‘மதம் கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, பிற மதத்தினரை தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது. அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும் கிடையாது’.இந்துக்கள் பற்றி ஆர்எஸ்ஸின் எஸ்.குருமூர்த்தி இப்படிச் சொல்வது உண்மைதான். அவர்கள் தங்களது நாளொன்றை குறைந்தபட்ச கவுரத்துடன் கடத்தும் கவலையில் தள்ளப்பட்டுள்ளவர்கள். அது தொடர்பான நடவடிக்கைகளில்தான் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள்.
இந்துத்துவ சக்திகளுக்கு, மதம் கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இருந்ததில்லை, இருப்பதில்லை என்று அவரால் சொல்ல முடியாது. குஜராத் முதல் முசாபர்நகர் வரை இந்துத்துவ சக்திகளது அந்த பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த வழிமுறைகள் திட்டமிட்டு அமலாக்கப்படுகின்றன. ஆட்சியைப் பிடிக்க ஆதரவளித்த பிக்கியின் புதிய தலைவர் போன்ற கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதிகளே பாஜக வளர்ச்சி நிகழ்ச்சிநிரலில் கவனம் செலுத்த வேண்டும், இந்துத்துவ நடவடிக்கைகள் வழிவிலகல்கள் என்று சொல்லும் அளவுக்கு, பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சிநிரல் வாய்ப்புள்ள இடங்களில், வாய்ப்புள்ள தருணங்களில் எல்லாம் அமலாகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி எல்லாம் வழக்கம்போல் கொண்டாடிய இந்திய மக்கள், கிறிஸ்துமஸ் நாளை மட்டும் வழக்கமான மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் போனது. காந்தி பிறந்த தினமான, தேசிய விடுமுறை நாட்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகிற, அக்டோபர் 2 அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை, அலுவலகத்துக்கு வர வேண்டும், உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி சொன்னதில், பாஜக ஆட்சியாளர்கள் அரசியல் கணக்குத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று சொல்வதற்கு என்ன கணக்கு? இந்த விசயத்தில் மத்திய அரசுக்கு யார் எதிரிகளாக, வேண்டாதவர்களாக ஆகிப் போனார்கள்? அந்த நாளில், நாட்டில் ஏன் நஞ்சு கலக்கப்பட்டது? மசூதி இடிக்கப்பட்டது நாட்டின் மதச்சார்பின்மை இழையை அறுத்தெறிந்தது என்றால், கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறித்துவர்களை வேறு வேலை பார் என்று சொல்வதும், தீவிரம் குறைந்தது என்றாலும், அதை ஒத்ததொரு நடவடிக்கைதானே? ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி, சிறுபான்மை மக்களின் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கட்டாயப்படுத்தி, குடும்ப அட்டை வாங்கித் தருவதாகச் சொல்லி இசுலாமியர்களை இந்துக்களாக மாற்றுகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள். வீடு திரும்புகிறார்கள் என்கிறார்கள். வீடு திரும்ப, எது எனது வீடு? இந்து மதமா? தெருவில் நடக்காதே, மலத்தை தலையில் ஏந்து, காலில் செருப்புப் போடாதே, மேல் சட்டை அணியாதே, ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் குடியிரு, பிணத்தை எரி, எப்போதும் காலின் கீழே கிட என்று சொல்லும் அதர்மம் வேண்டாம் என்றுதானே போனோம். அதில் மாற்றம் வருமா? அந்தந்த சாதிக்குத் திரும்பிச் செல்லலாம் என்று பெருந்தன்மையாகச் சொல்கிறார்களாம். சாதிய ஒடுக்குமுறையே வேண்டாம் என்றுதானே போனார்கள்? ஆசை காட்டி அழைத்ததால் போனார்கள் என்கிறார்கள். எதற்கு ஆசை? கஞ்சிக்கும் கல்விக்கும் கவுரவத்துக்கும்தானே? அவர்கள் வீடு திரும்பவில்லை என்றால்தான் என்ன?சுனாமி தாக்குமா? வெள்ளம் கொண்டு போகுமா? பூகம்பம்தான் இழுத்துக்கொள்ளுமா?
மோடி பெஷாவர் பற்றி பேசுகிறார். இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே இருக்கிறார்.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அவரவர் வீடுகளில், மதங்களில் இருக்கட்டும் என்று சொல்ல மட்டும் மோடி தயாராக இல்லை. சங்பரிவார் விஷமிகள் வாய்ப்பைப் பயன்படுத்தி மதமாற்றத் தடைச் சட்டம் வேண்டும் என்று சொல்லத் துவங்கிவிட்டனர். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் இரட்டை தண்டனை வழங்கியிருக்கிறார்கள். தங்கள் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதை பொதுவாக மக்கள் அனுமதிப்பதில்லை. கர் வாப்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்துத்துவ சக்திகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து விட்டு, இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மூட்டை கட்டி போகி கொளுத்திவிட்டாலே இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் பிரச்சனைகளில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்காது. அது நடக்காவிட்டால் கேள்விகள் நிற்காது.