ஏஅய்சிசிடியு திருப்பூரில் நடத்தும் எட்டாவது மாநில மாநாடு வெல்லட்டும்!

ஏஅய்சிசிடியுவின் ஏழாவது மாநில மாநாடு குளச்சலில் நடந்தபோது, கருணாநிதி யின் தயவால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தார்.அக்டோபர் 4, 5 2014, திருப்பூரில் எட்டாவது மாநாடு நடக்கும்போது, ஜெயலலிதா, அரசியல் களத்தில், தன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பகைவர்களே இல்லை எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார். எட்டாவது மாநாடு நடக்கும்போது, மத்தியில், இந்தியாவின் ஆகப் பிற்போக்கான ஒரு வலதுசாரி ஆட்சி அரியணையில் ஏறி அமர்ந்துள்ளது. ஆக இந்தியாவில், தமிழ்நாட்டில், அரசியல் சமூகம் பொருளாதா ரம் கலாச்சாரம் என எல்லாத் தளங்களிலும், ஓர் அழுத்தமான வலதுசாரி திருப்பம் சாய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், உழைக்கும் மக்கள் தொடர்பான அரசின் அணுகுமுறையை, கெஸ்ட்டம்ப் சங்க்வூ ஹைடெக் தொழிலாளர்கள், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று சந்தித்த ஒடுக்கு முறை, வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பன்னாட்டு மூலதனம் இழைக்கும் கொடுமைகளுக் கெதிராக, இந்நாட்டின் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நியாயம் கேட்கச் சென்ற 167 தொழிலாளர்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வெளியே வந்த போது, அவர்களுக்கு தற்காலிகப் பணி நீக்க உத்தரவு தயாராய் இருந்தது. மூலதனம் சுதந்திரமாக இருக்கிறது. கூலி உழைப்பு, கூலி அடிமை விலங்குகளோடு, சிறைக்குள் அடைக்கப் படுகிறது. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கி உள்ளனர். நீதிமன்றம், கூடாது கூடாது சட்டவிரோதம் என்கிறது. மன்மோகனுக்கு நிர்ப்பந்தம் தந்த ஜெயலலிதா, நரேந்திர மோடிக்கு, எந்த நிர்ப்பந்தமும் தருவதாகத் தெரியவில்லை. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, தமிழ் அடையாளம் ஏதும் இல்லை போலும்.

தமிழ்நாட்டின் தொழிலாளர் நிலை அறிய, ஏஅய்சிசிடியு ஏழாவது மாநாட்டு அறிக்கை எடுத்துச் சொன்ன மார்க்சின் மேற்கோளைக் காண்போம்.

‘சமுதாயத்தின் மேல் அடுக்குகளில் இருந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு புதிய ஆட்கள் வந்து சேர்கின்றனர். சிறு முதலாளிகளும் சிறு வட்டி வருமானத்தினரும் ஆகிய ஒரு திரளினர், தொழிலாளர் வர்க்கத்தின் அணியினுள் தள்ளப்படுகின்றனர்; வேறு வழி ஏதுமின்றி இவர்கள் தொழிலாளர்களுடன் கூடச் சேர்ந்துகொண்டு அவசரமாய்க் கையேந்தி நின்று வேலை கேட்கிறார்கள். இவ்வாறு வேலை கேட்டு உயர்த்தப்படும் கரங்களது காடு மேலும்மேலும் அடர்த்தியாகிச் செல்கிறது. அதேபோது இந்தக் கரங்கள் மேலும்மேலும் மெலிந்து செல்கின்றன.’

2014 நடப்புக்கள், நம் தமிழ்நாட்டு நடப்புக்கள், ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் மார்க்ஸ் எழுதிய விஷயங்கள் எவ்வளவு சரியானவை என்பதற்குச் சான்று கூறுகின்றன.

தொழிலாளர் சேர்க்கை

நகர்மயமாதலில் தொழில்மயமாதலில் முதலிடத்திற்குப் போட்டியிடும் தமிழ்நாட்டில், பாட்டாளி வர்க்கச் சேர்க்கையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விவசாயத்தின் சரிவு, சமூகம் சிதைவுறுதல் ஆகியவற்றால், பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை பெருகுகிறது. புதுவிதப் பாட்டாளிகள், இதுவரை காணப் படாத பிரிவினர், பாட்டாளி வர்க்க அணியில் நுழைந்துள்ளனர். டெல்ஃபி டிவிஎஸ், பிரிக்கால், சாந்தி கியர்ஸ் போன்ற பல நிறுவனங்களில், பொறியியல் பட்டயப் படிப்பு (டிப்ளமோ), பொறியியல் பட்டப் படிப்பு, பொறியியல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரையிலான சம்பளத்திற்கு, பயிற்சியாளர்களாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சுயதொழில் செய்வோர், குற்றேவல் பணி கள் செய்வோர் பல லட்சங்களில் உள்ளனர். கீ போர்ட் மெய்நிகர் அடிமைகளும் இருக்கவே செய்கின்றனர். தோற்ற மாயைகள் காட்சிப் பிழைகள் தாண்டி, உழைப்புச் சக்தியை விற்றால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதும், உழைப்பு அந்நியமாகி, சுருக்கி சிறுமைப்படுத்துவதாகவே, மூச்சுத் திணற வைப்பதாகவே உள்ளது என்பதும், அனைவருக்கும் பொதுவான எதார்த்தமாகும்.

வேலையற்றோர் கரங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அது அடர்ந்த காடாக, அந்த கரங்கள் மேலும்மேலும் மெலிந்துதான் போகின்றன. வேலையின்மை, சேமப்பட்டாளம் நிலவுதல், உபரி மக்கள் தொகை நகரங்களில் கொட்டப்பட்டு குவிதல் ஆகிய அனைத்துமே, மூலதனத் திரட்சிக்கு நெம்புகோலாய் உள்ளன.

கூட்டுபேர ஆற்றலின் எதார்த்த நிலை 

மார்க்சிய அறிஞர் எல்லன் மெய்ஸ்கின் வுட், முதலாளித்துவ சமூகத்தின் பிரும்மாண்டமான உற்பத்தி ஆற்றல் எதார்த்தமாவதில்லை என்பார். அது சற்று பெரிய விசயம்தான். நாம் நம் கண் முன்பு கூட்டு பேர ஆற்றலின் எதார்த்தம் படும்பாட்டை பார்ப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். கூட்டு பேர ஆற்றல் இங்கு அவலமான காட்சிப் பொருளாகி உள்ளது. மின் வாரியத்தில், ‘அம்மா’ அறிவித்த ஊதிய உயர்வை, அங்குள்ள சங்கங்கள் கையொப்பமிட்டு ஒப்பந்தமாக்க நேர்ந்தது. மாதங்கள் வருடமாக நீண்ட பிறகும், தமிழக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பேச முன்வராமல் இழுத்தடிக்கிறது. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழங்கால வழக்கு.

இப்போது அரசாங்கங்கள் எவ்வழி, அவ்வழியே நாங்களும் என்கிறார்கள் முதலாளிகள். 2 லட்சம் பேர் பணியாற்றும் இடங்களில் முன்மாதிரி வேலையளிப்பவரான (மாடல் எம்ப்ளாயர்) அரசாங்கமே கூட்டுபேர உரிமையை மதிக்காமல் மிதிக்கும்போது, தனியார் கம்பெனிகள் ஏன் சங்கங்களோடு, (குறிப்பாக தொழிலாளர்கள் விரும்புகிற சங்கங்களோடு) பேச வேண்டும் எனக் கேட்கிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வம் ஃபாக்ஸ்கான் வழக்கில், ரகசிய வாக் கெடுப்பின் மூலம் பெரும்பான்மை அறிதலின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட பிறகும், அதற்கெதிரான ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகும், ஜெயலலிதா, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை அறிந்து தொழிற்சங்க அங்கீகாரம் வழங்குதலுக்கான சட்டத் திருத்தம் வேண்டுமென்ற தொழிற்சங்க இயக்க கோரிக்கையை புறக்கணித்து வருகிறார். மேதாவியான அவருக்கு, மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்கள் தொழிற்சங்க சட்டத்தை தமது சட்டமன்றங்கள் மூலம் திருத்தியது கவனத்திற்கு வரவில்லையா? இங்கே மாநில அரசின் உரிமைகள் என்பது கரைந்து காணாமல் போய்விடுகின்றனவா?

பொதுப் பயன்பாட்டு சேவை நிறுவனங்களில் கிட்டத்தட்ட சட்டபூர்வமான வேலை நிறுத்தம் சாத்தியம் இல்லை. ஜெயலலிதா அரசு இந்த விசயத்தில் மட்டும் கருணாநிதி துவங்கி யதை ஆர்வத்துடன் தொடர்ந்து முடித்தும் வைத்தது. ஆட்டோமொபைல் தொழில் பொதுப் பயன்பாட்டு சேவை என்றது.

ஹூண்டாய் நிறுவனத்திடம் அது துவங்கும் நேரத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போது, பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவிப்பதாக வாக்குறுதி தந்துள்ளதாலும், முதலீட்டு நலன்களில் முதலீட்டாளர் விருப்பத்தை நிறைவேற்றவும், ஆட்டோமொபைல் தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவை என அறிவித்ததாகச் சொன்னது. (அறிவிப்பை 6 மாதங்களுக்குப் பிறகு நீட்டிக்கவில்லை). 15.07.2014 அன்று டயர் உற்பத்தித் தொழிலும் பொதுப் பயன்பாட்டு சேவை என அரசாணை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. (முதலாளிகளுக்கு தந்த வாக்குறுதி பற்றி கவலைப்படும் அரசாங்கம், 2011 தேர்தலில் ஜெயலலிதா, வீடற்ற அனைவருக்கும் 3 சென்ட் வீட்டுமனை, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 20 லிட்டர் நல்ல குடி நீர் என தமிழக மக்களுக்கு தந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்பட வில்லை.

வீட்டுமனையும் குடிநீரும் தேவைப்படுவோர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர்கள், ஆனால், ஹூண்டாயின் தென்கொரிய முதலாளியும் எம்ஆர்எஃப்பின் முதலாளியான மம்மன் மாப்பிள்ளையும் தமிழ்நாட்டுக்காரர்களே இல்லை என்பது போன்ற விசயங்களில் கூட, தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஆர்வம் காட்டலாம்.

ஹூண்டாய், எம்ஆர்எஃப் போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் எப்படி எப்போது முதல் பொதுப் பயன்பாட்டு சேவைகளாயின? ஆட்டோமொபைல் தொழில் 6 மாதங்களுக்கு மட்டுமே பொதுப் பயன்பாட்டு சேவையாய் இருந்தது எப்படி? ஹூண்டாய், எம்ஆர்எஃப் உற்பத்தி நின்றால், அது, எவ்வாறு ஏகப்பெரும் பான்மை மக்கள் வாழ்வை பாதிக்கும்? இவை ஜெயலலிதா பதில் சொல்ல முடியாத கேள்வி கள். முதலாளிகள் கூட்டுபேர உரிமையை பலவீனப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார் கள். எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் வேலை நிறுத்த உரிமையை வெட்டிச்சுருக்க பார்க்கிறார்கள். அதற்கேற் பவே ஜெயலலிதாவின் அரசாணைகள்.

கூலி – கூட்டுபேரம் – கார்ல் மார்க்ஸ்

‘ஆனால், உழைப்பானது திருப்தி அளிக்கா ததாகி, வெறுப்பூட்டுகிறதாகிவரும் அதே போது போட்டி அதிகரித்து கூலி குறைகிறது. தொழிலாளி அதிகமாய் வேலை செய்து நீண்ட நேரத்துக்கு வேலை செய்தோ, ஒரு மணி நேரத் தில் முன்னிலும் அதிகமாய் பொருளுற்பத்தி செய்தோ தனது கூலியின் அளவு குறையாத வாறு பார்த்துக் கொள்ள முயலுகிறார். இல்லாமையின் நிர்ப்பந்தத்தால் தள்ளப்பட்டு, இவ்விதம் அவர் உழைப்புப் பிரிவினையின் தீய பலன்களை மேலும் அதிகமாக்குகின்றார். இதன் விளைவு என்னவெனில், எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அதிகம் வேலை செய்கிறாரோ அவர் பெறும் கூலி அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகின்றது. அந்த அளவுக்கு அவர் தமது சக தொழிலாளர்களுடன் போட்டி போடுகி றார். இதனால் அவர்களை தன்னைப் போலவே அதே அளவுக்கு மோசமான பேர நிபந்தனைகளை ஏற்று வேலை செய்ய முற்படும் அத்தனை பேரையும் போட்டியாளர் களாக்குகிறார். எனவே இறுதியாய் பார்க்கும் இடத்து தம்முடனேயே, தொழிலாளிவர்க்க உறுப்பினர் என்ற முறையில் தம்முடனேயே போட்டி போடுகிறார் என்பதே இதற்குரிய காரணம்’.

‘ஏன்? மிகவும் சுலபமாக சொல்வதென்றால், ஒரு பிரிவினருக்கு, ஒரு விதியாக அவர்களது கூலியால் அளவிடப்படும் ஓர் ஒப்பீட்டு ரீதியான உயர்வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க, ஒரு சக்திவாய்ந்த அமைப்பு உதவுகிறது. மற்றொரு பிரிவினர் அமைப்பற்றவர்கள். பலவீனமானவர்கள், அவர்கள், அவர்களது வேலையளிப்பவர்களின் தவிர்க்கமுடியாத மனம் போன போக்கிலான அத்துமீறல்களுக்கு அடிபணிய வேண்டியுள்ளது; அவர்களது வாழ்க்கைத் தரம் படிப்படியாக குறைக்கப்படுகி றது. அவர்கள் மேலும்மேலும் குறைவான கூலியோடு வாழக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் இதுவே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் மட்டத்திற்கு இயற்கையாக கூலி வீழ்கிறது’.

முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளர்கள் தமக்கிடையிலான போட்டியை முடிவுக்குக் கொண்டுவர, தமக்கும் முதலாளிகளுக்கும் உள்ள போட்டியை தீவிரப்படுத்த, அவர்களுக்கு கூட்டுபேர உரிமை அவசியம். முதலாளித்துவ சமூகம் அதுபோகிற போக்கில், மிகவும் இயல்பாய் தொழிலாளர்களுக்குள் போட்டியை தீவிரப்படுத்தும். இந்தப் போட்டி கூலியை குறைக்க தன் பங்கிற்கு உதவும். இங்கேதான், கூட்டுபேர உரிமைக்கு வெளியே, அதாவது தொழிற்சங்கம் கொண்டு பேரம் பேசும் உரிமைக்கு வெளியே சில கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாய் இருக்கும் பிரச்சனையின் தீவிரம் அடங்கியுள்ளது.

ஜெயலலிதா அரசு, மிகவும் திறமையாக போராட்டத்தில் எழுகிற பல பிரிவினரை, அவர்களுக்குள்ளேயே மோதவிடுகிறது. தமிழ்நாட்டில் செவிலியர்கள் கவனத்தை ஈர்த்த போராட்டத்தை நடத்தினார்கள்.

ஜெயலலிதா அரசு, அரசு கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் அதற்கு வெளியே படித்தவர்கள் என்ற போட்டியை தூண்டிவிடுகிறது. போராடும் ஆசிரியர்கள் மத்தியிலும், புதிய தகுதிகளை உருவாக்கி பிரிவினையை தூண்டிவிடுகிறது. வனக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் இதே அணுகுமுறையைத்தான் எடுக்கிறது.

இங்கேதான் தொழிற்சங்க இயக்கம் ஒரு தொழிலாளர் வர்க்க இயக்கமாக சமூக அக்கறையுடையதாக சமூக செயல்பாடுடையதாக மாற வேண்டியுள்ளது. கூலி என தனியாக துண்டித்து, அதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு மாறாக, அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியிலான வேலையை நாட்டுப்புற, நகர்ப்புற வறியவர்கள் வேலையாக, குடியிருப்பு பகுதி வேலைகளாக மாற்ற வேண்டியுள்ளது.

ஏஅய்சிசிடியு, அக்டோபர் 4, 5 மாநில மாநாட்டையொட்டி நடத்துகிற மக்கள் கோரிக்கை சாசனத்தின் மீதான மக்கள் சந்திப்பு இயக்கத்திலும், அக்டோபர் 28 சிறை நிரப்பும் போராட்டத்திலும், ஒரு சமூகமாக தொழிலா ளர்களை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சனையாக மாறியிருக்கும்போது, உண்மையான வளர்ச்சிக்கு மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கு, மக்கள் கைகளில் வாங்கும் சக்தி இருப்பதே ஆகச்சிறந்த வழி என்றும், அதற்கு மக்களுக்கு போதுமான வருமானம் வேண்டுமென்றும், அதனால் உழைக்கிற எந்தத் தொழிலாளிக்கும் மாதம் ரூ.15,000 சம்பளம் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்விக்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய மக்களுக்கு பக்கத்தில் அனைத்து வசதிகளுடன் மருத்துவத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, கல்வியும் மருத்துவமும் காசுள்ளவர்களுக்குத்தான் என மாற்றியுள்ள தற்கு எதிராக, கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான குறிப்பான கோரிக்கைகளை மக்கள் மத்தியில் முன் வைக்க முயற்சிக்கிறது. அந்தக் கடமைகளை கைவிட்டுவிட்டு அதற்கு நேரெதிராக, அரசு சாராயக் கடைகளை நடத் துவதன் பின்னாலுள்ள அனைத்து அநீதிகளையும் தோலுரித்துக் காட்டுகிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதால் நலத்திட்டங்களுக்கு பாதிப்பு என்பது மோசடிவாதம் என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தமிழ்நாட்டு மக்களின் சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து, அரசு எவ்வாறு கிங் பிஷர் மல்லையா, சசிகலாவிற்கு வேண்டியவர்கள் திமுக தலைமைக்கு வேண்டி யவர்கள் போன்றவர்கள் நடத்தும் சாராய ஆலைகளிடம் வாரி வழங்குகிறது என்பதையும், அவர்களது மார்க்கெட்டிங் ஏஜெண்டாக எப்படி செயல்படுகிறது என்பதையும் எடுத்துச் சொல்கிறது.

மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாநாட்டுப் பிரச்சாரத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதை ஒரு மய்யமான பிரச்சனையாக எடுத்துள்ளது. மாநில மாநாட்டில் இது தொடர்பாக ஒரு வெளியீடு கொண்டுவர யோசித்துள்ளது. ஜெயலலிதா தன் முன்னே பகைவர்களே இல்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டு மக்களை அவர் எப்படியெல்லாம் பகையாளிகளாக நடத்துகிறார் என்பதை ஏஅய்சிசிடியு எடுத்துச் சொல்கிறது. சாதனைகள் என ஆரவாரம் செய்யும் அம்மையாரை, வீடற்றவர்களுக்கு 3 சென்ட் வீட்டுமனைப் பட்டா வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியுடன் மக்கள் எதிர்கொள்ள, களப் பணியாற்றுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, தேமுதிக போன்றவர்கள் ஜெயலலிதாவோடு நேருக்கு நேர் மோதுவதிலிருந்து பின்வாங்கியுள்ளனர் என்பது வெளிப்படையாக புலப்படுகிறது. தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் பிரச்சனைகளுக்கு பஞ்சமே இல்லை. கடுமையான சவால்களை சந்திக்காமல் பணிகள் முன்னேறாது என்பது உண்மைதான். ஆனால், போராடும் இடதுசாரிகள் முன்பு வாய்ப்புக்களும் தாராளமாக உள்ளன. பாஜக அஇஅதிமுக ஆகிய முதலாளித்துவக் கட்சிகள், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி வார்டுகள் வரை அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் மய்யங் கொண்டு, தங்கள் அரசியல் பிரச்சாரத்தை, கருத்து போதனையை, அமைப்பை, பலப்படுத்திக் கொண்டிருக்கும் போது, ஏஅய்சிசிடியு தனது மாநாட்டு பணியை, இயக்கங்களை, போராட்டங்களை வாக்கு சாவடிகளை மய்யப்படுத்தி கட்டமைக்க வேண்டியுள்ளது. எட்டாவது மாநாடு, உழைக்கும் மக்களை ஒரு சக்தியாக மாற்றுவது, அவர்களை தமிழகம் தழுவிய அளவில் ஒரு சவாலை எழுப்புபவர்களாக மாற்றுவது, அவர்களை வாக்குச் சாவடிகள் மட்டத்தில் அமைப்பாக்குவது என்ற கடமைகளில் கவனம் குவிப்பதில் வெல்லட்டும்.

Back-to-previous-article
Top