டாக்டர் ஹெர்டா ஓபர்ஹுசர் குழந்தைகளுக்கு எண்ணெய் ஊசி போட்டு கொன்றார். ஊசி போட்டதில் இருந்து மூன்று முதல் அய்ந்து நிமிடங்களில் மரணம் ஏற்படும். இந்த இடைவெளியில் முழுநினைவு இருக்கும். ஊசி போடப்பட்டவர்களின் கால்,கை மற்றும் முக்கியமான உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக வெட்டி எடுக்கப்படும்.
கார்ல் கிளாபர்க் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளர் ஆயிரக்கணக்கான யூத பெண்களின் கருப்பைக்குள் ஊசி மூலம் வேதியல் பொருட்களை செலுத்தியுள்ளார். யூத பெண்களுக்கு ஊசி போடப்பட்டு மகப்பேறு ஆற்றல் அகற்றப்பட்டது. இரண்டு எக்ஸ்ரே எந்திரங்களுக்கு நடுவில் பிறப்புறுப்பில் கதிர்வீச்சு பாயும்படி யூத பெண்களை அமரவைத்தார். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அவர்களால் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய்விட்டால் அவர்கள் வீண் என்று விசவாயு அறையில் கொல்லப்பட்டுவிடுவார்கள்.
பெண்களுக்கு 10 நாட்களுக்கு உயர்திறன் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு முட்டை உற்பத்தி செயற்கையாக அதிகரிக்கப்படும். பிறகு மூன்று நாட்கள்கழித்து, மயக்க மருந்து தரப்பட்டு, உடலுக்குள் ஊசி செலுத்தப்பட்டு அந்த ஊசி மூலமாகவே அந்த முட்டைகள் வெளியே எடுக்கப்படும்.
ஒரு பெண் எத்தனை முட்டைகள் உருவாக்க முடியும் என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. கூடுதல் கருமுட்டைகள் எடுக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் பின்விளைவுகளை உருவாக்கும். அந்தப் பெண்களுக்கு தலைவலி,உடல் பருமன், அசதி முதல்,கைகால் செயல் இழத்தல்,சிறுநீரகக் கோளாறு, மரணம் என பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்.
நவீன வதை முகாம்கள்
முதல் இரண்டு நடைமுறைகள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்த யூதர்கள் மீது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள். மனித உடல் எவ்வளவு வெப்பம், குளிர், வலி தாங்கும் என்று ஹிட்லரின் மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்க்க யூதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
மூன்றாவது செயல்முறை தமிழ்நாட்டில் இப்போது நடப்பது. பெண்ணுடலும் எவ்வளவு தாங்கும் என்று தமிழ்நாட்டின் சில மருத்துவர்களும், ஆணாதிக்கச் சமூகமும் விதவிதமாக பரிசோதித்துப் பார்க்கின்றனர்.
இந்த மூன்று செயல்முறைகளில், ஹிட்லர் வதை முகாம்களில் நடந்தது வரலாற்று சோகம். மேற்கு மாவட்ட மருத்துவமனைகளில், அதுபோன்ற ஒன்றுதான் நடக்கிறது. மனிதர்களைப் பற்றிய எந்த உணர்வும் அற்ற ஒரு கூட்டம் நடத்துகிற வெறிச் செயல்கள் இவை.
இந்த மூன்றாவது செயல்முறைக்கு 18 முறை உட்படுத்தப்பட்ட பெண் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சகுந்தலா. 25 வயதுக்குள், திருமணம், 5 வயது குழந்தை, 18 முறை கருமுட்டை விற்பனை, திருமணமான மூன்று மாதங்களில் கணவனின் நிர்ப்பந்தத்தால் சிறுநீரக விற்பனை என எல்லாம் பார்த்துவிட்டார். குடும்பமும் திருமணமும் பெண்ணுக்கு பாதுகாப்பு என்று சொல்பவர்க்கு சகுந்தலாவின் கதறல் சத்தம் கேட்கிறதா?
சாதி, மத, இன துவேசம் எதுவானாலும் பெண்ணுடல் பழிதீர்க்கும் களம். பார்க்கிறோம். முடிவின்றி பார்க்கிறோம். பக்கத்தில் இருப்பவனுக்கும் பெண்ணுடல் இன்னும் எத்தனை காலம் பணம் செய்யும் பொருளாகவே தொடரும்? பெண்ணுடல் மீது தொடுக்கப்படும் விதவிதமான போர்கள் என்று தான் ஓயும்?
சகுந்தலாக்கள் கதை
சகுந்தலாவும் அவரது கணவரும் பஞ்சாலை தொழிலாளர்கள். உலகெங்கும் உள்ள ஒடுக்கப் பட்டோர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நவராஜ் என்ற கூலியடிமைக்கு சகுந்தலா கொத்தடிமை. நவராஜுக்கு தனது மனைவி சகுந்தலா தங்க முட்டையிடும் வாத்து. வந்து கொண்டே இருக்கும் தட்சணை.
ஜனவரி 2 அன்று சகுந்தலா நாமக்கல் மாவட்ட மாலெ கட்சி அலுவலகத்துக்கு வந்தார். தனது கணவர் நவராஜ் தன்னை கருமுட்டை விற்பனையில் தொடர்ந்து கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், அதன் மூலம் வரும் பணத்தை குடித்துத் தீர்ப்பதாகவும், உடல் உறவின்போது ஆபாசப் படங்களைப் போட்டு அதில் வரும் காட்சிகள் போல நடக்கச் சொல்வதாகவும், ஆண்களுடன் பேசினால் சந்தேகப்பட்டு அடிப்பதாகவும் தெரிவித்தார்.
வேறு நடவடிக்கை ஏதும் எடுக்கும் முன்பு அவர் கணவரிடம் விசாரிப்பதற்காக மாலெ கட்சி தோழர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவரிடம் அவதூறு மட்டுமே பதிலாக கிடைத்தது.
ஜனவரி 6 அன்று காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சகுந்தலா சென்றபோது காவல்துறையினர் நவராஜ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்கள் பிரிந்துவிட அறிவுரை சொல்லி காவல் நிலையம் எதிரில் உள்ள வழக்கறிஞரிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த வழக்கறிஞரும் அவர்களிடம் ஏதோ எழுதித் தந்து அவர்கள் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்.
ஜனவரி 7 அன்று தனது குழந்தையுடன் மாலெகட்சி அலுவலகத்துக்கு வந்த சகுந்தலா, நவராஜ் தனது குழந்தையுடன் சேலம் செல்ல திட்டமிடுவதாகவும் தனக்கு குழந்தை வேண்டும்என்றும் சொல்ல, வேறு வழியின்றி மாலெ கட்சி மாவட்ட குழு உறுப்பினர், தோழர் பொன்.கதிரவன் காவல் துறையினருக்கு புகார் மனு எழுதுகிறார்.அலுவலகத்துக்கு கத்தியுடன் வந்த நவராஜ், தோழர் பொன். கதிரவனை தலையில் அரிவாளால் கடுமையாக தாக்குகிறார். பிறகு தன் நண்பர் வீட்டில் இருந்த சகுந்தலாவையும் சரமாரியாக தாக்குகிறார். பிறகு அரளி விதையை குடித்துவிட்டதாகச் சொல்லி சகுந்தலா சேர்க்கப்பட்ட அதே மருத்துவமனையில் காவல்துறையினரால் சேர்க்கப்படுகிறார்.
தோழர் பொன்.கதிரவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இப்போது பொதுப் பிரிவில் உள்ளார். அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவர் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இன்னும் இல்லை.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சகுந்தலா, பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் ஆபத்து கட்டத்தை தாண்டி உடல் நலம் தேறி வருகிறார். இன்னும் மருத்துவமனையில் உள்ளார். இந்தக் கட்டுரை எழுதும் வரை நவராஜ் மீது சகுந்தலா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
தோழர் பொன்.கதிரவன் மீதான தாக்குதல் தொடர்பான புகார், மற்றும் சகுந்தலாவின் நண்பர் கொடுத்த தாக்குதல் புகார்ஆகியவற்றில் மட்டும் முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் சகுந்தலா காவல் உதவி ஆய்வாளரிடமும் ஈரோடு குற்றவியல் நடுவரிடமும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனது கணவர் நவராஜ் கருமுட்டை விற்பனைக்கு தன்னை கட்டாயப்படுத்துவதாகவும் குடித்து விட்டு அடிப்பதாகவும் சொல்லியுள்ளார்.
கருமுட்டை விற்பனைக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை பெறுவதாகவும், தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவதாகவும், சேலத்தில் வினாயகா மருத்துவமனை, ஜே.எஸ் மருத்துவமனை, வாழப்பாடியில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், சில மருத்துவமனைகளின் பெயர்கள் நினைவில்லை என்றும் கேரளாவுக்குக் கூடஒருமுறை அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சகுந்தலா சொல்லியுள்ளார்.
சகுந்தலாவை 18 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபடுத்தி நவராஜ் ரூ.3 லட்சம்வரை பெற்று செலவழித்துள்ளார். சகுந்தலாவின் சிறுநீரக விற்பனையில் ரூ.1 லட்சம் பெற்று செலவழித்துள்ளார்.
சகுந்தலா வெட்டுப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த பிறகு கருமுட்டை விற்பனை செய்தி பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருப்பதால், கருமுட்டை வாங்கும் மருத்துவமனைகள் கருமுட்டை தரும் பெண்களை, உண்மையை பேசக் கூடாது என்று தரகர்கள் மூலம் மிரட்டுவதாக சொல்லப்படுகிறது.
குற்றவாளிகள்
சகுந்தலாக்கள் கதையில் யார் குற்றவாளி? நவராஜ் மட்டுமா?
காடு வெளஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பாட்டை இன்று மாற்றி எழுத வேண்டும். சிறுநீரகங்கள், கருமுட்டைகள், கருப்பைகள் உள்ளன.
அவற்றையும் முதலாளித்துவச் சந்தை ஒரு கைபார்க்கும். 2010 நிலவரப்படி அமெரிக்காவில் கரு முட்டை விற்பனைக்கு 35,000 டாலர் கிடைக்கிறது. படிக்கும்பெண்கள், கடனில் சிக்கிக் கொண்டவர்கள், சேமிப்பு வேண்டும் என கருதும் பெண்கள் அங்கு கருமுட்டை விற்கிறார்கள்.
பெண் கருமுட்டையை விற்பது, அந்தப் பெண் விரும்பினால், அந்தப் பெண் முடிவெடுத்தால் அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அவள் உடல். அவள் விருப்பம். ஆனால், இப்போது நடக்கும் கருமுட்டை விற்பனையோ, கருவறை வாடகையோ பெண்ணின் விருப்பப்படி நடப்பதில்லை. உடலுக்குள் ஊடுருவும் ஒரு மருத்துவ செயல்முறையை, அவர்கள் உயிர் காக்கும் அவசியத்தின் போதுகூட, மனிதர்கள் ஒருபோதும் விரும்பி ஏற்பதில்லை. ஆனால் பெண்கள் கருமுட்டை விற்க தயாராகிறார்கள். அமெரிக்காவானாலும், இந்தியாவானாலும் வசதிபடைத்த பெண்கள் கருமுட்டை விற்பனையில், கருவறையை வாடகைக்கு விடுவதில் ஈடுபடுவதில்லை.
அடுத்த வாரிசு, ஆண்மையின் அடையாளம் என பிள்ளைபேறு பற்றிய புனித கற்பிதங்கள் நொறுங்கிப் போவது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், பெண்ணுடலை வெறும் பண்டமாக்கி, முழுவதுமாகவும், பகுதி பகுதியாகவும், தவணை முறையிலும் விற்பனை செய்து பணம் வரும் வழியை மட்டும் பார்க்கும் முதலாளித்துவச் சந்தை இங்கு குற்றவாளி.
என் மனைவியை நான் அடிக்கிறேன், இது என் குடும்பப் பிரச்சனை, உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று சொல்லும் ஆணின் உரிமையை, பெண்ணுடல் ஆணுக்குச் சொந்தம் என்ற அதிகாரத்தை, காலம்காலமாக பாதுகாக்க முன்னுரிமை கொடுத்ததில் நவராஜ்கள் உருவாகிறார்கள். சகுந்தலாக்கள் பலி ஆகிறார்கள். ஆணாதிக்க அத்துமீறல் இங்கு குற்றவாளி.
உடலுறுப்புக்களை அறுத்து விற்றால்தான் வாழ முடியும். உடலுறுப்புக்களை விற்க முடியும். தமிழ்நாட்டில் இதற்கு நிலைமைகளும் வாய்ப்புக்களும் ஏராளம். சிறுநீரகம் விற்பனை முகவர் பிடிபட்டார் என்ற செய்தி தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்களை கொத்தடிமை முறையும் சிறுநீரக விற்பனையும் மாறிமாறி பதம் பார்த்தன. இப்போது கருமுட்டை விற்பனை ஒரு திட்டவட்டமான வலைப்பின்னலுடன் இயங்கி வருவது தெரியவருகிறது.
பெங்களூர், சேலம், நாகர்கோவில், ஈரோடு, தாராபுரம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை வியாபாரம் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. 2010 முதல், சிறிய பஞ்சாலைகளில் அத்தகூலிக்கு வேலை செய்யும் பெண்களின் கருமுட்டை விற்பனை நடந்து வருவதாகவும்,இது போன்ற நடவடிக்கைகளின் பின்னால் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை உதவியும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும் குற்றவாளிகள்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பு என்று சொல்கிற ஜெயலலிதா, கருமுட்டை விற்பனை சட்ட விரோதமாக நடப்பதற்கு செழிப்பதற்கு கருணாநிதியையும் அய்முகூவையும் காரணம் காட்ட முடியாது. தமிழகத்தில் இன்று ஆட்சி செய்வது ஜெயலலிதா. அவர் தான் பதில் சொல்ல வேண்டும்.
அரசுதான் குற்றவாளி. பிரசவம் பார்க்க வந்த பெண்ணை விரட்டியடித்த பொது மருத்துவமனை இருக்கிற சேலத்தில் சட்டவிரோதமாக கருமுட்டை வாங்க தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன என்றால் பதில் சொல்ல வேண்டியது ஜெயலலிதாதான். மாநிலத்துக்கு வருவாய் ஈட்டும் நல்லெண்ணத்துடன் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்படும் டாஸ்மாக் உட்பட பெண்களின் படுபாதகமான வாழ்க்கை நிலைமைகளை உறுதிப்படுத்துகின்றன.
போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அய்நா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு மும்பையிலும் டில்லியிலும் விற்கப்படுகிறார்கள் என்று சொல்கிறது. வறுமையால் வேறு வழியின்றி மூன்று வேளை உணவாவது கிடைக்கட்டுமே என்று பெற்றோர்களாலேயே அனுப்பப்படும் குழந்தைகள் தவிர, குழந்தைகள் கேரளா போன்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு பல்வேறு வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க 13 அம்ச திட்டம், குண்டர்சட்டம் என்றார்களே, சகுந்தலா கொடுத்த புகாரை காவல்துறை முறையாக பதிவு செய்து விசாரணை செய்திருந்தால், தோழர் பொன்.கதிரவன் மீதான தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கும். சகுந்தலாவுக்கு உண்மையிலேயே நவராஜிடம் இருந்து விடுதலை கூட கிடைத்திருக்கலாம்.
சகுந்தலா கொடுத்த புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல், அதை கணவன் – மனைவி பிரச்சனையாக்கி அலட்சியப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் இங்கு குற்றவாளிகள்.
பெண் தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் தொழிலாளர் என்ற வகையினமே இல்லை என்பது போல் ஜெயலலிதாவின் இரண்டரை ஆண்டு கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அவர்கள் பற்றி பேசினால்,ஜெயலலிதாவுக்கு ஷாக் அடிக்கும். அதனால் பேச மறுக்கிறார்.
தமிழ்நாட்டின் பெண் தொழிலாளர்கள் சுமங்கலித்திட்டம் முதல் விற்பனை ஊழியர்கள் ஊடாக கீபோர்டு அடிமைத்தனம் வரை கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு அப்பால் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை எவ்வித பாதுகாப்பும் கவுரவமும் அற்றதாக இருப்பதையும் கருமுட்டை விற்பனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
சகுந்தலாவுக்கு கணவன் நிர்ப்பந்தம். கரு முட்டை விற்பனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் விதவிதமான நிர்ப்பந்தங்கள் இருக்கக்கூடும். அடிப்படையில் அது பொருளாதார நிர்ப்பந்தம். கவுரமான ஊதியம், பிறவேலை நிலைமைகள் இருந்தால், வறுமை விரட்டாதிருந்தால், யாரும் கருமுட்டையையும் சிறுநீரகத்தையும் விற்க முன் வர மாட்டார்கள்.
தேவை சில உடனடி நடவடிக்கைகள்
ஜெயலலிதா பிரதமராகி நாட்டை காக்க வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் விரும்புகின்றன. ஒட்டு மொத்த இந்திய மக்கள் வாழ்வு காக்கும் பெரிய பணி எதிர்வர இருப்பதால், மக்கள் நல்வாழ்வு வாழ 2014 மே மாதம் வரை காத்திருங்கள் என்கிறார்.
அதுவரை தமிழ்நாட்டின் பெண்கள் வதை முகாம்களில் வதைபட முடியாது. 40 வேண்டும் என்று சொல்கிற ஜெயலலிதா,பாதுகாப்பு, கவுரவம் கோரும் தமிழக பெண்கள் குரலுக்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களை நிர்ப்பந்தப்படுத்தி சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை நடப்பது பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கருமுட்டை விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், தரகர்கள் ஆகியோர் பற்றி, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கருமுட்டை தானம், கருவறை வாடகை ஆகியவற்றை முறைப்படுத்த, மத்திய அரசை கை காட்டாமல், உடனடியாக சட்டம் உருவாக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பெண்களின் கருமுட்டைகளை தானமாகத் தருகிறோம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகள் விற்பனையில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
கணவன்மார்கள் மனைவிமார்களை கருமுட்டை விற்பனையில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக காவல் நிலையங்களில்பெண்கள் புகார் கொடுத்தால் வழக்கைப் பதிவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறுதியாக
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி முதலமைச்சராக இருக்கிற குஜராத்தில் உள்ள ஆனந்தில் அகன்ஷ்கா கிளினிக்கில் கருவறை வர்த்தகம் ஆகப் பிரமாதமாக நடக்கிறது. இங்கு வறிய பெண்களுக்கு ஒரு கருத்தரிப்புக்கு அதிகாரபூர்வ வருமானம் ரூ.3,30,000 முதல் ரூ.4,62,000 வரை தரப்படுகிறது என்று தருபவர்கள் சொல்கிறார்கள். (குஜராத் பெண்கள் நிச்சயம் இந்தத் தொகை பெறுவதில்லை). இந்தியாவில் இதற்கு ஆகிற மொத்த செலவும் ரூ.7,92,000. இது அமெரிக்காவில் ரூ.46,20,000. அதனால் அமெரிக்கர்கள் பலர் குஜராத் பெண்களின் கருவறையை வாடகைக்கு எடுக்கின்றனர். மோடி தனது வளர்ச்சி பெருமிதத்தில் இந்த வகை குஜராத்பெண்களை காட்டுவதில்லை. அங்கு கருவறை என்றால், இங்கு கருமுட்டை. அங்கும் பிரதமர் கனவு. இங்கும் பிரதமர் கனவு.