ஜெயலலிதா அரசியல் அரிச்சுவடி அறியாதவரல்ல
இன்று தமிழக முதல்வராக, அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கிற ஜெயலலிதா, 04.06.1982ல் அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜனவரி 1983ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, பல சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த அவரால், மூன்று முறை முதல்வராகவும் முடிந்தது. ஆக, ஜெயலலிதா அரசியலில் ஒரு நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். மாநில அரசியல், அகில இந்திய அரசியல் ஆகிய இரண்டைப் பற்றியும், ஜெயலலிதா என்ற அரசியல்வாதிக்கு, அவரது அரசியல் கட்சிக்கு நிச்சயமாய் ஒரு பார்வை இருக்கிறது.
ஒரு கட்டத்தில், தமிழக அரசியலில், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அஇஅதிமுக ஜெயலலிதா, ஜானகி பிரிவுகள் என இரண்டாக உடைந்தது. ஜானகி தலைமையிலான ஆட்சி கலைந்த பிறகு நடந்த தேர்தலில், தமிழ்நாட்டில், கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி என்ற நான்கு பேர் முதல்வர் வேட்பாளர்களாகக் களத்தில் இருந்தனர்.
ஜெயலலிதா 2014ல் ஒரு கணக்கு போடுகிறார். காங்கிரஸ் நிச்சயம் தோற்றுப் போகும். இந்தியா முழுவதிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை உள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் தானே காங்கிரஸின் முதன்மை எதிர்க்கட்சி என்ற பிம்பத்தைக் கட்டி அமைப்பதில் மிகவும் தெளிவாக உள்ளார். காங்கிரஸ் வீழ்ச்சி பாஜகவின் எழுச்சியாக நேரடியாக மாறுமா என்ற சந்தேகம் அவருக்கும் உள்ளது.
2014 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜக மற்ற கட்சிகளின் ஆதரவை நாடலாம். இது ஒரு சாத்தியப்பாடு. மற்றுமொரு சாத்தியப்பாடு, காங்கிரஸ் – பாஜக அல்லாத கட்சிகள் கணிசமான இடங்கள் பெறுவது. அப்போது, அந்தக் கட்சிகளில் ஏதாவது ஒன்றிலிருந்து பிரதமர் வரவும், அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
ஆகவே ஜெயலலிதா, தாமே பிரதமராக வாய்ப்பு உள்ளது எனத் திட்டவட்டமாக அடித்துச் சொல்லாமல், அடுத்து அமைய உள்ள மத்திய அரசில் தமக்குப் பெரும் செல்வாக்கு இருக்கும் என்பதையே சொல்கிறார்.
பாவம் சிபிஅய் தோழர்கள். சிபிஅய் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் தோழர் ஏ.பி.பரதன் இப்போதைய செயலாளர் தோழர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு, தோழர் ஏ.பி. பரதன், தங்களது கூட்டணி வெற்றி பெற்றால் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்புக்கள் இயற்கையாகவே உருவாகும் என்றார்.
மறுநாள் சிபிஎம் முறை வந்தது. தோழர்கள் பிரகாஷ்காரத் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். இரண்டு பேருமே தேர்தல்களை கூட்டாகச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்கள். (தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசவில்லையாம்! தொகுதிப் பங்கீடு பற்றி சிபிஅய் சிபிஎம்மால் ஜெயலலிதாவிடம் பேச முடியும் என சிபிஅய் சிபிஎம்மே நினைக்க முடியாது. ஏற்கனவே து.ராஜாவுக்கு ஒன்று டி.கே.ரங்கராஜனுக்கு ஒன்று என நாடாளுமன்ற மேலவை இடங்கள் தரப்பட்டுவிட்டன. அதையும் கவனத்தில் கொண்டே ஜெயலலிதா முடிவு செய்வார்).
இந்த அறிவிப்பு வெளியிடப் படும்போது, ஜெயலலிதா சொன்னார்: “ஒரு விஷயத்தை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அடுத்த பிரதமர் யார் என்று விவாதிப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. யார் பிரதமர் என்று எந்த ஒரு அரசியல் கட்சி விவாதிப்பதும் பொருளற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே அது குறித்து விவாதிக்க முடியும்.” பாவம், அம்மாவின் விவரம் இல்லாத விசுவாசிபோல் பேசியதற்கு, சிபிஅய் தேசிய செயலாளர் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தார் ஜெயலலிதா. தோழர் பாண்டியன், மோதிரக் கையால் குட்டுப்பட்டது பாக்கியம் என்று சொல்லவும் கூடும். ஏனெனில் அவர், யாருடைய ஆதரவில் ஜெயலலிதா பிரதமர் ஆனாலும், அது நாட்டிற்கு நல்லது என்று சொன்னவர் அல்லவா!
அஇஅதிமுக சிபிஎம் அறிவிப்பு நடந்த நேரத்தில் வேறொரு சுவையான விசயம் நடந்தது. ஒரு கேள்விக்கு மிகமிகப் பொருளுள்ள ஒரு பதிலை (!) ஜெயலலிதா தந்ததை, தீக்கதிர் 03.02.2014 அன்று முதல் பக்கத்தில் பிரசுரம் செய்திருந்தது. உங்களுக்கும் நரேந்திர மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது என ஒரு நிருபர் கேட்க, ஜெயலலிதா, “இந்தச் செய்தியாளர் சந்திப்பு, கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கானது. இதில் வேறு கேள்வி எதற்கும் பதில் இல்லை. மற்ற பிரச்சனைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனப் பதில் சொன்னார். தேர்தலுக்கு முந்தைய உடன்பாடு பற்றித்தான் பேச்சு என்றும், தேர்தலுக்குப் பின் என்ன என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் என்றும் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில், பளிச் எனச் சொல்கிறார். மோடி, மதவெறி பற்றி எல்லாம் அவர் எதுவும் பேசவில்லை.
அவர் தெளிவாக உள்ளார். அவர் எந்தக் காயை ஆடவும் எந்தக் காயை வெட்டவும் தயாராக இருப்பதைத் தெளிவாக்குகிறார். மோடி தொடர்பாக இதுவரை எந்த எதிர்மறைக் கருத்தையும் அவர் சொல்லாமல் இருக்கிறார். சிபிஅய், சிபிஎம் தோழர்கள் ஜெயலலிதாவிற்கு வாக்கு கேட்கும்போது, மறைமுகமாக, அதில் மோடிக்கும் வாக்கு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்பதை, உணர வேண்டும்.
சிபிஎம், ஜெயலலிதாவின் கொள்கை பரப்புச் செயலாளர் என்று சொல்வது, மிகையான பொருத்தமற்ற விமர்சனமா?
தோழர் மாவோ, விவரங்களிலிருந்து உண்மையைக் கண்டறியச் சொல்கிறார். (SEEK TRUTH FROM FACTS). அஇஅதிமுக தனக்கு இரண்டு தளங்கள் இருப்பதாக நாடகமாடுகிறது. (1) வறியவர் ஆதரவு (2) மாநில உரிமைகளிலிருந்து மத்திய அரசு எதிர்ப்பு. ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலிலேயே, தோழர் ராமகிருஷ்ணன், அஇஅதிமுக நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களுக்காக அதற்கு வாக்களிக்கக் கோரியதன் மூலம், அஇஅதிமுகவின் வறியவர் ஆதரவு நிலைக்கு வக்காலத்து வாங்கினார். மாநில உரிமைப் போராளி மத்திய அரசு எதிர்ப்பாளி என்ற பிம்பத்தை அஇஅதிமுகவிற்கு உருவாக்குவதில், சிபிஎம் எவ்வளவு கண்ணும் கருத்துமாய் உள்ளது என்பதை தீக்கதிரில் வெளிவந்துள்ள சிபிஎம் சட்டமன்றத் தலைவர் தோழர் சவுந்தர் ராஜன், துணைத் தலைவர் பாலபாரதி பேசிய விஷயங்களிலிருந்து காணலாம்.
“மனித வளக்குறியீடுகள், மாநில வளர்ச்சிக் குறியீடுகள் ஆகியவை ஒப்பீட்டு அளவில் இந்தியாவில் மிகச்சிறந்த வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது என்று ஆளுநர் அறிக்கை விவரமாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாகச் செயல்பட்டால், அந்த மாநிலத்தை விவசாயத் துறையில், தொழில் துறையில், கல்வித் துறையில், மகளிர் மற்றும் சமூக நலத்துறையில் எப்படி ஊக்குவிக்கலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக வளர்ச்சி அடைந்த மாநிலமா, நன்றாக செயல்படுகிற மாநிலமா தண்டித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதைப் போல நிதிக் குழுவும் மத்திய அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது என்ற காரணத்திற்காக நமக்கு நிதிப் பங்கீட்டை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள் என்பது ஆளுநர் உரையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாவற்றையும் தலைகீழாகப் பார்க்கிற பார்வையாகும். வளர்ச்சி குன்றிய அல்லது போதுமான வளர்ச்சியை எட்டாத மாநிலங்களுக்கு கூடுதலான சலுகையை தரவேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் வளர்ச்சி அடைகிற மாநிலங்களை ஊக்குவிப்பது என்பதும் அவசியமாகும். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இது நடைபெறவில்லை, குறிப்பாக நம் தமிழகம் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய அரசமைப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றும்; மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்கிற அரசை அமைப்பதில் அதிமுகவுடன் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்படும்.” இவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் தோழர் அ.சவுந்தரராஜன் கூறிய விசயங்களாகும்.
பல்வேறு பிரிவு மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிற மாநிலமாக இருக்கிறதேயன்றி, மதவெறி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் மோடியின் குஜராத் அல்ல என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் கே.பாலபாரதி கூறினார்.
தோழர் அ.சவுந்தரராஜன், தொழிலாளர்களின் வேலையைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறபோது, மூன்று நாட்கள் தொழிலாளர் துறை இரவு பகலாக வேலை செய்ததை தான் அருகில் இருந்து பார்த்ததாகச் சொல்கிறார். சிறப்பாக தொழிலாளர்துறை செயல்பட்டு அந்தத் தொழிலாளர்களின் வேலை பாதுகாக்கப்பட்டது என்றும் பல தொழிற்சாலைகள் இங்கே வருகின்றன என்றும் சொன்னார்.
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேசை தட்டுவதில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் படைப்பவர்கள் என்றால், அம்மா அம்மா பெரியம்மா நீங்கதாம்மா எல்லாம்மா என்ற பக்திப் பாடலுக்கு சவுந்தர்ராஜனும் பாலபாரதியும் எப்படி மெய்மறந்து பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்!
ஆனாலும் சவுந்தர்ராஜன் அவர்களே, தமிழகத் தொழிலாளர்களால் வெறுக்கப்படும் தொழிலாளர் துறையை, உங்களால் எப்படிப் போற்றிப் புகழ முடிந்தது என உண்மையிலேயே புரியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசயங்கள், தமது கட்சிக்கு வெளியிலிருந்து அதுவும் இடதுசாரி முகாமிலிருந்தே தமக்கு நற்சான்றிதழ்கள் வருகின்றன என்று ஜெயலலிதா காட்டிக்கொள்ளும் விதத்தில், நமது தோழர்கள் அவரது கொள்கை பரப்புச் செயலாளர்களாக எவ்வளவு சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதைப் புலப்படுத்தும்.
தேர்தல் உடன்பாடுகளும் சிபிஅய், சிபிஎம் கட்சிகளின்
சந்தர்ப்பவாதத் தவறுகளின் வரலாறும்
1967ல் திமுக அண்ணாதுரை தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோதே, வலதுசாரி சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து சிபிஎம் அக்கூட்டணியில் இடம் பெற்றது. சிபிஅய் தனித்துப் போட்டியிட்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி போட்டியிட்ட 20 இடங்களில் 6 இடங்களிலும் சிபிஎம் போட்டியிட்ட 11 இடங்களில் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறி அஇஅதிமுக உருவாக்கினார். கேப்பிடலிசம் சோசலிசம் எல்லாவற்றையும் புட்டியில் போட்டுக் குலுக்கி எடுத்து அற்புதமான அண்ணாயிசம் கண்டுபிடித்தார். அந்த நேரத்திலேயே சிபிஅய்யின் பாலதண்டாயுதம் ஊழலை லஞ்சத்தை எதிர்க்கும் எம்ஜிஆர் மீது ஒரு துரும்பு ஒரு கீறல் பட்டாலும், ஒரு திமுக மந்திரி கூட தமிழ் நாட்டில் உயிரோடு நடமாட முடியாது என்ற எச்சரிக்கையைப் பிரகடனம் செய்தார்.
எம்ஜிஆர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தியபோது, அவரிடம் கொள்கையும் திட்டமும் தெளிவாக இல்லை எனச் சொல்லி தோழர் பி.சங்கரய்யாவை வேட்பாளராக நிறுத்திய சிபிஎம், எம்ஜிஆர் தோழர் பி.இராமமூர்த்தியை சந்தித்த பிறகு, தனது வேட்பாளரை விலக்கிக் கொண்டு, அஇஅதிமுகவை ஆதரித்தது. அவமானகரமான அபத்தக் களஞ்சியமான அண்ணாயிசத்தைச் சீர்செய்ய, தீக்கதிரில் 5 அல்லது 6 தொடர் கட்டுரைகள் மூலம் ஆலோசனை வழங்கினார்கள். அப்போதே, கேப்பிடலிசத்தையும் சோசலிசத்தையும் இணைப்பவரின் ஆலோசகர் வேலையை வலியச் செய்தனர்.
நெருக்கடி நிலைக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் 1977ல் வந்தது. அஇஅதிமுக சிபிஅய், இ.காங்கிரஸ் ஓர் அணி. திமுக, ஜனதா, சிபிஎம் வேறு அணியில் நின்றார்கள். அதிமுக 18, இ.காங்கிரஸ் 15 சிபிஅய் 3ல் வென்றன. ஜனதாவிற்கு 3ம் திமுகவிற்கு ஓரிடமும் கிடைத்தன. திமுக மீதான ஊழலை விசாரிக்க சர்க்காரியா ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், சிபிஎம் திமுகவுடன் தேர்தலைச் சந்தித்தது.
1977லேயே சட்டமன்றத் தேர்தல்கள் வந்தன. சிபிஎம், பல்ட்டி அடித்து அஇஅதிமுக அணிக்குச் சென்றது. அதற்குப் பின்வரும் காரணம் சொன்னது. “மக்களவைத் தேர்தல் என்பது சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடந்த போட்டி. ஆனால் சட்டமன்றத் தேர்தல் அப்படியான பிரச்சனையை முன் வைத்து நடக்கவில்லை.
திமுக ஆட்சி செய்த தவறுகளை 1969 ஆம் ஆண்டிலிருந்தே மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டி வருகிறது. தவிரவும், திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது சர்க்காரியா கமிஷன் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட மார்க்சிஸ்ட்கள் உடந்தையாக இருக்க முடியாது.” நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஊழல் பிரச்னை கிடையாது! சட்டமன்றத் தேர்தலுக்கு ஜனநாயகம் பிரச்சனை கிடையாது! ஆஹா பிரமாதம்.
1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இ.காங்கிரஸ் கூட்டணி வென்றது. அஇஅதிமுக ஜனதா சிபிஎம் கூட்டணி அமைத்தன. சட்ட மன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான 14 கட்சி கூட்டணியில், சிபிஅய், சிபிஎம் இடம் பெற்றன. அக்டோபர் 31, 1984ல் இந்திரா கொல்லப்பட்டார். 1984 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. சட்டமன்றத் தேர்தலும் கூடவே நடந்தது. சிபிஅய், சிபிஎம், திமுக, ஜனதா கூட்டணியில் இருந்தன. இரண்டிலும் அஇஅதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது.
24.12.1987ல் எம்ஜிஆர் இறந்த பிறகு அஇ அதிமுக, ஜெயலலிதா ஜானகி அணிகளாகப் பிரிந்தது. நான்கு முதல்வர் வேட்பாளர்களோடு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சிபிஅய் ஜெயலலிதாவுடனும் சிபிஎம் திமுக ஜனதாவுடனும் சேர்ந்தன. கருணாநிதி முதல்வரானார். 1989 நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, சிபிஅய், சிபிஎம் ஓரணியில் நின்றன.
அஇஅதிமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி நாகப்பட்டினம் தவிர அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. அகில இந்திய அளவில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி 141 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 192 இடங்களையும் பாஜக 88 இடங்களையும் கைப்பற்றின. தேசிய முன்னணி ஆட்சி அமைக்க, ஒரு பக்கம் சிபிஅய் சிபிஎம்மும், மறு பக்கம் பாஜகவும் ஆதரவு தந்தனர்.
ராஜீவ் காந்தி மே 91ல் இறந்தார். ஜூன் 91 நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுக சிபிஅய், சிபிஎம் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமையில் நரசிம்மராவ் பிரதமராக, சிறுபான்மை அரசு, மத்தியில் 21.06.1991ல் வந்தது. 1996ல் திமுக, சிபிஅய், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உருவானது. சிபிஎம், மதிமுக தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றது. தோழர் சுர்ஜித் தமது கூட்டணி வென்றால் வைகோ தான் முதல்வர் என அறிவித்தார். வைகோ, சுர்ஜித்தில் பெரியாரை காண்பதாக உருகினார்.
தொங்கு நாடாளுமன்றம் வந்தது. பாஜக 154, காங்கிரஸ் 140 இடங்கள். 16.05.1996 முதல் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமரானார். 01.06.1996ல் தேவகவுடா, அய்க்கிய முன்னணி பிரதமரானார். அய்மு, இடது முன்னணி ஒருங்கிணைப்பு ஏற்பட்டது.
சிபிஅய்யின் இந்திரஜித் குப்தா சதுரானன் மிஸ்ரா மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். சிபிஎம் வெளியில் இருந்து ஆதரிப்பது தாண்டி, ஒருங்கிணைப்பின் மூலம் நேரடியாக அல்லாத விதத்தில் ஆட்சியில் அங்கம் வகித்தது. 21 ஏப்ரல் 1997ல் குஜ்ரால் பிரதமராகி, பிறகு அந்த ஆட்சியும் அற்பாயுசில் கவிழ்ந்தது.
1998 பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, மதிமுக, பாமக, பாஜக கூட்டணி உருவானது. திமுக, தமாகாவுடன் சிபிஅய் கூட்டணி சேர்ந்தது. சிபிஎம் வடசென்னையில் மதுரையில் தனித்துப் போட்டியிட்டு, மற்ற இடங்களில் திமுக கூட்டணியை ஆதரித்தது.
பாஜக 179 காங்கிரஸ் 142 இடங்கள் பெற, பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்து 13 மாதங்கள் ஓடியது. 99ல் அஇஅதிமுக ஆதரவை வாபஸ் வாங்க, மீண்டும் தேர்தல் வந்தது. அஇஅதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைக்க, அதில் சிபிஅய், சிபிஎம் சேர்ந்தனர். திமுக, பாஜக, மதிமுக, ராஜீவ் காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தனர். மூன்றாவது அணியாக தமாக விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் களம் இறங்கினர். தமிழ்நாட்டில் பாஜக, திமுக கூட்டணி 24 இடங்கள் வென்றன. 182 இடங்கள் வென்று, பாஜக “இந்தியா ஒளி வீசும்” ஆட்சி நடத்தியது.
2004ல் பாஜக, அஇஅதிமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் சிபிஅய், சிபிஎம் இடம் பெற்று எல்லா இடங்களையும் வென்றனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஅய், சிபிஎம் கூட்டணி வென்று கருணாநிதி முதல்வரானார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் 39ல் 27 இடங்களையும், புதுச்சேரி தொகுதியையும் வென்றனர். அஇஅதிமுக, மதிமுக பாமக, சிபிஅய், சிபிஎம் மூன்றாம் அணியாய் நின்றனர். அஇஅதிமுக 9 இடங்கள், மதிமுக, இகக, இககமா தலா 1 இடமும் வெற்றி பெற்றன. பாமக ஓரிடம் கூட வெற்றி பெறவில்லை.
படிக்கும் போதே மூச்சு வாங்குகிறதா? சிபிஅய், சிபிஎம் கட்சிகள் நோகாமல், இந்தத் தாவல்களை, பல்ட்டிகளை, பாய்ச்சல்களை நடத்திவிட்டனர். இந்தப் பின்னணியில் சிபிஅய், சிபிஎம் ஜெயலலிதாவோடு 2014 தேர்தலுக்குக் கூட்டு சேர்வதைக் காண வேண்டும். புரட்சி, சமூக மாற்றம் என்பவற்றிற்கும் சிபிஅய் சிபிஎம் தேர்தல் தந்திரங்களுக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தெளிவு.
தேர்தல் அல்லாத நேரங்களில் மற்றும் அதன் தொடர்ச்சியாக தேர்தல்களில், புரட்சிகர இடதுசாரி கட்சியின் நிலைப்பாடு எப்படி அமைய வேண்டும் என இகக (மாலெ) 9ஆவது காங்கிரஸ் ஆவணம் பின்வருமாறு சொல்கிறது.
‘நாம், சங்பரிவாரின் மதவெறி அரசியலில் இருந்து மட்டுமின்றி, கட்டற்ற அதிகாரம் மற்றும் சூறையாடலுக்காக பசியுடன் காத்திருக்கிற பெரும்தொழில் குழும உலகில் இருந்தும் இன்று மோடி தமது சக்தியை பெறுகிறார் எனப் புரிந்துகொள்ளும்போது, மோடி மாதிரிக்கெதிரான போராட்டத்தை வெறுமனே மதவெறி எதிர் மதச்சார்பின்மை வழிகளில் தொடர முடியாது என்பதை அங்கீகரித்தாக வேண்டும்; மாறாக அது உழைக்கும் மக்களின் பெரும்தொழில் குழும எதிர்ப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான தொடர் போராட்டங்களிலிருந்து பலம் பெற வேண்டும்.
மோடி முத்திரை அரசியலோடு பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ள மதவாத பயங்கரம், பெரும் தொழில்குழும மூலதனம், அரசு ஒடுக்குமுறை, ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் ஒரு பகுதியாக இஸ்லாமியர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை திறம்பட இணைப்பதன் மூலம்தான் மோடி மாதிரியை எதிர்கொள்ள முடியும். மக்களின் ஓர் அதிஉயர்ந்தபட்ச அறுதியிடலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் சக்திவாய்ந்த தலையீடும் மட்டுமே, நாடு ஒட்டுமொத்தமாக பெரும்தொழில் குழும – பாசிச கையகப்படுத்தல் ஆபத்துக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்ற முடியும்’.
‘பெரும்தொழில்குழும-பாசிச தாக்குதலை எதிர்ப்பது, காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்கொள்வது என்ற மய்ய அரசியல் கடமை, வெவ்வேறு மாநிலங்களில் நிலவுகிற வேறு வேறு வகைப்பட்ட அரசியல் சூழல்கள் மற்றும் நிலைமைகளைச் சார்ந்து எழுகிற அந்தந்த மாநிலங்களுக்கு குறிப்பான அரசியல் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளோடு இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பாஜக/தேஜமு அல்லது காங்கிரஸ்/அய்முகூ ஆகியவற்றால் நடத்தப்படுகின்றன.
ஆக இந்த இரண்டு கூட்டணிகளுமே தேசிய அளவில் நமது பிரதான இலக்குகளாகும். இந்த இரண்டு கூட்டணிகளோடும் நேரடியாகத் தொடர்பில்லாத கட்சிகளால் நடத்தப்படுகிற மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தமிழ் நாட்டின் அஇஅதிமுக போன்ற அரசாங்கங்கள் சமஅளவுக்கு மோசமான மக்கள்விரோத, ஜனநாயக விரோத வரலாறு உடையவர்கள். ஆகவே நாம் இவர்களையும் ஊக்கத்துடன் எதிர்த்திட வேண்டும்’.
தமிழ்நாட்டில் மோடியின் திருப்பணியை ஜெயலலிதாவே மேற்கொள்வதால் கம்யூனிஸ்ட்களின் முதன்மையான கடமை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஆகும். அதற்காக, போராடுகிற இடதுசாரி ஜனநாயக தேசபக்த சக்திகளிடம், உழைக்கும் மக்களிடம் துணிந்தும், உரிமையோடும், ஆதரவு கேட்கவேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலின் செங்கொடியின் சுதந்திரத்தை உத்தரவாதம் செய்வதன் மூலம் வருங்கால தமிழகத்திற்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.