அயோத்தி காணிக்கைத் திருட்டு மோசடி

$articleData->title

அயோத்தி காணிக்கைத் திருட்டு மோசடி

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையைச் சுற்றி வெளிப்பட்டு வரும் மோசடி, ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் நடந்த பல மோசடிகளைப் போல் இந்த மோசடி இல்லை. இந்த மோசடி, மோடி அரசாங்கத்தால் மறுக்கவும் முடியாத, மோடியின் ‘வாலாட்டும்’ ஊடகத்தால் மறைக்கவும் முடியாத ஒரு மோசடியாகும். சிறீ ராம ஜன்மபூமி புனிதத் தல அறக்கட்டளையை நேரடியாக பாதித்தது போலவே, அதை நியமித்த மோடி அரசாங்கத்தையும் இந்த மோசடி நேரடியாகப் பாதிக்கிறது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி இரு அமைப்புகளும் இந்த மோசடி விவகாரத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. மேலும் இந்த மோசடியையும், கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் நம்பிக்கை அதிர்ந்துபோனதன் தாக்கத்தையும் இந்த இரு அமைப்புகளுமே அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. அயோத்தியின் உள்ளூர் பத்திரிகையாளர்களும், வழக்கறிஞர்களும் இந்த மோசடியின் முழுமையான அம்பலப்படுத்தலுக்கும் நீதிக்காகவும் போராட உறுதிபூண்டுள்ளதும் இந்த மோசடியில் தான்.


கடந்த நாற்பதாண்டுகளாக, சங்கிப் படையணியின் மூர்க்கத்தனமான அணிதிரட்டல் உத்தியின் மய்யமாக அயோத்தி இருந்து வந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்ட பார்வையையும் சட்டத்தினுடைய ஆட்சியின் கட்டமைப்பையும் வெளிப்படையாக மீறி சங்கிப் படையால் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதுடன் இந்த இயக்கத்தின் முதல் கட்டம் முடிவடைந்தது. அடுத்த இருபத்தி ஏழு ஆண்டுகளில், நிர்வாகம், நீதித்துறை, மேலோங்கிய ஊடகங்கள் அல்லது பொது சிவில் சமூகம் உள்ளிட்ட இந்திய அரசும் சமூகமும் சங்கிப் படையணி அவற்றை சிதைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளத் துணிச்சலூட்டிய அடிப்படை ஊசலாட்டத்தையும் பலவீனங்களையும் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து வெளிப்படுத்தின.


மோடி காலகட்டத்தின் வருகையும் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகரித்த சங்கமிப்பும் 2019-ஆம் ஆண்டின் விசித்திரமான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வரவை துரிதப்படுத்தியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அருவருக்கத்தக்க குற்றச் செயலை அந்தத் தீர்ப்பு கண்டித்தது. ஆனால் அந்த நிலத்தை கோயில் கட்டுமானத்திற்காக ஒப்படைத்து, ராமர் கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடவும் நிர்வகிக்கவும் அறக்கட்டளை ஒன்றை அமைக்க ஒன்றிய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. அப்போதிலிருந்து, இந்திய மக்களுக்குப் பதில் சொல்லத்தக்க, ஒரு பொறுப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் போலன்றி, பண்டைய இந்தியாவின் 'பூசாரி மன்னர்' போல நரேந்திர மோடி நடந்துகொள்ளத் தொடங்கினார். அயோத்தி, மோடி அரசாங்கத்திற்கு, வட இந்தியாவின் பாரம்பரிய கோயில் நகரம் என்பதை விட, அதிகாரத்தின் மையமாக, மதச் சுற்றுலா மற்றும் வணிக மையமாகவே உள்ளது.


அயோத்தி ராமர் கோயில் திட்டத்தைச் சுற்றி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறையல்ல. தற்போதைய காணிக்கை கையாடல் குற்றச்சாட்டுகளுக்கு முன்பாகவும் ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் பல்வேறு கட்டங்களில் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை அயோத்திக்குள்ளிருந்தே வந்தவை; அயோத்தி நில உரிமைப் பிணக்கில் முதன்மை வழக்குத் தரப்பினரில் ஒருவரான நிர்மோகி அகாராவால் முன்வைக்கப்பட்டவை. 1980களின் பிற்பகுதி, 1990களின் முற்பகுதியில், மகந்த் சீதாராம், உலகெங்கிலுமிருந்த பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,400 கோடிக்கும் மேற்பட்ட தொகையை விஹெச்பி மோசடி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்த கட்டத்தில் ராமர் சிலாக்கள் அல்லது புனிதப்படுத்தப்பட்ட செங்கற்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மிகவும் அண்மையில், மதிப்பு அதிகரிக்கப்பட்ட நில பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பல அம்பலப்படுத்தல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒரு வழக்கில், ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட நிலம், கொஞ்ச காலத்திலேயே ரூ.18.5 கோடிக்கு சிறீ ராம ஜன்மபூமி புனிதத் தல அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சங்க்-பாஜக நிறுவனங்களாலும் அடுத்தடுத்த அரசாங்கங்களாலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக ஒரு மசூதியை இடித்தது, மத உணர்வுகளை தேர்தல் ரீதியாக சுரண்டுவது, நிதி முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் இவை எதுவும் கோவில் கட்டப்படும் வரை பெரிதாகக் கருதப்படவில்லை. கோவில் கட்டப்பட்டதிலிருந்து அவைகுறித்த எண்ணங்கள் மாறத் தொடங்கியுள்ளது போலத் தெரிகிறது. கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கு முன்பே, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கோவில் திறப்பு விழா, பாஜகவுக்கு எதிர்பார்த்த தேர்தல் பலன்களை அளிக்கவில்லை. அயோத்தி உட்பட உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை மக்களவை தொகுதிகளை இழந்தது. நரேந்திர மோடியும் கூட வாரணாசியில் சர்ச்சைக்குரிய முறையில் கடும்போட்டியில் தப்பிப் பிழைத்தார். இப்போது காணிக்கைக் கையாடல் ஊழல், கோவில் அறக்கட்டளைக்கு மட்டுமல்ல, மொத்த சங்க்-பாஜக நிறுவனத்திற்குமே மிகப்பெரிய தார்மீக நெருக்கடியாக வெடித்துள்ளது.


பாதிப்புகளைக் குறைக்க சங்க்-பாஜக மேற்கொள்ளும் முயற்சியானது, கட்டுப்படுத்தப்பட்ட, எல்லைக்குட்படுத்தப்பட்ட விசாரணை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது போலத் தோன்றுகிறது. அதன்மூலம், முக்கிய நபர்களைப் பாதுகாத்து, குற்றத்தை கீழ்நிலை ஊழியர்கள் மீது திணிக்கிறது. மோசடியில் சந்தேகத்திற்குரிய முக்கிய நபராகக் கருதப்படுபவரும் அறக்கட்டளையின் மிக உயர்ந்த ஆர்எஸ்எஸ் நியமனம் பெற்றவருமான அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு மாற்றாக கிருஷ்ணா மோகன் என்பவரை இப்போது ஆர்எஸ்எஸ் நியமித்துள்ளது. இதற்கிடையில், இந்து ரக்ஷா தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள், இந்து சமூகத்தினுள் மட்டுமே பணம் கைமாறியுள்ள இந்த இந்து விவகாரத்தில் இந்து அல்லாதவர்கள் தலையிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்! காணிக்கைத் திருட்டு குறித்து புகார் அளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் கோருகிறார். மேலும், ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர், ‘இந்த விரும்பத்தகாத சம்பவத்தைப் பயன்படுத்தி இந்து தர்மத்திற்கும் சமூகத்திற்கும் களங்கம் ஏற்படுத்த முற்படும் இந்து எதிர்ப்பு, தேச எதிர்ப்பு சக்திகளின் சதிகளை முறியடிக்க’ இந்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கிறார்.


அதானியின் பெருந்தொழில் குழும மோசடி வழக்காகட்டும் உஜ்ஜயினியில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் நிலம் கையகப்படுத்தும் வெறியாகட்டும் அயோத்தி காணிக்கைகளில் திட்டமிட்ட வகையிலான மோசடியாகட்டும் அல்லது பெண்களை ஒடுக்கியவர்களைப் புகழ்வதாகட்டும் - சங்கிப் படையணி எப்போதும் ஊழலுக்கும் ஆணாதிக்க வன்முறைக்கும் ஆதரவாக முன்னணியில் நிற்கிறது. அயோத்தி காணிக்கைத் திருட்டு விவகாரத்தில் ஊழலை அம்பலப்படுத்திய ஆர்எஸ்எஸ்-ஸின் மகிபால் சிங் போன்றவர்கள், 'மர்மமான' முறையில் ஒழித்துக்கட்டப்படாவிட்டாலும் ஓரங்கட்டப்படுகிறார்கள். பாஜக முதல் ராம ஜன்மபூமி புனிதத் தல அறக்கட்டளை வரை, சங்கிகளால் நடத்தப்படும் ஒவ்வொரு நிறுவனத்திடமும் இருக்கும் மாற்ற முடியாத ஆர்எஸ்எஸ் குணம், வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பு முழுமையாக இல்லாமையாகும். ஆர்எஸ்எஸ் தனது சட்டச் சான்றுகளை வழங்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கேட்டபோது, ஆர்எஸ்எஸ்-ஸை இந்து மதத்துடன் ஒப்பிட்டு, இந்து மதத்திற்கு எந்தப் பதிவும் தேவையில்லை என்று மோகன் பகவத் வாதிடட்டார். எந்த மதத்திற்கும் பதிவு தேவையில்லை, ஆனால் ஆர்எஸ்எஸ் இந்து மதத்திற்கு சமமானதல்ல.


மதத்தின் பெயரில், நீண்ட காலமாக இந்த நாட்டின் ஒவ்வொரு சட்டத்தையும் இந்திய அரசமைப்பின் ஒவ்வொரு கோட்பாட்டையும் ஆர்எஸ்எஸ் மீறி வருகிறது. ராமர் கோவில் காணிக்கைத் திருட்டு மோசடி வழக்கு, ஆர்எஸ்எஸ்-ஸின் வழக்கமான வெளிப்படைத்தன்மை, சட்டப்பூர்வத்தன்மை, பொறுப்பேற்றல் மீறல்களுக்கு அண்மைய எடுத்துக்காட்டாகும். நீண்ட காலமாக, ஆர்எஸ்எஸ் அதன் ஒளிவுமறைவான இருப்புடன், சட்டவிரோத செயல்பாடுகளுடன் தப்பித்து வந்துள்ளது. (நாடு) விடுதலை பெற்ற சில காலத்திலேயே, மகாத்மா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேல், தத்தித் தவழும் இந்திய சுதந்திரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஆர்எஸ்எஸ்-ஸைத் தடை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பின்னர், ஆர்எஸ்எஸ் அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கலாச்சார அமைப்பாக செயல்படுவதாகவும் உறுதியளித்து விரைவான தடை நீக்கம் பெற்றது.


மதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிற, பக்திமிக்க இந்துக்களின் மத உணர்வுகளை வணிக லாபத்திற்காகவும் கொள்ளை லாபத்திற்காகவும் சுரண்டுகிற ஆர்எஸ்எஸ் கலாச்சாரத்தையே இப்போது காண்கிறோம். இந்தப் பெரும் அயோத்தி மோசடி வழக்கு, ஆர்எஸ்எஸ்-ஸை அதன் இடத்தில் அடக்கி வைக்க இந்திய மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி-யோகி இரட்டை என்ஜின் ஆட்சி, மோசடியை மறைக்கும் திட்டத்திலிருந்து தப்பிவிட அனுமதிக்கப்படக்கூடாது. அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் நம்பகமான விசாரணை, பொறுப்புகளை நிர்ணயித்தல், சம்பத் ராய் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்மாதிரியான தண்டனை, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அறக்கட்டளையைக் கலைத்தல் – ஆகியவையே அயோத்தி காண வேண்டிய குறைந்தபட்ச சரிசெய்யும் நடவடிக்கைகளாகும்.



எம்எல் அப்டேட், தலையங்கம், 

07 – 13 ஜூலை 2026

தமிழாக்கம்: செந்தில் 


22 July, 2026