இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை,  இந்தியாவில் 1967 மே மாதத்தில் நடந்த நக்சல்பாரி பேரெழுச்சியில் உதித்த புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கமாகும். நக்சல்பாரி பேரெழுச்சி, இந்திய அரசியல் வரைபடத்தில் மிக ஒடுக்கப்பட்ட மக்களை ஸ்திரமாக முன்நிறுத்தியதுடன், இந்தியப் புரட்சியின் திசைவழியை தீர்மானிக்கும் இருக்கையில் அவர்களை அமர்த்தியது. இதன் மூலம் புன்னப்புரா-வயலார் மற்றும் தெலங்கானா போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகள் பேரியக்கங்களின் பாரம்பரிய தொடர்ச்சியை நிறுவியது மார்க்சிஸம்-லெனினிசத்தை இந்திய சூழலில் நடைமுறைப்படுத்தும் உன்னத கடப்பாடுடன் , லெனின் பிறந்த நாளான 1969 ஏப்ரல் 22ஆம் தேதி கட்சி நிறுவப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த திருத்தல்வாதத்தையும் அராஜகவாத போக்குகளையும் எதிர்த்து, இந்திய கம்யூனிச இயக்க புரட்சிகர பாரம்பரியத்தின் உறுதியான பாதுகாவலனாக சிபிஐஎம்எல் எழுந்தது. துவக்கம் முதலே, அதன் நிறுவனப் பொதுச் செயலாளர் சாரு மஜும்தார் உள்ளிட்ட அதன் ஒரு முழு தலைமுறை தலைவர்களை பலிகொண்ட மிகவும் மிருகத்தனமான காவல் சித்திரவதையும் படுகொலைகளையும் அது துணிச்சலுடன் எதிர்கொண்டது. சிபிஐஎம்எல் விடுதலைக் கட்சி அதன் துவக்க நாட்களிலிருந்தே ஒடுக்கப்பட்ட சாதிகள், பெண்களின் கௌரவம் மற்றும் சமத்துவம் குறித்த பிரச்சினைகளை முன்னிறுத்தும் ஒரு வர்க்கப் போராட்ட முன்மாதிரியை உருவாக்கியது.

சிபிஐஎம்எல் லிபரேசன் தற்போது பீகார் மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு பிரிவு மக்களின் இயக்கங்களை வழிநடத்துகிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ள சிபிஐஎம்எல் பிரதிநிதிகள் ஒரு புரட்சிகர எதிர்க்கட்சியின் பாத்திரத்தை வகித்துள்ளனர். இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்தின் ஆகச்சிறந்த பாரம்பரியத்தை சிபிஐஎம்எல் உயர்த்திப் பிடிக்கிறது. கட்சி அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் உள்நாட்டு தேசிய இனப் பிரச்சினைகள் தொடர்பான அதன் அணுகுமுறையில், அனைத்து வகையான தேசிய பேரினவாதம் மற்றும் தேசவெறி கூச்சல் ஆகியவற்றையும் எதிர்ப்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளது. சிபிஐஎம்எல் அதன் துவக்கத்திலிருந்தே, இந்தியாவின் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்குமான  போராட்டங்களில் முன்னணியில் உள்ளது. சிபிஐஎம்எல்  நீடித்த உறுதியுடன் அரசு ஓடுக்குமுறையை எதிர்க்கிறது, கொடூங்கோன்மை சட்டங்களை ஒழிப்பதற்காக போராடுகிறது, சாதியை அழித்தொழிப்பதற்காக போராடுகிறது, பாலின ரீதியிலான  வன்முறை, நிறவெறி மற்றும் தன்பாலின சேர்க்கையாளர்கள் மீதான வெறுப்பை  எதிர்க்கிறது, மேலும் நிலங்களையும் வளங்களையும் கார்ப்பரேட் கொள்ளையடிப்பதற்கு எதிராக போராடுகிறது . இந்தியாவில் வளர்ந்து வரும் வகுப்புவாத பாசிசத்தை அதன் முழு ஆற்றலுடன் எதிர்க்க உறுதிபூண்டுள்ளது.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
  • அமைப்பு
  • ஆவணம்
  • அண்மை செய்திகள் பெற