தொழிலாளர் துணை ஆணையர் முற்றுகை. கசக்குதா……? கசக்குதா….? தொழிலாளின்னா கசக்குதா….?

திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் 70 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் உற்பத்தியை நடத்த முயற்சி செய்தது.

நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர் அலுவலகத்தில் முறைப்படி முறையிட்டும் எந்தப் பயனும் இல்லாததால் பிப்ரவரி 24 அன்று, புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி தலைமையில் திருபெரும்புதூர் தொழிலாளர் அலுவலகத்துக்குச் சென்ற ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர் தொழிலாளர் துணை ஆணையரை முற்றுகையிட்டனர்.

நிர்வாகம் வெளியாட்களை வைத்து உற்பத்தி நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தொழிலாளர் துணை ஆணையர் உடனடியாக நிர்வாகத்தை வரவழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொழிலாளர் அலுவலகத்தை விட்டுச் செல்லப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தனர்.

கசக்குதா……? கசக்குதா….? தொழிலாளின்னா கசக்குதா….? இனிக்குதா….? இனிக்குதா….? முதலாளின்னா இனிக்குதா….? அவன் கொடுக்கும் காசு இனிக்குதா…..? என்ற தொழிலாளர்களின் முழக்கம், தொழிலாளர் அலுவலகம் இருந்த வளாகம் முழுவதும் ஒலித்தது.

வளாகத்தில் இருந்த வெவ்வேறு அரசு அலுவலகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அந்த முழக்கங்களும் அந்த முழக்கங்களில் எதிரொலித்த தொழிலாளர்களின் உணர்வும், போர்க்குணமும் செய்திகள் பல கொண்டு சேர்த்தன. காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

அதன் பிறகு நிர்வாகம் வந்து ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிக்கமர்த்தி உற்பத்தி நடக்கவில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவித்த பிறகு, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Back-to-previous-article
Top