தமிழ்நாடு முதலாளிகளுக்குச் சொர்க்கமாகவும் தொழிலாளர்களுக்கு நரகமாகவும் இருப்பதை இனியும் அனுமதிக்க மாட்டோம்

மார்ச் 23, பகத்சிங் நினைவு தின உறுதியேற்பு

இளைய இந்தியா

இன்றைய இந்திய மக்கள் தொகை 123 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 631. இதில் 54% பேர் 25 வயதுக்குக் கீழானவர்கள். 65% பேர் 35 வயதுக்குக் கீழானவர்கள்.

2020ல் இந்திய மக்களின் சராசரி வயது 29 ஆகவும் தமிழ்நாட்டு மக்களின் சராசரி வயது 31 வருடங்கள் 3 மாதங்களாகவும் இருக்கும். மற்ற ஆசிய, அய்ரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியாவே இளைய நாடாக இருக்கும்.

இன்றைய இந்திய, தமிழக இளைஞர்கள்

நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஏழரை லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடிக்கின்றனர். இவர்களில் படித்து முடித்து ஓராண்டு வரை வேலை கிடைக்காதவர்கள் 40% பேர். இரண்டு ஆண்டுகள் வரை வேலை கிடைக்காதவர்கள் 22% பேர்.

தமிழ்நாட்டில் உள்ள 454 பொறியியல் கல்லூரிகளில் 1.92 லட்சம் மாணவர்கள் வரை படிக்கும் கொள்ளளவு உள்ளது. தமிழ்நாட்டில் 31.03.2014 அன்று உயிர்ப்புடன் உள்ள வேலை நாடுவோர் காத்திருப்புப் பட்டியலில் 84,78,948 பேர் உள்ளனர். 2013 – 2014ல் வேலைக்காக பதிவு செய்தவர்கள் 15,23,820 பேர். 2013 – 2014ல் அரசின் வழிகாட்டுதலுடன் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை பெற்றவர்கள் 36.396 பேர்.

ஜெயலலிதா, 2023க்கான தொலைநோக்குத் திட்டம் முன்வைக்கும்போது, 11 வருடங்களில் 2 கோடி பேருக்கு பயிற்சி தரப்பட்டு வேலை பெறும் திறன் பெறுவார்கள் என்றார்.பகுதி திறன் பெற்றோர், 1.20 கோடி முதல் 1.30 கோடி பேர் வரை இருப்பார்கள் என்றார்.முழுதிறன் கொண்டோர் 66 லட்சம் முதல் 78 லட்சம் பேர் இருப்பார்கள்.(சராசரியாக ஒரு வருடத்தில் சுமார் 18 லட்சம் பேர் பயிற்சி பெற்று திறன் பெற்று வேலையில அமரும் தகுதியுடன் இருப்பார்கள் என்கிறது விஷன் 2023).

அறிவிப்பும் யதார்த்தமும்

தமிழகத்தின் மாண்புமிகு அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மேசைகளைத் தட்டித் தீர்க்க, விதி 110ன் கீழ், ஜெயலலிதா, அம்மா திறன் வளர்ப்பு வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார். திட்டம் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள பொறியியல் பட்டமும், பட்டயமும் பெற்றவர்களுக்குப் பொருந்தும். பெண்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. தனியார் நிறுவனங்களில் 25,000 பேருக்கு 6 மாதங்கள் பயிற்சி தரப்படும். பயிற்சியின்போது அவர்களுக்கு மாதம் ரூ.5,000 தரப்படும். பயிற்சி தரும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு மாதம் ரூ.2,000 தரும். (குறைந்த கூலியில் வேலை வாங்கிக் கொள்ளும் முதலாளிக்கு அரசு மானியம் தரும்). மாதம் ரூ.2,000, 6 மாதங்கள், 25,000 பேருக்கு எனக் கணக்கிட்டால், அரசு, முதலாளிகள் கரும்புத் தின்னத் தரும் கூலி ரூ.30 கோடி. 6 மாதங்களுக்குப் பிறகு மாதம் ரூ.5,000 சம்பளத்தில் தொடர்வதா, அல்லது குறைந்த பட்சச் சம்பளம் தருவதா என்று முதலாளிகள் முடிவு செய்வார்கள்.

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை பற்றிய அறிவிப்பு வந்தது. மாதம் ரூ.7,500 வீதம் 10,500 இளைஞர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்த வேலையில் இருந்து இதுவரை, 2,500 பேர் வெளியேறிவிட்டனர்.

25,000 + 10,500 + 36,396 எனப் பார்க்கும் போது, எல்லாம் சேர்த்து 71,896 பேருக்கு வேலை. விஷன் 2023 சொல்வதோ ஆண்டுக்கு 18 லட்சம்!

தமிழ்நாட்டில் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகைத் தரப்படுகிறது. பள்ளி இறுதி வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.100. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150.மேல்நிலைப் பள்ளிப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.200. பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.300. 2013 – 2014ல் 1,00,870 பேர் ரூ.24 கோடி உதவித் தொகை பெற்றனர். (இந்த மாபெரும் தொகையைப் பெற இரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்காமல் இருந்திருக்க வேண்டும்!) 84,78,948 பேரில் 1,00,870 பேருக்கு உதவித் தொகை தரப்பட்டுள்ளது! அதற்கு ரூ.24 கோடி.6 மாதங்கள், 25,000 பேரிடம் வேலை வாங்கிக் கொள்ளும் தனியார் முதலாளிகளுக்கு அள்ளித் தரப்படும் தொகையோ ரூ.30 கோடி.

நகரங்கள் உபரி மக்கள் வீசியெறியப்படும் குப்பைத் தொட்டிகள் ஆவது ஏன்?

தமிழக கிராமப்புறங்களும் விவசாயமும் அழிகின்றன. விவசாயத்திற்கான உள்கட்டுமான வசதிகளைப் பெருக்க எந்த அக்கறையான முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை. இந்தியாவில், தமிழ்நாட்டின் நிலப்பரப்பு 4%. நீர்வள ஆதாரங்கள் 3%. ஆனால், இந்தியாவில், தமிழ்நாட்டு மக்கள் தொகை 6%. அதாவது 7.21 கோடி. 2020க்குள் அரிசி தேவையை நிறைவு செய்ய சாகுபடிக்குக் கூடுதலாக 7 லட்சம் ஹெக்டேர் நிலம் தேவை எனத் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழக ஆய்வு சொல்கிறது. ஆனால், 1971 முதல் 2006 வரை, 6 லட்சம் ஹெக்டேர் நிலம் சாகுபடியில் இருந்து வெளியேறிவிட்டது. 2006 முதல் கணக்குப் பார்த்தால் சாகுபடி நில அளவு இன்னும் சுருங்கும். மீத்தேன், அனல்மின் நிலையங்கள் விட்டுவைத்ததை நிலவர்த்தகம் விழுங்காமல் விட்டுவிடுமா? கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் என நகர்மயமாதலும் தொழில்மயமாதலும் பாய்ச்சலில் முன்னேறு கின்றன. இடுபொருட்கள் விலை உயர்வு, கட்டுப்படியாகாத கொள்முதல் விலை என அடிமேல் அடி.தேவைப்படும் நேரத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதும் குதிரைக் கொம்பு. விவசாயக் கூலியும் சொற்பத் தொகையே. விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தமிழக அரசு 2009ல் அறிவித்த குறைந்தபட்சக் கூலி நாளொன்றுக்கு ரூ.100. 2015ல் உயர்த்தப்பட்ட நாள் கூலி ரூ.146. நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, கிராமப்புற வறுமை, வேலையின்மையின் தீவிரத்தை, சிறிது தணித்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாசமாக்குகிறது. அதற்கு தமிழக அரசும் துணை போகிறது. கிராமம் வெளியே தள்ளுகிறது. நகரங்கள் கவுரவமான உற்பத்தித் துறை, சேவைத் துறை வேலைகளைச் சுலபமாகத் தந்து இழுத்துக் கொள்வதில்லை. டமநஏக்கு ஏற்ற டமகக இல்லை.கிடைத்தால் அது, குறைகூலி, தொடர்ச்சியற்ற, பாதுகாப்பற்ற, நிரந்தரமற்ற வேலையே.இல்லாவிடில் வேலையின்மை. பிரம்மாண்டமான எண்ணிக்கையில், முதலாளித்துவ உற்பத்தியில் ஈடுபடுத்த முடியாத சேமப் பட்டாளம் (தஉநஉதயஉ அதஙவ) பெருகுகிறது. இது உபரி மக்கள் தொகையாகவும் மாறுகிறது. மொத்தத்தில், வேலையில்லாதோர் பெரும்பட்டாளத்தால் வேலை கிடைப்போரின் கூலி சரிந்து வீழ்கிறது.

திருபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ஒரகடம் சுங்குவார்சத்திரம் மண்ணூர் கூட்டு ரோடு தொழில் பகுதிகளில் என்னதான் நடக்கிறது?

இந்தப் பகுதியில் ஹுண்டாய், செயின்ட் கோபேய்ன், ரெனோ நிசான், சாம்சங், டெல், பிரிட்ஜ்ஸ்டோன் போன்ற பன்னாட்டு நிறுவ னங்களும் அப்போலோ, ஜேகே டயர்ஸ்,     கார்ப ரண்டம், ஏசியன் பெயின்ட்ஸ், டெல்ஃபி டிவிஎஸ், இந்துஜா போன்ற இந்திய ஏகபோக நிறுவனங்களும் உள்ளன. நோக்கியா, பாக்ஸ்கான், பிஒய்டி நிறுவனங்கள் நடையைக் கட்டிவிட்டன.

ஹுண்டாய் நமக்கு விசயங்களை விளக்கும். அனைத்து வகையான வேலை செய்பவர்களும், வெண்டார்களும், வருகையாளர்களும் சேர்ந்து ஹுண்டாய் உணவகத்தில் ஒரு நாளில் 22,000 பேர் சாப்பிடுகின்றனர். இதன் துணை யூனிட்டுகளோடு சேர்த்துப் பார்த்தால், இதுவே ஒரு தனி உலகம்.

இங்கு ஒரு மாதத்தில் 50,000 கார்கள் தயாராகின்றன. சராசரியாய் ஒரு கார் விலை ரூ.6 லட்சம் எனக் கொண்டால், அவற்றின் விற்பனை மதிப்பு ரூ.3,000 கோடி. இவற்றைத் தயாரிக்கும் மனிதர்களின் கதை எத்தகையது? நிரந்தரத் தொழிலாளி வகையில் 1,377 சீனியர் டெக்னிசியன்கள் மாதம் சுமார் ரூ.40,000  ஊதியம் பெறுகின்றனர். 928 ஜுனியர் டெக்னிசியன்கள் மாதம் சுமார் ரூ.26,000 ஊதியம் பெறுகின்றனர்.

1,377 x 40,000 = 5,50,80,000

928 x 26,000 = 2,41,48,000

இரண்டும் சேர்த்து ரூ.7,92,28,000. (அ)

டிப்ளமா ட்ரெய்னி 1,186 பேர் உள்ளனர். மாதச் சம்பளம் ரூ.11,000. இவர்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.1,30,46,000. (ஆ 1).

அய்டிஅய் ட்ரெய்னி 426 பேர் உள்ளனர். மாதச் சம்பளம் ரூ.9,000. இவர்கள் பெறும் மொத்தத் தொகை ரூ.38,34,000. (ஆ 2).

ஜெனரல் அப்ரன்டீஸ் 1975 பேர் உள்ளனர். இவர்களில் டிப்ளமா முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9,000, அய்டிஅய் முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,000 தரப்படுகிறது. வசதி கருதி, அதிகபட்ச தொகையாக கணக்கிட்டால், இந்த 1975 பேர் பெறுவது 1975 ல 9,000 = ரூ.1,77,75,000. (ஆ 3).

ஆ 1 + ஆ 2 + ஆ 3 = ரூ.3,46,55,000 (ஆ).

ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 6,000 பேர் உள்ளனர். இவர்கள் மாதம் ரூ.10,000 முதல் ரூ.11,000 வரை சம்பளம் பெறுகின்றனர். 6000 x 11,000 = ரூ.6,60,00,000. (இ).

(தொழிலாளர் எண்ணிக்கை, சம்பளம் போன்ற விவரங்கள், தொழிலாளர்களிடம் வாய் மொழியாக விசாரித்து அறிந்துகொண்டவை).

அ, ஆ, இ என்ற மூன்று வகை தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரூ.7,92,28,000 + ரூ.3,46,55,000 + ரூ.6,60,00,000 = ரூ.17,98,83,000. ரூ.17 கோடியே 98 லட்சத்து 83 ஆயிரம். இது மாத விற்பனை மதிப்பில் 0.6%அய் விடக் குறைவு.

பிரிவு (ஆ) பயிற்சித் தொழிலாளர்கள், பிரிவு (இ) ஒப்பந்தத் தொழிலாளர்களை சேர்த்தால் வரும் எண்ணிக்கை 1,186 + 426 + 1975 + 6,000 = 9,587. சமவேலைக்கு சமக்கூலி கோட்பாடு அமலாகி, இவர்கள் ஒவ்வொருவரும் மாதம் ரூ.20,000 கூடுதலாகப் பெற்றால் வரும் தொகை ரூ.19,17,40,000. இதனுடன் நிரந்தரத் தொழிலாளி பெறும் ரூ.7,92,28,000 சேர்த்தால் அதன் பிறகு வரும் தொகை ரூ.27,09,68,000.

இந்தத் தொகையுடன் பிரிவு (ஆ) பயிற்சித் தொழிலாளர்கள், பிரிவு (இ) ஒப்பந்தத்   தொழிலாளர்கள் ஏற்கனவே பெறும் ரூ.10,06,55,000  சேர்த்தால் வரும் தொகை ரூ.37,16,23,000. இந்தத் தொகையைத் தந்தாலும் இது, மாத விற்பனை மதிப்பில் 1.25%க்குள்தான் வரும்.

தங்கம் வெட்டும் தொழிலாளிக்கு அவர் வெட்டிய தங்கம் கிடைப்பதில்லை.விலை உயர்ந்த பட்டை நெய்யும் தொழிலாளிக்கு பட்டுத் துணி கிடைப்பதில்லை. அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளிக்கு அங்கு இடம் இருக்காது. மாறாக, சில செப்புக் காசுகள், கந்தல் துணிகள், நிலவறையின் மூலையில் ஓர் இடம்தான் கிடைக்கிறது என பத்தொன்பதாம் நூற்றாண்டில் மார்க்ஸ் எழுதினார். இருபத்தியோராம் நூற்றாண்டின் பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வண்ணவண்ணக் கனவுகளுடன் வேலையில் சேர்கிறார்கள். பயிற்சியாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரப்படுத்தப்படுவதில்லை. நிரந்தரத் துன்பம் மட்டும் அனுபவிக்கிறார்கள். (ஹுண் டாயில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பயிற்சி யாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும்  வெளியேற்றப்பட்டுள்ளனர்).

எந்தத் தனிவெளியும் இன்றி 5 பேர், 6 பேர், சில நேரங்களில் 10 பேர் சேர்ந்து தங்கி சாப்பிடுகிறார்கள்.அறை வாடகை உயர்ந்து கொண்டே போகிறது. தரமான நல்ல உணவு கிடையாது.உடல்நலம் இல்லாதபோது நெருங்கியவர்கள் அண்மையும் ஆதரவும் கிடையாது.பருவத்தில் திருமணம் செய்ய முடியாது.வெந்ததைத் தின்று துன்பத்தில் வாடி, முடிந்த அளவு பணம் மிச்சம் செய்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள்.

ஹுண்டாயின் நிரந்தரத் தொழிலாளர்கள், இந்த முறை கணிசமான சம்பள உயர்வு பெற வேண்டும், பிஎம்டபிள்யு ஒப்பந்தத்தை அளவு கோலாகக் கொண்டு நகர வேண்டும், வேலை இழந்தவர்களை வேலைக்கு எடுக்க வைக்க வேண்டும் என்ற நியாயமான விருப்பங்கள் கொண்டுள்ளனர். கூடவே, பயிற்சித் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் சமவேலைக்கு சமஊதியம், பணி நிரந்தரம் கோரினால், ஹ÷ண்டாய் நிறுவனத்துக்கு அதை வழங்கும் ஆற்றல் உண்டு. வானம் இடிந்து விழுந்துவிடாது. ஹுண்டாய் தொழிலாளர்கள் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள்.

மோடி அரசும் பயிற்சியாளர் ஒப்பந்த முறையும்

மோடி நல்ல நாட்கள் தருவார் என்று தொழிலாளர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்க முடியாது. இந்தியாவின் மலிவான உழைப்பைப் பயன்படுத்த வாருங்கள் என்று, அவர், வெளி நாட்டு முதலீட்டாளர்களிடம் பகிரங்கமாக இந்திய இளைஞர்களின் உழைப்புச் சக்தியை   கூவி விற்கிறார். மோடி அரசாங்கம் நிரந்தர வேலை வாய்ப்புக்களை ஒழித்துக்கட்ட, தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய, பயிற்சியாளர் முறையை ஒப்பந்த முறையை பரவலாக்க  விரிவாக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறது. பயிற்சியாளர்கள் சட்டம் 1961க்கு என்ன திருத்தங்கள் தரலாம் என மோடியின் இரண்டு அமைச்சரவைக் கூட்டங்கள் சில பரிந்துரைகள் தந்துள்ளன.

             இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களாக்கலாம்.

             பொறியியல் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கலை அறிவியல் பட்டதாரிகளையும் பயிற்சியாளர்கள் ஆக்கலாம்.

             பயிற்சி காலத்தை மூன்று ஆண்டுகளில் இருந்து அய்ந்து ஆண்டுகளாக உயர்த்தலாம்.

             பகுதி திறன் பெற்ற தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பளத்தில் 70% முதல் 90% வரை உதவித் தொகை தரலாம்.

             ஆண்டு விற்று முதல் ரூ.100 கோடிக்குக் கீழ் உள்ள முதலாளிகளுக்கு முதல் வருட பயிற்சியாளர் உதவித் தொகையை அரசே வழங்கலாம்.

             வேலை வாய்ப்பு இருப்பதை உறுதி செய்ய, தொழிலாளர்களை நிரந்தரம் செய்யுமாறு முதலாளிகளை நிர்ப்பந்திக்க வேண்டாம்.

             மோடி அரசு வேலை வாய்ப்பைப் பெருக்க கோடிக்கணக்கில் பயிற்சியாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

செயல்படாத அரசு, செயல்படாத முதலமைச்சர் என்ற வாதங்கள், முழு சித்திரத்தை, நிஜமான சித்திரத்தைத் தரவில்லை. மக்கள் கோரிக்கைகள், பிரச்சனைகளில் அரசு        எப்போதும்போல் குற்றமய அலட்சியத்துடன் செயல்படாமல் இருக்கிறது.

பால் ஊழல் ரமணா பதவியைப் பறித்தது.அடுத்த ஊழலில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கதை முடிந்தது.வெளியில் தெரிந்து நாறினால் கல்தா. மற்றபடி, அரசின் அமைச்சர் பெருமக்களின் ஊழலில், இந்த அரசு செயல்படும் அரசாகவே உள்ளது. நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலம் கையகப்படுத்தும் விவசாயிகள் விரோத மசோதாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். மக்களின் முதல்வர் ரயில்வே மற்றும் பொது நிதிநிலை அறிக்கைகளை வரவேற்கிறார். அருண் ஜெட்லி அம்மையாரை நேரில் சந்திக்கிறார்.நரேந்திர மோடி, அவருடைய பரபரப்பான வெளிநாட்டு பயணங்கள் மத்தியிலும் பிப்ரவரி 24 அன்று அம்மையாரின் 67ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.(மேற்கூறிய நிகழ்வு களுக்கும் சொத்துக் குவிப்பு வழக்குக்கும் வாசகர்கள் முடிச்சு போட்டால் அதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது).

தமிழ்நாட்டில் மே மாதம் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடக்கவுள்ளது. அந்த மாநாட்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார். சிறகுகளுடன் பறக்கும் குதிரை மாநாட்டுச் சின்னமாக்கப்பட்டுள்ளது. (இறக்கைக் கட்டிப் பறந்துவிட்ட நோக்கியா, பாக்ஸ்கான், பிஒய்டி நிறுவனங்கள் நினைவுக்கு வருகின்றனவா?) பன்னீர்செல்வம் பாட்டுக்கு, தொழில் அமைச்சர் தங்கமணியும் தொழிலாளர் அமைச்சர் மோகனும் பக்கவாத்தியம் வாசித்து உள்ளனர்.

தங்கமணி தமிழ்நாட்டின் நல்ல விற்பனை பிரதிநிதியாகி, தமிழ்நாடு முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்கிறார். (நாணயத்தின் மறுபக்கம் தொழிலாளர்களுக்கு நரகம் என்றாகாதா?) தமிழ் நாட்டில் ஒரு நிமிடத்திற்கு ஒரு கார், 92 விநாடி களுக்கு ஒரு வர்த்தக வாகனம் தயாராகிறது என்கிறார். (தமிழக உழைக்கும் மக்கள் ஒரு நாளில் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றி மாண்புமிகுக்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்?).

தொழிலாளர் அமைச்சர் மோகன் என்ன செய்தார்? 10.08.2012 அன்று அரசாணை எண் 256 மூலம் தமிழக அரசு தானுந்து உற்பத்தித் தொழிலை (ஆட்டோமொபைல் மேனுபேக்டரிங் தொழிலை) பொது பயன்பாட்டு சேவை என அறிவித்தது.ஹ÷ண்டாயுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்தை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிப்பதாக தான் ஒப்புக்கொண்டுள்ளதாகச் சொன்னது. 6 மாதங்களுக்குப் பிறகு அந்த ஆணை   நீட்டிக்கப்படவில்லை. சட்டப்படி, ஒரு நிறுவனத்தை பொது பயன்பாட்டு சேவையாக அறிவிக்க முடியாது; ஒரு தொழிலைத்தான் அறிவிக்க முடியும். பொது பயன்பாட்டு சேவையில் சட்ட பூர்வமாக வேலை நிறுத்தம் சாத்தியம் இல்லை. பொது அவசரமோ, பொது நலனோ இருந்தால் மட்டுமே ஒரு தொழிலை பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்க முடியும்.   ஆட்டோமொபைல் உற்பத்தித் தொழிலில் 10.08.2012 தேதிய அரசாணை போடப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு, அந்தத் தொழிலை பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்க, பொது நலன் பொது அவசரம் இருந்ததாகத் தமிழக அரசே கருதாததால்தான் அந்த ஆணையின் காலம் நீட்டிக்கப் படவில்லை. இப்போது ரகசியமாக, அவசர அவசரமாக 03.12.2014 அன்று தமிழக அரசு அரசாணைகள் 144 மற்றும் 331 மூலம் ஆட்டோ காம்பனன்ட்ஸ் மேனுபேக்சரிங் இன்டஸ்ட்ரீசை பொது பயன்பாட்டு சேவை ஆக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை 24.12.2014 அன்று வெளியிட்டது. மக்களின் முதல்வர் ஆலோசனைப்படி, தொழிலாளர்கள் மேல் போர் தொடுக்க பொது பயன்பாட்டு சேவை அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் என்று     அஇஅதிமுககாரர்கள் எங்கும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கத் தயாரில்லை. இது, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு தந்துள்ள சமிக்ஞை. நாங்கள் முதலாளிகள் பக்கம்தான் என்பதை இதன் மூலம் உறுதி செய்துள்ளனர். 1947 முதல் 2015 வரை இல்லாத பொது நலன் பொது அவசரம் இப்போது வந்துவிட்டது!

எம்ஆர்எஃப், டிவிஎஸ், டைமன்ட் செயின், பிரிக்கால், ஹுண்டாய், அதன் துணை   நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் வேலை செய்கிற சில லட்சம் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை சட்ட விரோதமாகவும் அநியாயமாகவும் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக, மத வாத சாதிய ஆணாதிக்க சக்திகளுக்கு ஆதரவாக, ஊழலுக்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட மார்ச் 23 அன்று திருபெரும்புதூரில்

தமிழக இளைஞர்களும் தொழிலாளர்களும் உறுதியேற்பு

மார்ச் 23 1931 அன்று, பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தூக்கில் போடப்பட்டார்கள். அவர்கள், காந்தி யிடம், காங்கிரசிடம், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அது முதலாளிகளுடைய, நிலப்பிரபுக்களுடைய நாடாக இருக்கக் கூடாது, வெள்ளை எசமானர்களுக்குப் பதில் பழுப்பு நிற எசமானர்களிடம் அதிகாரம் மாறி என்ன பயன் என்று  கேள்வி எழுப்பி விவாதித்தார்கள். 2015 மார்ச் 23லும், இந்த நாடு பண மூட்டைகளுக்கு முதலாளிகளுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதிமத சக்திகளுக்குச் சொந்தமானதல்ல, தொழிலாளர்களுக்கு இளைஞர்களுக்கு மக்களுக்குச் சொந்தமானது என முழங்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

நாயை, பன்றியை இழுப்பதுபோல, தொழிலாளியை, தரதரவென இழுத்த என்விஎச் கொரிய முதலாளி கைது செய்யப்படவில்லை. ஆனால், அவரது தொழிற்சாலையும் அவரது சக முதலாளிகளின் தொழிற்சாலைகளும் பொது பயன்பாட்டு சேவை, அங்கு வேலை நிறுத்தங்கள் கூடாது என்கிறது தமிழக அரசு.

புரட்சிகர இளைஞர் கழகம், மார்ச் 23 அன்று திருபெரும்புதூரில், கொத்தடிமைக் கூடாரங்களைத் தகர்த்திட அறைகூவல் விடுத்து நடத்தும் பொதுக் கூட்டத்தில், இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா கலந்துகொள்கிறார்.

பகத்சிங்கின் வாரிசுகளே, தோழர்களே, மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு சவால்விட மார்ச் 23 அன்று திருபெரும்புதூரில் அணிதிரள்வோம்.

Back-to-previous-article
Top