இககவின் 22ஆவது காங்கிரசுக்கு  இகக மாலெயின் வாழ்த்துச் செய்தி

அன்பார்ந்த தோழர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது காங்கிரசுக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட்டதற்கு நான் உண்மையில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த காங்கிரஸ் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உங்கள் வருங்காலப் போராட்டங்களில் நீங்கள் மகத்தான வெற்றிகள் பெறுவதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)ன் மொத்த உறுப்பினர்கள் சார்பாகவும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மய்யத்தில் காங்கிரஸ் நடத்தி, தோழர் வி.சுப்பையாவின் மகத்தான பாரம்பரியத்தை உயிர்ப்புடன் கொண்டு வந்ததற்காக குறிப்பாக புதுச்சேரி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல இங்கு நான் நின்றிருக்கும் இதே நேரம், இந்த காங்கிரசை ஒட்டி நீங்கள் சந்தித்த மிகப்பெரிய இழப்புகள் பற்றியும், குறிப்பாக, கோழையான கொலையாளியின் துப்பாக்கி குண்டுகளுக்கு தோழர் கோவிந்த் பன்சரேயை பலிகொடுத்த துன்பம் பற்றியும், நான் அறிந்திருக்கிறேன். நமது மகத்தான தியாகிகளின், நம்மை விட்டுப் பிரிந்த தோழர்களின் நினைவுகளுக்கு நாம் தலை வணங்குகிறோம்; அவர்களுடைய நிறைவேற்றப்படாத லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்கிறோம்.

இங்கே வந்துள்ள பிற கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு அமைப்புகளுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளவும், சர்வதேச கம்யூனிச மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்கும், சுதந்திரம், அமைதி, நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்காக உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்துகொண்டிருக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் எங்கள் உறுதியான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.

தோழர்களே, உங்கள் காங்கிரஸ், ஒரு சவால்மிக்க அரசியல் பின்புலத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த கோடையில் நடந்த மக்களவை தேர்தல்கள், தேர்தல் – அரசியல் வெளியை மிகப்பெரிய அளவில் மாற்றியுள்ளன. பாஜக பெரும்பான்மை பெறுவது, அது விரும்பியபடி அரசாங்கம் அமைப்பது ஆகியவற்றின் விளைவுகளை கடந்த பத்து மாதங்களாக நாம் பார்த்து வருகிறோம். தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு உரையிலும் மோடி சொன்ன நல்ல நாட்கள், நாட்டின் மீதும் மக்கள் மீதும், நமது செல்வாதாரங்கள் மீதும் உரிமைகள் மீதும், ஒரு புறம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாலும் மறுபுறம் சங் பரிவாரின் வெறிகொண்ட மதவெறியர்களாலும் தொடுக்கப்பட்டுள்ள ஒன்றுபட்ட தாக்குதல்களால், கெட்ட கனவாகத்தான் மாறியிருக்கின்றன. இந்த இரண்டு பரிமாணங்களையும் ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் மோடி அரசாங்கம்தான் என்பதில் எந்த அய்யமும் இருக்க முடியாது.

மதவெறி பிரச்சாரம், ஓரஞ்சாரத்தில் உள்ள சில சக்திகளின் விஷமத்தனமான நடவடிக்கைகள் என்று சொல்லப்படுவது சுத்தப் பொய். தனியார்மயத்தையும் தாராளமயத்தையும் ஒரு துரிதப்படுத்தப்பட்ட தீவிரமான உந்துதலுடன் முன்செலுத்த மோடியின் பெரும்பான்மையை பயன்படுத்திக் கொள்ள கார்ப்பரேட் நலன்கள் விரும்புவதைப் போலவே, ஆர்எஸ்எஸ்ஸ÷ம், சங் பரிவாரும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளப் பார்க்கின்றன. இந்த இரண்டு அம்சங்களும் தற்போதைய கட்டத்தில் உட்பொதிந்தவையாக இருக்கின்றன.கார்ப்பரேட்டுகளால் முன்செலுத்தப்படும் வளர்ச்சி எதிர் மதவெறி என்று அனுமானிக்கப்பட்ட பிளவுக்குப் பதிலாக, மோடி அரசாங்கம் இந்த இரண்டின் இணைவை உருக்கொண்டதாக இருக்கிறது.

ஆயினும் தற்போதைய சூழலில் ஒரு வெள்ளிக் கீற்றும் இருக்கிறது. எச்சரிக்கை உணர்வுடனும் உறுதியுடனும் மக்கள் திருப்பித் தாக்கவும் துவங்கியிருக்கிறார்கள். இந்த உணர்வு மறுஉறுதியளிப்பதாக, உத்வேகமூட்டுவதாக இருக்கிறது. சங் பரிவாரின் மதவெறி வெறுப்புப் பிரச்சாரம், சூறையாடல், வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக நாம் அதைப் பார்த்தோம்;  அரசாங்கத்தின் அவசரச் சட்டங்களுக்கு எதிராக, குறிப்பாக, நிலப்பறி சதிக்கு எதிராக நாம் அதைப் பார்த்தோம்; தேர்தல் அரங்கிலும், இடைத் தேர்தல்களில், ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்களில், மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் டில்லி சட்டமன்றத் தேர்தல்களில், அதை நாம் நிச்சயம் பார்த்தோம். அரசாங்கத்தின் பிடிவாதமான, ஆணவப் போக்கையும் மீறி, சில உற்சாகம் தரும் நீதித்துறை வெற்றிகளை பெறுவதில், எழுச்சி பெற்ற ஜனநாயகக் கருத்துக்களும் வெற்றி பெற்றன. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 எ யை ரத்து செய்த நேற்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மறுஉறுதி செய்யும் ஓர் உதாரணம். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் முதல் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வரை, அனைத்து கருப்புச் சட்டங்களையும் திரும்பப் பெற, மக்களின் அடிப்படை உரிமைகளை, நலன்களை அடகுவைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திரும்பப் பெற, அரசாங்கத்தை பின்னோக்கித் தள்ள வேண்டும்.

இந்த வளர்ந்து வருகிற வெகுமக்கள் எதிர்ப்பு, தீர்மானகரமான வெகுமக்கள் எழுச்சி, போராட்டங்கள் ஆகியவற்றின் ஊடே, கம்யூனிஸ்டுகளாகிய நாம், கார்ப்பரேட் – மதவெறி தாக்குதலுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் மிகவும் விடாப்பிடியான பிரிவாக, நமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். சமீபத்திய தேர்தல்களில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும், நாடாளுமன்ற அரங்கில் இடதுசாரி இருத்தலில் மிகப்பெரிய அரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், இடதுசாரிகளின் வலிமையின் பிரதான ஆதாரமும் வெளிப்பாடும், மக்கள் போராட்டங்களின் ஆழத்தில், புரட்சிகர சமூக மாற்ற லட்சியத்திற்கான உறுதியான கடப்பாட்டில் உள்ளது என்பதையும், இடதுசாரி இயக்கத்தின் இந்த பிரதான அடையாளத்தை போற்றி வளர்த்து உறுதிப்படுத்தினால், நமது தற்போதைய பலவீனத்தில் இருந்து மீள்வதில் நாம் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதையும், நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

மோடி அரசாங்கம் முன்னகர்த்துகிற கார்ப்பரேட் – மதவெறி தாக்குதலை நாம் எதிர்கொள்கிற அதே நேரம், காங்கிரஸ் மற்றும் மேலும் மேலும் நம்பகத்தன்மை இழந்து வருகிற பிராந்திய கட்சிகள் என, பல நன்கறியப்பட்ட ஆளும் வர்க்க கட்சிகளுக்கு எதிரான மக்கள் சீற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள, ஒரு பெரிய அரசியல் முகிழ்வை, அதிகரித்து வருகிற வெற்றிடத்தை, பாஜகவின் எழுச்சி பிரதிபலிக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். எனவே, பாஜகவின் எழுச்சிக்கு மிகவும் நம்பகத்தன்மை கொண்ட, மிகவும் உறுதியான பதில்வினை, தனது சொந்தத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள, இடதுசாரி அரசியலின் அசைக்க முடியாத அடிக்கல்லாக, மக்கள் இயக்கத்தின் பிரதான நிலையை மீட்டெடுக்க தயாராக இருக்கிற, புத்துணர்வு பெற்ற இடதுசாரிகளிடம் இருந்து வர வேண்டும்.

இந்தியாவின் இடதுசாரி அணிகளின், போராடுகிற மக்களின் கனவை நனவாக்க, இககவின் 22ஆவது காங்கிரஸ், இந்தத் திசைவழியை உயர்த்திப் பிடித்து, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்தும் இடதுசாரி இயக்கத்தின் ஒற்றுமைக்காக, அறுதியிடலுக்காக, புத்தெழுச்சிக்காக.

உங்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

புரட்சி ஓங்குக!

திபங்கர் பட்டாச்சார்யா

பொதுச் செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் ) விடுதலை

Back-to-previous-article
Top