தைரியமாகச் சொல், இது குடியரசுதானா….?

தாலிக்குத் தங்கம், புரட்சித்தலைவியின் புரட்சிகரமான திட்டம் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புள்ளி விவரங்களும் சொல்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார்: ‘40 பவுன் நகை போச்சு. பொழப்புக்குன்னு இருந்த ஆட்டோ போச்சு. இப்பத்தான் காசுக்கு வேற வழியில்லாததால தொழிலுக்கு (மீன்பிடி) போறாக… இப்ப வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கிறாக…’ அவர் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பெண், ‘எங்க வீட்டுலயுந்தான் 30 பவுன் நகை போச்சு… வீடு போச்சு’ என்றார்.

தமிழ்நாட்டில் பல பெண்கள் இதேபோன்ற கதை சொல்வார்கள். இப்படி டாஸ்மாக் கடைக்கு வந்து சேர்ந்த தங்கத்துக்கும் ஜெயலலிதா புள்ளிவிவரங்கள் தர வேண்டும். ‘எங்களுக்கு இலவசங்கள் எதுவும் வேண்டாம், இந்த சாராயக் கடைகளை ஒழித்தால் போதும்’ என்று இன்னொரு பெண் சொன்னார். இலவசத்துக்கும் சாராயக் கடைக்கும் என்ன முடிச்சு போடுகிறீர்கள் என்று கேட்டபோது, ‘சாராயக் கடையில் வரும் வருமானத்தில்தான் இலவசங்கள் தருவதாக முதலமைச்சர் சொல்கிறார், அதனால் அது வேண்டாம்’ என்றார். இலவசங்கள் வேண்டாம் என்று சொல்ல தமிழக மக்களுக்கு விதவிதமான வாழ்வாதார காரணங்கள் இருக்கின்றன.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2011 – 2012ல் 1,64,552 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,63,228 பேர் பயன்பெற்றனர். 2011 – 2012ல் டாஸ்மாக் விற்பனை ரூ.18081 கோடியே 16 லட்சம். இந்த நிதியாண்டில் தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை வெறும் ரூ.620 கோடி.
தாலிக்கு தங்கம் திட்டத்தில் 2012 – 2013 நிதியாண்டில் 1,66,687 பேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,19,684 பேர் பயன்பெற்றனர். இதே நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.21680 கோடியே 67 லட்சம். தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.701 கோடியில் ரூ.589 கோடிதான் செலவிடப்பட்டது.

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு 2013 – 2014க்கும் ரூ.701 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியாண்டின் டாஸ்மாக் வருமான விவரம் மார்ச் மாதத்துக்குப் பிறகு தெரியவரும்.

ஜெயலலிதா அரசு தமிழக மக்களுக்கு தாலிக்கு தங்கமாக தருவதற்கும் தங்கத்துக்கு சாராயமாக தருவதற்கும் இடையில் சில பத்தாயிரம் கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது.

‘பொன்மனச் செம்மல், இதயதெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்’ என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி யில் 1983ல் அரசு சாராயம் கொள்முதல் செய்ய டாஸ்மாக் உருவாக்கப்பட்டது. 2003 நவம்பரில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சாராய விற்பனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. 2003 – 2004ல் ரூ.3,639 கோடியே 92 லட்சமாக இருந்த டாஸ்மாக் விற்பனை 2012 – 2013ல் ரூ.21,680 கோடியே 67 லட்சமாக வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 700% வளர்ச்சி. 2003 முதல் 2012 வரை ஒவ்வோர் ஆண்டும் ரூ.1200 கோடி முதல் ரூ.3100 கோடி வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இடையில் எந்த கட்டத்திலும் விற்பனையில் பின்னடைவே இல்லை. மொத்தமுள்ள 6,837 கடைகளில், 4,631 கடைகளில் மட்டுமே அரசு அனுமதியு டன் பார்கள் இயங்குகின்றன. உரிமம் இன்றி செயல்படும் இந்த பார்களை முறைப்படுத்தினால் அரசுக்கு இன்னும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும்.

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோட – திரு
மேனி செழித்த தமிழ்நாடு!

பாரதிக்குத்தான் எவ்வளவு பெருமிதம். இந்த எல்லா ஆறுகளும் இன்று வற்றிவிட்டாலும் வற்றாத ஜீவநதியான டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டின் பெருமையை கட்டிக்காக்கிறார் ஜெயலலிதா.

தமிழ்நாட்டில் 11 அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 6 பீர் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு ஒயின் உற்பத்தி நிறுவனம் இருப்பதாக தமிழக அரசு விவரங்கள் தருகிறது. இந்த நிறுவனங்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சாராயம் விற்கின்றன. அரசின் நாகரிக வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசு இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் ‘கொள்முதல்’ செய்கிறது. இவை, சசிகலாவின் மிடாஸ் உட்பட அஇஅதிமுக மற்றும் திமுக பிரமுகர்களால் நடத்தப்படுபவை.

இந்த நிறுவனங்களிடம் இருந்து சாராயம் வாங்க மக்கள் பணம்தான் தரப்படுகிறது. தமிழ்க் குடிமக்கள் அதை வாங்கிக் குடித்து மீண்டும் அரசுக்கு பணம் சேர்க்கிறார்கள். ஆக, டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் வருவதாகச் சொல்வது பொருந்தாதது. பொய்யானது. விலையில்லா பொருட்கள் திட்டங்களுக்கும் டாஸ்மாக் வருமானத்துக்கும் சம்பந்தம் இல்லை. அரசு மீண்டும் சாராயம் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு ஆகும் பெரும் செலவு போக ஊழியர் ஊதியம் தர வேண்டும். நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும். கூடுதல் இருப்பு வாங்கி வைத்து பழையவற்றை விற்கும் நடைமுறையும் இருப்பு தேங்கியிருப்பதும் டாஸ்மாக் கடைகளில் சாதாரணமான நிகழ்வுகளே. இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.2,465 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது.

உண்மையில் தமிழக அரசு சாராய உற்பத்தி நிறுவனங்களின் சந்தை முகவராக செயல்படுகிறது. 2011 ஜ÷லை, 2012 செப்டம்பர் என இரண்டு முறை சாராய விலை ஏற்றப்பட்டதும் தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கேட்டதால்தான். மது வகை, அவற்றை விற்கும் நிறுவனங்கள் பட்டியல், நிறுவனங்கள் வாரியாக விற்கப்படும் அளவு என பல விவரங்கள் சொல்லும் டாஸ்மாக் இணையதளத்தில் கொள்முதல் விலை பற்றிய விவரம் மட்டும் இல்லை. தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் கடைகள், தங்கள் சொந்த ஊழியர்கள், தங்கள் சொந்த விற்பனை என செய்ய வேண்டிய வேலைகளை அரசே செய்து தருகிறது. லாபம் பார்ப்பது தனி யார் நிறுவனங்கள்தானே தவிர அரசு அல்ல. மொத்த இயக்கப்போக்கிலும் அரசுக்கு நிற்பது வெகு சொற்பமே. உதாரணமாக, ரூ.18,081 கோடி விற்பனை நடந்த ஆண்டில், அரசுக்கு ரூ.1,400 கோடி லாபம் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார். (இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ஏழைத் தமிழா….?)

பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் கொள் முதல் விலை கேட்டுப் போராடுகிறார்கள். பிறகு போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள். போராட்டத்தை விலக்கிக் கொள்ளக் காரணம் ஆளும் கட்சிக்காரர்களின் மிரட்டல் என்கிறார்கள். கோமாரி நோயால் பாதிக்கப்படக் கூடிய ஆடு மாடுகளை தமிழ்நாட்டின் வறிய பெண்களுக்கு விலையில்லாமல் வழங்குவதை வெண்மைப் புரட்சி என்று ஜெயலலிதா சொல்கிறார்.
பால் தேவைக்கு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் வழங்கும் பால் போதாமல் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்குகிறார்கள்.

2013 டிசம்பரில் கொள்முதல் விலையை உயர்த்தியதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் விலை ஏறியது. ஏற்கனவே, அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களுக்கு தரப்பட்ட முதல் பரிசான, பால் விலை உயர்வையே இன்னும் சமாளிக்க முடியாமல் திண்டாடும்போது, இன்னும் ஓர் விலைஉயர்வு திண்டாட வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சாராய உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் அரசு சாராயம் வாங்கும்போது, ஏன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களும் உற்பத்தி செய்யும் ஒன்றரை கோடி லிட்டர் பாலையும் வாங்கிவிட முடியாது? அப்படி வாங்கினால்தானே அதை வெண்மைப் புரட்சி என்று சொல்ல முடியும்? அய்ஸ்க்ரீம் வாங்க முப்பது ரூபாய் செலவழிப்பவர்கள் அரிசி வாங்க செலவழிக்கக் கூடாதா என்று சிதம்பரம் கேட்டதைப் போல், சாராயம் வாங்க ரூ.90 செலவழிப்பவர்கள், பால் வாங்க ரூ.20 செலவழிக்கக் கூடாதா என்று ஜெயலலிதா கேட்டாலும் வியப்படைய ஏதுமில்லை. இருவரும் நவதாராளவாதக் கொள்கைளுக்குச் சொந்தக்காரர்களே. எப்படியாயினும், தமிழ் நாட்டில் இன்றைய நிலைமைகளில் சாராயப் புரட்சி தவிர வேறேதும் நடப்பதாக தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

தாலிக்கு தங்கம் திட்டம், ஜெயலலிதா சொல்கிற வெண்மைப் புரட்சி ஆகியவற்றை டாஸ்மாக் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிப்படுகிற படுபாதகமான நிலைமைகள் தான் ஜெயலலிதா அரசாங்கம் நிறைவேற்றுவதாகச் சொல்லப்படுகிற மற்ற ‘மக்கள்நலத்’ திட்டங்களுக்கும் பொருந்தும்.

பேருந்துக் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அவர் தந்திருக்கிற தொடர்ச்சியான அதிர்ச்சிகளின் தாக்கத்தால் வேதனை மேலிட்ட தமிழக மக்களுக்கு, சாராயம் அதிர்ச்சி நிவாரணி ஆகாது.
அஇஅதிமுக ஆட்சியாளர்களின் இந்த விஷ விளையாட்டில், அரசுக்கும் ‘தமிழ்க்குடி’ மக்களுக்கும் இடையில் இசகுபிசகாகச் சிக்கிக் கொண்டவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.

செங் கொடி சங்கங்களில் இருக்கிறார்கள். காலமுறை ஊதியம் இல்லை, வார விடுமுறை இல்லை, 8 மணிநேர வேலை இல்லை, மிகைநேரப் பணிக்கு மிகை ஊதியம் இல்லை, அனைத்துக்கும் மேல் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லவே இல்லை, அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் தொல்லை, மிரட்டல் என அவர்கள் துன்பப்பட்டியல் முடிவின்றி நீள்கிறது. 2003ல் 36,000 ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள்.

இப்போது அவர்கள் எண்ணிக்கை 29,000 என குறைந்து உள்ளது. விற்பனையும் கடைகளின் எண்ணிக் கையும் அதிகரித்ததற்கு ஏற்ப ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சமீபத்தில் குன்னூரில் தங்கள் மாநில மாநாட்டை நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடத்தில் ஏற்படுகிற மனஉளைச்சலால் இதுவரை தமிழகம் முழுவதும் 4,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகச் சொல்லியுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிறீர்களே, அந்த வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் அந்த 29,000 ஊழியர் குடும்பம் நிலை என்ன என்று ஜெயலலிதா அக்கறை கொண்ட வர் போல் கேட்கலாம். அந்த 6,837 கடைகளையும் அரசின் மலிவு விலை உணவகங்களாக மாற்றி அவர்களுக்கு அங்கேயே கவுரவமான வேலை தரலாம்.

பிப்ரவரி 7 அன்று காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டியது. பிப்ரவரி 8 அன்று வண்டலூரில் மோடி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. ஆளும் வர்க்கக் கட்சிகளின் பெரிய கூட்டங்கள் நடக்கும்போது டாஸ்மாக் விற்பனை அமோகமாக நடக்கிறது. மதுவிலக்கு வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் இன்னும் ஒரு படி மேலேபோய், டாஸ்மாக் கடைக்கு போன கையோடு அருகில் இருக்கிற தலித் கிராமத்துக்குச் சென்று தாக்குதலும் நடத்திவிடுவார்கள்.

இதுபோன்ற கூட்டங்கள் தவிர பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை இலக்கை தாண்டுகிறது. சாதாரண நாட்களிலும் இலக்கு எட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் தொய்வின்றி நடக்கும் ஒரே விற்பனை டாஸ்மாக் விற்பனை. கரும்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் கொள்முதல் விலை கேட்டு விவசாயிகள் போராட்டங்கள் நடத்துவதுபோல், தங்கள் நிறுவன சாராயத்தை அரசு வாங்கவில்லை என்று சிலர் நீதிமன்றக் கதவுகளை தட்டுவது வரை டாஸ்மாக் விற்பனை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ‘குடி’யரசு தழைத்தோங்குகிறது.

தோளில் இருந்து சரிகிற சிவப்புத்துண்டை சரிசெய்துகொண்டே அந்தத் தோழர் சொன்னார்: ‘டாஸ்மாக் கடை இல்லை என்றால் நமது ஆண்கள் சாராயம் குடிக்க கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் செல்வார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்’. ‘தமிழ்க்குடிமக்கள்’, பிற மாநிலங்களை நம்பியிருக்காமல் சொந்தக் காலில் நிற்க வைப்பதுதான் எவ்வளவு பெருமைமிகு செயல்! ‘தமிழ்க்குடிமக்கள்’ மீது, அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படும் அக்கறையை எப்படித்தான் மெச்சுவது!

சிக்கன் ஒரு துண்டு கூட எடுத்துவிட்டார் என்பதற்காக தனது நண்பனையே அடித்துக் கொன்றார் ஒரு ‘குடி’மகன். குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை மனைவி, தந்தையை மகன், அண்ணனை தம்பி, மகனை தாய் அல்லது தந்தை கொலை செய்த செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொன்ன ஜெயலலிதா, உணர்ச்சிப்பெருக்கில் கொலைகள் நடப்பதை தடுக்க முடியாது என்று சொன்னார். மேலே குறிப்பிடப்பட்ட கொலைகளுக்கு முழுக்கமுழுக்க தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் ஏற்படுத்திய உணர்ச்சிப்பெருக்குதான் காரணம். எனக்கு குடும்பம் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா என்கிற முதலமைச்சர் தனது ஆட்சியில் இருக்கும் மக்களாகிய குடும்பத்துக்கு சாராயம் கொடுத்துத்தான் சீரழிப்பாரா?

தனக்குத் தேவையான சீனப் பொருட்களுக்கு மிகக் கூடுதல் விலை கொடுக்க நேர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சீனத்தை, கிழக்கிந்திய கம்பெனி உற்பத்தி செய்த அபினியால் அடித்தது. சீனத்துக்குள் அபினியை விற்று சீன மக்களை அபினி மயக்கத்தில் தள்ளியது. போதைக்கு அடிமையாகி, தங்களிடம் இருந்த வெள்ளியை, தங்கத்தை விற்று, அடகு வைத்து, கடன்பட்டு, முற்றிலும் திசை மறந்தவர்களாக அவர்களை மாற்றியது. இந்தியாவில் இருந்த தனது படைகள் கொண்டு, சீன கடலோரப் பகுதிகளை ஆக்கிரமித்து தனது வர்த்தகத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. ஆயினும் சீன மக்கள் நிரந்தரமாக அபினி மயக்கத்திலேயே இருந்துவிடவில்லை. பிறிதொரு நாள், கம்யூனிஸ்டுகள் தலைமையில் ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தார்கள்.

ஜெயலலிதாவும் தமிழக மக்களை நீண்ட காலத்துக்கு டாஸ்மாக் மயக்கத்தில் ஆழ்த்தி வைக்க முடியாது. வாக்களித்த மக்களுக்கு விஷமளித்து, அவர்கள் துன்பத்தில் சாவதை வேடிக்கைப் பார்க்கும் அஇஅதிமுகவுக்கு தக்க பாடம் தர காலம் நெருங்குகிறது.

Back-to-previous-article
Top