ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படை நடத்தி வரும் போரின் தாக்கத்தை உலகமே உணர்ந்து வருகிறது. இந்தப் போர் மனித குலத்துக்கு எதிரானது. யுத்தம் என்றால் எப்போதும் பாதிப்புக்குள்ளாவது உழைக்கும் மக்களே. அதனால் தான், “கெட்டப் போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்” என உழைக்கும் மக்கள் முழங்கி வருகின்றனர்.
தேசிய தலைநகர் மண்டலம் என்று அழைக்கப்படுகிற டெல்லி, குருகிராம், மானேசர், நோய்டா தொழிற்சாலைப் பகுதிகளில் கடந்த பிப்ரவரி முதலே தொழிலாளர்கள் போராட்டக் கொடியை உயர்த்தத் துவங்கினர். ஏப்ரல் மாதத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிக்கு வந்தனர். இந்த லட்சோப லட்சம் உழைக்கும் மக்களின் வாழ்நிலை பொதுச் சமூக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஊடக கவனமும் பெற்றுள்ளது. ஒன்றிய மோடி அரசும், உத்தரப்பிரதேசம், ஹரியானாவில் ஆட்சியில் இருக்கும் இரட்டை எஞ்சின் பாஜக அரசாங்கங்களும் பற்றி எரியும் போராட்டங்களுக்கு பின்னுள்ள தொழிலாளர்களின் அவல நிலையை தீர்க்க முயற்சிப்பதற்கு மாறாக, அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு காவல்துறை கொண்டு போராட்டங்களை ஒடுக்கியும் வருகிறது.
போராட்டங்களை தொழிலாளர் பிரச்சினை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு மாறாக, அவற்றை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக சித்தரித்து, போராட்டங்களுக்குப் பின்னால் ‘தேச விரோதிகள்’ இருக்கிறார்கள், ‘அர்ப்பன் நக்சல்கள்’ இருக்கிறார்கள் என்று சொல்லி திசை திருப்புவதோடு போராட்ட முன்னணிகளையும் ஆதரவாக செயல்படுபவர்களையும் மட்டுமல்ல, மாணவர்கள் வழிப்போக்கர்கள் என பலரையும் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.
அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க ( AILAJ) வழக்கறிஞர்கள் முயற்சி செய்து முதல் தகவல் அறிக்கையை பெற்றிருக்கிறார்கள். அதில் போராட்டக்காரர்கள், பிணையில் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக கொலை முயற்சி, கூட்டாக சேர்ந்தோ, தனித்தனியாகவோ அரசு அதிகாரிகளை செயல்பட விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டது என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லை. இதுவரை எந்தப் போராட்டத்திலும் பங்கு பெற்றதும் இல்லை. பட்டினி ஊதியம் பெற்று, முற்றிலும் பணியிடத்தில் பாதுகாப்பற்ற நிலையில், எவ்வித சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இல்லாமல், தொழிற்சங்கமாகவே அமைப்பாகாமல் வாழ்ந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். பெரும்பாலும் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தச் சூழலில்தான் அவர்கள் பயன்படுத்தும் வெளிச்சந்தை எரிவாயு சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்தது. கொரோனா காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்கு அணி அணியாக சென்றது போல மீண்டும் செல்ல வேண்டிய சூழல் உருவானது.
பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் 2014- 2015க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவே இல்லை. இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, நிரந்தரமற்ற தொழிலாளர்களாகவே காலகாலமாக பணிபுரிகின்றனர். இவர்களின் மாத சம்பளம் தேர்ச்சி பெறாத தொழிலாளர்களுக்கு ரூபாய் 11,000, தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு ரூபாய் 13,000ஐ தாண்டவில்லை. ஹரியானா அரசாங்கம் போராட்டத்தைத் தணிக்க 35% ஊதிய உயர்வு வழங்கியது. உத்தரபிரதேச அரசாங்கம் 21% ஊதிய உயர்வு என அறிவித்தது. முதலாளிகள் அதை வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். இத்தனை ஆண்டு எவ்வளவு பெரிய ஊதிய திருட்டு சுரண்டல் நடந்திருக்கிறது என்று பாருங்கள்.
இந்த ஊதிய உயர்வு அறிவிப்புகளுக்குப் பின்னரும் டெல்லி தொழிலாளர்கள் ஊதியத்தை விட அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் குறைவாகவே இருந்தது. மூன்று மாநில தொழிற்பேட்டைகளும் அருகருகே இருக்கும்போது ஊதிய முரண்பாடு தொழிலாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் வீதிகளில் தொழிலாளர்கள் அணி திரள்வதற்கு சமூக ஊடகப் பிரச்சாரம் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு சாதாரண பொறியாளர் தொழிலாளர் மீது அக்கறை கொண்டு வெளியிட்ட பதிவுதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று சொல்லி அவரை பின்தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராடும் தொழிலாளர்களைச் சந்திக்க மையத் தொழிற்சங்க தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கௌதம் புத் நகரில் ஏ ஐ சி சி டி யு மாவட்டத் தலைவர் அமர்சிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதுபோல, பல தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். சமூகச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் மண்டலத்தில் தொடங்கிய போராட்டத்தின் வீச்சு, உத்தரகாண்ட் மாநிலம் வரை பரவியது. வீட்டு வேலை செய்யும் பெண்களும் கண்ணியமான ஊதியம் வேண்டும் என வீதிகளில் இறங்கினர். குரு கிராம், மானேசர் தொழில் பகுதிகளில் உள்ள ஹோண்டா, முஞ்சல் ஆட்டோ, ரிசா டெக்ஸ்டைல்ஸ், சத்யம் ஆட்டோ, பிரிக்கால் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி ஆலை வாயில்களில் முதலில் அணி திரண்டனர். கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்காததால் அவர்கள் சாலைகளுக்கு வந்தனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை அடாவடியாக தடியடி, கண்ணீர் புகை வீச்சு நடத்தி பலரையும் கைது செய்தது. இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அடுத்தடுத்த நாட்களில் இரண்டு மடங்காக, மூன்று மடங்காக தொழிலாளர்கள் வீதிகளில் அணி திரண்டனர்.
இப்பகுதியில் உள்ள பல நிறுவனங்களின் நிதி நிலையை ஆராயும் போது, 2021 இல் இருந்து 2025 காலகட்டத்தில் அவற்றின் வருவாய் இரண்டு மடங்கிலிருந்து ஆறு மடங்கு வரையும், லாபம் இரண்டு மடங்கிலிருந்து பத்து மடங்கு வரையும் கூட உயர்ந்திருக்கின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு ரூபாய் 8000 முதல் 13,000 வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. நிச்சயமாக தொழிலாளர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்கி விட்டு, அவர்கள் உழைப்பினால் வந்த செல்வத்தைக் கொண்டு இந்த நிறுவனங்கள் மிகப்பெரிய விரிவாக்கம் மேற்கொண்டுள்ளன என்பது தெளிவு.
இரட்டை எஞ்சின் அரசாங்கங்களும், முதலாளிகளும் சேர்ந்து தொழிலாளர்களுக்கு உயிர் பிழைத்திருப்பதற்கான ஊதியத்தை மட்டுமே வழங்கி வருகின்றனர். சராசரியாக 12 மணி நேர வேலை, மிகை நேரப் பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்குவதில்லை, வார விடுமுறை கிடையாது, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பற்றி தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை, பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆலைகளில் உள்ளக புகார் கமிட்டிகள் கிடையாது. இந்தப் பின்னணியில் தான் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ஏற்கனவே அரசிதழில் வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான விதிகள் கடந்த மே 8 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் வருங்கால நிலைமைகள் தொழிலாளர்களுக்கு இன்னும் மோசமானதாக இருக்கும். அலை அலையாக போராட்டங்கள் எழுவதை தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது.
மே 12 அகில இந்திய கோரிக்கை நாளாக கடைபிடிக்க 10 மைய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றன. தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை காத்திரமான போராட்டங்களுக்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும்.
போராடிக் கொண்டிருக்கும் நிரந்தரமற்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.42,000 வழங்கு.
மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கு.
வார விடுமுறையை, பெண் தொழிலாளர்களுக்கான உள்ளக புகார் குழுக்கள் அமைப்பதை உறுதி செய்.
பணியிடப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதி செய்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கு.
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை, கலைஞர்களை உடனடியாக விடுதலை செய்.
