"மேற்கு வங்க சட்டமன்றத்திற்குள் மீண்டும் சென்றிட பரந்த இடதுசாரி ஒற்றுமை மிக முக்கியமானது."

$articleData->title

"மேற்கு வங்க சட்டமன்றத்திற்குள் மீண்டும் சென்றிட பரந்த இடதுசாரி ஒற்றுமை மிக முக்கியமானது."

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் வாக்கு விகிதம் கடுமையாக சரிவடைந்துள்ளது. எனவே, சட்டமன்றத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு ஒரு 'குறிப்பிட்ட பலம்' (critical mass) தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கையை 'அதிகாரப் பறிப்பின் தொடக்கம்' என்று அழைக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் கிராமப்புற வங்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்; நொய்டா போராட்டங்கள் போன்ற புதிய தலைமுறையினரின் பிரச்சினைகளையும் கையாளத் தெரிய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.


"வங்கத்தில் ஒரே ஒரு வகை இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர் — அது எதிர்க்கட்சி இடதுசாரிகள் மட்டுமே. மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு நாம் மீண்டும் திரும்புவதற்கு இடதுசாரி ஒற்றுமை மிகவும் அவசியமானது," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் திபங்கர், வங்கத்தில் இடது முன்னணியுடனான தமது கட்சியின் கூட்டணி குறித்து கொல்கத்தாவில், இந்து (ஆங்கிலம்) பத்திரிக்கைக்காக, ஷ்ரபனா சாட்டர்ஜியுடன் பேசுகையில் தெரிவித்தார். அதன் சுருக்கம்:


ஷ்ரபனா: கடந்த பத்தாண்டுகளாக வங்கத்தில் இடதுசாரிகள் தேர்தல் ரீதியாகப் பெரும் சவாலை சந்தித்துள்ளனர். சட்டமன்றத்திற்குள் மீண்டும் நுழைய நீங்கள் என்ன திட்டமிட்டுள்ளீர்கள்?


திபங்கர்: சட்டமன்றத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான பலம் தேவை. வங்கத்தில் இடதுசாரிகளின் வாக்கு விகிதம் கடுமையாகச் சரிந்துள்ளது; எனவே இந்த முறை சட்டமன்றத்திற்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் சில தொகுதிகளிலாவது நல்ல வாக்கு விகிதத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம். ஒரு பரந்த இடதுசாரி ஒற்றுமை என்பது சவாலான விஷயமாக இருந்தாலும் நாம் மீண்டும் சட்டமன்றத்திற்குள் வருவதற்கான வழி அதுதான். மாநிலத்தில் இடதுசாரிகள் 34 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோது கூட, நாங்கள் (மா லெ) கூட்டணியில் இல்லாமல் தனித்தே களம் கண்டோம். ஆனால் இப்போது, வங்கத்தில் ஒரே ஒரு வகை இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர் — அது எதிர்க்கட்சி இடதுசாரிகள் மட்டுமே. இப்போது ஆட்சியில் இடதுசாரிகள் யாரும் இல்லை; அதனால்தான் சட்டமன்றத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு ஒரு பரந்த இடதுசாரி ஒற்றுமை மிக முக்கியமானது.


ஷ்ரபனா: இந்தத் தேர்தலில் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் இளம் வாக்காளர்கள், இடதுசாரிகளை ஒரு காலாவதியான சக்தியாகவே பெரும்பாலும் கருதுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றி, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான உத்திகள் என்ன?


திபங்கர்: இடது முன்னணி ஆட்சியில் இருந்ததைப் புதிய வாக்காளர்கள் பார்த்ததில்லை. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆட்சியை மட்டுமே பார்த்திருக்கிறார்கள். முதன்முதலில் வாக்களிப்பவர்களின் அனுபவம் மிகவும் முக்கியமானது; அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த கிராமப்புற வங்கத்தின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும். கிராமப்புற வங்கத்தில் இடதுசாரிகள் மீட்சியடையாவிட்டால், மீட்சியென்பதே இல்லாமல் போய்விடும்.


"எனவே, அமைப்புரீதியான மீட்சி இல்லாமல், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை மையப்படுத்திய, சமூக ஊடகங்களைச் சார்ந்த டிஜிட்டல் மீட்சி என்ற எந்த யோசனையும் நமக்கு உதவாது. நொய்டா ஊதியப் போராட்டம், ஆர்.ஜி.கர் போராட்டம், 'இரவை சொந்தம் கொள்வோம்' போராட்டங்கள், திருநங்கைகள் மசோதா… போன்ற புதிய தலைமுறையினர் கவனிக்கும் பிரச்சினைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இளம் தலைமுறையினர் என்ன கோருகிறார்கள்? ஒழுக்க நெறி பற்றிப் பேசிக்கொண்டிருப்பதையும், அவர்களை முன்முடிவுகளுடன் அணுகுவதையும், நமக்கு வாக்களிக்காத மக்களை ஒதுக்கித் தள்ளுவதையும் விடுத்து, நாம் தொடர்ந்து இந்தப் பிரச்சினைகளைக் கையாள வேண்டும்... அப்போதுதான் இளைய தலைமுறையினர் மீண்டும் இடதுசாரிகளை நோக்கித் திரும்புவார்கள்."


ஷ்ரபனா: சிறப்பு தீவிர திருத்தம், வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயர்கள் நீக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நீக்கங்களுக்குப் பிந்தைய தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான தீர்ப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


திபங்கர்: 27 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது; இது மிகப் பெரிய எண்ணிக்கை. இந்த எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும்கூட, எந்தவொரு வாக்குரிமைப் பறிப்பும் மக்கள் தீர்ப்பைப் பாதிக்கும். இது முன்னெப்போதும் இல்லாத, ஒரு தீய செயலாகும். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், இது அந்த 27 லட்சம் மக்களுடைய இருத்தலின் எதிர்காலத்தையே பாதிக்கும்.


இப்போது பீகாரைப் பார்த்தீர்கள் என்றால், அங்கு 22 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இப்போது அரசாங்கம் அவர்களின் குடும்ப அட்டைகளைப் பறிக்கப் போகிறோம்... அவர்களின் ஓட்டுநர் உரிமங்களைப் பறிக்கப் போகிறோம் என்று சொல்கிறது. இது உரிமை பறிப்பு நடவடிக்கையின்  ஆரம்பம் மட்டுமே. இது குடிமக்களில் ஒரு ஒட்டுமொத்த பிரிவினரையே செல்லாதவர்களாக ஆக்குவதற்குச் சமம். இது உண்மையில் எங்கு போய் முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்தியா முழுவதும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆக, உண்மையிலேயே, எந்த உரிமையுமற்ற சில கோடி மக்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே சட்டவிரோதக் குடியேறிகளைப் போல இருப்பார்கள். [மத்திய உள்துறை அமைச்சர்] அமித் ஷாவின் வார்த்தைகளில் சொல்வதானால் – 'நீக்கியபின் கண்டுபிடி; கண்டுபிடித்தேன் என்று சொல்லி நாடு கடத்து' என்பதாக இருக்கிறது.


ஷ்ரபனா: (வாக்காளர் பட்டியலில்) பெயர் நீக்கப்பட்டிருப்பது குறித்து மக்களிடையே கோபம் இருப்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் பரவலாக கூறப்படுவதை போல, இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அல்லது அவை மக்களின் தன்னெழுச்சியான, இயல்பான  போராட்டங்களும் தானா?


திபங்கர்: எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது மற்ற மாநிலங்களை விட வங்கத்திற்கு ஒரு பெரும் துன்புறுத்தலாகவே இருந்துள்ளது. 'தர்க்கரீதியான குறைபாடுகள்', 'விசாரணையில் உள்ளது' போன்ற புதிய விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; அனைத்து வகையான துன்புறுத்தல்களும் அரங்கேறின. எனவே, இது மக்களின் போராட்டம் என்றே கருதுகிறேன். இதை அரசியல் கண்ணாடி வழியாக பார்க்க மறுக்கிறேன்;  உங்களால் ஒருவரைப் பாதுகாக்கவோ, ஒருவரின் வாக்கைக் காப்பாற்றவோ முடியுமானால், அவர்களின் அரசியல் சித்தாந்தங்கள் நம்முடன் ஒத்துப்போகாவிட்டாலும் கூட, நாம் நிச்சயமாக அதனைச் செய்ய வேண்டும். இந்தப் போராட்டங்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமை பற்றியது. இந்த எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருக்கலாம்; அதாவது மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, குறிவைக்கப்பட்டவர்களை விலக்கி வைக்கும் (வாக்கை மறுக்கும்) நடவடிக்கையாக அது இருக்கலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது, நிச்சயமாக, சாதாரண மக்கள்தான்.


ஷ்ரபனா: இந்த முறை இடதுசாரிகள் ஏன் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கவில்லை?


திபங்கர்: அது காங்கிரசின் தேர்வு. ஆனால், காங்கிரஸ், இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் (ஐஎஸ்எஃப்) இணைந்து ஒரு பரந்த கூட்டணியை ஏற்படுத்தும் யோசனைக்கு சிபிஐ(எம்) தயாராகவே இருந்தது.


தமிழாக்கம்: விஜி 

29 April, 2026