கோவை பிரிக்கால் நிர்வாக நலனுக்காக, அரசு – காவல்துறையின் சதி!
பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
சாட்சியங்களுக்குப் புறம்பான தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தையும்
மக்கள் மன்றத்தையும் தொழிலாளர்கள் நாடுகிறார்கள்!
கோவை பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோவை பிரிக்கால் லிமிடெடில் 2007ல் தொழிலாளர்கள் ஏற்கனவே இருந்த சங்கங்களை விட்டு விலகி பிளான்ட் 1லும் பிளான்ட் 3லும் இரண்டு புதிய சங்கங்களை உருவாக்கினர். ஏஅய்சிசிடியு ஆதரவு பெற்ற இந்தச் சங்கங்கள் பெரும்பான்மை பெற்றும் நிர்வாகம் இந்தச் சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்த மறுத்தது. சம்பள வெட்டு, பதவியிறக்கம், சம்பளப் பறிப்பு, ப்ரேக் இன் சர்வீஸ், டிஸ்மிசல்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வேலையை விட்டு நிறுத்துவது என்ற பல பழிவாங்கல் நடவடிக்கைகளில் இறங்கியது; பலர் குற்றவியல் வழக்குகளை தொழிலாளர்கள் மீது தொடுத்தது.
இவற்றின் உச்சகட்டமாக 21.09.2009 அன்று நிறுவனத்தின் மனிதவளத் துறை துணைத்தலைவர் திரு.ராய் ஜார்ஜ் என்பவரின் துரதிர்ஷ்டவசமான மரணத்தை பயன்படுத்திக் கொண்டு பெரும்பான்மை சங்கங்களை முடக்க காவல்துறையுடன் சேர்ந்து ஒரு பொய் வழக்கை ஜோடித்தது. இந்த பிரிக்கால் நிர்வாகத்தின் நலனுக்காக தொடுக்கப்பட்ட சதி வழக்கில் கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் 25 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவருமான தோழர் எஸ்.குமாரசாமி, இகக மாலெ கோவை மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்ரமணியம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஆர்.தாமோதரன், ஏஅய்சிசிடியு நிர்வாகிகள் என்.கிருஷ்ணமூர்த்தி, குருசாமி ஆகியோர் மீது பிரிக்கால் நிர்வாகம், கோவை காவல்துறையின் கூட்டுச் சதியால் பொய் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில், அரசு தரப்பால் சாட்சியங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. வழக்கில் இருந்த பல்வேறு முரண்பாடுகள் இத்துடன் உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தண்டிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லாதபோதும், துரதிர்ஷ்டவசமாக கோவை குண்டுவெடிப்புகள் வழக்குகள் செசன்ஸ் நீதிமன்றம் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு, துவக்கத்திலேயே சங்கத்தை ஒழித்துக்கட்டுவதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்காகும்.
இந்த வழக்கில் இகக மாலெ அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவருமான தோழர் எஸ்.குமாரசாமி, 20.09.2009 அன்று கலந்துகொண்ட சதியாலோசனைக் கூட்டத்தில் அவரது மற்றும் சக தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் திரு.ராய் ஜார்ஜ் கொல்லப்பட்டதாக வழக்கு ஜோடிக்கப்பட்டது. இப்படி நடந்திருக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்ததால்தான் இதே பிரிக்கால் லிமிடெட் நிர்வாகம் ஏஅய்சிசிடியு இணைப்பு கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தை 2011ஆம் ஆண்டு கூட்டுபேர முகவராக அங்கீகரித்து 2012லும் 2014லும் தமிழக அரசின் தொழிலாளர் துறை முன்பு தொழிற் தகராறுகள் சட்டம் 1947ன் 12 (3) பிரிவின் கீழ் ஊதிய உயர்வு பணி நிலைமைகள் தொடர்பான ஓர் ஒப்பந்தத்தைப் போட்டது என்பதும் இன்று வரை தொழிற்சாலையில் அந்த சங்கமே அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருக்கிறது என்பதும், அடுத்தடுத்த வருட பேலன்ஸ் ஷீட்களில் நிர்வாகம் சுமுகமாக தொழில் உறவு நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ளது என்பதும் காணத்தக்க விசயங்களாகும்.
நீதிமன்றமும் அரசு தரப்பு சாட்சியங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றபோதும், வழக்கு நிர்வாகத்தின் நலனுக்காக ஜோடிக்கப்பட்டது என நன்கு தெரிந்த பிறகும் இந்த வழக்கில் சாட்சியங்களுக்குப் புறம்பாக தீர்ப்பளித்தாக கருதுகிறோம். சட்டப்படி இந்தத் தீர்ப்புக்கெதிராக நியாயம் கிடைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க இருக்கிற அதே நேரம், மக்கள் மன்றத்திலும் இந்தத் தீர்ப்புக்கெதிராக நியாயம் கேட்க இருக்கிறோம்.
வழக்கு தீர்ப்பு சாட்சியங்கள் அடிப்படையில் அமைந்திருப்பதற்கு மாறாக, முதலீட்டாளர்கள் மற்றும் மூலதனச் சொந்தக்காரர்கள் ஆகியோருடைய விருப்பங்கள்படி அமைந்துள்ளதாக தெரிகிறது. நீதிமன்றம் முதலாளித்துவ சமூக ஒழுங்கு, தொழில் அமைதி என்ற வர்க்கக் கண்ணோட்டத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கக் கூடும் என்ற எண்ணம் வலுவாக ஏற்படுகிறது.
திமுக அரசு காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு அஇஅதிமுக அரசு காலத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்க இயக்கத்துக்கு எதிராக முடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளும் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் வர்க்கமும் இந்தத் தீர்ப்புக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.