முசாபர்நகர் மதக்கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வேண்டும்! 2014 ஜனவரி 2, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

கடும் குளிர் துவங்கிவிட்டது. முசாபர்நகர் நிவாரண முகாம்களின் கதைகள் மனசாட்சியை உலுக்குகின்றன.

ஷாஹ்பூர், புதானா, மலர்பூர், சன்கதி முகாம்களிலுள்ள 28 குழந்தைகள் குளிராலும் மருந்துகள் இல்லாமலும் இறந்து போயுள்ளன. நிவாரண முகாம்களிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. வகுப்புவாத வன்முறை நடந்தபோது நிகழ்ந்த பாலியல் வல்லுறவு சம்பவங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பினும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, பாஜக, மத வன்முறையை முன்னின்று நடத்திய தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கிறது.

அகிலேஷ் அரசாங்கமோ கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை முகாம்களிலிருப்பவர்களை பலவந்தமாக வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. மட்டுமின்றி, 5 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக அவர்கள் எங்கிருந்து வெளியேற்றப்பட்டார்களோ அந்த கிராமங்களுக்குத் திரும்பும் உரிமையைக் கைவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறது.

5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ‘நானும் எனது குடும்பமும் எங்கள் கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் எனது வீட்டையும் கிராமத்தையும் விட்டு வந்துவிட்டோம். இனி எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் கிராமத்துக்கோ வீட்டிற்கோ திரும்ப மாட்டோம்’ என உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்துகிறது. நிவாரண முகாம்கள் அமைக்க வன நிலங்களை ஆக்கிமித்ததாகக் கூறி கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர் மீது உத்தரப்பிரதேச வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிற குளிர்கால உடைகள், விறகு, மருந்துகள், உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வாங்க நிதி அளிக்குமாறு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இககமாலெ வேண்டுகோள் விடுக்கிறது. 2014, ஜனவரி 2 அன்று அகில இந்திய அளவில் எதிர்ப்பு நாள் அனுசரிக்க இககமாலெ அழைப்பு விடுக்கிறது.

கலவரங்களில் ஈடுபட்ட அனைவரையும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்முறைக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். உத்தரப்பிரதேச அரசு கலவரத்தால் இடம் பெயர்ந்த வர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முசாபர்நகர் மதக்கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வேண்டும் என்ற முழக்கத்துடன் மாலெ கட்சி நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 28 அன்று முசாபர்நகர் சென்ற இககமாலெ குழு வசூலிக்கப்பட்ட முதல் தவணை நிவாரணப் பொருட்களை வழங்கியது. சென்னை திருவல்லிக்கேணியில் இது தொடர்பாக நடந்த பிரச்சாரத்தில் இசுலாமியர்களும் இந்துக்களுமாக டிசம்பர் 29 அன்று ஒரே நாளில் ரூ.5,000 நிதியளித்தனர். கோவையில் மக்கள் மத்தியில் நிவாரண நிதி கேட்டபோது இசுலாமியர்களும் இந்துக்களுமாக டிசம்பர் 29 அன்று ஒரே நாளில் ரூ.5,000 நிதியளித்தனர்.

Back-to-previous-article
Top