விவசாயிகளை ஏமாற்றிவிட்ட தவெக அரசு

$articleData->title

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-27

 ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது

   எழுவாரை எல்லாம் பொறுத்து’

என்ற திருக்குறள் வரிகளுடன் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை துவங்குகிறது. அதாவது 'பிற தொழில்களைச் செய்யும் அனைவருக்கும் அடிப்படை ஆதாரமாக உழவர்கள் விளங்குகிறார்கள்’ என்பது குறளின் சாரமாகும். ஆனால், இந்தப் பொருளில் விவசாய நிதிநிலை அறிக்கை இல்லை. "உழவர்கள், உழவர் சங்கப் பிரதிநிதிகள் ..... முதலியோரை அழைத்துப் பேசி, அவர்கள் கருத்துகள், கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது." என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆனால், அப்படி எதுவும் காணப்படவில்லை. தவெகவின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே.

விவசாயத்திற்கான குறைந்த  நிதிஒதுக்கீடும், வழக்கமான சில மானியங்களும் திட்டங்களும்:-

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சார மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சொசைட்டி பயிர் கடன்கள் தள்ளுபடிக்காக சுமார்  ரூ. 6000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் தொடர்ந்து கோரி வரும் நிவாரணங்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. குறுவை சாகுபடி பொய்த்துவிட்டதால், வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எவ்வித நிவாரணங்களும் அறிக்கையில் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட  விவசாயத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒருசில புதிய திட்டங்களும், ஊழல்களுக்கு வழிவகுக்கும் மானியத் திட்டங்களுமே அறிக்கையில் உள்ளன.

விவசாயிகளுக்கான திட்டங்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இயந்திரங்கள், உரங்கள், விதைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை விற்பதற்கான நடைமுறை நீடிக்கிறது.  விதைகள், உரங்கள் எனத் துவங்கி சூரிய மின்சக்தி மோட்டார்கள், தார்பாய்கள் வழங்குவது வரை அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை; அவையெல்லாம்  கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை நமது விவசாயிகளின் தலையில் கட்டுவதற்கானது.  திட்டங்கள் எதுவும் தமிழ்நாடு விவசாயிகள் சந்திக்கும்  நெருக்கடிகளுக்கான தீர்வாகத் தெரியவில்லை.

 தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயும் தவெக கட்சியும்  தமது தேர்தல் பரப்புரையில் ,

1) கடன் தள்ளுபடி - 5 ஏக்கர் வரை நிலம் உள்ள சிறுகுறு விவசாயிகளின் சொசைட்டி பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது, மற்ற விவசாயக் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்வது

2) குறைந்தபட்ச ஆதார விலை நெல் குவிண்டாலுக்கு ரூ. 3500-, கரும்பு டன்னுக்கு ரூ. 4500- மற்றும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 44 என வழங்குவது

3) புதிய வேளாண் மின் இணைப்புகள் 20 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவது

4) அனைத்து விவசாயிகளுக்கும் “விவசாயிகள் உரிமை தொகை” ஹெக்டேருக்கு ரூ. 15,000 வழங்குவது  என்று கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பற்றி நிதிநிலை அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை.

  5 ஆண்டுகளில், 131 இலட்சம் மெட்ரிக் டன் என உணவு உற்பத்தியை அதிகப்படுத்துதல், உற்பத்தியை ஊக்குவித்தல், விவசாயிகள் வருமானம் மேம்பாட்டு ஆணையம் போன்றவை பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளின் குரல்வளையை நெரிக்கும் கடன்களை தள்ளுபடி செய்தல், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகளை உயர்த்துதல் மற்றும் வேளாண் நிலங்கள் கோருகிற ஏழை விவசாயிகளுக்கு அரசு புறம்போக்கு மற்றும் உச்சவரம்புக்கு மிகையான நிலங்கள் வழங்கி பாசனப் பரப்பளவை அதிகரிப்பது போன்ற முற்போக்கு நடவடிக்கைகள் மூலம் உற்பத்தியை உயர்த்த, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த அவசியமான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு எவையும் விவசாய நிதிநிலை அறிக்கையில் காணப்படவில்லை.

ஆறுதலுக்காக ஒருசில அறிவிப்புகள் :-

விவசாய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கூடிய சட்டமன்ற கூட்டத் தொடரில், தவெக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது. ஒரு குவின்டால் சன்னரக நெல்லுக்கு ரூ.289ம், ஒரு டன் கரும்புக்கு ரூ.709.50ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ. 2750ம், பொது ரகத்திற்கு ரூ.2600 ம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான, 'நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.3500 வழங்கப்படும்' என்பது எப்போது எனத் தெரியவில்லை.

ஒரு டன் கரும்புக்கு ஒன்றிய அரசு ரூ.5500 விலை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் இருக்கிற கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடி வருகிற நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான, 'கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4500- வழங்கப்படும்' என்பது எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  '2025-26 பருவத்தில் அரவை செய்த கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000/ விலை வழங்கப்படும்' என மட்டும் அறிவித்துள்ளது.

  தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டிகளில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்நாடு அரசும், ஆவினும் 4½ ஆண்டுகளுக்குமுன் பால் கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தியது. ஆனால், அதன்பின் தீவனத்திற்கான செலவு 100% உயர்ந்துவிட்டது. தற்போது 4.3 கொழுப்பு சத்தும், 8.2 இதர சத்தும் உள்ள பாலுக்கு ஆவின் ரூ.35 கொள்முதல் விலை நிர்ணயம் செய்து, அதில் ரூ.1.25 மார்ஜின் தொகை என பிடித்தம் செய்து, ரூ33.75தான் ஆவின் தருகிறது. ஆனால், இதே தரமுள்ள பாலுக்கு தனியார் பால் நிறுவனங்கள் ரூ.10 உயர்த்தி ரூ.45ஆக தருகிறார்கள்.

எனவே தான், பால் உற்பத்தி செய்யும் இலட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகள், " லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி ரூ.45 பசும்பாலுக்கும், ரூ.60 எருமை பாலுக்கும் தரவேண்டும். தீவனம் 50% மான்ய விலையில் தட்டுப்பாடின்றி வழங்கப்பட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆவின் சொசைட்டிகள் முன் கறவை மாடுகளுடன் போராட்டம் நடத்தினர்.

சொசைட்டி பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல்:-

விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால், தமிழ்நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே தான், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காலத்தில் தவெக கட்சி அறிவித்த வாக்குறுதியான,  "5 ஏக்கர் வரை நிலமுள்ள சிறுகுறு விவசாயிகளின் சொசைட்டி பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது, மற்ற விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்வது" என்பதை எதிர்பார்த்து தவெகவிற்கு வாக்களித்தனர். ஆனால், அரியணை ஏறிய தவெக அரசு, சொசைட்டியில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் தள்ளுபடியைப் பொறுத்தவரை, ரூ.50,000 துவங்கி ரூ.75,000 வரை தள்ளுபடி என இரண்டு முறை வெவ்வேறான அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. அதுவும்கூட தமிழ்நாட்டிலுள்ள விவசாய சங்கங்களின் போராட்டங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதிருப்தி உற்ற பல்வேறு விவசாய சங்கங்களுடன் தவெக அரசு பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், 17.8.2026 அன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ. 5932 கோடி தள்ளுபடியுடன் ரூ. 953 கோடி கூடுதல் தள்ளுபடி  செய்யப்பட்டதாக,  விதி 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

புதிய அறிவிப்பின்படி, கூட்டுறவு வேளாண் சொசைட்டிகளில், ரூபாய் 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு 100% கடன் தள்ளுபடி,

ரூ. 75,000 முதல்  1 இலட்சம் வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 75,000 கடன் தள்ளுபடி, ( கடந்த முறை அறிவிப்பில் ஒப்பிட்டால், இந்தப் பிரிவினர் மட்டும் தலா ரூ.40,000- கூடுதல் தள்ளுபடி பெறுவர்)

ரூ. 1 இலட்சத்திற்கு மேல் கடன் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக  ரூ.35,000 தள்ளுபடி என, ஆக மொத்தம், 13.34 இலட்சம் விவசாயிகளுக்கு மொத்த தள்ளுபடி ரூ.6220 கோடி மட்டுமே ஆகும்.

மாறி மாறி அறிவிப்புகள் மூன்றாவது முறையாக வந்தபோதிலும், 5 ஏக்கருக்கு கீழ் நிலம் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு மொத்த கடன் தள்ளுபடி என்ற தவெக  தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

மாறாக, நிகழாண்டு 2026 -2027 நிதியாண்டில் புதிய வேளாண் கடன்களுக்கு ரூபாய் 17,000 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய கடன்களை கட்டுவதற்கு வழியில்லாமல் கடனாளிகளாக உள்ள விவசாயிகளுக்கு, இப் புதிய கடன்களால் பயன் எதுவும் இல்லை.

மகாராஷ்டிரா மாநில வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தில், அம்மாநிலத்தில் கடன் பெற்ற 56 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.36,585 கோடி ரூபாய் தள்ளுபடித் திட்டத்தை சென்ற மாதம் அறிவித்து தற்பொழுது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் 40லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு விவசாயிக்கும் ரூபாய் 2 லட்சம் வரை கடன் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் ரூபாய் 31 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்து அம்மாநில விவசாயிகளை கடன் பாதிப்பிலிருந்து விடுவித்துள்ளது. அந்த நடைமுறையைக் கூட தமிழ்நாடு அரசு பின்பற்றலாம்.

தவெக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு உறுதியளித்தபடி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து நடப்பு சட்டமன்ற தொடரில் அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் கூடுதலாக,  குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமிழந்த, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு அரசு புறம்போக்கு, ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்கள் மற்றும் மடங்கள், சமய நிறுவனங்களின் விவசாய நிலங்கள், எஸ்டேட்டுகள், பண்ணைகளின் உச்சவரம்புக்கு மிஞ்சிய பினாமி நிலங்கள் ஆகியவற்றை எல்லாம் அரசு கையகப்படுத்தி, விநியோகம் செய்வதற்கான முற்போக்கு கொள்கைகள், திட்டங்களுடன் திருத்தப்பட்ட  விவசாய நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் தவெக அரசிடம் எதிர்பார்க்கிறார்கள்.


31 August, 2026