புதுக்கோட்டையில், பிப்ரவரி 11 அன்று, அரிவாள் சுத்தியல் கொடிகளுடன் ஜெயலலிதா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வந்த பேரணியை மக்கள் வியப்புடன் பார்த்தார்கள். பிறகுதான் இது மக்கள் விரோத நடவடிக்கைகள் கொண்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்காத புரட்சிகர கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று புரிந்து கொண்டார்கள்.
பேரணியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, மனு கொடுத்தவர்களுக்கு நிலம், வீட்டுமனை வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயக் கடனை தள்ளுபடி செய், நிலவரி, வீட்டு வரியை ரத்து செய், தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டு, சாதி ஆதிக்க சக்திகளுக்கு தண்டனையை உறுதி செய், மாநிலத்தில் பொருளுள்ள லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வா, ஆடு, மாடு விலையில்லாப் பொருட்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கு, பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரத்தை உறுதி செய், 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டக்கூலி வழங்கிடு, அளவு முறையைக் கைவிடு, சிறு குறு விவசாயத்துக்கும் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்து என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வேலை நிறுத்தத்தில் இருக்கும் வங்கி ஊழியர் போராட்டம் வெல்லட்டும் எனவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.
கிட்டத்தட்ட 1000 பேர் கலந்து கொண்ட பேரணியை அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர். டி.கே.எஸ். ஜனார்த்தனன் துவக்கி வைத்தார். பேரணிக்கு தோழர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.
மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தடைந்தது. அங்கு முதல் நுழைவாயிலிலேயே மக்கள் காவல் துறையால் நிறுத்தப்பட்டனர்.
பிரதிநிதிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிரதிநிதிகளுடன் பேச மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் உதவியாளர், கோட்டாட்சியர் என யாரும் இல்லாத காரணத்தால், மக்கள் அனைவரும் ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் முன் சென்று தாழ்வாரத்தில் (போர்ட்டிகோ) அமர்ந்தனர். அதன் பிறகே கோட்டாட்சியர் நேரடியாக மக்களிடம் வந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்