நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்தது ரத்து செய்யப்பட வேண்டும்!

இகக(மாலெ)விடுதலை கட்சியின் மாநில நிலைக்குழு கூட்டம் நவம்பர் 14, 15 தேதிகளில் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

$articleData->title

இகக(மாலெ)விடுதலை கட்சியின் மாநில நிலைக்குழு கூட்டம் நவம்பர் 14, 15 தேதிகளில் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1)  நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது ரத்து செய்யப்பட வேண்டும்!

ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது தீவிரமடைந்து வருகிறது; பாஜக அல்லாத  கட்சிகளின் ஆட்சி நிர்வாகத்தின் மீதான தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. கூட்டாட்சி மாண்புகளை சீரழித்து ஒற்றையாட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் மோடி - ஷா ஆட்சி இடைவிடாது செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் நிதிகளை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள கல்வி உள்ளிட்ட மாநில பட்டியலில் உள்ள பல்வேறு அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டது; மாநில அரசுகளின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பறித்து வருகிறது. இத்தகைய பின்னணியில் தான், கடந்த காலத்தில் பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள், மாநில உரிமைகள் கோரி, ஒன்றிய மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தன. முந்தைய திமுக அரசு, நிதி, நிர்வாகம், சட்டமியற்றுதல் உள்ளிட்ட மத்திய மாநில உறவுகளின் பல்வேறு அம்சங்கள் மீது ஆய்வு செய்து தக்கப் பரிந்துரைகள் செய்வதற்கு  உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை, கடந்த 2025ம் ஆண்டில் அமைத்தது. இக்குழுவானது தனது முதல்கட்ட பரிந்துரைகளை ஏற்கனவே சமர்ப்பித்து பணிகளைத் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், தற்போதுள்ள தவெக அரசு, எவ்வித காரணங்களும் தெரிவிக்காமல், நீதிபதி குரியன் ஜோசப் உயர்நிலைக் குழுவை கலைத்து விட்டுள்ளது. இது அநீதியானது, ஏற்க முடியாதது. இந்த நடவடிக்கை, தமிழ்நாடு அரசு ஒன்றிய பாஜக அரசிற்கு பணிந்துபோகிறது என்ற தோற்றத்தைத் தருகிறது.

மாநில உரிமைகளைப் பாதுகாக்க, மத்திய மாநில உறவுகள் மீது ஆய்வு செய்து பரிந்துரைகள் செய்வதற்கு அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு கலைப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேற்படி குழு தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு முழுமையான அறிக்கையைப்  பெறுவதற்கு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

2)  சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முதலமைச்சர் பொறுப்பு ஏற்கவேண்டும்!

திமுக ஆட்சியில் இருந்தபோதே சீர்கெட்டிருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையானது தவெக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகும் தொடர்கிறது.  காவல்நிலைய கொட்டடி மரணங்கள், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் தடையற்ற புழக்கம், சிறுமிகள், பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், கடத்தல்கள்  ஆகியவை கட்டுக்கடாமல் அதிகரித்து வருகின்றன; அதேபோல் தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. இத்தகையப் பிரச்சினைகள் மீது, 'கடந்த ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை' என கடும் விமர்சனத்தை வைத்த தவெக தன்னுடைய ஆட்சியில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. சிறுமிகள், பெண்கள், தலித்துகள் பாதுகாப்புக்கு அக்கறைமிக்க  நடவடிக்கை வேண்டும். கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தடையற்ற புழக்கத்திற்கு முடிவுகட்ட வேண்டும். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் இராதாகிருஷ்ணன் மர்மமான முறையில் காவல் கொட்டடியில் மரணமடைந்துள்ளார். இகக(மாலெ) நிலைக்குழு கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது. அதற்குக் காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முதல்வர் விஜய் பொறுப்பேற்க வேண்டும்.

3)  தவறிழைத்த தவெக கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீது முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தவெக ஆட்சியில், தவெக எம்எல்ஏ க்கள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன. பொதுவாழ்வில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உட்பட மாநில நிர்வாகத்தின் பல்வேறு மட்டங்களில்  உள்ள பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை அதிகரித்து வருகிறது. மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தவெக அரசானது, சொல்லும் செயலும் ஒன்று என்று சொல்வதற்கேற்ப செயல்பட வேண்டும்.

அதேபோல், துறையூர் சட்டமன்ற உறுப்பினர், துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர் , தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசவந்த ஒருவரைத் தாக்கிய செய்திகள், அதிர்ச்சி தருகின்றது; சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரின் நடவடிக்கைகள், காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. காவல்துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் குற்றமிழைக்கும் தனது கட்சிக்காரர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சட்டரீதியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

4) மேக்கேதாட்டு அணை பிரச்சினை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும்!

கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு முனைப்புடன் முயற்சித்து வருகிறது; காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கு, உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, தவெக அரசு 'மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ஒன்றிய மோடி அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது.' என வலியுறுத்த வேண்டும். இப் பிரச்சினை பற்றி விவாதிக்க  உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டிட வேண்டும்.

5)  அரசு வேலைகளை அவுட்சோர்ஸ் செய்வதையும் மாநகராட்சி தூய்மைப் பணியினை தனியாரிடம் ஒப்படைக்க போடப்பட்டுள்ள டெண்டரையும் ரத்து செய்யவேண்டும்!

அரசாணை எண் G.O. Ms. No. 225 (21.10.2026) இன் கீழ், தவெக (TVK) அரசு, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக (Nodal Agency), அரசு நிறுவனமான வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கழகத்தை (Overseas Manpower Corporation Limited -OMCL) நியமித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தவெக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 181 படியான, தமிழ்நாட்டின்  21 மாநகராட்சிகள், 140-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் தனியார்மயத்தை, ஒப்பந்தமயத்தை அமல்படுத்தி, தூய்மைப் பணி தொழிலாளர்களின் கடந்தகால பணிக்காலத்தை ஒழித்துக் கட்டவும் கணிசமான பணியாளர்களை வேலையில் இருந்து வெளியேற்ற போடப்பட்டுள்ள உத்தரவு மற்றும் டெண்டர்களை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அரசாணை 225 முழுமையாக நீக்கப்பட வேண்டும்.  நீண்ட காலமாக பணி புரிந்து வரும்  தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

6)  உள்ளாட்சித் தேர்தல்களை உடனே நடத்திட வேண்டும்!

உள்ளாட்சிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தாமதிக்காமல் வழங்கிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதன் மூலம் அதிகார பரவலாக்கத்திற்கு  தடை போடக் கூடாது. இது  அதிகாரிகள் கையில் அதிகாரம் குவிவதற்கு வழிவகுக்கும். உள்ளாட்சித் தேர்தலை காலதாமதம் இல்லாமல் உடனே நடத்திட வேண்டும் என மாநில நிலைக்குழு கோருகிறது.

உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


24 November, 2026