இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைகூவல் வெளியீடு

$articleData->title

இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைகூவல் வெளியீடு

இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைகூவல் வெளியிடும் நிகழ்வு நவம்பர் 10 அன்று மாலை சென்னை சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வேல்முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஜி.செல்வா,  சிபிஐ மு.வரதன், த.கு.வெங்கடேஷ், சிபிஐ(எம்எல்) விடுதலை எம்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐ(எம்எல்) விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் கூட்டறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் சிபிஐ(எம்எல்) விடுதலை சந்திரமோகன், சிபிஐ(எம்) குணசேகரன், சிபிஐ வஹிதா நிஜாம் உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கூட்டு அறைகூவலை வெளியிட்டு உரையாற்றினர். சிபிஐ(எம்எல்) விடுதலை சென்னை மாவட்டச் செயலாளர் என்.ஜேம்ஸ் நன்றி கூறினார்.


கார்ப்பரேட் நவதாராளமயக் கொள்கைகளும், மதவெறி பாசிச சக்திகளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் ஜனநாயகத்தையும் சூறையாடி வரும் சூழலில், தமிழ்நாட்டு மக்களிடம் இடதுசாரி மாற்றை முன்வைத்து, மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்க இந்த அறைகூவல் அழைப்பு விடுத்துள்ளது.

இடது ஒருங்கிணைப்புக் குழு “ஒரு வரலாற்றுத் தேவை”

ஜனநாயக சக்திகளின் வேண்டுகோள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் விவாதங்களின் தொடர்ச்சியாக அமைந்துள்ள இந்த ஒருங்கிணைப்புக் குழு “ஒரு வரலாற்றுத் தேவை” என அறைகூவல் கூறுகிறது. மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளின் பாதிப்பும், மாற்றம்தேவை என்ற மக்கள் மனநிலையும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழகச் சூழலில், இடதுசாரி மாற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்காலிகத் தேர்தல் லாபத்துக்காகக் கொள்கைச் சமரசம் செய்யாமல்,கருத்தியல் ரீதியாகவும் களத்திலும் தொடர்ந்து நிற்பவர்கள் இடதுசாரிகள் மட்டுமே என்றும் அது குறிப்பிடுகிறது.

முதல் மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டதும், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள், சேலம் சிறைசாலைப் படுகொலை, கீழ்வெண்மணி என தியாகங்களால் எழுதப்பட்ட வரலாற்றையும்; நில உச்சவரம்புச் சட்டம், குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம், 8 மணி நேர வேலை, ‘தமிழ்நாடு’ பெயர், மொழிவாரி மாநிலம் ஆகியவற்றில் செங்கொடி இயக்கத்தின் பங்கையும் அறைகூவல் நினைவுகூர்கிறது. தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்த இடதுசாரிகளின் அணுகுமுறை உழைக்கும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்றும் தெளிவுபடுத்துகிறது. பாலஸ்தீனம், ஈரான் என உலகின் பல நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் நடத்தும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும், அமெரிக்காவிடம் சரணடையும் ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் அயலுறவுக் கொள்கைக்கு எதிராகவும் இடதுசாரிகள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும் அறைகூவல் உறுதியளிக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

  • அரசு நிர்வாகம்: அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை அரசியல் சாசன விழுமியங்கள், மாநில உரிமைகள் பாதுகாப்பு; ஆளுநரைக் கருவியாக்கும் ஒன்றிய அரசின் தாக்குதல்களை முறியடித்தல்; இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தல்; நிர்வாகம், நீதித்துறையில் தமிழ்மொழி ஆகியவற்றை முன் வைக்கிறது.


• பொருளாதாரம்: தனியார்மயத்தை எதிர்த்து; நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய; பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட்டுகளுக்குக் கூடுதல் வரி விதிப்பு ஆகியவற்றிற்காகப் போராட உறுதியேற்றுள்ளது.


• வேலைவாய்ப்பு: விபி-கிராம்-ஜி திட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை மீட்டு ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாளொன்றுக்கு ரூ.700 கூலி; நகர்ப்புறங்களுக்கு விரிவாக்கம்; குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.42,000; அரசுக் காலிப்பணியிடங்களை நிரப்புதல்; ஒப்பந்த முறை ஒழிப்பு; தூய்மைப் பணி தனியார்மயத்துக்கு எதிர்ப்பு; இளைஞர்களுக்கு வேலையில்லாக் கால நிவாரணம் ஆகியவற்றை முன்வைக்கிறது.

• சிறு, குறு தொழில்கள்: வட்டி மானியம், மின் கட்டண உயர்வு ரத்து, ஜிஎஸ்டி குறைப்பு; கைத்தறி, கயிறு உள்ளிட்ட பாரம்பரியத் தொழில்களுக்குப் பாதுகாப்பை வலியறுத்துகிறது.

• வேளாண்மை, நிலம்: சுவாமிநாதன் குழுப் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம்; சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி; உபரி, புறம்போக்கு நிலப் பகிர்வு; பஞ்சமி நில மீட்பு; குடிமனைப் பட்டா கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

• சமூகநீதி: சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம்; தனியார் துறையில் இடஒதுக்கீடு; பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை; வருமானமற்ற முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம்.

• கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல்: தேசியக் கல்விக் கொள்கை நிராகரிப்பு; நீட், கியூட் தேர்வு ரத்து; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல்; அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்துதல்; மணல், கனிம வளங்களை அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சோசலிச இலக்கை நோக்கி முன்னேறுவோம்:

மதச்சார்பின்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, கூட்டாட்சி, சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகிய தளங்களில் வலதுசாரி இந்துத்துவ சக்திகளை வீழ்த்த, ஜனநாயக சக்திகளை அணிதிரட்டவும் மாநிலந்தழுவிய பிரச்சினைகளில் செயல்திட்ட அடிப்படையில் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கவும் ஒருங்கிணைப்புக் குழு திட்டமிடும். கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் இடதுசாரி அரசாங்கங்கள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தம், அதிகாரப் பரவல், மக்கள் நலத் திட்டங்கள் பிற மாநிலங்களுக்கே முன்னோடியாக விளங்குவதைச் சுட்டிக்காட்டும் அறைகூவல், “இடதுசாரிகள் வார்த்தைகளால் மட்டுமல்ல, வரலாற்றுச் சாதனைகளாலும் நிகரற்றவர்கள்” என்று முழங்குகிறது. “எல்லோரும் எல்லாமும் பெறுகிற சோசலிச இலக்கை நோக்கி முன்னேறுவோம்” என்ற அழைப்பையும் விடுத்துள்ளது. 


நிகழ்ச்சியில் பேசிய இகக(மாலெ) விடுதலையின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி தமது உரையில்,

‘நமது இந்த இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கம் பற்றி, இந்தக் கூட்டு அறைகூவலிலே முதல் பக்கத்திலேயே "அது ஒரு வரலாற்றுத் தேவை" என்று மிகச் சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதில் கேடு கெட்ட செயலைச் செய்துள்ளார்கள். அச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மிகவும் கொந்தளிப்பான, மிகவும் நெருக்கடியான ஒரு சூழலிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இடதுசாரிகள் நாம், மக்கள் போராட்டங்களிலிருந்து உத்வேகம் பெற்றோம். சுதந்திரப் போராட்டத்திலிருந்து உத்வேகம் பெற்றோம். ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிற பாசிஸ்டுகள் ஹிட்லரிடமிருந்தும் முசோலினியிடமிருந்தும் பெற்றார்கள். அந்த ஹிட்லரும் முசோலினியும் என்ன ஆனார்கள் ?

தேர்தல் மூலமாகவும் அதிகாரத்திற்கு பாசிசம் வரும். ஆனால் அந்தத் தேர்தலின் மூலமாக மட்டுமே பாசிசத்தை நாம் அப்புறப்படுத்தி விட முடியாது. பாசிசம் இந்திய தேசத்தில் இருக்கிற அரசியலமைப்புச் சட்டம், முற்போக்கு விழுமியங்கள், ஜனநாயகம் அனைத்தையும் அழித்தொழிப்பதற்காக தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.  இடதுசாரிகள் நாம் முதலாளித்துவ சங்கிலியினுடைய பலவீனமான கண்ணியைப் பார்த்து அங்கு அடிக்க வேண்டும். மோடி இன்றைக்குப் பலவீனம் அடைந்திருக்கிறார். அதனால் எஸ்ஐஆர் கொண்டு வந்து, 13 கோடியே 30 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார். இந்தியா முழுவதும் இருக்கிற எல்லா மக்களும் எழுந்து நின்று போராடுகிற மிகப்பெரிய போராட்டமாக எஸ்ஐஆர்-க்கு எதிரான, வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டம் மாறியிருக்கிறது. அதற்கான வேலைகளை இடதுசாரிகள் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் மிகப்பெரிய ஆபத்து, முதன்மையான ஆபத்து, பேராபத்து, மக்களுக்கு எதிரான ஆபத்து பாசிசம். பாசிசத்திற்கு முதலில் முடிவு கட்டவேண்டும். அந்த கடமையை, பொறுப்பை உணர்ந்து நாம் வேலை செய்ய வேண்டும்’ என்றார்.

சிபிஐ(எம்எல்) விடுதலை மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன் தமது உரையில்:-

இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழலில், இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெரும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இடது அரசியல் நோக்கி மாற்றம் நடக்கிறது. இவை, இன்றைய முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு மாற்று சோசலிசம் தான்! என்பதை உறுதி செய்கிறது.‘தமிழ்நாடு இனி இடதுபக்கம்!’ என்றடிப்படையில், இடதுசாரி ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டு அறைகூவலை இன்று நாம் இங்கு வெளியிட்டுள்ளோம். எதிர்வரும் டிசம்பர் 2026, சனவரி 2027 : திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், கடலூர்,  கோவை, சேலம் ஆகிய 6 மண்டலங்களில், கூட்டு அறைகூவல் விளக்க மண்டல கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. அறைகூவலின் செய்தியை கட்சி தோழர்களிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். இதன் தொகுப்பாக, நிறைவாக 2027ஆம் ஆண்டு மார்ச் 23ல் திருச்சியில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளோம்.


நாம் சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்எல்) விடுதலை ஒன்றிணைந்து ஓர் அணியில் நிற்கிறோம். ஏன்?இங்கு வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருந்து இரண்டு பத்திகளை பகிர்கிறேன்.*இடதுசாரி ஒருங்கிணைப்புக்குழு ஒரு வரலாற்றுத் தேவை. தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சவால்களை எதிர்கொள்ள இந்த முன்னெடுப்பு களத்தின், காலத்தின் தேவையாக உள்ளது.*

*விடுதலைக்குப் பிறகு  தமிழ்நாட்டில் இடதுசாரிகளே பிரதான எதிர்க்கட்சியாக இருந்தனர். சட்டமன்ற பலம் உயர்ந்தாலும், குறைந்தாலும், உழைக்கும் மக்கள் நலனை பாதுகாப்பதில், போராட்ட வீரியம் சற்றும் குறையாமல் இடதுசாரிகள் இடையறாது செயல்பட்டு வந்துள்ளனர்.*தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நாம் எங்கு இருக்கிறோம்? தமிழ்நாட்டில் இடதுசாரிகளும் பிற முதலாளித்துவ கட்சிகளும் பற்றிய ஒருசில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இடதுசாரிகளின் வர்க்க போராட்டக் களமாகத்தான் தமிழ்நாடு இருந்துள்ளது.தொழிலாளர் போராட்டங்கள் சவுக்கடி சாணிப்பால் பண்ணையடிமைக் கொடுமைகளுக்கு எதிரானப் போராட்டங்கள் ஏழை குத்தகை விவசாயிகள், சிறுகுறு விவசாயிகளின் நிலவுரிமைக்கானப் போராட்டங்கள் என அனைத்தும் கட்டமைத்தது, இடதுசாரிகள்தான்.தொழிலாளர்களுக்கான 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றை வென்றெடுத்தது நாம்தான். கூலி உயர்வு, குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு, நில உச்சவரம்புச் சட்டம், குடியிருப்போர் உரிமைச் சட்டங்கள்.... அனைத்தும் இடதுசாரிகள் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்திய சமரசமற்ற வர்க்கப் போராட்டங்களின் மூலமே சாத்தியமாகின. இன்றுவரையும் நாம்தான் உழைக்கும் மக்களின்  உரிமைக்கான போராட்டக் களங்களில் உள்ளோம்.ஆனால், அரசியல் களத்தில் முதன்மையான கட்சிகளாக யார் உள்ளனர்.? சுமார் 60 ஆண்டுகாலம் இருபெரும் திராவிட கட்சிகள் திமுக, அதிமுக ஆகியவை தமிழ்நாடு அரசியலில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தின.புதியதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, தவெக.இவர்களது வர்க்க நலன் என்ன? இவர்கள் யாருக்காக ஆட்சி செய்கிறார்கள்?திமுக, அதிமுக ஆட்சிகளில்...தொழிலாளர் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. கார்ப்பரேட் பெருந்திட்டங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்த அடக்குமுறைகள் ஏவப்பட்டன. தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நீடித்தன. தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை எதிர்ப்பு போராட்டங்கள் மறந்துவிட முடியாது.இவை யாருக்கான அரசுகள்? உயர்சாதி பினாமி நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள்,முதலாளிகளின் ஆட்சிகள் இவை.அவை கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ ஆதரவு கட்சிகளாக, ஆட்சிகளாகவே செயல்பட்டன. உழைக்கும் மக்கள் போராட்டங்களை நசுக்கின.ஒன்றிய பிஜெபி அரசுகளில் அங்கம் வகித்து, எதோ ஒருவகையில் தமிழ்நாட்டில் பாசிச பிஜெபிக்கு பாதை போட்டுக் கொடுத்ததும், இரண்டு கட்சிகளும்தான்.தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், கல்லூரிகளில் மாணவர் மன்றத் தேர்தல்களை ஒழித்துக் கட்டியவை திமுக, அதிமுக ஆட்சிகள் தான்.

இடதுசாரி மாநில அரசாங்கங்கள் உருவாக்கிய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை, சட்டங்களை கொண்டுவந்து தமிழ்நாட்டில் அமலாக்கிவிட்டு, திராவிட மாடல் திராவிட மாடல்  என ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆட்சியில்  என்ன நடந்தது? நில உச்சவரம்பு சட்டங்கள் தோற்றுப் போயின. குறிப்பாக தஞ்சை டெல்டாவில் மட்டும் நில உச்சவரம்புச் சட்டங்களை ஏய்த்து, உயர்சாதி நிலப்பிரபுக்கள்  இலட்சக்கணக்கான ஏக்கர் உபரி நிலங்களை 'பினாமிகள்' 'எஸ்டேட்கள்' பெயரில் அபகரித்து, பலன் பெற வேண்டிய சுமார் 35 %  தலித் விவசாயத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்த ஆட்சிகள் திமுக, அதிமுக ஆட்சிகள். 

 

தவெக ஆட்சியில், முதல்வர் அமைச்சர்கள் 1.5 இலட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள். பெருமுதலாளிகள் தொழில் துவங்க ஏற்கனவே நடப்பில் உள்ள 22  சட்டங்கள், நிபந்தனைகளை தாங்களே நிறைவேற்றிவிட்டதாக சுய அறிவிப்பு செய்துவிட்டு தொழிற்சாலைகளைத் துவங்க,  ‘தொழில் செய்வதை எளிதாக்கும் சட்டம்’ தவெக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்கள், திட்டங்கள் போடுகிறது. ஆனால், விவசாயிகள் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மனதில்லை. நிரந்தரமற்ற வேலைகளில் உள்ள தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரிப் போராடிக் கொண்டு இருக்கும்போது, அவுட்சோர்சிங் செய்கிறார்கள்.திமுக, அதிமுக திராவிட கட்சிகள் மற்றும் தவெக அரசுகள், ஆட்சிகள் போன்ற முதலாளித்துவ மாற்றுகள் நமக்கு வேண்டவே வேண்டாம்.இடதுசாரிகள் அவரவர் சொந்த வர்க்க வெகுமக்கள் அடித்தளத்தை வலுப்படுத்திக் கொண்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அணிதிரட்ட கடுமையாகப் பாடுபடுவோம்! தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் தலைவராக எழுவோம்!இன்றைய முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு மாற்று சோசலிசம் தான்!‘தமிழ்நாடு இனி இடதுபக்கம்’என்பதை நிறுவுவோம்!

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்: 

மொழிவாரி மாநிலங்களுக்காக நீடித்த போராட்டம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேறியது. ஆனால், அதற்கு முன்பு திராவிடர் கழகமோ, திமுகவோ அக்கோரிக்கையை முன்வைக்கவில்லை; 1963 வரை ‘திராவிட நாடு’ கோரிக்கையே திமுகவுக்கு இருந்தது. மொழிவழி மாநிலம் அமைவதற்கு முன்பே, 1942-இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை நாம் உருவாக்கினோம்.  நாட்டின் சிறைச்சாலைகள் அனைத்தும் கம்யூனிஸ்டுகளின் தியாகக் கதைகளைச் சொல்லும். விடுதலை பெற்று 80 ஆண்டுகளாகியும் மக்களின் துயரம் தீரவில்லை; முதலாளித்துவம் தீர்வில்லை, சோசலிசமே தீர்வு. மார்க்சியத்தை மக்களிடம் கொண்டுசெல்லவும், மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கவுமே இக்கூட்டுப் பிரகடனம். மத்திய – மாநில உறவுகளை ஆராய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் குழுவைத் தவெகஅரசு கலைத்தது சரியல்ல.  ஒன்றிய அரசின் விபி-ஜி ராம்-ஜி திட்டத்தில் 125 நாள் வேலைக்கே நிதி இல்லாதபோது, கூடுதலாக 25 நாள் தருவோம் என்ற தவெக அரசின் அறிவிப்பு சாத்தியமா? 1960 முதல் 2012 வரை நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் 1.98 லட்சம் ஏக்கர் மட்டுமே விநியோகிக்கப்பட்டது; அதன் பிறகு எதுவுமில்லை. 35 ஆண்டுகளாகப் போராடியும் நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் கூட மீட்கப்படவில்லை. ஆணையம் அமைப்பதாக அமைச்சர் கூறுகிறார்; நிலம் எங்கே உள்ளது என்ற விவரத்தைத் தர நாம் தயார். மீட்டு வழங்கும் அரசியல் உறுதி அரசுக்கு உண்டா? திமுக தோல்விக்கு முக்கியக் காரணம் நவதாராளமயக் கொள்கை. அதே பாதையில் தவெக அரசும் செல்வது சரியா? தனியார்மயத்தால் இடஒதுக்கீடு பறிபோகிறது; தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை தேவை. மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் ரீதியான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டவர் பக்கம் அரசு நிற்க வேண்டும் என்றார்.


சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: 

பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம், காந்தியம் பேசும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டுவோம். “அறிவுசார் நக்சல்கள்” என்கிறார் பிரதமர்; ஆம், நாங்கள் அறிவுசார் நக்சல்கள்தான். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளையே நக்சல்கள் கேட்கின்றனர்; ஆனால், அவர்களின் பாதையை நாம் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றம் கலைக்க உத்தரவிட்ட சல்வா ஜூடுமைக் கலைக்காமல், பழங்குடிகளைக் கொன்றதற்குப் பெருமைப்படுகிறார் பிரதமர். ஒரே ஒரு வாக்குக்காகப் போராடும் படத்தில் நடித்த முதலமைச்சர், 13 கோடிக்கும் மேற்பட்டோரின் வாக்குகள் நீக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலையை ஏன் கண்டிக்கவில்லை? தேர்தல் செலவை அரசே ஏற்பதுதான் தேர்தல் சீர்திருத்தத்தின் முதல் படி. நீதிமன்றத் தீர்ப்புகள் வலதுசாரிச் சிந்தனையுடன் வந்தால் எதிர்ப்போம்; வருசநாடு, பட்டினப்பாக்கம் மக்களை அகற்றினால் காடும், கடலும் பொருளிழந்துவிடும். மக்களுக்காகக் காலமெல்லாம் போராடும் கம்யூனிஸ்டுகளைத் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள்; தோல்வியிலிருந்து கற்போம். இடதுசாரி ஒற்றுமையை உறுதியுடன் காப்போம்; பல்கலைக்கழகத் தேர்தல்களில் இடதுசாரி மாணவர் அமைப்புகளே எங்கும் வெல்கின்றன; அடுத்த தலைமுறை இடதுபக்கம்தான்; தமிழ்நாடும் இந்தியாவும் இனி இடதுபக்கம்தான் என்றார்.


சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன், மனிதகுலத்துக்கு ஒரே மாற்று சோசலிசம் என்பதை நவம்பர் புரட்சி பதிவு செய்துள்ளது. போராட்டமும் தியாகமும் கம்யூனிஸ்டுகளின் இரு கண்கள். தீயை அணைக்க அனைவரும் திரள்வதுபோல, ஜனநாயகத்தைக் காக்க ஜனநாயக சக்திகளை அணிதிரட்டவே இக்குழு; இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. சிங்காரவேலரும், பெரியாரும் உருவாக்கிய ஈரோட்டுத் திட்டத்தை முன்னோடியாகக்கொண்டே அறைகூவல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மக்களைத் திரட்டும் கருவியாகவே இக்கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது; மக்கள் இயக்கங்களை வலுப்படுத்தி தமிழகத்தை இடதுபக்கம் திருப்புவோம் என்றார்.







 

24 November, 2026