தலையங்கம்

சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு வெடி வைக்கும் சங்கிகளின் சதி வேலை!

$articleData->title

சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு வெடி வைக்கும் சங்கிகளின் சதி வேலை!

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச யோகி அரசு, இஸ்லாமியர்கள் தெருக்களில் தொழுகை நடத்தக் கூடாது, பள்ளிவாசல்களில் இடமில்லை என்றால்  சிப்ட் முறையில் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள், மீறி தெருக்களில் தொழுகை நடத்தினால், சிறையிலடைக்கப்படுவீர்கள்  என்று உத்தரவு போட்டது. அது மட்டுமின்றி, பக்ரீத்திற்காக மாடுகளை வெட்டக் கூடாது என்று சட்டம் போட்டது. தேர்தல் ஆணையத்தை தன் கைக்குள் வைத்துக் கொண்டு, எஸ்ஐஆரைப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் திருட்டுத்தனமாக ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜக அரசு, அங்கும் மாடுகளை, கன்றுகளை அறுக்கத் தடை கொண்டு வந்தது. தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து வந்த இந்தத் தடையாலும் பல இடங்களில், இஸ்லாமிய மக்கள் மீது சங்கிகள் கொலை வெறித் தாக்குல் நடத்தினர். 

தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முழு ஒத்துழைப்புடன் திருப்பரங்குன்றத்தில் இல்லாத தீபத் தூணில் தீபம் ஏற்றுவோம் என பிடிவாதம் பிடித்து, கலவரத்தை ஏற்படுத்தி, காலூன்ற நினைத்த பாஜகவிற்கு தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டிவிட்டார்கள். ஆனாலும், ஆர்எஸ்எஸ் அதனுடைய சதி வேலையை நிறுத்துவதாக இல்லை.  பக்ரீத் பண்டிகைக்கு சில நாள்களே இருக்கும் சமயத்தில், கோவையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கியான சூர்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 18ம் தேதி தமிழ்நாட்டில் மாடு, கன்றுகளை பொது இடத்தில் அறுக்கக் கூடாது என்றும் அதற்காகவே ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரிய சான்றிதழ் பெற்று அறுக்க வேண்டும் என்றும் அந்த மாடு 10 வயதிற்குக் கீழ் இருக்கக்கூடாது அதுபோல் வயது முதிர்ந்த, பயன்பாட்டிற்கு உதவாத மாடாக இருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணா அமர்வு முன் கொண்டு வரப்பட்டது. அந்த மனுவில் கேட்டபடியே வழிகாட்டுதல் வழங்கி,  அதை கறாராக அமல்படுத்திட தமிழ்நாடு அரசிற்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டார்கள் நீதிபதிகள். பக்ரீத்தை முன்னிட்டு அந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் கறாராக நடைமுறைப்படுத்திட, மாநில காவல் துறை அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட, மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது மட்டுமின்றி, அது தொடர்பான அறிக்கையையும் உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தார் ஏடிஜிபி. டி.எஸ்.அன்பு. காலங்காலமாக தமிழ்நாட்டில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இதுநாள் வரை இதற்கு முன்பிருந்த எந்தவொரு அரசும் இஸ்லாமியர்களுக்கு எதிரான இப்படியொரு உத்தரவை போட்டு நடைமுறைப்படுத்தியது இல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த வழக்கில் தவெக அரசு ஆட்சேபணை எதுவும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து மாமிசம் சாப்பிட்டார்கள் இஸ்லாமியர்கள் என்று பிரச்சனையை ஆரம்பித்து, தர்கா முன்னிருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றார்கள். இந்த உத்தரவு இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமின்றி, சிறு தெய்வ வழிபாட்டின் போது ஆடு, கோழி பலி கொடுப்பதற்குமே தடையாக மாற வாய்ப்புள்ளது. திருப்பரங்குன்ற தீபத் தூண் பிரச்சனையில் இதுநாள் வரை எந்தவொரு கருத்தும் சொல்லாத தவெக ஆட்சியில் இருப்பதை, முன்னாள் ஆர்எஸ்எஸ்காரரான நிர்மல்குமார் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சராக இருப்பதை மிகச் சரியாக பயன்படுத்தி காய் நகர்த்தியுள்ளார்கள் ஆர்எஸ்எஸ் சங்கிகள். தவெக அரசில் பங்குபெற்றுள்ள ஐயுஎம்எல், விசிக இந்த உத்தரவுக்கு எதிராக எதுவும் சொல்லாமல் இருப்பது வியப்பளிக்கிறது. இதுபோன்ற உத்தரவுக்கு உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் எழவில்லை என்றால், ஏற்கனவே காக்கிக்குள் காவிகள் ஒளிந்து கொண்டிருக்கும் நிலையில், வரும் கார்த்திகை மாதம்  திருப்பரங்குன்ற தீபத்தூண் பிரச்சனை தமிழ்நாட்டின் மதச்சார்பின்மைக்கு, சமூக நீதிக்கு பேராபத்தாக மாறும். இப்போது முதல் சமூகநீதி-மதச்சார்பின்மை ஆட்சி தொடங்குகிறது என வெளிப்படையாக அறிவித்த முதலமைச்சர் வெகு துரிதமாக செயல்படுவார் என எதிர்பார்ப்போம். திருவள்ளுவர் சநாதனிதான் என்று ஆர்.என் ரவி ஊதிய அதே சங்கை “பொறுப்பு ஆளுநர்” அர்லேக்கரும் ஊதி பொறுப்பின்றி பேசியிருக்கிறார். புதிய ஆட்சிக்கு நிறைய வேலை இருக்கிறது!

07 June, 2026