட்டுகளில் மொத்த பட்ஜெட் செலவு
      1. 2026-27 -- ரூ. 4,72,585 கோடி
      1. 2025-26 -- ரூ. 4,39,293 கோடி
      1. 2024-25 -- ரூ. 4,12,504 கோடி
  • தொடர்புடைய ஆண்டின் மொத்த பட்ஜெட் செலவில் தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் சதவீதம்
      1. 2026-27 -- 8.46%
      1. 2025-26 -- 8.88%
      1. 2024-25 -- 9.24%

              ஆதாரம்: பல்வேறு ஆண்டுகளுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்.

    • மேலே உள்ள புள்ளிவிவரங்களிலிருந்து, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஓராண்டிற்கான அதிகரிப்பு சுமார் ரூ.1000 கோடி அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் போது, ஒட்டுமொத்த செலவினத்தில் இதற்கான ஒதுக்கீட்டின் சதவீதம் சீராகக் குறைந்து வருவதைக் காணலாம்.
    • சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஒதுக்கீட்டினுள்தான் மூத்த குடிமக்கள் நலன், குடும்பத் தலைவி நிதியுதவி, பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உதவித்தொகை  போன்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பாதுகாப்புக்கான திட்டங்கள், கைம்பெண், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கான பல்வேறு ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான பங்களிப்புகள், உதவித்தொகை மற்றும் பள்ளி ஆதரவுத் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்கள் மற்றும் அன்னபூர்ணா யோஜனா போன்ற சிறப்பு நலத் திட்டங்கள் மற்றும் இளம் பருவப் பெண்கள் உள்ளிட்ட இதர பெண்களை இலக்காகக் கொண்ட நலத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் வருகின்றன. விஜயின் அண்ணன் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடியும் இந்த ஒதுக்கீட்டினுள்தான் வரும். அப்படியென்றால்  பெண் தொடர்பான மற்ற திட்டங்களுக்கு எவ்வளவு மீதமிருக்கும்?  அவற்றின் கதி என்னவாகும்.?
    • தமிழகத்தில் ஒரு நிதி முரண்பாடு
    • தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது உயர்ந்த, வளர்ந்த பொருளாதாரமாக இருக்கலாம் முதலீடுகள் தாராளமாகப் பாயலாம். ஆனால், மற்றொரு விசித்திரமான முரண்பாடு உள்ளது. வேலைவாய்ப்பு நிலைகளும் வேலைவாய்ப்புகளின் தரமும் உயரவில்லை. இது தமிழ்நாட்டை, உலக மூலதனத்திற்கு அரை திறன் கொண்ட ‘பயிற்சிப்பட்டறை’ (Semi-Skilled ‘Workshop’) நிலைக்குத் தள்ளும்.
    • விஜய் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீவிரமாக தீர்ப்பதைப் பற்றி பேசாமல்,  மு.க.ஸ்டாலினின் முந்தைய திமுக அரசில் குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது,  விஜய் அரசின் முதல் பட்ஜெட் அது முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கையுடன் ஒத்துப்போகவில்லை. திருநெல்வேலியை தளமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘உவகை ஆராய்ச்சி அறக்கட்டளை (Vuvakai Research Foundation)’ தமிழகத்தின் பொருளாதாரம் குறித்து ஒரு ஆராய்ச்சித் தாளை வெளியிட்டுள்ளது. அவர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டுப் பொருளாதாரம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளைப் பற்றி விரிவாகப் பேசவில்லை.
    • அதிகமான வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கு தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?
    • அதிக வளர்ச்சிக்கு அதிக முதலீடு தேவை. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு வெளிநாட்டு முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் முதலிடத்தைப் பிடித்தது. ஏப்ரல்-ஜூன் 2026 இல் 5.95 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தது. விஜய் அரசாங்கத்தின் முதல் 100 நாட்களுக்குள் தமிழ்நாடு மொத்தம் ரூ.71 லட்சம் கோடி முதலீட்டைப் பெற்றது. இதனால், மக்களிடையே மட்டுமல்ல, வணிகர்கள் மத்தியிலும் விஜய் பிரபலமானார்.
    • மே 2021 க்கும் மார்ச் 2025 க்கும் இடையில் உள்நாட்டு முதலீடு உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மொத்த உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் தோராயமாக ரூ.10,14,368 கோடியை எட்டியது, இது 32.04 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்று  முந்தைய திமுக அரசாங்கத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பி. ராஜாவால் கொண்டுவரப்பட்ட 2025-26 தொழில்கள், முதலீடு மற்றும் வர்த்தகத் துறைக்கான 178 பக்க கொள்கைக் குறிப்பு கூறுகிறது.
    • அட்டவணை வணிக வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில்துறைக்கான மொத்தக் கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து (2019-20) ரூ.3.01 லட்சம் கோடியாக (2023-2024)  உயர்ந்தது. இவ்வாறாக நிதி மூலதனம் தமிழகத்தின் வளர்ச்சியில் துடிப்பான பங்கு வகிக்கிறது. கூடுதல் வேலைகளை உருவாக்கத் தேவையான அதிக நிதி முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு கூடுதல் ஊக்கத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
    • தமிழ்நாடு திறமைமிக்க  தொழிலாளர் சக்தியைக் கொண்ட மாநிலம் எனக் கூறப்படும்போது, சுயதிருப்தி அடைந்துவிடக் கூடாது. இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் யுகத்தில், திறமைகளும்கூட  அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் காலத்திற்கு ஏற்றவாறு தொழிலாளர்  திறமைகளை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டத்தை தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டும்.
    • ஒரு கடலோர மாநிலமான, தமிழ்நாடு காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முன்னணி இடத்தை தமிழ்நாடு ஏற்கனவே பெற்றுள்ளது. தொடர்ந்து பசுமைத் தொழிற்கூடங்களை கட்டிட வேண்டும், மேலும் நிலம், நீர் பயன்பாட்டு நிர்வாகத்தை நெறிமுறைப்படுத்திட வேண்டும்.  
    • முந்தைய திமுக அரசாங்கம் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இப்போது, விஜய் 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த இலக்கை அடைய விஜய், திமுகவின் அதே முறைகளைத் தொடர முடியாது. அவர் வளர்ச்சிக்காக இன்னும் புதுமையான வழிகளுடன் வர வேண்டும். புதிய வளர்ச்சிக்கான வழித்தடங்களைக் கண்டறிய வேண்டும்.
    • இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதில் தமிழ்நாடு சுயதிருப்தி அடையக்கூடாது. மாறாக, அது தன்னை தூரக் கிழக்கு பொருளாதாரங்கள் அல்லது வரவிருக்கும் லத்தீன் அமெரிக்க பொருளாதாரங்கள் அல்லது சில ஐரோப்பிய பொருளாதாரங்களுடன்  ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
    • நுண், சிறு, நடுத்தர தொழில் (MSME) துறை தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். ஆனால் அவற்றை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தின் கொள்கைகள் இல்லை. நுண், சிறு, நடுத்தர தொழில் துறைக்கென தனி அமைச்சகத்தை ஒன்றிய அரசு கொண்டிருப்பது போல், விஜய் அந்த துறைக்கென ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும், அது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.
    • 1.5 மில்லியன் பொருளாதாரம் என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், உறுதியான நடவடிக்கைகள் தேவை.
    • தமிழாக்கம்- சங்கரந்தம்பி

    10 November, 2026