அய்க்கிய அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது, ஈராக் மீது தொடுத்த போர்களை, ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார். எல்லாப் போர்களையும் முடிவுக்கு கொண்டுவரப் போவதாக உறுதி அளித்தார். அய்க்கிய அமெரிக்காவை, மீண்டும் மகத்தானதாக மாற்றும் (MAKE AMERICA GREAT AGAIN) தமது முயற்சியில் உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க, வர்த்தக வரிகளை பயன்படுத்தப் போவதாகச் சொன்னார்; அந்த திசையில், குடியேறுபவர்களால் வேலைகள், வருமானம், வளங்கள் அபகரிக்கப்படுவதற்கு முடிவு காணப்படும் என்றும் தெரிவித்தார். அய்ரோப்பிய வம்சாவழி வெள்ளையரின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, இரண்டாம் முறை பிரம்மாண்டாய் வெற்றி பெற்றார். 2025-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற, தாமே தகுதியானவர் என, பிரகடனம் செய்தார்.
வந்தது 2026-ம் ஆண்டு. ஏகாதிபத்திய பாசிச கொடூர முகமும் வெளியே வந்தது. உள்நாட்டில், குடியேறியவர்களை வேட்டையாடும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு பெருகுகிறது. மின்னசோட்டா மாநிலத்தில் மினியாபோலிஸ் நகரம், எதிர்ப்புப் போராட்ட மய்யமாகிறது. எல்லைக் காவல் படையினரும், குடியேறியவர்களை வெளியேற்றுபவர்களும், அய்க்கிய அமெரிக்க மக்கள் பார்வையில் இந்தியாவின் சங்பரிவார் போல் தெரிகின்றனர்.
ஹிட்லர் யூத வெறுப்பில் தமது அரசியலைப் பலப்படுத்தினார்;
மோடி இஸ்லாமிய
வெறுப்பை முனைப்புடன் செயல்படுத்துகிறார்; ட்ரம்ப் ஆப்பிரிக்க வம்சாவழியிலான லத்தீன் மொழிக் குடும்ப
வம்சாவழியிலான ஒரு
பெரிய மக்கள் கூட்டத்திற்கு எதிராக, சொந்தநாட்டு மக்களுக்கு எதிராகவே,
போர் தொடுத்துள்ளார். பாசிச வழியில் நின்று, எந்த
நிறுவனங்களும் சட்டங்களும் உள்நாட்டிலோ, சர்வதேச அளவிலோ
தமக்கு ஒருபொருட்டல்ல
என்று சொல்லும் ட்ரம்ப், தன் மனதிற்கு சரியென்று தோன்றுவதைச் செய்வதே தமது
அறம் என, பகிரங்கமாகச் சொல்கிறார்.
இஸ்ரேலோடு சேர்ந்து நின்று, பாலஸ்தீனத்தை, பாலஸ்தீன மக்களை ஒழித்துக்கட்ட ஆனதெல்லாம் செய்கிறார். ஈரானைத் தாக்குகிறார். கொலம்பியாவை மிரட்டுகிறார். பனாமா கால்வாயை கிரீன்லாந்தை கைப்பற்றுவேன் என்கிறார். வளர்ந்த கனடா நாட்டின் ஆல்பர்டா மாநிலத்தில் பிரிவினையை தூண்டுகிறார். ஒரு புறம் கண்டத்து நாடுகளின் சர்வாதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் கூட்ட தளபதிகளை ஆரத்தழுவிக் கொண்டு, மறுபுறம் வெனிசுலாவில் இருந்து போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது என்று சொல்லி, வெனிசுலாவின் ஆட்சித் தலைவர் மதுரோவையும் அவரது இணையர் சிலியா புளோரன்ஸையும் கடத்திச் செல்கிறார். அப்படிச் செய்யும்போது, கியூபா நாட்டின் 32 பேர் உட்பட, வெனிசுலாவில் 100 பேரை படுகொலை செய்கிறார். ஆக்கிரமிப்புப் போர் முழுமையாக நடத்தாமல், குறைந்த ராணுவ செலவில் அளவற்ற வெனிசுலாவின் எண்ணெய் வளம், இதர வளங்கள், நிலம், சொத்துகள் அனைத்தும் இனி அய்க்கிய அமெரிக்காவிற்கு சொந்தம் என அறிவிக்கிறார். ட்ரம்ப்பின் வலதுசாரி கூட்டாளிகள் அய்ரோப்பாவில், ஸ்பெயின் முதல் ஸ்வீடன் வரை இருக்கிறார்கள். ஆனால், அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் 26% இடங்களை வைத்துள்ள ட்ரம்ப்பின் நண்பர்கள், இப்போது, ட்ரம்ப்பால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பதறுகிறார்கள்.
ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகப் பக்கத்தை செயல்படுத்துகிறார். அந்தப் பக்கத்தில், தற்சமயம் 900 பில்லியன் டாலர் என்று இருக்கிற ராணுவ செலவை, 66% உயர்த்தப் போவதாகவும் 2027-ல் ராணுவச் செலவு 1.5 ட்ரில்லியன் டாலராகும் என்றும் அறிவிக்கிறார். (1 பில்லியன் என்பது சுமார் ரூ.9159.3 கோடியாகும். 1 ட்ரில்லியன் டாலர் என்பது ரூ.91 லட்சத்து 59,300 கோடியாகும். 1 ட்ரிலியன் என்பது 1000 பில்லியன் ஆகும்.) அறிவிப்புக்கு பிறகு, ஜெர்மனியும், பிரான்ஸ்-ம் ராணுவச் செலவை உயர்த்துகிறார்கள். ஆயுதப்போட்டி என்று வந்துவிட்ட பிறகு, சீனமும், ரஷ்யாவும் கூட ராணுவச் செலவை உயர்த்தியாக வேண்டும். இறுதி ஆராய்ச்சியில், உலகத்தின் முதல் 15 நாடுகளின் கூட்டு ராணுவ பட்ஜெட்டில் அய்க்கிய அமெரிக்காவின் பங்கு 37% என்பதிலிருந்து 60% ஆக உயரும். உலகின் மீது ட்ரம்ப்பின் போர் / ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் நிழலாய் பரவிப் படருகிறது.
வெனிசுலா மீது ஏன் தாக்குதல்
கண்டத்து நாடுகளும் கரிபிய தீவுகளும் அய்க்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்
இருக்க வேண்டும் என்ற, 19-ம் நூற்றாண்டு ஏகாதிபத்திய மன்ரோ
கோட்பாட்டை ட்ரம்ப் 21-ம் நூற்றாண்டுக்கேற்ப பொருத்தியுள்ளார்.
வெனிசுலா எண்ணெய் வளம் நிறைந்த நாடு. உலக எண்ணெய்
சேமிப்பில் (RESERVE) 17% வெனிசுலாவின்
கைகளில் உள்ளது. இந்த எண்ணெய் வளம் அய்க்கிய அமெரிக்காவிடம் இருப்பதைவிட 4 மடங்கு அதிகமாகும்.
ஆப்கானிஸ்தான், ஈராக் போல் ஆக்கிரமிப்பு போர் இல்லாமல்,
எடுபிடி ஆட்சியாளரை நியமிக்கிற ஆட்சிமாற்ற உத்தி இல்லாமல்,
பொலிவேரிய சாவெஸ்- மதுரோ கட்சியைக் கொண்டே வெனிசுலா என்ற மாபெரும் நாட்டை
அய்க்கிய அமெரிக்கா கட்டுப்படுத்தப் பார்க்கிறது.
கண்டத்து நாடுகளில், சீனாவின்
செல்வாக்கை கட்டுப்படுத்த, மட்டுப்படுத்த அய்க்கிய அமெரிக்கா முயற்சிக்கிறது.
கண்டத்து அமெரிக்க நாடுகளுக்கு, சீனம் உதவியாக,
கடனாக, மானியமாக 300 பில்லியன்
டாலர் தந்துள்ளது. வெனிசுலாவுக்கு மட்டும்
116 பில்லியன்
டாலர் தந்துள்ளது. வெனிசுலாவில் மட்டும் சீனா தொடர்புடைய
170 திட்டங்கள் உள்ளன.
சீனத்திடம் அய்க்கிய அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வன்மம்
சீனப் பொருளாதாரம்
பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.
· 2024-ல் சீனத்தின்
ஏற்றுமதி மதிப்பு ரூ.3.6 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
ஹாங்காங்கையும் சேர்த்தால், ரூ.4.2 ட்ரில்லியன் ஆகும்.
சீனத்தின் வர்த்தக உபரி ஒரு நாளுக்கு 3 பில்லியன்
டாலர் என்ற விதத்தில் 1.1 ட்ரில்லியன் டாலர் ஓங்கி உயர்ந்துள்ளது.
இதே கால கட்டத்தில், அய்க்கிய அமெரிக்காவில் ஏற்றுமதி மதிப்பு ரூ.1.7 ட்ரில்லியன் டாலர் மட்டுமே ஆகும்.
அதன் இறக்குமதி மதிப்பு ரூ.3.4 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
அதனால், அய்க்கிய அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை
1.7 ட்ரில்லியன் டாலர் ஆகும்.
· சீனத்தின் மீது கூடுதலான வர்த்தக வரிகளை அய்க்கிய அமெரிக்கா விதித்த பிறகும், சீனத்தின் உலகளாவிய கப்பல் வணிகம் 2017-ல் 2.3 ட்ரில்லியனாக இருந்தது. தற்சமயம் 3.6 ட்ரில்லியனாக உயர்ந்துள்ளது. சீனம் அய்க்கிய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது 430 பில்லியன் என இருந்தது, தற்சமயம் 526 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த மொத்த நிலைமையும் சீனத்தின் தொழில் துறை வல்லமையால் உருவானது. சீன ஏற்றுமதியில் 94% உற்பத்தி பொருள் ஆகும்.
· உலகிற்கு வழங்குதலில் சீனத்தின்
பங்கு Laptop-களில்
60%, Smart Phone
–களில் 50%,
Flat panel display 82%, Smart phone மற்றும் Telecom பாகங்களில் 64%, சூரிய
ஆற்றல் கருவிகளில் 60%, லித்தியம் ஐயான் பேட்டரிகளில்
56%
உள்ளது.
· உலகம் சுத்தமான எரிசக்தி மற்றும்
மின் வாகனங்கள் நோக்கி பெரிய மாற்றம் செய்ய துவங்கும் முன்பே சீனம் லித்தியம் கோபால்டு
மற்றும் அரிய வகை பூமி தொடர்பான கனிமங்கள் ஆகிய சுரங்கங்களை ஆப்பிரிக்காவில்,
கண்டத்து அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் நடத்த துவங்கியது.
· உலகில் உள்ள மிகவும் மும்முரமாக
செயல்படும் 10 துறைமுகங்களில்
7 சீனத்தில் உள்ளது.
· உலகத்தின்
150 நாடுகளின், முதன்மை வர்த்தக கூட்டாளி சீனமே ஆகும்.
2020-ல் 10 லட்சம் கார் ஏற்றுமதி செய்த சீனம்,
தற்சமயம் 70 லட்சம் கார் ஏற்றுமதி செய்கிறது.
(இந்தியா 2025-ல்
8,58,000 கார்களை ஏற்றுமதி செய்தது). சூரிய
சக்தி 35%,
காற்று எரிசக்தி
60%
சந்தை சீனந்தால் மேற்கொள்ளப்படுகிறது.
· உலக சந்தையில்
70% எலக்ட்ரிக் கார்கள் சீனத்துடையது. எஃகு,
அலுமினியம், சிமெண்ட் உற்பத்தியில் சீனத்துடைய பங்கு
50%-த்திற்கு
மேல் உள்ளது. உலகில் உற்பத்தியாகிற கப்பல்களில்
50%
சீனத்திற்கு சொந்தமானதாகும்.
அய்க்கிய
அமெரிக்கப் பொருளாதாரம் பாய்ச்சலில் வளரவில்லை. வேலை
வாய்ப்புகள் பெருகவில்லை. செயற்கை நுண்ணறிவிலோ, புதிய
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலோ, பொருளாதார முன்னேன்றத்திலோ, சீனத்திற்கும்
அய்க்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான இடைவெளி குறைந்து போய் உள்ளது.
சீனம் அய்க்கிய அமெரிக்காவை விஞ்சிவிடும் என்ற அய்யம் அய்க்கிய அமெரிக்காவையும்,
டொனால்ட் ட்ரம்ப்பையும் பிடித்தாட்டுகிறது.
சமகால உலகில் இந்தியா எங்கே நிற்க வேண்டும்
1978-ல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.13.74 லட்சம் கோடி. அப்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.12.67 லட்சம் கோடி. ஆனால் 2025-ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.317 லட்சம் கோடியாக இருக்கும்போது, சீனத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.1,600 லட்சம் கோடியாக இருக்கிறது.
ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவின் ஏற்றுமதி தற்சமயம் 440 ட்ரில்லியன் டாலர் ஆகவும் வர்த்தக பற்றாக்குறை 275 ட்ரில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
இன்று 29.01.2026
இந்தியாவிற்கான சீனத்தின் தூதர் திரு ஃபெய்ஹாங் சீன பொருளாதாரத்தில் புதிய தர்க்கம்
என்ற தலைப்பில், தி ஹிந்து நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
2025-ல் சீன ஜிடிபி
20 ட்ரில்லியன் டாலர் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார். உலகப்
பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சீனம் 30% பங்களிப்பு செய்கிறது.
அவரது
கூற்றுப்படி, சீனத்தின் பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வால்,
ஏற்றுமதியால், முதலீடுகளால் உந்திச் செலுத்தப்படுகிறது.
2025-ல் பொருளாதார வளர்ச்சிக்கு, 52% நுகர்வு செலவால் அமைந்தது.
சர்வதேச தரத்தோடு பார்க்கும் போது, அடிப்படை
நுகர்வில் சீனம், முதல் நிலை நாடுகள் நிலையில் உள்ளது.
ஒரு நபருக்கு சராசரியாக 1.28 அலைபேசி உள்ளது.
ஒரு மனிதனின் சராசரி புரோட்டின் உணவு 124.6 கிராம்.
இது அய்க்கிய அமெரிக்கா மற்றும் ஜப்பான் அளவை விட அதிகம்.
உலகத்திலேயே மிகவும் அதிகமாக சராசரி ஆண்டு காய்கறி நுகர்வு
109.8 கிலோ. சீனத்தின் ஏற்றுமதிகள் பொருளாதார வளர்ச்சியில்
32.7%
பங்கு செலுத்துகின்றன. சீனத்தின் வளர்ச்சியில் மொத்த முதலீடு உருவாக்கம்
15.3% ஆக
இருக்கிறது. சீனத்திடமிருந்து இந்தியா 2025-ல்,
155.6 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்துள்ளது. இதே
காலகட்டத்தில் இந்தியா 19.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு
சீனத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
சீனத்தின்
140 கோடி மக்களில், 40 கோடி பேர் மத்திய தர வருமானத்தை
எட்டிவிட்டதால், உயர் திறன் வாய்ந்த இந்தியப் பொருட்களுக்கு சீனத்தில்
நல்ல சந்தை உள்ளது என்றும், அவற்றை நோக்கி வருமாறும், அவர்
இந்தியாவிற்கு அழைப்பு விடுகிறார். இரு நாடுகளும் ஒருவரை நோக்கி ஒருவர் நகர்ந்து,
வளர்ச்சியின் பயன்களை இருவருமே அறுவடை செய்து, கூட்டாக
ஆசியாவுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என அழைப்பு விடுகிறார்.
வெனிசுலா
விசயத்தில் அல்லது அய்க்கிய அமெரிக்காவின் இதர ஏகாதிபத்திய நடவடிக்கைகளில்,
பெருமளவுக்கு வளர்ந்த அய்ரோப்பாவும், ஜப்பானும்,
தென்கொரியாவும், ஆஸ்திரேலியாவும், கனடாவும்,
அய்க்கிய அமெரிக்காவிற்கு துணை நின்றன. சீனாவும்,
ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிப்பதைத் தாண்டி, வேறு
எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், இடம், பொருள்,
ஏவல் பார்த்துதான், டொனால்ட் ட்ரம்ப் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.
இந்தியா,
சீனத்தோடு நல்லுறவை மேம்படுத்துவது. பிரிக்ஸ்
கூட்டமைப்பை பலப்படுத்தி விரிவுபடுத்துவது, பாகிஸ்தானோடு
பதற்றத்தை தணித்து நல்லுறவை மேற்கொள்வது, இந்தியாவின்
சர்வதேச அந்தஸ்துக்கும், இந்திய பொருளாதரத்திற்கும், நன்மை
தேடி தரும். ட்ரம்ப்பிடம், இந்தியா
சரணடையக்கூடாது. காசா, ஈரான்,
கிரீன்லாந்து, வெனிசுலா என ட்ரம்ப் நிகழ்த்திய,
நிகழ்த்தப் பார்க்கும் அனைத்து அத்துமீறல்களையும், இந்தியா
கண்டனம் செய்ய வேண்டும்.
