அதிருப்தி குரல்களை அடக்குவது: ஆம்ஆத்மி கட்சியின் ஆளுகை மந்திரம்

பிப்ரவரியில், டில்லி சட்டமன்ற தேர்தல்களில் ஏகப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றபோது, கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், அந்த வெற்றி அச்சம் தருவதாகவும், ஆணவத்துக்கு இரையாகிவிடும் ஆபத்துக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். டில்லி எழுச்சிக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்க்கும்போது, மிகச்சரியாக, கட்டற்ற ஆணவத்தின் அறிகுறிகளையே கேஜ்ரிவாலும் அவரைச் சுற்றியிருப்பவர்களும் வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் முதலில் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்; இப்போது கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டுமின்றி, அவர்களுடன் சேர்ந்து, நன்கறியப்பட்ட சோசலிச செயல்வீரர்களான பேராசிரியர் ஆனந்த் குமார் மற்றும் அஜித் ஜா ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

இந்தத் தலைவர்களை வெளியேற்றுவது என்ற அந்த குறிப்பான நடவடிக்கைக்கு அப்பால் – அவர்கள் சிறுபான்மைதான்; கட்சியின் எல்லா மட்டங்களிலும் கேஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய பெரும்பான்மை இருக்கிறது – அவர்கள் வெளியேற்றப்பட்ட விதம்தான் கூடுதல் அதிர்ச்சி தருகிறது. யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லப்படவே இல்லை. தேசிய கவுன்சில் கூட்டத்தில், கூட்டம் துவங்கும் முன்னரே, அதிருப்தி கருத்துக்கள் கொண்ட தலைவர்களை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் சொல்லப்பட்டது. அந்தத் தலைவர்களும் அவரது ஆதரவாளர்களும் இழிவுபடுத்தப்பட்டார்கள்; குண்டர்களால் (என்று சொல்லப்படுகிறது) தாக்கப்பட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி துவங்கியதில் இருந்து கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட வந்த உட்கட்சி லோக்பால் பதவியில் இருந்த அட்மிரல் ராமதாசுக்கு, கூட்டத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு அவரும் நீக்கப்பட்டதையும் புதிய லோக்பால் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டார்.

 

ஆம் ஆத்மி கட்சியின் கிட்டத்தட்ட மொத்த சட்டமன்றப் பிரிவும் அர்விந்த கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருக்க, சில சட்டமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. யோகேந்திர யாதவுக்கும் பிரசாந்த் பூஷணுக்கும் ஆதரவாக நின்ற பாட்டியாலா ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தரம்வீர் காந்தி, டில்லி, திமாபூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கஜ் புஷ்கர் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியில் ‘உட்கட்சி ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாக’ மிகவும் தெளிவாக கண்டனம் தெரிவித்தனர். யாதவ், பூஷண் ஆகியோர் எழுப்பும் பிரச்சனைகள் ஆம் ஆத்மி கட்சி அதன் ‘நிறுவன கோட்பாடுகளை’ மீறுவது தொடர்பானவை – டில்லியில் வேட்பாளர்கள் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள், நிதி திரட்டுதல், தேர்தல் பிரச்சாரத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் தார்மீக நெறிகள் மீறப்பட்டது, வெளிப்படைத் தன்மையின்மை, முடிவு எடுப்பதில் உட்கட்சி ஜனநாயகம் இன்மை ஆகியவை இந்தப் பிரச்சனைகள். சில புகார்கள் லோக் பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. சில விசயங்களில் வேட்பாளர்களை மாற்ற வேண்டியும் நேர்ந்தது.

 

கட்சியின் அரசியல் – செயல்தந்திர போக்கு மற்றும் அதன் விரிவாக்கம் ஆகியவை பற்றியும் பிரச்சனைகள் எழுந்தன – மக்களவை தேர்தல்களில் பெரிய அளவுக்கு போட்டியிட கேஜ்ரிவால் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் டில்லியில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத நிலையில், கேஜ்ரிவால் டில்லி தேர்தல்களில் போட்டியிட விரும்பியதை, மீண்டும் உடனடி தேர்தல்களைத் சந்திப்பது, காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது ஆகியவற்றைத் தவிர்க்க, யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. கேஜ்ரிவால் முகாம் சொல்வதுபடி, யாதவும் பூஷணும் டில்லியில் கட்சி தோல்வியடைய வேண்டும் என்று விரும்பினார்கள். அதிருப்தியாளர்கள் மீது, குறிப்பாக பூஷண் மீது, ‘நம்பிக்கை துரோகம்’ இழைத்ததாக கேஜ்ரிவால் நேரடியாகவே குற்றம் சாட்டியதுடன், கட்சி அவர் வேண்டுமா அல்லது அதிருப்தியாளர்கள் வேண்டுமா என்று தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்; அதன் மூலம் எந்த அரசியல்ரீதியான ஊடாடலுக்கான, சமரத்துக்கான இயக்கப்போக்குக்கு இடமின்றி செய்துவிட்டார். கடைசியில், ‘மாற்று அரசியல்’ என்று ஆம் ஆத்மி கட்சி பேசி வந்ததை முடிவுக்கு கொண்டுவரும் விதம், வெறுக்கத்தக்க, முறையற்ற விதத்தில், அவர்கள் வெளியேற்றப்படுவது நடந்தேறியது.

 

கேஜ்ரிவால் ‘எதேச்சதிகார போக்குடன்’ செயல்படுவதாக பூஷண் குற்றம் சுமத்துகிறார்; பூஷண் ‘நம்பிக்கை துரோகம்’ இழைத்துவிட்டதாக கேஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார்; டில்லியில் ஓர் ஆளும்கட்சியாக ஆம் ஆத்மி கட்சி, அரசியல்ரீதியாக பரிணமிக்கிற, உறுதிப்படுகிற பின்னணியில் இந்த மோதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமான கருத்தியலாளராக கருதப்பட்ட யோகேந்திர யாதவ், வழக்கொழிந்துவிட்ட இடது – வலது அரசியல் இருமத்துக்கு (பைனரி) அப்பாற்பட்ட ஓர் அரசியல் கருத்தியல் உருவாக்கம் என்று ஆம் ஆத்மி கட்சியை விவரித்தார். இடது, வலது ஆகிய இரண்டு போக்குகளில் இருந்தும் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் ஒன்றிணைக்கும் சுதந்திரம் பெற்ற, ‘ஒரு தீர்வு தரும் அமைப்பு’ என்று கேஜ்ரிவாலும் கட்சியை விவரித்தார். இந்த அபரிதமான கருத்தியல் தெளிவின்மையும் நீக்குப்போக்கும் இருந்தபோதும், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரின் சோசலிச ஆதரவு நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிரமமானதாக இருந்திருக்க வேண்டும்; டில்லி தேர்தல்களில் பெருவெற்றி பெற்றிருக்கும் இந்த நேரம், இந்த அதிருப்தி இரட்டையர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுக்க அரசியல்ரீதியாக வாய்ப்பான தருணம் என்று கேஜ்ரிவால் உணர்ந்திருக்க வேண்டும்.

 

சுபாஷ் சந்திர போஸ், இன்னும் சில இடதுசாரி, சோசலிச தலைவர்களை ஓரங்கட்டியது, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு என்று புனைந்து சொல்லப்பட்ட சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரசை அம்பலப்படுத்தியதுபோல், சமூக இயக்கங்களின் இல்லம் என்று புனையப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடைப்பட்ட நிலையில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள, அதிருப்தியாளர்களை வெளியேற்றுகிறது; சோசலிச சாய்வு கொண்ட தலைவர்களை விரட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் ஒடுக்கப்படுவது, டில்லி தொழிலாளர் வர்க்கத்துக்கு முதமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, டில்லி தலைமைச் செயலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடுக்கும் நிகழ்வுடன் சேர்ந்து நடக்கிறது.

 

சோசலிஸ்டுகளுக்கு, சமூக இயக்க செயல்வீரர்களுக்கு, தூய்மையான ஜனநாயகம் மற்றும் சமத்துவ அரசியல் வேண்டுமென விரும்பும் குடிமக்களுக்கு, இது நிச்சயம் எடைபோடுவதற்கான ஒரு தருணம். மேதா பட்கர் போன்ற செயல்வீரர்களும் இன்னும் பலரும் கடந்த மக்களவை தேர்தல்களின்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்கள். இப்போது ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருப்பதில் இருந்து விலகியிருப்பதன் மூலம், மேதா பட்கர் தனது ஏமாற்றத்தையும் மறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ‘மாற்று அரசியல்’ என்ற வேடம் எதுவும் போடாமல், ஆளுகை செய்கிற இன்னுமொரு கட்சியாக ஆம் ஆத்மி கட்சி மாறி வரும்போது, இடதுசாரிகளுக்கும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிற ஆம் ஆத்மி கட்சி செயல்வீரர்களுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான காலம் நிச்சயம் வந்துவிட்டது.

 

எம்எல் அப்டேட் தொகுப்பு 18, எண் 14, 2015 மார்ச் 31 – ஏப்ரல் 06

 

Back-to-previous-article
Top