சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராகவும் தோழர் பொன்.கதிரவன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும் 18.01.2014 அன்று குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், எ.சந்திரமோகன், வழக்குரைஞர் ப.பா.மோகன், நாமக்கல் மாவட்ட பியுசிஎல் மாவட்ட செயலாளர் பகலவன், அயாலா மாவட்ட அமைப்பாளர் தோழர் பி.கணேசன், தமிழ் தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் நிலவன், முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
1. தமிழ்நாட்டில் பெண்களை நிர்ப்பந்தப்படுத்தி சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை நடப்பது பற்றி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கருமுட்டை விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள், தரகர்கள் ஆகியோர் பற்றி, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. கருமுட்டை தானம், கருவறை வாடகை ஆகியவற்றை முறைப்படுத்த, மத்திய அரசை கைகாட்டாமல், உடனடியாக சட்டம் உருவாக்க வேண்டும். சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. பெண்களின் கருமுட்டைகளை தானம் தருகிறோம் என்ற பெயரில் தனியார் மருத்துவ மனைகள் விற்பனையில் ஈடுபடுவதை கண்காணிக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
4. கணவன்மார்கள் மனைவிமார்களை கருமுட்டை விற்பனையில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. இது தொடர்பாக காவல் நிலையங்களில் பெண்கள் புகார் கொடுத்தால் வழக்கைப் பதிவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. சகுந்தலாவின் 6 வயது குழந்தை ஹரிணியை சகுந்தலாவிடம் ஒப்படைக்க வேண்டும்.