நண்பர்களே, தோழர்களே:
பேராசிரியர் எம்.என்.விஜயனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். கெடு வாய்ப்பாக, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு நமக்கு நினைவூட்டப்பட்டதைப் போல, அவர் வாழ்வின் இறுதி ஆண்டுகளில், கேரளாவில் இடதுசாரிகளுக்கு இன்னும் பொருளுள்ள எதிர்காலம் பற்றியும் மாற்றம் பற்றியும் சிந்தித்தார். ஒரு சுதந்திரமான, விமர்சனக் குரலாகச் செயலாற்றினார்.அந்தத் தொலைநோக்கு பரந்த இந்திய தேசிய சூழலுக்கும் பொருந்தும் என உறுதியாக நம்புகிறேன்.
ஓர் ஒப்பீட்டை சுருக்கமாகப் பார்ப்போம். 2000-களின் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தில், 1977-ஆம் ஆண்டு ஜோதிபாசு அரசாங்கத்தின் முதல் நிதி அமைச்சராக இருந்த மார்க்சியப் பொருளாதார நிபுணரான தோழர் அசோக் மித்ரா அவர்களிடமும் இதேபோன்றதொரு இயங்காற்றலை நாம் கண்டோம். அவரும்கூட 2006-ஆம் ஆண்டு தொடக்கத்தில், இடது முன்னணியின் பல கொள்கைகளையும் விமர்சிக்கத் தொடங்கினார். குறிப்பாக, சிங்கூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டதை விமர்சித்தார்.
அடிப்படையில், அசோக் மித்ரா மற்றும் அவரது தோழர்களால் அல்லது இங்கு பேராசிரியர் விஜயனால் முன்னெடுக்கப்பட்ட, ஒட்டுமொத்த விமர்சனமும்,நமது பொருளாதாரக் கொள்கைகளில் அதிகரித்து வரும் நவதாராளமயமாக்கத்தின் தாக்கத்திற்கும் இடதுசாரிகள் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குமான பதில்தான். நவதாராளமயமாக்கத்திற்கு முன் அடிபணிவது, ஊசலாட்டமான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத சமரசம் செய்து கொள்வது போன்றவற்றின் அறிகுறிகளைக் கண்டபோதெல்லாம் கவலையடைந்து அந்தப் போக்கின் மீதான தங்களது விமர்சனக் குரலை தொடர்ந்து எழுப்பினர்.
ஓரளவிற்கு நாடாளுமன்ற ஜனநாயகம், நல்வாழ்வு அரசு, கலப்புப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரே மாதிரியான அரசியல் சூழ்நிலையையே அவர்கள் அனைவரும் பகிர்ந்தனர்; அவையே அன்றைய அடிப்படை நிலைமைகளாகவும் இருந்தன. முழுமையான புரட்சிகர மாற்றம் என்கிற நம்முடைய நோக்கமானாலும் அல்லது இருக்கிற ஆட்சியமைப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அதன் மீது அழுத்தம் கொடுப்ப தானாலும், அடிப்படையான அரசியல் சூழ்நிலை ஒன்றுதான்; அது நாடாளுமன்ற ஜனநாயகம், கலப்புப் பொருளாதாரம், அரசு சார்பு அரசால் தீர்மானிக்கப்பட்ட திசைவழி.
1991-இல் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது முதல் மாற்றத்தைக் குறித்தது. பொருளாதாரக் கொள்கை திடீரென மாறத் தொடங்கியது. அந்த மாற்றத்திற்கு அக்கம்பக்கமாக, 1990-கள் பிற தீவிரக் கொந்தளிப்புகளையும் கொண்டுவந்தன: பாஜக-வின் மூர்க்கத்தனமான எழுச்சி, ஒட்டுமொத்த ராமஜன்மபூமி கிளர்ச்சி. அவை இந்திய அரசியலை மிகப்பெரிய அளவில் உலுக்கின. நாட்டின் நெடுகிலும் ஒரு நிலநடுக்கம் உருவாகிக் கொண்டிருந்தது.
அந்தக் காலகட்டத்தின் பரவலான சொல்லாடல்களில், 'மண்டல் அரசியல்’, 'மந்திர் அரசியல்’, 'மார்க்கெட் அரசியல்’ என அரசியல் அறியப்பட்டது. எனவே, சந்தையும் புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களும் இந்த அதீத மதவாதத் துருவச்சேர்க்கையையும் வெறியாட்டத்தையும் மதவெறித்தனத்தையும் இயல்பாகவே கட்டுப்படுத்திவிடும் என்று பலர் நம்பினர். 1990-களின் தொடக்கத்தில் நிலவிய கருதுகோள் அதுவே. 2000-களின் தொடக்கத்தில் எம்.என்.விஜயனும், அசோக் மித்ராவும் முன்வைத்த விமர்சனங்கள், அந்தக் கொள்கைகளின் பத்தாண்டு, இருபதாண்டு அனுபவத்திற்குப் பிறகு வந்தவை. இன்று, 2026-இல், முற்றிலும் புதிய, முன்னெப்போதும் கண்டிராத ஒரு கட்டத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம். அதை 'இந்திய ஃபாசிசம்’ என்றே நாம் தெளிவாக அழைக்கவேண்டும்; அது அதற்குக் குறைவானதல்ல.
இந்தியாவில் ஃபாசிசம் இப்போது ஆட்சிக்கு வந்துவிட்டது. ஒரு கருத்தியலாகவும், ஒரு கற்பனைச் சித்திரமாகவும், ஒரு அரசியல் திட்டமாகவும் 1925-இல் ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டதுடன் அது முதன்முதலில் தலைதூக்கியது. ஆர்எஸ்எஸ் இந்திய விடுதலை இயக்கத்திலிருந்து கிளைத்த ஒன்றல்ல; மாறாக, அது ஹிட்லராலும் ஐரோப்பிய ஃபாசிசத்தின் எழுச்சியாலும் நேரடியாக ஊக்கம் பெற்று, அந்த தேசியவாத மாதிரியையே தனது அடிப்படை வரைபடமாக ஏற்றுக்கொண்டது.
இன்று ஃபாசிசம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்று நாம் கூறும்போது, ஒரே இரவில் நடந்துவிட்ட ஒன்றாக நாம் அதை அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, ஒரு நூற்றாண்டு நீண்ட பயணம் அதன் உச்சத்தை - ஒரு முறிவுப் புள்ளியை - எட்டியுள்ளது. அதுவே தீர்க்கமான மாற்றம். ஒருகாலத்தில் வெறும் கருத்தியலாக மட்டுமே இருந்த ஃபாசிசம், இப்போது அரசு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளது; அதன் செயல்திட்டங்களை அமலாக்குவதற்கான எந்திரங்களையும் பெற்றுள்ளது. அது துரிதமாகவும் மூர்க்கமாகவும் முன்னேறுமா, அல்லது படிப்படியாகவும் சிறுகச் சிறுகவும் முன்னேறுமா என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது. இருப்பினும், அடிப்படையில், அதன் திட்டத்தை ஊக்கமுடன் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஃபாசிச ஆட்சியை நாம் எதிர்கொள்கிறோம்; மேலும், போராடும் ஃபாசிச எதிர்ப்புச் சக்தியாக இடதுசாரிகளின் பங்கை நாம் வரையறுத்தாக வேண்டும்.
இன்று இடதுசாரிகளின் முதன்மையான பொறுப்பு, ஃபாசிச எதிர்ப்புப் போராட்டத்தை தலைமையேற்று நடத்துவதாகும்.இதுவே முதல் பணி. இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த நமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒன்று. 1940-களில் நாம் ஃபாசிசத்தை எதிர்கொண்டபோது, அது ஒரு சர்வதேசச் சூழலுக்குள் இருந்தது; அது ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஐரோப்பா நெடுகிலும் இருந்தது. இந்தியாவில் நாம் ஒரு ஃபாசிச எதிர்ப்புப் பண்பாட்டு, அரசியல் இயக்கத்தைக் கட்டமைத்தோம். இருந்தபோதிலும், நமது சொந்த எல்லைக்குள்ளேயே அரசு அதிகாரத்தை வைத்திருக்கும் ஃபாசிச ஆட்சியை நாம் எதிர்கொண்டிருக்கவில்லை.
இது ஒரு ஆழமான மாற்றம்; மேலும், கேரளாவில் உள்ள உங்கள் அனைவருக்கும் எனது முதல் வேண்டுகோள், இந்த யதார்த்தத்தையே உங்கள் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளுங்கள் என்பதாகும். ஃபாசிஸ்டுகள் நேரடியாக ஆட்சியில் இல்லாத இந்தியாவின் சில நல்வாய்ப்பான, விதிவிலக்கான மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாகத் தொடர்கிறது. இங்கே நீங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக உணரலாம். மிக அண்மைக்காலம் வரை, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பினர்."ஃபாசிசம் இங்கே நிகழாது. அது குஜராத்தில், டெல்லியில் அல்லது உத்தரப் பிரதேசத்தில் இருக்கலாம். ஆனால், இடதுசாரிகள் வலுவாக இருக்கும் இடத்தில் அல்ல; நமது பண்பாடும் முற்போக்கு பாரம்பரியமும் ஆழமாக வேரூன்றியுள்ள இடத்தில் அல்ல" என்று எண்ணினர். அந்த மாயை மேற்கு வங்கத்தில் மிகக் கொடூரமாகத் தகர்க்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அது முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது. அங்கு சில மாதங்களாக மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது; அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியும்; அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை ஏற்கனவே நம்மால் நேரில் காண முடிகிறது. பேரழிவும் சூறையாடலும்தான் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரளா அந்த யதார்த்தத்திலிருந்து இன்னும் தொலைவில், இருப்பதாக உணரலாம்; இருந்தபோதிலும், மிகச் சரியாக அதே போக்கு இங்கும் வேரூன்றத் தொடங்கியுள்ளது. ஃபாசிசத்தின் எழுச்சியிலிருந்து இந்தியாவில் எந்த மாநிலமும் தப்பவில்லை. ஒவ்வொரு மாநிலமும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் நமது இருத்தலின் ஒவ்வொரு அம்சமும் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதே.
இந்த யதார்த்தத்தை ஃபாசிசமாக அங்கீகரிக்க பலர் மறுத்துவருகின்றனர். மேலும், அந்த மறுப்பே ஒரு முக்கிய தடையாகும். ஃபாசிசம் இங்கே இருக்க முடியாது என்று நம்புவது ஒரு மனத் தடையாகும். ஃபாசிசம் ஜெர்மனி, இத்தாலியுடன் மட்டுமே அடைபட்டிருந்தது என்றும் ஹிட்லரோடும் முசோலினியோடும் அது இறந்துவிட்டது என்றும் கருதுவது நமது கற்பனை சித்திரத்தின் கருத்துருவாக்க ஆற்றலின் தோல்வியே — ஃபாசிஸ்டுகளோ அல்லது வரலாறோ எல்லைக்குட்பட்டதல்ல. ஃபாசிசம் வரலாற்றின் ஆழ்ந்த (பக்கங்களின்) உறைவிடத்தில் பூட்டி வைக்கப்பட்டுவிட்டது என்று பலர் கருதினர். ஆனால் சமகால ஃபாசிஸ்டுகள் அதை உருக்கி, மீண்டும் சூடாக்கி, வெவ்வேறு நாடுகளில் புதிதாகப் பரிமாறி வருவதை அவர்கள் காணத் தவறிவிட்டனர்.
ஃபாசிசத்தை வரலாற்று ஜெர்மானிய அல்லது இத்தாலிய மாதிரிகளுடன் மட்டுமே ஒப்பிடுவதும்—இந்தியா அவற்றை நகலெடுக்க முடியாது என்று கருதுவதும்—உண்மையான ஆபத்தைக் காண வைக்காது நம்மைக் குருடாக்கிவிட்டன. இதன் விளைவாக, ஃபாசிசம் இந்தியாவில் பெரும்பாலும் கவனிக்கப்படாமலும் எதிர்க்கப்படாமலும் வளர்ந்தது. அந்தக் கவனக்குறைவால் செழித்தோங்கியது. ஃபாசிசம் முற்றிலும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நெருக்கடியின் விளைபொருள் என்று கருதுவது மற்றொரு பகுப்பாய்வுத் தடையாகும்.
"நம்மிடம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் இல்லை; நமது முதலாளித்துவம் பின்தங்கியது. அதன் நெருக்கடி எப்படி ஃபாசிசத்தை உருவாக்கும்?" என நாம் அடிக்கடி நமக்குள் சொல்லிக்கொள்கிறோம். தீர்க்கமான விஷயம் என்னவென்றால், ஃபாசிசம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; ஆழமாக வேரூன்றிய நிலப்பிரபுத்துவ எச்சங்களுடன் சேர்ந்தும் அது செழித்தோங்க முடியும். ஃபாசிசத்திற்குத் தேவையான ஒவ்வொரு செய்பொருளும் இந்தியாவில் உள்ளது. சாதிய முறையால் ஒடுக்கப்பட்டவர்களிடமோ அல்லது அம்பேத்கரிய இயக்கத்தில் செயல்படுபவர்களிடமோ நீங்கள் பேசினால், "நீங்கள் இப்போதுதான் ஃபாசிசத்தைக் கண்டு விழித்தெழுகிறீர்கள்; நாங்கள் சாதிய முறை எனும் ஃபாசிசத்தின் கீழ் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவருகிறோம்" என அவர்கள் சொல்வார்கள். உண்மையில், சாதிய படிநிலை ஒரு ஃபாசிச திட்டத்திற்கு அளவெடுத்துத் தைத்தது போல கச்சிதமாகப் பொருந்தக்கூடியதே.
அவ்விதமே, இன்று ஃபாசிச சக்திகளாக இருப்பவர்கள் யாரென நீங்கள் ஆராய்ந்தால்—பீகார், உத்தரப் பிரதேசம் அல்லது மேற்கு வங்கத்தில்—நிலச் சீர்திருத்தங்களிலிருந்து காயமின்றி தப்பித்த அல்லது தங்களது இழந்த நிலத்தை, சமூக அந்தஸ்தை, அரசியல் ஆதிக்கத்தை மீட்டெடுக்க பழிவாங்கத் தகித்துக் கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ சக்திகளை நீங்கள் காண்பீர்கள். மேற்கு வங்கத்தில் கூட, முதலமைச்சர் வெறும் உள்ளூர் காங்கிரஸ் அரசியல்வாதி அல்ல; 34 ஆண்டுகள் இடது ஆட்சியின் நிலச்சீர்திருத்தங்களின் போதும் அதிகாரம் முழுமையாக அப்படியே நிலைத்திருந்த, ஆழமாக வேரூன்றிய ஒரு குடும்பத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இந்த மட்டுப்படுத்தப்படாத நிலப்பிரபுத்துவ அதிகாரம் ஃபாசிசம் விரிவடைய ஏற்ற வளமான களத்தை வழங்குகிறது. அதற்கு அக்கம்பக்கமாக நவதாராளமயமாக்கல் நிற்கிறது; மேலும் அது அதே காலகட்டத்தில்தான்—1990கள், 2000களின் தொடக்கத்தில்—முன்னேறியது. அப்போது, (அரசு) ஊழியர் இயக்கம், தொழிற்சங்கங்கள், ஆண்டுதோறும் வங்கி, காப்பீட்டு வேலைநிறுத்தங்கள் மூலம், நவதாராளமயமாக்கலின் வேகத்தை குறைக்க முடியும் என்று நாம் நம்பினோம். அதை முழுமையாகப் பின்தள்ள முடியாவிட்டாலும் அதன் தாக்கத்தை வெற்றிகரமாக மட்டுப்படுத்தினோம். மேலும் வர்த்தகம், விவசாயம், தொழிற்துறை, சேவைகள் வங்கித் தனியார்மயமாக்கல் ஆகியவற்றில் நெடுக்காகப் பல நடவடிக்கைகளைப் பின்தள்ளினோம்.
அந்தக் காலம் முடிந்துவிட்டது. அண்மையில் தான், ஐடிபிஐ வங்கி விற்கப்பட்டது. இந்தியா தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளை வைத்திருந்த, எச்பிசிஎல் போன்ற பொதுத்துறை (எண்ணெய்) சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டிய காலம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. இன்று, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்காகச் சுத்திகரிக்கப்படுவதற்கு வெளிநாட்டு கச்சா எண்ணெய் ஜாம்நகருக்கு நேரடியாக வருகிறது. அதேவேளையில், அதானி போன்ற பெருநிறுவன குழுமங்கள் உலகளாவிய சந்தைகளுக்கான சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியை ஏற்கின்றன. நவதாராளமயமாக்கல் இப்போது முற்றிலும் வேறுபட்ட தீவிரத்தன்மையின் மட்டத்தில் இயங்குகிறது. வர்த்தகம், விவசாயத்திற்கு அப்பால், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மூலம் தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது இந்திய உழைப்பாளர்கள் மீது முழுமையான பெருநிறுவன கட்டுப்பாட்டைக் கொண்டுவருகிறது.
ஃபாசிசத்தின் ஒவ்வொரு செய்பொருளும் இப்போது ஆயத்தமாக உள்ளது. அதனை முன்னெடுப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இடதுசாரிகளுக்குள், நாம் அடிக்கடி ஒரு அதிமுக்கியத்துவம்வாய்ந்த கேள்வியை விவாதிக்கிறோம்: ஃபாசிஸ்டுகள் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வருகிறார்கள்; ஆனால், அவர்கள் எப்போதாவது தேர்தல் மூலம் வெளியேறுவார்களா? ஒருமுறை வேரூன்றிவிட்டால், தேர்தல் வழியாக வெளியேறும் பாதை இருக்கிறதா? அது இன்னும் விடை காணப்படாத கேள்வியாகவே உள்ளது. முசோலினியும் ஹிட்லரும் அசாதாரண சூழல்களில்—ஒரு உலகப் போர், இராணுவத் தலையீடு, சோவியத் ஒன்றியத்தின் வல்லமை—வீழ்ந்தனர். இது முற்றிலும் வேறுபட்ட ஒரு வரலாற்றுத் திருப்பத்தைக் குறிக்கிறது. சிறிதளவு ஜனநாயகம் எஞ்சியுள்ள, தேர்தல்கள் இன்னும் நடைபெறுகிற இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்போது என்ன நடக்கிறது?
2024-இல், ஆளும் ஃபாசிஸ்டுகள் தங்களை நெருங்கிவரும் தோல்வியை உணர்ந்தனர். "இந்த முறை 400-க்கு மேல்" என்று அவர்கள் துணிச்சலாக அறிவித்த பிறகு, விரிவான தேர்தல் முறைகேடுகள் இருந்தபோதிலும் இந்திய மக்கள் அவர்களை 240 இடங்களுக்குச் சுருக்கினர். வழக்கமான போட்டிகளின் மூலம் தங்கள் பிடியை இனி தக்கவைக்க முடியாது என்று உணர்ந்த அவர்கள், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தையும் (எஸ்ஐlஆர்) புதிய தேர்தல் ஆணையச் சட்டத்தையும் அமல்படுத்தினர். எதிர்கால "சாதாரண" தேர்தல்கள் பாஜக-வுக்குத் தொடர்ச்சியான வெற்றிகளை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்படும்படி, தேர்தல் அமைப்பில் திட்டமிட்ட வகையில் தில்லுமுல்லுகள் செய்யத் தொடங்கினர். தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஒரு தேர்தல் பொறிமுறையை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நாம் இதை நேருக்குநேர் எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலைக்கு வந்துவிட்டோம். நாம் இப்போது கட்டமைத்து வரும் இயக்கமும் நாளை நடத்தவிருக்கும் பேரணியும் வெறுமனே ஒரு தேர்தல் அல்லது சில தனிநபர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பற்றியது மட்டுமல்ல. 13 கோடிக்கும் அதிகமான—கிட்டத்தட்ட 14 கோடி—மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளனர். அந்த நீக்கங்களில் பாதியை புலம்பெயர்வு அல்லது இறப்புகளுக்கானவை என்று நாம் தாராளமாகக் கருதினாலும், குறைந்தது 7 கோடி குடிமக்கள் தவறாக வாக்குரிமையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள், முஸ்லிம்கள், கிராமப்புற ஏழைகள், பெண்கள்—முதன்மையான இலக்குகள் யார் என்பதை நாம் துல்லியமாக அறிவோம்.
இந்தப் போராட்டம் இனிமேலும் தனிநபர் வாக்குரிமைகளை மீட்டெடுப்பது பற்றியது மட்டுமல்ல; இது இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தின் இருத்தலைப் பற்றியதாகும். வரலாற்று ரீதியாக, இந்திய ஜனநாயகம் அரிதாகவே வாக்குப்பெட்டிக்கு அப்பால் விரிவடைந்தது. குடிமக்கள் தொடர்ந்து தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தவும் அரசாங்கங்களைப் பொறுப்பேற்க வைக்கவும் முடிகிற ஒரு உண்மையான 24/7 பங்கேற்பு ஜனநாயகத்தை நாம் ஒருபோதும் அடையவில்லை. அது நிறைவேறாத ஒரு ஏக்கமாகவே இருந்தது. நம்மிடம் ஒரு தேர்தல் ஜனநாயகம் மட்டுமே இருந்தது; அதில், 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை—அல்லது மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணியின் 34 ஆண்டு ஆட்சிக்குப் பிறகும்—வாக்காளர்கள் அவ்வப்போது வாக்குப்பெட்டி மூலம் தங்கள் அரசாங்கத்தை மாற்ற முடிந்தது.
அந்த அடிப்படை வழியும் இப்போது முறிந்துவிட்டது. தேர்தல் அமைப்பு சமரசம் செய்யப்படும்போது, ஆற்றல்வாய்ந்த மக்கள் இயக்கங்களால் மட்டுமே அதை மீட்டெடுக்க முடியும். இனி வருங்காலத்தில், தேர்தலில் வெற்றி பெற விரும்பும் எவரும் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாஜக ஏற்கனவே முறைகேடுகள் மூலம் தோல்விகளைத் தடுக்கும் குறைந்தது 30,000 வாக்குகளின் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது. அவர்களைத் தோற்கடிக்க, 30,000 முதல் 50,000 வாக்குகள் வரையிலான இந்தக் காப்பை முறியடிக்கக்கூடிய ஒரு மகத்தான அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். பாரிய வேர்க்கால் மட்ட இயக்கம், அதிதீவிர பொதுமக்கள் அழுத்தம், மாற்றப்பட்ட கள நிலைமைகள் ஆகியவற்றின் சங்கமத்தால் மட்டுமே உண்மையான மாற்றத்தை வழங்க முடியும்.
பாசிசத்தை முடிவில் நாம் எவ்வாறு தோற்கடித்து அகற்றுவது என்பது இன்னும் விடை காணப்படாத சவாலாகவே உள்ளது. அது எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதை நாம் அறிவோம்; அதன்மூலம் நாம் துன்பத்தை அனுபவித்துள்ளோம்; பொது வாழ்வின் ஒவ்வொரு துறையின் நெடுகிலும் அது தன்னை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்கிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆயினும், அதை அகற்றுவதற்கான வரையறுக்கப்பட்ட, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு திட்டவரைபடம் எதுவும் இல்லை. பதில்களை நாமே உருவாக்கியாக வேண்டும். ஒவ்வொரு வழியையும் ஆராய வேண்டும். மேலும் இடதுசாரிகள் அவசரமாக தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
தொடரும்…
