தோழர்களே,
மேடையில் அமர்ந்திருக்கும் எமது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் அவர்களே, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி அவர்களே, தோழர் ரமேஷ் அவர்களே, தோழர் சிம்சன் அவர்களே, தோழர் மதிவாணன் அவர்களே மற்றும் இங்கு வந்திருக்கிற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம் கட்சியின் தியாகிகள் மற்றும் மதுரையின் தியாகிகள் தோழர் பாலு, தோழர் மாரி, தோழர் மணவாளன் ஆகியோர்களுக்கும் நேற்று பீஹாரில் இருதயப் பிரச்சனையினால் உயிரிழந்த தோழர் ராம்கிஷோர் ராய் மற்றும் தோழர் ராம் தேவ் ராம் அவர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் செவ்வணக்கம் செலுத்துகிறேன்
தோழர்களே,
நேற்று நான் தனுஷ்கோடி சென்றிருந்தேன். அது ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ளது. உங்களுக்கு தெரியும், 1964 டிசம்பர் 22–23ல் அந்த இருண்ட இரவில் முழுக் கிராமமே கடலில் மூழ்கியது, ரயில் கூட அந்தச் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. 2000 பேர் வரை இறந்தனர். அந்த அனைத்து தியாகிகளுக்கும் எமது வணக்கம், எமது செவ்வஞ்சலி
தோழர்களே,
இன்றைய இந்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தைக் காப்பாற்றவும் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்யவும் கோரி நடத்தப்படுகிறது! இன்று ஆர்எஸ்எஸ்-பிஜேபி அரசானது நம் மக்களின் உணவு, வேலை, உரிமைகள் என அனைத்தையும் பறித்து வருகிறது! நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார்கள். வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றினார்கள். வேலை உறுதித் திட்டத்தின் பணியை மாற்றினார்கள். மெல்ல மெல்ல வேலை உறுதித் திட்டத்தை அழிக்கப் போகிறார்கள். இந்தச் சட்டங்கள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன? அதை உருவாக்குவதில் சாதாரண மனிதன் இல்லை! கார்ப்பரேட்டுகளுக்காக உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச ஊதியம் என்னவென்று கூட இவர்களுக்குத் தெரியாது! முன்பு வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியில் 10% மாநில அரசும், 90% மத்திய அரசும் வழங்கியது. இப்போது நிதியில் 40% மாநில அரசும், 60% மத்திய அரசும் வழங்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தோழர்களே, மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் சீரழிக்கிறார்கள். அதனால்தான் நாம் இவற்றுக்கெதிராக தீவிரமாக போராட வேண்டும். முன்பு வேலை உறுதித் திட்டத்தில், என்ன செய்ய வேண்டும் என்பதை மாநில அரசு முடிவு செய்தது, இப்போது மத்திய அரசு மாநில அரசின் அந்த உரிமையை, அதிகாரத்தை அழிக்க முயல்கிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்—வரும் நாட்களில் இந்த பிஜேபி அரசு வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக நாசம் செய்து விடுவார்கள்.
நேற்று இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினரை நாங்கள் சந்தித்தோம். இடதுசாரி கட்சிகள்தான் நாடாளுமன்றத்தில் பொது மக்களின் குரலை ஒலிக்கின்றன. தோழர்களே, யார் மக்களுக்கான போராட்டம் நடத்துகிறார்களோ அவர்களை இந்த அரசு தேசத் துரோகிகள் என்று சொல்லி சிறையில் அடைக்கிறது. நான்கு தொழிலாளர் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோதே, மூன்று விவசாயச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. விவசாயச் சட்டங்கள் தவறு என்று விவசாயிகள் சொன்னார்கள். ஆனால், சட்டம் நிறைவேறுவதற்கு முன்பே நாட்டின் பல பகுதிகளில் அதானியின் கிடங்குகள் எழுந்துவிட்டன! அதன் காரணமாக விவசாயிகள் போராட்டக் களத்தில் இறங்கினார்கள். ஓர் ஆண்டு 13 நாள்கள் அமைதியான முறையில், ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தார்கள்! இந்த அரசு விவசாயிகளிடம் மண்டியிட வேண்டியதாயிற்று.
அதே நேரத்தில் இந்த அரசு கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளானது தொழிலாளர்களுக்காக அல்ல, முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்டவை! பல ஆண்டுகள் போராடி தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளைப் பறிக்கிறது. இன்று இந்த அரசு சொல்கிறது… 8 மணி நேர வேலை இல்லை, 12 மணி நேரம் வேலை செய்யுங்கள் என்கிறது. ஆனால் ஊதியம்? அதே பழைய ஊதியம்தான்! 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்த தொழிற்சாலைகளில் வேலைநிறுத்த உரிமை இருந்தது! இன்று அந்த உரிமையும் பறிக்கப்படுகிறது.
தோழர்களே,
இந்த அரசு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அடிமைகளாக்க நினைக்கிறது! இவர்கள் பெரிய பெரிய வாக்குறுதிகளுடன் வந்தார்கள், ஆனால் இன்று எல்லாருடைய வேலைகளையும் அழித்து வருகிறார்கள். இவர்கள் ஆட்சியில் அத்வானி அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்தது, ஆனால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் தருவோம் என்றார்கள். எல்லாம் பொய். இன்று 16 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனக் கடன்கள் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், எளிய மனிதனின் கடனுக்கு தள்ளுபடி கிடையாது. இதுதான் இவர்களின் கொள்கை. இப்போது ஆரவல்லி மலைகளை அதானி–அம்பானிக்கு ஒப்படைத்துள்ளார்கள். பீஹாரில் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு அதானிக்கு கொடுத்துள்ளாகள்.
தோழர்களே,
இவர்களின் கொள்கைக்கு எதிராக மக்களின் கோபம் அதிகரித்ததைப் பார்த்து, ஒரு புதிய விளையாட்டைக் கொண்டு வந்தார்கள். அதுதான் எஸ்ஐஆர். வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம். இதன் மூலம் பீஹாரில் 70 லட்சம் மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. 21 லட்சம் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதோடு மட்டுமின்றி, தேர்தலுக்கு முன் 1 கோடி 56 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. இதுவா ஜனநாயகம். இது ஜனநாயகம் அல்ல. இவர்கள் கொண்டு வர விரும்புவது புல்டோசர் ஆட்சி. 2020-ல் ஒரு சட்டமன்றத் தொகுதியில் நாம் சிபிஐ(எம்எல்) கட்சி 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், இந்த முறை 95 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்! சந்தேஷ் தொகுதியில் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் ஏமாற்றி பீகாரில் அரசு அமைக்கப்பட்டுள்ளது!
இன்று இவர்கள் இந்துக்கள்–முஸ்லிம்கள், இந்தியா–பாகிஸ்தான் என்று திரும்பத் திரும்பப் பேசி மக்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணுகிறார்கள். இதையே இப்போது தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். அதற்காக திருப்பங்குன்றத்தைக் கையிலெடுத்துள்ளார்கள். இப்போது பீஹாரில் வீடுகளின் மீது புல்டோசர்கள் ஓடுகின்றன. பிஜேபி-க்கு வாக்களித்தவர்களின் வீடுகளும் கூட அதிலிருந்து தப்பவில்லை. இப்போது அவர்களுடைய காலம்! இருக்கலாம். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், தோழர்களே — மக்கள் விழித்தால், அரியணைகள் குலுங்கும். கவிழும். தொழிலாளரும் விவசாயியும் ஒன்றிணைந்தால், அரசுகள் மண்டியிடும். உங்களால் என் மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை, எனக்கு உங்கள் மொழியைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனாலும் எங்கள் மக்களை நாங்கள் அறிவோம், நாமெல்லாம் ஒரே எண்ணத்தில் இருப்பவர்கள். ஆகவே இத்தகைய அரசாங்கத்துக்கு எதிராக நாம் போராடுவோம்.
செவ்வணக்கம் தோழர்களே! இன்குலாப் ஜிந்தாபாத்!
