மக்கள் கோரிக்கைகள் மீது பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் மக்களின் அமைதி வளம் வளமை கோரி, பிப்ரவரி 9 அன்று, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளருமான தோழர் பாரதி மற்றும் கட்சியின் சென்னை மாநகரக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர் பழனிவேல் ஆகியோர் நடத்திய காலவரையற்ற பட்டினிப் போராட்டம் அய்ந்து நாட்கள் கழித்து, பிப்ரவரி 13 அன்று முடித்துக் கொள்ளப்பட்டது.

பட்டினிப் போராட்டம் துவங்கிய முதல் நாள் மாலை அய்ந்து மணிக்கு மேல், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணம் சொல்லி, பட்டினிப் போராட்டத்தை பொது இடத்தில் தொடர காவல்துறை அனுமதி மறுத்ததால், சென்னை மாநகர கட்சி தோழர் ஒருவர் வீட்டில் பட்டினிப் போராட்டம் தொடர்ந்தது. போராட்டப் பந்தலில் இருந்த தோழர்கள் அனைவரும் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் பாரதி மற்றும் பழனிவேல் தலைமையில் கட்சி அலுவலகத்துக்கு வந்ததே ஒரு பேரணியானது.

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை அரசு தரப்பில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி உறுதி தந்தால் ஒழிய காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல பகுதி மக்கள், பிற கட்சிகளின் தலைவர்கள், உள்ளூர் மட்ட அமைப்புகள் என பலரும் பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை சந்திப்பது அதிகரித்தது. பட்டினிப் போராட்டம் நடந்த ஒவ்வொரு நாளும் அலுவலகம் இருக்கிற பகுதியில் ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு இணையான சூழல் இருந்தது.

பிப்ரவரி 12 அன்று (4ஆவது நாள்) உழைப்போர் உரிமை இயக்கத் தோழர்களும், அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நல சங்க தோழர்களும் தாசில்தார் அலுவலகத்தை காலை 11 மணிக்கு முற்றுûயிட்டனர். பட்டினிப் போராட்டத்தில் இருப்பவர்களை வட்டாட்சியர் சந்திப்பார் என்று உறுதியளிக்கப்பட்டதன் பேரில் முற்றுகை போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அன்று மாலை வட்டாட்சியர் முதல்வரின் காணொளிக் காட்சி மூலம் புதிய தாலுக்கா திறக்கும் நிகழ்ச்சியில் உள்ளார் என்ற தகவல் வந்தது. ஷிப்ட் முடிந்து வந்த தொழிலாளர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் அம்பத்தூரில் பேரணி நடத்தி பல்லாயிரம் மக்கள் திரளும் இடங்களில் திடீரென ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இரண்டரை மணிநேரம், அம்பத்தூர் பகுதியில் எங்கெல்லாம் பேரணி நடத்த பொதுவாக காவல்துறை மறுப்பு தெரிவிக்குமோ, அங்கெல்லாம் சென்றது; எங்கெல்லாம் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுமோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அன்று இரவு 8 மணியளவில் வட்டாட்சியர் போராட்டப் பந்தலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசின் கவனத்துக்கு கோரிக்கைகளை அனுப்பிவிட்டு அதன் நகலை போராட்டத்தில் இருந்தவர்களுக்கு அனுப்புவதாகத் தெரிவித்தார்.

பிப்ரவரி 13 அன்று (5ஆவது நாள்) கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், ஏசியன் பெயின்ட்ஸ், புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். 5 நாட்களாக நடக்கும் போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், போராட்டப் பந்தலுக்கு நேரடியாக வந்து அரசின் பதிலை சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அந்தஸ்துள்ள ஆர்டிஒவை அன்று மாலைக்குள் அனுப்புவதாக தெரிவித்தார். மாலை 4.40 மணிக்கு பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்களை ஆர்டிஒ சந்தித்தார். அரசுக்கு போராட்டக் கோரிக்கைகளை அனுப்புவதாகவும் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியும் எழுத்து மூலம் தெரிவித்தார். வரதராஜபுரத்தில் புதிதாக திறக்கத் திட்டமிடப்பட்டிருந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

அன்று மாலை 5.40 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட்டினிப் போராட்டம் நடந்த இடத்தில் இருந்து பொதுக் கூட்ட மேடைக்கு தோழர்கள் பேரணியாகச் சென்றனர். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, அவருடைய உரையை முடித்த பிறகு, பட்டினிப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் பாரதி, பழனிவேல் ஆகியோருக்கு பழச்சாறு அளித்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

Back-to-previous-article
Top