டிசம்பர் 18 அன்று தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் நிகழ்ச்சி, செங்குன்றத்தில் நடைபெற்றது. பாட்டாளி வர்க்கப் பேராசான்கள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் படங்கள் கூட்டம் நட்நத இடத்தை அலங்கரித்தன. கூட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் எஸ்.மணி தலைமையேற்றார். தோழர்கள் எம்.திருநாவுக்கரசு, மலைராஜ், ஜி.அன்புராஜ், வி.சீதா ஆகியோர் உரையாற்றினார்கள். 100 தோழர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் க.ராமன் சிறப்புரையாற்றினர்.
மோடி அரசின் கார்ப்பரேட் மதவெறி பாசிச முயற்சிகளை முறியடிக்க, இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பலப்படுத்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியாக கூட்டம் அமைந்தது. எரிவாயு மானியத்திற்காக, ஆதார் அட்டைக்காக, வங்கி கணக்குத் துவங்க மக்களை அலைக்கழிக்கும் மத்திய, மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும், ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், தேசிய ஊரக வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதை கண்டித்தும், பால் விலை உயர்வை, மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரியும், 110ஆவது விதிப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று என்று கேட்டும், பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தோழர்கள் பேசினார்கள்.
மக்கள் நலனே கட்சியின் நலன் என்ற தோழர் சாரு மஜ÷ம்தாரின் முழக்கத்தை முன்வைத்து, ‘இந்தியா என் கனவுகளில்’ கட்டுரையில் தோழர் வினோத் மிஸ்ரா சொன்ன விசயங்களை முன்வைத்து, எம்எல் கட்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை கட்டமைக்க தோழர் கவ்னர் தலைமையில் முன்னணித் தலைவர்கள் செயல்பட்டனர்.
சென்னையில் அம்பத்தூர், அயனாவரம், திருபெரும்புதூர் அலுவலகங்களில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டங்களில் கட்சி வலுப்படுத்தும் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி மாநில கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், ஜவகர், இரணியப்பன் பங்கேற்றனர்.
சேலத்தில் கட்சி கிளை பொதுப்பேரவைகள் நடைபெற்றன.
புதுக்கோட்டையில் சங்கம் விடுதியில் கட்சி உள்ளூர் கமிட்டி மாநாடு நடைபெற்றது. தீப்பொறி சந்தா, லெவி, கட்சி நிதி உள்ளிட்ட அனைத்து பாக்கிகளும் கடமைகளும் இக்கமிட்டி முன்மாதிரியாக நிறைவு செய்தது. கட்சி மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைதம்பி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் புதுவையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம், புதுவை செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் உரையாற்றினார்கள்.
கோவையில் டாஸ்மாக் சாராயக் கடையை மூட வலியுறுத்தி இயக்கம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் கமிட்டி ஊழியர் கூட்டங்கள் நடைபெற்றன. கன்னியாகுமரியிலும், நெல்லையிலும் கிளைக் கூட்டங்கள் நடைபெற்றன.